முதலமைச்சரின் தனி செயலாளர்கள் நியமனம்
செந்தில்குமார் ஐஏஎஸ், லட்சுமி பிரியா ஐஏஎஸ் ஆகியோர் முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.
எம்.ஆர். ஷோபனா
செந்தில்குமார் ஐஏஎஸ், லட்சுமி பிரியா ஐஏஎஸ் ஆகியோர் முதலமைச்சரின் தனி செயலாளர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சராக பதவியேற்றதும் விழா மேடையிலேயே பேசிய விஜய், "நான் தேவதூதன் அல்ல, நானும் சாதாரண மனிதன் தான். பொய்யான வாக்குறுதிகளை அளித்து நான் ஏமாற்றமாட்டேன். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." என்று தெரிவித்தார்.
விஜய் தலைமையில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஞாயிற்றுக்கிழமை விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை சுமார் 10 மணியளவில் விஜய் பதவியேற்றார். பின்னர் தவெகவைச் சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கடரமணன், சி.டி.ஆர். நிர்மல்குமார், ஏ. ராஜமோகன், டி.கே. பிரபு, எஸ். கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற விஜய் தலைமைச் செயலகம் வந்து அரசுக் கோப்புகளில் கையெழுத்திட்டார்.
“எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீர்கள்” என, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் விஜயை விமர்சித்துள்ளார்.
“தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.” என்றார்.
மேலும், ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்னைகளையும் “ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும்” சமாளித்துதான் தங்கள் அரசு எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள், இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள் என்றும், கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் தங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என தான் நம்புவதாகவும் “வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்” என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்” என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்." என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின் விஜய் தற்போது பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் தலைமைச் செயலகம் சென்றார். அங்கு முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். பின்னர், உயரதிகாரிகள் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சராக பதவியேற்ற பின் விஜய் தற்போது பாதுகாப்பு வாகன அணிவகுப்புடன் தலைமைச் செயலகம் செல்கிறார்.
மக்கள் மாற்றத்தை விரும்பி விஜயைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இரு குழந்தைகளை இழந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்தாண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.
இதில்,14 வயது மகள் கோகிலா, 11 வயது மகள் பழனியம்மாள் ஆகியோரை இழந்த பெருமாள்–செல்வராணி தம்பதி, விஜய் பதவியேற்பு விழாவை தங்களின் இல்லத்தில் குடும்பத்தினருடன் தொலைக்காட்சியில் பார்த்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய பெருமாள், “‘நாங்கள் எங்களின் 2 குழந்தைகளை இழந்த வேதனையில் இருந்தாலும் தற்போது விஜய் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாகவுள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பி அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். நிச்சயமாக அவர் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறோம்.’’ என்றார்.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிபிசி தமிழிடம் பேசிய செல்வராணி, "விஜய் இந்தப் பகுதிக்கு வருகிறார் என செய்தி வந்ததிலிருந்தே அங்கு போயாக வேண்டுமென குழந்தைகள் அடம்பிடித்தார்கள். அவர் வரும் இடம் தூரமாக இருந்தால் போக முடியாது என்றேன். ஆனால், அருகிலிருக்கும் வேலுசாமிபுரத்திற்கு வருகிறார் என்றவுடன், அது வீட்டுக்குப் பக்கம்தான் என்பதால் கண்டிப்பாக போகவேண்டும் என்றார்கள்.
எவ்வளவோ சொன்னேன். கேட்கவில்லை. போயே ஆகனும் என்றார்கள். கடைசியில் கூட்டிட்டு போய் பறிகொடுத்ததுதான் மிச்சம். விஜய் வண்டி வந்ததுதான் தெரியும். நாங்கள் அவரைப் பார்க்கவேயில்லை. அவர் பேசியதையும் கேட்கவில்லை. கால் மணி நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது.
என் கணவர் போக வேண்டாம் என்றுதான் சொன்னார். இவர்களுடைய பிடிவாதத்தால்தான் கூட்டிப்போனேன். கூட்டிப்போகமால் இருந்திருந்தால் என் பிள்ளைகள் எங்கேயும் போயிருக்காது. அங்கே போயிருக்கவே கூடாது. போகாமல் இருந்திருந்தால் இந்நேரம் விளையாடிக் கொண்டிருந்திருப்பார்கள்" என்று கூறியிருந்தார்.