பொது வாழ்க்கையில் அரசியல் தலைவர்கள் நிதானம் இழப்பது ஏன்?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

திமுக மூத்த அமைச்சர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் மீது கடுமையாக நடந்துகொள்ளும் சம்பவங்களும் “என்னையே தூங்க விடாமல் செய்கின்றன” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டது போன்ற பேச்சுக்களும் தொடர்ந்து வருகின்றன. 

சமீபத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கைகொடுக்க வந்த தொண்டர்களை வேகமாக தடுத்து நிறுத்தும் வீடியோ வெளியானது. கடந்த வாரத்தில் திருவள்ளூரில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், ஒரு நாற்காலியை மட்டும் எடுத்துவந்த நிர்வாகியை நோக்கி கல் வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவங்களை அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “இந்திய வரலாற்றில் மக்கள் மீது கல் எறியும் அமைச்சரை பார்த்திருக்கிறீர்களா?” என்றும் “மக்களை தாக்குவதற்கு திமுக அமைச்சர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருப்பார்கள் போல தெரிகிறது” என்றும் விமர்சித்திருந்தார்.

இதற்கு நடுவில், ஜன. 28 அன்று சேது சமுத்திர திட்டம் குறித்து திராவிடர் கழகம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திமுக பொருளாளர் டி.ஆர். பாலு, “திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீது யாரேனும் கை வைத்தால் அவரின் கையை வெட்டுவேன், எனக்கு அதற்கான பலம் இருக்கிறது” என பேசியது சமீபத்திய சர்ச்சையானது,

இதற்கு முன்பும் இத்தகைய சர்ச்சை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தம்மைச் சந்திக்க வந்த நரிக்குறவர் சமூகத்தின் பிரதிநிதியை வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அவமதித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதேபோல, இலவச பேருந்து சேவை குறித்தும் திமுக துணை பொதுச் செயலாளரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான க. பொன்முடி பேசிய காணொளிகளும் வைரலாகி விமர்சனத்திற்குள்ளாயின.

இதைத்தொடர்ந்து, செப்டம்பர் மாதம் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், “மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பது போல் என் நிலைமை இருக்கிறது. கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் என்னைத் தூங்கவிடாமல் செய்கிறது. நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி விடக்கூடாதே என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன்” என பேசியிருந்தார்.

அவருடைய இந்த பேச்சுக்குப் பின்பும் அமைச்சர்கள் இப்படி நடந்துகொள்வதும் பேச்சுக்களும் தொடர்வது ஏன்? 

"மிக சாதாரணமான சம்பவங்கள்"

திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் இந்த கேள்வியை முன்வைத்தோம். 

“இந்த சம்பவங்கள் எல்லாம் மிகச் சாதாரணமானவை. எதிர்க்கட்சியினர் இதனை பெரிதுபடுத்துகின்றனர். அரசியல் - தத்துவார்த்த ரீதியாக அவர்களால் எங்களுடன் மோத முடியவில்லை. பள்ளியில் பாடங்களை கவனிக்காத மாணவர் மீது ஆசிரியர் சாக்பீஸ் எறிவார், குடும்பத்திலும் பிரச்னை என்றால் டிவி ரிமோட்டை தூக்கி எறிவோம். அதுபோன்றுதான் இவையும். இவை ஒழுங்கீனமான, அருவருக்கத்தக்க செயல்கள் அல்ல. அதற்காக ஒரு கட்சியையே குறை சொல்லக்கூடாது. 

குறிப்பிட்ட காலத்திற்கு வேண்டுமானால் இதனை பேசலாம். ஆனால், மக்கள் இதனை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அமைச்சர்கள் தங்கள் கட்சி தொண்டர்களிடம் தான் அப்படி நடந்துகொள்கின்றனர். கட்சிக்காரர்களை நாங்கள் சமாதானம் செய்துகொள்வோம். இவையெல்லாம் சிறிய பிணக்குகளே,” என தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் இத்தகைய காணொளிகளை காணும் இளைய தலைமுறையினர் இடையே திமுக மீது எதிர்மறை எண்ணத்தை இவை ஏற்படுத்தாதா, கட்சிக்குப் பின்னடைவாக இருக்காதா என கேட்டபோது, “இன்றைக்கு இருக்கும் இளைஞர்களாக பகுத்தறிவுடன் சிந்திப்பவர்களாக இருக்கின்றனர். அவர்கள் இதனை பெரிதுபடுத்தமாட்டார்கள்.

இத்தகைய சம்பவங்களை மட்டும் வைத்து அவர்கள் மதிப்பிடுவதில்லை. முதலமைச்சரின் நடவடிக்கைகளை அவர்கள் பார்க்கின்றனர், விழிப்புணர்வுடனேயே இருக்கிறார்கள். நாம் பேசும் ஆக்கப்பூர்வமான கருத்துகளே காலத்திற்கும் நிற்கும். இத்தகைய சிறு சம்பவங்கள் நிலைத்திருக்காது. எனினும், இச்சம்பவங்கள் சிறிய சேதத்தை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.

திமுக தலைவர்கள் மட்டுமின்றி, அதிமுக, பாஜக தலைவர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளில் செய்தியாளர் சந்திப்புகளில் கோபத்துடன் நடந்து கொள்ளும் சம்பவங்களும் உண்டு. 

எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, அந்த பதவியில் ஆர்.பி. உதயகுமாரை நியமிக்க வேண்டும் எனக்கோரி, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, நிர்வாகி ஒருவரை எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசி கோபத்தை வெளிப்படுத்தினார்.

அதேபோன்று, அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, தலித் சிறுவன் ஒருவரை தனக்கு காலணி மாட்டிவிடுமாறு கூறியது, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை கடுமையான முறையில் விமர்சித்தது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

பாஜகவிலும் இதே போக்கு சில நிகழ்வுகளில் பதிவாகியிருக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர் சந்திப்புகளில் நிருபர்களை எதிர் கேள்வி கேட்கும் விதமும் கோபத்துடன் அவர்களை அணுகும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

“குரங்கு மாதிரி ஏன் என்னையே சுற்றிவருகிறீர்கள்?” என செய்தியாளர்களை பார்த்து அவர் கேள்வி கேட்டதும் சர்ச்சையாகியிருந்தது. 

இவை குறித்து அதிமுக, பாஜகவை சேர்ந்தவர்களிடம் பேசினோம். 

"யார் செய்தாலும் தவறுதான்"

அதிமுக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி பிபிசி தமிழிடம் பேசுகையில், “அந்தந்த கட்சி தலைவர்கள்தான் இத்தகைய நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளோ, பேச்சோ யார் செய்தாலும் தவறுதான். நான் செய்தாலும் தவறானதுதான். யாரும் இதனை சரி என சொல்ல மாட்டார்கள்” என தெரிவித்தார்.

இதனால், குறிப்பிட்ட தலைவர்கள் சந்திக்கும் விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால் இம்மாதிரியான விமர்சனங்களை தாங்கிக்கொள்ளத்தான் வேண்டும். அவற்றை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. மக்கள் இத்தகைய சம்பவங்களை தவறாகத்தான் நினைப்பார்கள். நான் அரசியலில் இருக்கிறேன், நான் கொஞ்சம் அடாவடியாக நடந்துகொண்டால் என்னைப் பார்த்து முகம் சுழிக்கத்தானே செய்வார்கள். அதனை யாரும் சரியென்று சொல்ல மாட்டார்கள். கட்சியை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிமுகவில் பலமுறை எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து அறிவுறுத்தியிருக்கிறார். மக்கள் அருவருக்கத்தக்க வகையில் நடந்துகொள்ளக் கூடாது என கூறியிருக்கிறார்” என தெரிவித்தார்.

"கேள்வி கேட்பதில் தவறில்லை"

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு திமுக அமைச்சர்களின் நடவடிக்கைகள் குறித்து கூறுகையில், “ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் தைரியத்தில்தான் இப்படி செய்கின்றனர். நாம் என்ன செய்தாலும் மக்கள் நமக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என எண்ணுகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்கள், மக்களுக்காக சேவை செய்பவர்கள். அவர்கள் அப்படி நடக்கக்கூடாது” என தெரிவித்தார்.

அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இத்தகைய முறையில் நடப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, “பத்திரிகையாளர்கள் எங்களை கேள்வி கேட்டால், அவர்களுக்கு பதில் கொடுப்பதற்கோ அல்லது அவர்களிடம் கேள்வி கேட்பதற்கோ உரிமை உண்டு. ஜனநாயகத்தில் அதற்கு இடம் உண்டு. அண்ணாமலை கேள்வி கேட்டதில் எந்த தவறும் இல்லை. கட்சியில் இதற்கு எந்த எதிர்வினையும் இல்லை. அவர் துணிச்சலாக பேசுவதை நாங்கள் பலமாக கருதுகிறோம். அவர் பயப்படாமல் கேள்வி கேட்கிறார்” என தெரிவித்தார்.

அதிமுக, பாஜகவில் உள்ள தலைவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள திமுகவின் மூத்த தலைவர்கள் இவ்வாறு நடந்துகொள்வது காலப்போக்கில் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்கிறார், பத்திரிகையாளர் மணி.

“அண்ணாமலை என்ன வேண்டுமானாலும் பேசுவார், இழப்பதற்கு அவரிடம் எதுவும் இல்லை. ஆனால், திமுக ஆட்சியில் இருக்கிறது. இப்படி நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக்கூறுகிறார் மணி. 

“அதிமுக ஆட்சிக்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் அதிகமாக இல்லை. ராஜேந்திர பாலாஜியின் சர்ச்சை பேச்சுகள், நிகழ்வுகள் தான் நடைபெற்றன. இவ்வளவு தொடர்ச்சியான சம்பவங்கள் இல்லை. திமுகவிலும் முந்தைய ஆட்சிக்காலத்தில் அப்படியில்லை” என்றார்.

விரக்தியின் வெளிப்பாடா?

மேலும் அவர் கூறுகையில், “இத்தகைய சம்பவங்கள் அதிகமாகியிருப்பது உண்மைதான். சமூக வலைதளங்களால் அதிகம் பரப்பப்படுகிறது என்பதும் உண்மைதான். இவை மிகவும் அவலமானது.

“தூக்கமற்ற இரவுகளைக் கழிக்கிறேன்” என முதலமைச்சர் கூறியும் ஏன் இவ்வாறு நடந்துகொள்கின்றனர் என்பது புரியவில்லை. தேர்தல் சமயத்தில் இத்தகைய பேச்சுகளை பெரிதுபடுத்தத் தேவையில்லை. தேர்தல் அல்லாத காலத்தில் இப்படி பேசுவதுதான் சிக்கல். புதிய அமைச்சர்களைவிட மூத்த அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள் இப்படி நடந்துகொள்வதுதான் புதிதாக இருக்கிறது. முகம் அறியாதவர்கள் இப்படி பேசுவது பிரச்னையில்லை. 

இதன்மூலம் முதலமைச்சருக்குத்தான் அதீதமான பிரச்னைகளை இவர்கள் கொண்டுவருகின்றனர். கட்சியில் நிலவும் விரக்தியால் இவ்வாறு நடந்துகொள்கிறார்களா என்பது புரியவில்லை. கட்சிக்குள், ஆட்சியில் அவர்கள் விரும்பியவை நடக்கவில்லை என்ற விரக்தியால் இப்படி நடந்துகொள்ளலாம். அவர்களின் செயல்பாடுகளை சுற்றி இருப்பவர்களே முகம் சுழிக்கிறார்கள். அரசின் மீது அதிருப்தியில் இருப்பவர்களுக்கு இது கேலிபொருளாக மாறும். திமுக மூத்த அமைச்சர்கள் தங்களையும் கேலிபொருளாக மாற்றிக்கொள்கின்றனர். காலப்போக்கில் இவை வெறுப்பையே ஏற்படுத்தும். முதலமைச்சர் மீண்டும் தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும். மரபார்ந்த எதிரிகளுக்கு வாய்ப்புகளை வழங்கிவிடக் கூடாது” என தெரிவித்தார் பத்திரிகையாளர் மணி. 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: