You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே விந்து கொடையாளருக்குப் பிறந்த 3 பெண்கள் பிற்காலத்தில் சந்தித்துக் கொண்டது எப்படி?
- எழுதியவர், ஜெம்மா டுன்ஸ்டன்
- பதவி, பிபிசி வேல்ஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நடாஷா, ஜெம்மா மற்றும் ஹெலன் ஆகிய மூன்று பெண்களும் தங்களின் தந்தை யார் என்பதைத் தெரிந்தே தாங்கள் வளர்ந்ததாக நம்பியிருந்தனர்.
ஆனால் பல ஆண்டுகள் கழித்து, டிஎன்ஏ பரிசோதனைகள் எடுத்த பிறகு தான் அவர்கள் மூவரும் ஒரே விந்து கொடையாளர் மூலம் பிரசவிக்கப்பட்டது தெரியவந்தது.
1991-ஆம் ஆண்டு விதிமுறைகள் அறிமுகப்படுவதற்கு முன்பாக பிறந்ததால் தாங்கள், விந்து கொடை ஒழுங்குபடுத்தப்படாத காலகட்டத்தில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் தங்களை "ஸ்பெர்ம் சிஸ்டர்ஸ்" என்று அழைத்துக் கொள்கின்றனர். தங்களின் புதிய உறவை கூட்டாக அனுபவித்து வரும் அவர்கள் முதல் சந்திப்பை "ஒரு தேவதைக் கதைப் போல இருந்தது. ஆனந்த கண்ணீர் வந்தது." என்று குறிப்பிடுகின்றனர்.
ஜெம்மாவும் ஹெலெனும் பெர்க்ஷயரில் ஒன்றாக வளர்ந்தனர். அவர்களை வளர்த்த தந்தை தான் தங்களின் உயிரியல் தந்தை என அவர்கள் நினைத்திருந்தனர்.
30 வயதை நெருங்கியபோது தான் தாங்கள் விந்து கொடையாளர் மூலம் பிறந்ததை அறிந்து கொண்டார்கள். அவர்கள் பிறந்த காலகட்டத்தில் ஆவணப் பதிவுகள் ஒழுங்குபடுத்தப்படாத காரணத்தால் இருவருக்கும் ஒரே கொடையாளர் என்பது கூட முதலில் தெரியவில்லை.
"அப்போதெல்லாம் விந்து கொடை ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்தது. பெரும்பாலான பெற்றோர்கள் பிறந்த குழந்தைகளைத் தங்களின் பிள்ளைகள் போல வளர்க்குமாறு கூறப்பட்டனர். கொடையாளர் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் என அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர்," என்கிறார் சர்ரேவில் வசிக்கும் 36 வயதான ஜெம்மா.
1991-ஆம் ஆண்டு இவை ஒழுங்குபடுத்தப்படவில்லை. அந்த ஆண்டில் தான் பிரிட்டனின் கருத்தரித்தல் ஒழுங்குமுறை அமைப்பான மனித கருத்தரித்தல் மற்றும் கருவியல் ஆணையம் உருவாக்கப்பட்டு வழிகாட்டுதல் அறிமுகப்படுத்தப்பட்டன.
டிஎன்ஏ பரிசோதனை அவர்களுக்கு ஒரே உயிரியல் தந்தை இருந்ததை உறுதி செய்ததோடு புதிய சகோதரிகளையும் அறிமுகம் செய்தது.
உடல் ரீதியில் வித்தியாசமாக உணர்ந்ததாக கூறும் ஜெம்மா, தான் யார் என்பது தெரியாதது போலவும் உணர்ந்ததாகத் தெரிவித்தார்.
"நான் செய்த ஒவ்வொரு சிறு விஷயங்களையும் கேள்வி கேட்கத் தொடங்கினேன். இவை அனைத்தும் இறுதியில் என் மரபணுவை பற்றியதா என்கிற கேள்வி எழத் துவங்கியது," என்றார்.
ஹாம்ப்ஷயரில் வசிக்கும் 35 வயதான ஹெலனுக்கு முதல்கட்ட அதிர்ச்சிக்குப் பிறகு இந்தச் செய்தி ஒரு விதமான தெளிவு கொடுத்தது.
"மிகவும் விசித்திரமான அதே சமயம் ஆட்கொள்ளும் விதமான அமைதி எனக்கு ஏற்பட்டது. என் வாழ்க்கையின் சில தருணங்களை நான் திரும்பிப் பார்க்கிறேன், திடீரென விஷயங்கள் எனக்குத் தெளிவாகப் புரிந்தன." என்கிறார் ஹெலன்.
அதன்பிறகு ஒரே கொடையாளர் மூலம் பிறந்த இரண்டு சகோதரிகளை அவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவரான 36 வயதான நடாஷா கோல்ஸ்டெயின்-ஒபாசியாக் எஸ்ஸெக்சில் வசித்து வருகிறார்.
ஒரு கொடையாளர் மூலம் தான் பிறந்ததை 21 வயதிலே அவர் தெரிந்துகொண்டாலும் 31 வயது வரை டிஎன்ஏ பரிசோதனை எடுக்கவில்லை.
"என்னில் இன்னொரு பாதி யாரால் ஆனது என்பதைத் தெரிந்துகொள்ள நான் மிகவும் ஆர்வமாக இருந்ததால் பரிசோதனை செய்தேன். என் உடன் பிறந்தவர்களைக் கண்டுபிடிப்பேன் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை," என்கிறார் நடாஷா.
மேலும் அவர், "உங்களுக்கு உறவினர்கள் இருக்கிறார்கள் என மின்னஞ்சல் கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட டின்டர் செயலியைப் போல தான், நீங்கள் இவர்களுடன் பொருந்தி உள்ளீர்கள், இதோ உங்கள் ஒன்றுவிட்ட சகோதரிகள்." என்றார்.
ஹெலனும் ஜெம்மாவும் நடாஷாவைத் தொடர்புகொண்டு ஒரு மாதத்திற்குள் சந்திக்க ஒப்புக்கொண்டனர்.
"ஒரு காந்தத்தைப் போல நாங்கள் ஈர்க்கப்பட்டோம் என எப்போதும் கூறுவேன்," என்கிறார் ஜெம்மா.
தொடர்ந்து பேசிய அவர் "நடாஷாவைச் சந்தித்து பேசத் தொடங்கிய உடனேயே நாங்கள் ஒரே விதத்தில் பேசுகிறோம், ஒரு விதமான பார்வையைக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்தோம். இதை விசித்திரமானது அதே வேளையில் மாயாஜாலத்தைப் போலவும் உள்ளது," என்று தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இருவரும் சந்தித்துக் கொள்ள வாய்ப்பு இருந்ததையும் அவர்கள் தெரிந்துகொண்டனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் லீட்ஸில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் ஒரே விடுதியில் வசித்தது தெரியவந்தது.
"வளர்ந்தபோது நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாதது மிகவும் வருத்தமே. நாங்கள் ஒன்றாகப் பழகி பிறந்தநாள் கொண்டாட்டங்களைப் பகிர்ந்து கொண்டிருப்போம். எவ்வளவு விஷயங்களை இழந்திருக்கோம் என நினைத்தால் சோகமாக இருக்கிறது," என்றார் ஜெம்மா.
மூன்று பேருக்கும் மற்றுமொரு ஒற்றுமை உள்ளது. மூவருமே கற்பனைத் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஜெம்மா கலைப்படிப்பைத் தொடர்ந்த நிலையில் ஹெலன் இசையையும் நடாஷா நடனத்தையும் பின்பற்றினர். மூவருமே ஒரு காலகட்டத்தில் ஆசிரியர் அல்லது விரிவுரையாளராக இருந்துள்ளனர்.
"கற்பனைத்திறன் நிறைந்த குடும்பத்தில் நான் வளரவில்லை, ஆனால் எங்கள் அனைவருக்கும் கற்பனைத் திறன் இருப்பதைப் பார்த்தால் அனைத்தும் பொருந்திப்போகிறது. உங்களின் வளர்ச்சி ஒத்துப்போகிறது," என்கிறார் ஜெம்மா.
உங்களுடைய பாரம்பரியத்தை அறிந்துகொள்வது எப்படி உங்களுடைய அடையாளத்தைப் பாதிக்கிறது என்பது பற்றி மூன்று சகோதரிகளும் பேசுகின்றனர்.
ஜெம்மா மற்றும் ஹெலனை வளர்த்த தந்தை வெல்ஷ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இருவரும் பலமுறை வேல்ஸ் சென்றதோடு வேல்ஸ் ரக்பி அணியை ஆதரித்துள்ளனர்.
"வெல்ஷ் ஆக இருந்தது எங்கள் வளர்ப்பின் ஒரு முக்கியமான அங்கமாக இருந்தது என நினைக்கிறேன். வலுவான பெருமித உணர்வுடன் நாங்கள் வளர்ந்தோம்," என்கிறார் ஜெம்மா.
அவர்களுடைய உயிரியல் தந்தையும் வெல்ஷ் பாரம்பரியத்தைக் கொண்டவர் என்பது தற்செயலாக டிஎன்ஏ பரிசோதனை மூலம் தெரியவந்தது.
"அதிர்ஷ்டவசமாக எங்களுக்குப் பெரிதாக எதுவும் மாறவில்லை. ஒருவேளை நாங்கள் பிரெஞ்சு அல்லது வேறு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தால் எப்படி உணர்ந்திருக்கும் எனத் தெரியவில்லை. என்னுடைய பாரம்பரியத்தில் வெல்ஷ் இல்லையென்றால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்போம்," என்றார் ஜெம்மா.
நடாஷா வளர்ந்தபோது தனக்கு வெல்ஷ் பாரம்பரியம் இருக்கும் என நினைக்கவில்லை, ஆனால் அங்கு அவருக்கு தொடர்புகள் இருக்கின்றன.
"என்னுடைய சிறு வயதில் பாங்கோர் மற்றும் க்வினெட் போன்ற நார்த் வேல்ஸ் பகுதிகளில் அதிக நேரம் செலவிட்டிருக்கிறேன். அதனால் விசித்திரமாக வேல்ஸ் உடன் ஏற்கெனவே எனக்கு வலுவான தொடர்பு இருப்பதைப் போல உணர்கிறேன்," என்றார் நடாஷா.
தனது கொடையாளர் வேல்ஸிலிருந்து வந்தவர் என்பதை தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக நடாஷா கூறுகிறார்.
"நீங்கள் உண்மையில் யார் என்பதைக் கண்டுபிடித்தால், அது உங்களுக்கு ஒரு விதமான அமைதி உணர்வைத் தருகிறது. எங்களால் அதிர்ஷ்டவசமாக அதைச் செய்ய முடிந்தது," என ஹெலன் தெரிவித்தார்.
தங்களின் உயிரியல் தந்தை யார் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறும் சகோதரிகள் அவரைத் தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்தனர். அந்தச் சந்திப்பு 'கனிவுடனும் நேர்மறையாகவும்' இருந்தது என்றும் கூறினர்.
1991 முதல் பிரிட்டனில் 85,000-க்கும் மேற்பட்டோர் கொடையாளர் சிகிச்சை மூலம் பிறந்ததாக மனித கருத்தரித்தல் மற்றும் கருவியல் ஆணையம் தெரிவிக்கிறது.
2005-இல் பிரிட்டன் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களால் பெயர் குறிப்பிடாமல் விந்து, கருமுட்டை அல்லது கருக்களை கொடையாக அளிக்க முடியாது.
எனவே கொடையாளர் மூலம் பிறந்த குழந்தை 18 வயது ஆகிறபோது தனது கொடையாளரின் தகவல்களைப் பெற்று அவர்களைத் தொடர்புகொள்ள முடிவு செய்யலாம்.
"ஸ்பெர்ம் சிஸ்டர்ஸ்' ஆகிய தங்களைப் பிரிக்க முடியாது என அவர்கள் தெரிவிக்கின்றனர். அதே பெயரில் பாட்காஸ்ட் ஒன்றையும் தொடங்கியுள்ளனர்.
பாட்காஸ்ட் தொடங்கியதற்கான காரணத்தை விளக்கிப் பேசிய நடாஷா, "நான் மூவரும் மிகவும் தனிமையாக உணர்ந்தோம் என நினைக்கிறேன். அதைப்பற்றி பேசுவதன் மூலம் அதற்கான விடைகளைப் பெற்று ஒருவரையொருவர் தெரிந்து கொள்வோம் என்று நினைக்கிறேன்." என்றார்.
இந்த பாட்காஸ்ட் மூலம் தங்களின் சகோதரித்துவத்தை உருவாக்கியதாகக் கூறுகிறார் ஜெம்மா.
"30 அற்புதமான ஆண்டுகள், நாங்கள் பேசிக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இந்த பாட்காஸ்ட் ஹெலன் உடன் என்னை மேலும் நெருக்கமாக உணர வைக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
கொடையாளர் மூலம் கருவுறுதல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிகவும் ஆர்வமுடன் இருப்பதாக மூவரும் தெரிவிக்கின்றனர். நடாஷா இதனை "ஒரு அமைதியான பொருள்" என்கிறார்.
தான் கொடையாளர் மூலம் பிறந்ததை மக்களிடம் தெரிவிக்கும் போது மிகுந்த குழப்பமான, அப்படியென்றால் என்னவென்றே புரியாத ஒரு எதிர்வினையை அவர்களிடமிருந்து பெற்றதாக நடாஷா கூறுகிறார்.
தற்போது சிறந்த ஒழுங்குமுறை நடைமுறைகள் இருந்தாலும் கொடையாளர் மூலம் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இருப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களுக்கு எத்தனை சகோதரர்கள், சகோதரிகள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் தெரிந்திருக்கவில்லை. தற்போது ஒரு கொடையாளருக்கு பத்து குடும்பங்கள் என்று இருக்கிற கட்டுப்பாடு இவர்கள் பிறந்தபோது இல்லை.
சமீபத்திய பிபிசி வேல்ஸ் புலனாய்வு ஒன்று, சமூக ஊடக தளங்கள் மற்றும் செயலிகள் மூலம் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படாத விந்து கொடை தூண்டப்படுகிறது என்பதை வெளிக்க்ண்டு வந்தது.
"தங்கள் மூலம் பதிவு செய்து கொண்டவர்கள், கொடையாளர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்வதை உறுதி செய்ய பிரிட்டனின் மனித கருத்தரித்தல் மற்றும் கருவியல் ஆணையம் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது," என்கிறார் ஜெம்மா.
தொடர்ந்து பேசிய அவர், "சட்டங்கள் மிகவும் மேம்பட்டுள்ளன. ஆனால் துர்திருஷ்டவசமாக ஃபேஸ்புக் ஸ்பெர்ம் மாதிரியான விஷயங்கள் வருவதன் மூலம் அந்த கடின உழைப்பு எல்லாம் வீணாகப் போகிறது என நினைக்கிறேன்.
எந்த விதிகளும் இல்லாத ஒரு காலகட்டத்தில் நாங்கள் பிறந்தோம். தற்போது எந்த வித்தியாசமும் இல்லை. கொடையாளர் மூலம் பிறக்கும் அடுத்த தலைமுறை குழந்தைகளின் குரலாக நாங்கள் இருந்தால் அதன்மூலம் சில பெற்றோர்கள் அதை ரகசியமாக வைப்பது அல்லது எந்தக் கேள்வியும் கேட்காமல் இருப்பதற்கு முன்னால் இருமுறை யோசிக்க தூண்டப்படுவார்கள் என நினைக்கிறேன்." என்றார்.
விந்து கொடையாளர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகள் தற்போது குரலற்றவர்களாக இருக்கிறார்கள் எனக் கூறும் ஹெலன், அவரும் அவரது சகோதரிகளும் அதன் விளைவுகள் குறித்து ஒரு குரலாக திகழ்வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு