You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'100 நாட்களுக்குப் பிறகு ஆகாஷ் டெலிசனின் உடல் தகனம்'- குடும்பத்தினர் எதிர்ப்பது ஏன்?
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வைக்கப்பட்டிருந்த ஆகாஷ் டெலிசனின் உடல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவைத் தொடர்ந்து இன்று (ஜூன் 17) தகனம் செய்யப்பட்டது.
கடந்த மார்ச் 5ஆம் தேதி ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மானாமதுரையை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் போலீஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார். தப்பிச் செல்ல முயன்றபோது டெலிசனுக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை கூறியது, ஆனால் அவர் காவல்துறையால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவரது குடும்பத்தினர், ஆகாஷின் உடலை வாங்க மறுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலைப் பெறப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மூன்று மாதங்களுக்கும் மேலாக ஆகாஷ் டெலிசனின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து, அவரது இறுதிச் சடங்குகளை நடத்த தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு நேற்று (ஜூன் 16) அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து ஆகாஷின் உடல் இன்று காலை மதுரை தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வழக்கின் பின்னணி என்ன?
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனியில் கடந்த மார்ச் 6ஆம் தேதி நள்ளிரவில் ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் (35), ஆதனூரைச் சேர்ந்த அழகர் (33) ஆகியோர் தாக்கப்பட்டனர். ஆயுதங்களால் இவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (24) மற்றும் கோபி என இருவரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களை பிடிக்க முயன்றபோது ஆகாஷ் 'மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார், இதனால் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டது', என காவல்துறையினரின் அறிக்கை கூறுகிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 8ஆம் தேதி அதிகாலை ஆகாஷ் உயிரிழந்ததாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விசாரணையின் போது அடித்து துன்புறுத்தியதால் அவர் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி, போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆகாஷ் மரண வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் திருப்புவனம் ஆய்வாளர் திலீபன், மானாமதுரை உதவி ஆய்வாளர் குகன், சிவகங்கை நகர் தலைமைக் காவலர் தெய்வேந்திரன், சிப்காட் தலைமைக் காவலர் சரத்குமார், மானாமதுரை முதல் நிலை காவலர் காளீஸ்வரன், திருப்புவனம் முதல் நிலை காவலர் மனோகரன் ஆகிய 6 காவலர்களை கடந்த மார்ச் 13ஆம் தேதி இடைநீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி உத்தரவிட்டார்.
ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணன், 'தனது மகனின் மரணம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து கொலை வழக்குப் பதிவு செய்யவும், சுதந்திரமான விசாரணை நடத்தவும்' கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணையை குற்றப்பிரிவு-குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிபிசிஐடி) மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரினார்.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆகாஷ் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும்படி உத்தரவிட்டது.
இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வது உள்ளிட்ட தங்களது பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி ஆகாஷ் குடும்பத்தினரை உடலைப் பெற மறுத்துவிட்டனர். இதனால் ஆகாஷின் உடல் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், ஜூன் 15ஆம் தேதி மாலை 5 மணிக்குள் ஆகாஷின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொள்ள வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. இல்லையெனில், உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்ய நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஆகாஷின் குடும்பத்தினர் உடலைப் பெற மறுத்துவிட்டனர்.
இந்த வழக்கு மீண்டும் ஜூன் 16 விசாரணைக்கு வந்தபோது, 'ஆகாஷ் குடும்பத்தினரின் பல கோரிக்கைகள் ஏற்கெனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக' நீதிமன்றம் குறிப்பிட்டது.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கூறியது என்ன?
"விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது, மூத்த அதிகாரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார், மேலும் சிசிடிவி காட்சிகள், மருத்துவமனை பதிவுகள், சிறைச்சாலை பதிவுகள் மற்றும் காவல் நிலைய பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விசாரணையில் உள்ள குற்றங்களும், கொலை மற்றும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டம் தொடர்பான பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன" என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி எல்.விக்டோரியா கௌரி கூறினார்.
"எனவே, ஆகாஷின் குடும்பத்தினர் உடலைப் பெறத் தொடர்ந்து மறுப்பதை நியாயப்படுத்த முடியாது" என்று குறிப்பிட்ட நீதிபதி, "அந்த உடல் தொண்ணூறு நாட்களுக்கும் மேலாக உரிமை கோரப்படாமல் உள்ளதுடன், பெருமளவு சிதைவடைந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளதுடன், உடலைத் தொடர்ந்து பாதுகாப்பது எந்தவொரு புலனாய்வு நோக்கத்துக்கும் உதவாது என்பதோடு, இறந்தவருக்கு அளிக்கப்பட வேண்டிய கண்ணியத்துக்கும் முரணானது" என்றும் கூறினார்.
இறந்தவரின் கண்ணியம் மரணத்துக்குப் பிறகும் தொடர்வதாகவும், குடும்பத்தினர் உடலைப் பெற மறுப்பதை காரணமாகக் கொண்டு உடலை காலவரையின்றி பாதுகாத்து வைக்க முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
"இறந்தவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பின்பற்றும் மதச் சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து முடிந்தவரை அறிந்து, அதற்கேற்ப இறுதிச் சடங்குகள் நடத்தப்பட வேண்டும். இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு முன்பு, உடலின் புகைப்பட மற்றும் காணொளிப் பதிவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான செலவுகளை அரசு ஏற்கும்" என நீதிபதி கூறினார்.
"ஆகாஷின் உடலை தகனம் செய்வது, சிபிசிஐடி-யின் தற்போதைய விசாரணையைப் பாதிக்காது. சிபிசிஐடி தனது விசாரணையைச் சுதந்திரமாகத் தொடரவும், தனது இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் கூடிய விரைவில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது." என நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆகாஷின் உடல் இன்று காலை (ஜூன் 17) மதுரை தத்தனேரி மயானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.
ஆகாஷின் குடும்பத்தினர் கூறுவது என்ன?
"நேற்று தான் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து அவசர அவசரமாக இன்று காலையே எனது மகனின் உடலை தகனம் செய்துள்ளார்கள். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூட எங்களுக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை." என்று கூறுகிறார் ஆகாஷ் டெலிசனின் தந்தை ராஜேஷ் கண்ணன்.
"இந்த வழக்கில் 100 நாட்களைக் கடந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய முக்கிய கோரிக்கை, அதை வலியுறுத்தி தான் உடலை வாங்க நாங்கள் மறுத்து வந்தோம். எங்களுடைய துக்கத்தையும் மீறி நாங்கள் அமைதியான வழியில் தான் போராட்டங்கள் நடத்தி வந்தோம்." என்று கூறுகிறார் அவர்.
"இன்று காலை நாங்கள் காவல்துறையிடம் எங்களுக்கு மேல்முறையீடு செய்ய அவகாசம் வேண்டும் என்று கூறினோம். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டார்கள். நாங்களாவது உடலைப் பெற்றுக்கொள்கிறோம், 'ஆதரவற்ற பிணம்' என அரசே தகனம் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் எங்கள் கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள்" என்றார் அவர்.
"தமிழக அரசு இந்த வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக நாங்கள் தவெக அரசின் அமைச்சர்களையும் சந்தித்தோம், ஆனால் அதற்குள் என் மகனை தகனம் செய்துவிட்டார்கள்" என்றும் ராஜேஷ் கண்ணன் கூறினார்.
இது தொடர்பாக பேசிய ராஜேஷ் கண்ணன் தரப்பு வழக்கறிஞர், சி.எம்.ஆறுமுகம், "உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அவகாசம் வழங்கப்படவில்லை. ஆனாலும் சட்டரீதியான போராட்டங்களை நாங்கள் தொடர்வோம், விசாரணை முறையாக நடைபெற்று, குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
தமிழக அரசு கூறுவது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, "ஆகாஷின் குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன் என்னைச் சந்தித்து இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்கள். இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களையும் நான் வழங்கினேன்" என்று கூறினார்.
"100 நாட்களாக அவர்கள் அமைதியான வழியில் போராடியுள்ளார்கள். அதை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஆகாஷின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு நிச்சயமாக குற்றவாளிகளை கைது செய்யும் என ஆகாஷ் குடும்பத்தினருக்கு நான் உறுதி அளித்துள்ளேன்" எனக் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு