You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
11 பந்துகளில் அரைசதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி: இலங்கை ஏ அணிக்கு 378 ரன்கள் இலக்கு நிர்ணயம்
(இந்த கட்டுரை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்தவர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.
இந்தியா, இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ஏ அணிகள் மோதும் முத்தரப்பு தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் இலங்கை ஏ அணிகள் டம்புல்லா சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற இலங்கை ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய ஏ அணி சார்பில் ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய இரு இளம் வீரர்களும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி முதல் ஓவரில், தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரி ஆக்கினார்.
அதன் பின்னர் மூன்றாவது ஓவரில் மீண்டும் ஸ்ட்ரைக் எடுத்த சூர்யவன்ஷி முதல் பந்தை பவுண்டரிக்கும் அடுத்த இரண்டு பந்துகளை சிக்ஸருக்கும் விளாசினார். இலங்கை வீரர் முகமது ஷிராஸ் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் என 26 ரன்களை அவர் விளாசினார்.
நான்காவது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விரட்டிய வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் 11 பந்துகளில் ஒரு டாட் பால் மட்டுமே விட்டிருந்தார். இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற புதிய உலக சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். இதற்கு முன்பாக, 2006-ஆம் ஆண்டில் இலங்கையைச் சேர்ந்த கௌசல்யா வீரரத்னா 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே உலக சாதனையாக இருந்தது.
அதன் பிறகும் ரன் வேகத்தை சிறிதும் குறைக்காமல் விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 94 ரன்கள் விளாசிய நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். 9வது ஓவரின் ஐந்தாவது பந்தில் சூர்யவன்ஷி ஆட்டமிழந்த போது இந்திய ஏ அணியின் ஸ்கோர் 132 ரன்களாக இருந்தது. வைபவ் சூர்யவன்ஷி 10 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் விளாசியிருந்தார்.
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் பாராட்டியுள்ளனர். இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "50 ஓவர் கிரிக்கெட் போட்டியைத் தான் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு வடிவமாக வைபவ் கருதுகிறார்; ஏனெனில், இதில் 10 ஓவர்களுக்கு 'சர்க்கிள்' பகுதிக்கு வெளியே ஆறு ஃபீல்டர்களுக்குப் பதிலாக இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே இருப்பார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலானது இன்னிங்ஸின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்தது. வைபன் சூர்யவன்ஷிக்கு அடுத்து அணியின் கேப்டன் திலக் வர்மா அதிகபட்சமாக 90 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். இறுதியில் அதிரடியாக ஆடிய அனுகுல் ராய் 15 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.
இலங்கை அணி சார்பில் வனுஜா சஹான், ரவிந்து ஃபெர்னான்டோ மற்றும் குகதாஸ் மதுளான் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இலங்கை ஏ அணி வெற்றி பெற 378 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு