கல்லெறிந்த அமைச்சர்; 'கற்கால திமுக' என அதிமுக விமர்சனம்

பிரசுரிக்கப்பட்டது

நாற்காலியைக் கொண்டுவர நேரமானதால், நாற்காலி கொண்டுவருபவரை நோக்கி பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் கல்லெறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சியினர் அவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

மொழிப் போர் தியாகிகளை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தி.மு.க. கூட்டங்களை நடத்திவருகிறது. இந்த ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவிருக்கிறார்.

இதற்காக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் ஐ.சி.எம்.ஆர். அருகே மேடை அமைக்கும் பணி நடந்துவந்தது. இந்தப் பணிகளைப் பார்வையிட மாநில பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் நேற்று வந்திருந்தார். அவருடன் தி.மு.க நிர்வாகிகளும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

அப்போது தானும் மற்ற நிர்வாகிகளும் உட்கார்வதற்கு நாற்காலிகளை எடுத்து வருமாறு அங்கிருந்த தொண்டர்களிடம் கூறினார் நாசர். ஆனால், தொண்டர்கள், மிகக் குறைந்த எண்ணிக்கையில் நாற்காலிகளை எடுத்துவந்ததால் நாசர் ஆத்திரமடைந்தார். உடனே கீழே கிடந்த கல்லை எடுத்து தொண்டர் மீது எறிந்து கூடுதல் நாற்காலிகளைக் கொண்டு வரும்படி கத்தினார்.

இதனை அங்கிருந்த ஊடகத்தினர் படம் பிடித்த நிலையில், அவை சமூக வலைதளங்களில் வெளியாயின. இதையடுத்து சமூக வலைதளங்களில் அமைச்சர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, பாரதிய ஜனதா கட்சி, இந்த விவகாரத்தில் அமைச்சர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது.

"இந்திய வரலாற்றில் எந்த அமைச்சராவது மக்கள் மீது கல்வீசி பார்த்திருக்கிறீர்களா? தி.மு.கவைச் சேர்ந்த அமைச்சர் நாசர் மக்களை நோக்கி கல் வீசுவதைப் பாருங்கள். நாகரிகமோ, கண்ணியமோ இல்லாமல் மக்களை அடிமைகளைப் போல நடத்துகிறார். இதுதான் தி.மு.க." என விமர்சித்திருக்கிறார்.

இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டியிருக்கும் மத்திய தொழில்முனைவு, திறன் மேம்பாடு, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்,  "தனது சித்தாந்த அடிப்படைகளில் இருந்து குடும்ப அரசியலில் வீழ்ந்திருக்கும் தி.மு.க.வில் இதுபோன்ற விளைவுகள் தவிர்க்க முடியாதவை" என்று விமர்சித்திருக்கிறார்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரும் "தட் இஸ் திராவிட மாடல்" என்று கிண்டல் செய்திருந்தார்.

இந்த வீடியோ வெளியானதும் ட்விட்டரில் பலரும் இந்த சம்பவத்தைக் கேலி செய்து பதிவிட்டிருந்தனர்.

"தம்பி.. எங்க ஹெல்மெட்டோட  கிளம்பிட்ட?

நம்ம  ஆவடி நாசர் பொதுக் கூட்டத்துக்குத்தான்.."  என்று கூறுவதைப் போல ஒருவர் பதிவிட்டிருந்தார்.

"நியூசிலாந்து வீரர்கள் பந்து வீச்சில் திணறுவதை பார்த்து அவர்களுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று அண்ணன் ஆவடி நாசர் அவர்கள் பயிற்சி அளித்த போது" என்று கூறி ஒருவர் அந்த வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இதுபோல சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறை அல்ல. பெரிய பட்டியலே இருக்கிறது.

1. செப்டம்பர் 23: தமிழ்நாட்டில் வசித்து வரும் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகங்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த குருவிக்கார இன மக்களை நரிக்குறவர் என்ற பெயரில் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருதுநகரில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் பிரதிநிதி தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரனை பார்க்க சென்றபோது அமர இருக்கை கூட கொடுக்காமல் அவமதித்துவிட்டதாக குறவர் சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் பரவியதால், எதிர்க்கட்சியினர் இது குறித்து கடுமையாக விமர்சித்தனர்.

2. ஜூலை 9: விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் உதவி கேட்டு மனு கொடுக்க வந்த பெண்ணை, அந்த மனு வைக்கப்பட்டிருந்த கவரால் தலையில் அடித்தார். அந்த பெண்ணை அமைச்சர் தலையில் அடிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதற்குப் பிறகு, அமைச்சர் தன் உறவினர் என்றும் அவர் தன்னைத் தலையில் அடிக்கவில்லை என்றும் அந்தப் பெண்ணே ஊடகங்களில் மறுப்பு தெரிவிக்கும் காட்சிகளும் வெளிவந்தன.

3. செப்டம்பர் மாதம் ஒரு தி.மு.க. கூட்டத்தில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "உங்க குடும்ப கார்டுக்கு 4 ஆயிரம் ரூபாய். கொடுத்தாரா? இல்லையா? வாங்குனீங்களா? வாயை திறங்க... 4 ஆயிரம் ரூபாய் வாங்குனீங்களா... இப்ப பஸ்ஸுல எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு போனும்னாலும், வேற எங்க போனும்னாலும் ஓசி, ஓசி. ஓசி பஸ்ஸுல போறீங்க" என்று கூறினார். இது மிகப் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளானது. பல இடங்களில் பெண்கள் பேருந்துகளில் ஏறி, தங்களுக்கு கட்டணப் பயணச் சீட்டு அளிக்க வேண்டும் என்று கேட்ட வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவியது. இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, "விளையாட்டா சொன்னதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கலாமா?" என்று கேட்டார்.

4. செப்டம்பர் 21: விழுப்புரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடை திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கு திராவிட மாடல் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்று பேசினார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முகையூர் ஒன்றியக் குழுத் தலைவரைப் பார்த்து, 'ஒன்றியக் குழுத் தலைவரே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்தான்' என்று கூறியதோடு, அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஏம்மா…நீ எஸ்.சி தானே" என்று கேட்டார். அதற்கு அந்த பெண் தலைவர் ஆமாங்க என்று பதில் சொன்னார். அமைச்சரின் செயல்பாடு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

5. இதே செப்டம்பர் மாதத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய துரைமுருகன், "அதே மாதிரி எங்களுக்குக் கொடுக்குறேன்னீங்களே ஆயிரம், அது எங்கன்னு கேக்குறீங்களா? அதுவும் சில்லரை மாத்திக்கிட்டிருக்கோம். சீக்கிரம் கொடுத்துடுவோம். கவலைப்படாதீங்க.. உங்கம்மாளுக்கும் ஆயிரம், பொண்ணுக்கும் ஆயிரம். இரண்டாயிரம் கொடுக்கும் ஒரே ஆட்சி இந்த ஆட்சிதான்" என்றார். இதுவும் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையானது.

6. திருப்பத்தூர் ஒன்றியத்தில் 9 ஊராட்சிகளுக்கான டெண்டர் விடுவதில் பிரச்சனை எழுந்த போது, அதைப் பற்றிப் பேசவந்த ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், "உங்களுக்குப் பிரச்சனை வந்தால், நான்தான் வந்து உக்காருவேன். திருப்பத்தூர் எம்.எல்.ஏ. வந்து உக்காருவானா? அந்தாளு என்ன செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது. 40 சதவீதம் உங்களுக்கு, 60 சதவீதம் எங்களுக்கு என முடிச்சுக்கிருவோம்" என்றார். இந்த பேச்சு வீடியோ வடிவில் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால், அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டு பரப்பட்டதாகச் சமாளித்தார் வில்வநாதன்.

இந்த நிகழ்வுகளையும் அதனால் ஏற்பட்ட விமர்சனங்களையும் கண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த அக்டோபர் மாதம் நடந்த தி.மு.க. பொதுக் குழுவில் பேசும்போது,  கட்சியினர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் தன்னைத் தூங்கவிடாமல் செய்வதாகக் கூறியிருந்தார். இப்போது மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் நடந்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: