'மூக்கில் ரத்தம் வழிந்தபடியே...'; அமோனியா வாயு கசிவால் தொழிலாளர்கள் பலி - என்ன நடந்தது?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திருவள்ளூரில் தனியார் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மதியம் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் என்ன நடந்தது?

"வாயு கசிவு ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலைக்கு வந்து பார்த்தோம். அவர்களில் பலரும் சிறுமிகளாக இருந்தனர். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

பெண் தொழிலாளர்களின் வயது விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக, தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகாவில் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயின்ட் பீட்டர் அண்ட் பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

அசாம், ஜார்க்கண்ட், ஒடிஷா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். பெண் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும் இந்த ஆலையில், இறால் பதப்படுத்தும் தொழில் பிரதானமாக உள்ளது.

அமைச்சர் கூறியது என்ன?

"கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பனிக்கட்டி துகள் தயாரிக்கும் இயந்திரத்துக்குச் (ice flakes generator machine) செல்லும் குழாயில் எதிர்பாராத ஏற்பட்ட விபத்தின் காரணமாக வாயு கசிவு ஏற்பட்டது" என சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தெரிவித்தார்.

விபத்து காரணமாக வளாகத்தில் தங்கியிருந்த 70 பெண்களும் நான்கு ஆண்களும் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்திப்பதற்காக பிபிசி தமிழ் சென்றது. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவுக்கு திங்கள்கிழமை காலை சென்றபோது இரண்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

"இங்கு 11 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இன்று காலை (ஜூன் 22) இறந்துவிட்டார். மற்றவர்களுக்கு வெண்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது," என மருத்துவமனையின் உள்ளுறை மருத்துவ அலுவலர் (RMO) அறவாழி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'மூன்று மாதம் ஆகிறது'

தனியார் ஆலையில் வேலை பார்த்து வந்த இரண்டு தொழிலாளர்கள் மட்டுமே அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவரான பிரகாஷிடம் பிபிசி தமிழ் பேசியது.

இவர் ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்தவர். " மூன்று மாதங்களுக்கு முன்பு தான் வேலையில் சேர்ந்தேன். மாதம் 13 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது" எனக் கூறினார்.

"வாயு கசிந்த நேரத்தில் என்ன நடந்தது?" என அவரிடம் கேட்டபோது, "எங்களை வேலைக்கு அழைத்து வந்த ஒருங்கிணைப்பாளர் அனுமதியில்லாமல் பேச முடியாது" எனக் கூறி மறுத்துவிட்டார். அவருடன் அமர்ந்திருந்த சந்தோஷ் என்ற தொழிலாளரும் இதே பதிலைத் தெரிவித்தார்.

அங்கிருந்து சம்பவம் நடந்த திருவள்ளூர் தனியார் ஆலைக்கு பிபிசி தமிழ் சென்றது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆலைக்குள் ஆய்வை நடத்திக்கொண்டிருந்தனர்.

அந்தப் பகுதியில் அமோனியா வாயுவின் நெடியை உணர முடிந்தது. தொழிற்சாலையில் உள்ள அமோனியா வாயுவை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.

சம்பவ நாளில் என்ன நடந்தது?

ஆலை அமைந்துள்ள கன்னிகைப்பேர் பகுதியில் வசிக்கும் சுதேஷ்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"காலை சுமார் 11.30 மணியளவில் அமோனியா வாயு வெளியேறியது. அதன் நெடியை நாங்கள் அனுபவித்தோம். வாயுவின் தாக்கத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டது" என்கிறார்.

சம்பவம் நடந்த நேரத்தில் உள்ளூர் மக்கள் ஆலையின் வாயிலில் குவிந்துள்ளனர். "நாங்கள் வந்து பார்த்தபோது பணிபுரிந்த பெண்கள் மீது சிலர் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தனர். சிலர் மூக்கில் ரத்தம் வழிந்தபடியே மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லப்பட்டனர்" என்கிறார் சுதேஷ்குமார்.

அவர்களில் பலருக்கும் 18 வயதுக்குக் கீழ் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கூறிய அவர், "அபாயகரமான வாயுவைக் கையாளும் தொழிற்சாலைகளில் இதுபோன்ற தொழிலாளர்கள் நிலை குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

பெண் தொழிலாளர்களின் தற்போதைய நிலை

கடல் உணவு ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். "உள்ளூர் மக்களுக்குத் தூய்மைப் பணி போன்றவை வழங்கப்படுகின்றன. தொழிற்சாலையில் முக்கியமான பணிகளில் வெளிமாநில தொழிலாளர்களே அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்கிறார் சுதேஷ்குமார்.

அங்கிருந்து பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு பிபிசி தமிழ் சென்றது. அங்கிருந்த துணை தாசில்தார் சௌந்தரியிடம் பேசியபோது, "இங்கு 59 பெண் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் அசாம், ஒடிஷா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்" எனக் கூறினார்.

காவல்துறை பாதுகாப்பு வளையத்தில் அப்பகுதி இருந்தது. மண்டபத்தில் வருவாய்த்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆகியோரின் அனுமதியுடன் பெண் தொழிலாளர்களிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது.

"அவர்களுடன் பணிபுரிந்த சிலர் இறந்துவிட்டதால் அவர்கள் பேசும் மனநிலையில் இல்லை. அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் மற்றும் உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன" என, துணை தாசில்தார் சௌந்தரி பதில் அளித்தார்.

ஆலையில் இயல்பு நிலை திரும்பியதும் அவர்கள் பணிக்குத் திரும்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆலையில் குழந்தைத் தொழிலாளர்களா?

பெண் தொழிலாளர்களில் பலரும் சிறுமிகளாக இருப்பதைப் பார்க்க முடிந்தது. எனினும், அவர்களின் வயதை உறுதி செய்ய முடியவில்லை. இதுகுறித்து அங்கிருந்த தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "இதைக் கவனத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தைத் தொழிலாளர் என யாரும் இல்லை எனத் தெரியவந்தது" எனக் கூறினார்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் தொடர்ந்து பேசிய அவர், "அவர்கள் வயது குறைவாக உள்ளது போல தெரிகிறது. அவர்களை அடையாளம் காண்பதற்காக நாங்கள் அளித்துள்ள அடையாள அட்டையில் வயது குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், உண்மைத்தன்மையை ஆய்வு செய்யும் பணிகள் நடக்க உள்ளன" என்று மட்டும் பதில் அளித்தார்.

இந்த விவகாரத்தில் ஆலையின் உரிமையாளர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மீது அபாயகரமான பொருட்களை அலட்சியமாகக் கையாண்ட பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக தொழிலக பாதுகாப்புத் துறை இயக்குநர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆகியோர் மூன்று நாட்களுக்குள் முழுமையான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் முகமது பர்வேஸ் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாயை வழங்குவதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் முகமது பர்வேஸ், "அவர்களின் உடல்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்பி நல்லடக்கம் செய்யும் செலவுகளை அரசே மேற்கொள்ளும்" எனக் கூறினார்.

ஆலை மீது கிராம மக்கள் புகார்

தனியார் ஆலையின் செயல்பாடுகள் குறித்து கன்னிகைப்பேர் பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

கடல் உணவு பதப்படுத்தும் தனியார் நிறுவனத்தின் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக, புகார் மனுவில் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக, அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்து வருவதாகவும் புகார் மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுகுறித்து ஆலை தரப்பில் விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.

"சுமார் இருபது ஆண்டுகளாக ஆலை இயங்கி வருகிறது. பல்வேறு காலகட்டங்களில் ஆலை மீது கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஆய்வு நடத்தியிருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்" என்கிறார், பெரியபாளையத்தைச் சேர்ந்த சுதேஷ்குமார்.

இதுகுறித்து, ஊத்துக்கோட்டை தாலுகா பகுதியைக் கண்காணிக்கும் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் சக்திகுமாரிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்க முயன்றது. ஆனால், அதற்கான முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு