You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுகப் பிரசவத்திற்குப் பின் தாய், சேய் பலி: தாயின் சாம்பலில் கிடைத்த கத்தரிக்கோல் - உண்மையில் என்ன நடந்தது?
- எழுதியவர், கரிகாபதி உமாகாந்த்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் உள்ள குண்டலா ஆரம்ப சுகாதார நிலையத்தில் வனஜா என்ற கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கே மருத்துவர் யாரும் இல்லாத நிலையில், வனஜாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்குப் பிறகு தாயும் குழந்தையும் உயிரிழந்தனர்.
தாயின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு சாம்பலில் கத்தரிக்கோல் இருந்ததாகக் கூறி அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு தெலங்கானா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா சுகாதார அமைச்சர் தாமோதர் ராஜநரசிம்மா தனது எக்ஸ் பக்கத்தில், "முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நேரத்தில் பணியில் இருந்த மகப்பேறு உதவியாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது." என்றார்.
என்ன நடந்தது?
தெலங்கானாவின் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டத்தில் அமைந்துள்ள குன்டலா மண்டலத்தின் தொலைதூர பகுதியான ஷம்புனிகுடேம் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான வனஜா. பிரசவ வலியால் துடித்த அவர் ஜூன் 13-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு குன்டலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு பணியாற்றிய மருத்துவர் சுதீப் அப்போது அங்கு இல்லை. அதனால் அங்கு பணியில் இருந்த மகப்பேறு உதவியாளர் பிரசவம் பார்த்துள்ளார். எனினும் குழந்தையின் உடலில் அசைவு இல்லாததால் இல்லேந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் 2 மணி நேரம் பயணித்து மாலை 4 மணிக்கு இல்லேந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதற்கிடையே வனஜாவுக்கு ரத்தக்கசிவு நிற்காததால் அவர் அங்கிருந்து கம்மம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு வனஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் நிலை ஏற்கனவே மோசமடைந்து விட்டதாக தெரிவித்தனர். அங்கே அவர் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், "கர்ப்பிணியாகப் பதிவு செய்துகொண்ட வனஜாவிற்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் வழிகாட்டுதல்களின்படி முறையான மகப்பேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜூன் 13-ஆம் தேதி அவர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் பிரசவ வலியுடன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தார். அவர் ஒரு குழந்தையைப் பிரசவித்தார்.
அதன் பிறகு தீவிர ரத்தக்கசிவு இருந்ததால் அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு இல்லேந்து சமூக சுகாதார மையத்திற்கும் பின்னர் அங்கிருந்து கம்மம் அரசு பொது மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்களால் அவருக்கு அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்ட பிறகும் தீவிர ரத்தக்கசிவால் ஏற்பட்ட ரத்த இழப்பு அதிர்ச்சி மற்றும் அடுத்தடுத்த இதய துடிப்பு நிறுத்தங்களால் அவர் உயிரிழந்தார்." எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என கணவர் குற்றச்சாட்டு
உயிரிழந்த வனஜாவின் கணவரான சஞ்சீவ ராவ் பிபிசியிடம் பேசுகையில், குன்டலா ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாதது மற்றும் பணியாளர்களின் அலட்சியத்தால் தான் தனது பச்சிளம் குழந்தை மற்றும் மனைவி இறந்ததாகத் தெரிவித்தார்.
"பிரசவ வலி தொடங்கிய உடனேயே அவரை எங்கள் கிராமத்தில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள குன்டலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். அங்குள்ள பணியாளர்கள் குறைந்தபட்ச முன்னெச்சரிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் பிரசவம் பார்த்தனர். அதனால் தான் தாயும் குழந்தையும் உயிரிழந்தனர்." என்றார் சஞ்சீவ ராவ்.
குழந்தை உயிருடன் இருந்ததாகப் பணியாளர்கள் கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "பிரசவத்திற்குப் பிறகு குழந்தை அசையவில்லை. அதைப்பற்றி கேட்டபோது சில நேரங்களில் பச்சிளம் குழந்தைகள் அவ்வாறு தான் இருப்பார்கள், எனவே மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர். குழந்தை 3 கிலோ எடை இருந்ததால் பணியாளர்கள் கூறியதைக் கேட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். எங்களது குழந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திலே இறந்தது என்பது அங்கிருந்த பணியாளர்களுக்குத் தெரியும். ஆனால் அங்கிருந்து எங்களை அனுப்ப வேண்டும் என்பதற்காக இல்லேந்து மருத்துவமனை செல்லுமாறு கூறினார்கள்." என்றார்.
'சாம்பலில் இருந்த கத்தரிக்கோல்'
மனைவி மற்றும் பிறந்த குழந்தை இறந்த சோகத்தில் இருந்தார் சஞ்சீவ ராவ். தொடர்ந்து பேசிய அவர், "ரத்தக்கசிவு நின்ற பிறகு இல்லேந்து மருத்துவமனையில் என் மனைவி சுய நினைவை இழந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை கம்மம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவர் உடனடியாக கம்மம் அழைத்துச் செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டார். இறுதிச் சடங்கிற்கு எரிதகன இடத்தில் இருந்து சாம்பல் பெறும்போது அதில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் இருந்தது." என்று தெரிவித்தார்.
'நாங்கள் அலட்சியம் காட்டவில்லை' - மருத்துவர் விளக்கம்
இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய குன்டலா ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுதீப், வனஜாவிற்கு பிரசவம் நடந்தபோது தான் அங்கே இல்லை எனத் தெரிவித்தார்.
"அன்றைய தினம் இன்னொரு கிராமத்தில் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி இருந்ததால் அதற்குச் சென்றிருந்தேன். வனஜாவிற்கு 14-ஆம் தேதி பிரசவத்திற்கான நாள் குறிக்கப்பட்டிருந்ததால் 13-ஆம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டேன்." என்றார் அவர்.
கர்ப்பிணியான வனஜாவின் நிலை மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறும் அவர், "ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவர் வந்தபோது குழந்தையின் தலை கருப்பையில் இருந்து வெளியே வந்திருந்தது. செவிலியர்கள் இல்லாததால் மகப்பேறு உதவியாளர்கள் பிரசவம் பார்த்து குழந்தையை வெளியே எடுத்தார்.
குழந்தை அசையவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர். சில நேரங்களில் பிறந்த உடன் அசைவு இருக்காது, ஆனால் சிறிது நேரம் கழித்து குழந்தையிடம் அசைவு இருக்கும். அதனை மனதில் வைத்து தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்." என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "குழந்தையின் நிலையைப் பார்த்த பணியாளர்கள் மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். எங்கள் மருத்துவர்கள் எந்த அலட்சியமும் காட்டவில்லை. இது மிகவும் அரிதான நேரங்களிலே நடக்கிறது. இது மிகவும் துர்திருஷ்டவசமான சம்பவம்." எனத் தெரிவித்தார்.
பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்ட சுகாதார அதிகாரி மருத்துவர் துக்காராம் ராத்தோட் பிபிசியிடம் பேசுகையில், "ஒட்டுமொத்த சம்பவம் தொடர்பாக முழு விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர் சுதீப் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மகப்பேறு உதவியாளர் மற்றும் பிரசவத்திற்கு உதவிய பணியாளர்களின் நடத்தையும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அவர் மீது தவறு இருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தெரிவித்தார்.
சம்பவம் நிகழ்ந்த முக்கியமான தருணத்தில் அங்கு இல்லாமல் போன மருத்துவர் சுதீப் விசாரணை முடிகின்ற வரையில் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
'கத்தரிக்கோலுக்கும் எங்களுக்கும் சம்மந்தமில்லை' - மாவட்ட சுகாதார அதிகாரி
கத்தரிக்கோல் இருந்தது என சஞ்சீவ ராவ் குடும்பத்தினர் கூறுவது தொடர்பாக மாவட்ட சுகாதார அதிகாரி பிபிசியிடம் பேசுகையில், "இறுதிச் சடங்கிற்குப் பிறகு சாம்பலில் கத்தரிக்கோல் இருந்ததாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகின்றனர். அங்கு எந்த ஆபரேஷனும் செய்யப்படாததால் கத்தரிக்கோலுக்கான தேவையில்லை. அது சுகப் பிரசவம் என்பதால் தையலுக்கான தேவையும் இல்லை.
எனக்குத் தெரிந்தவரை கத்தரிக்கோல் உடலில் இருந்து வரவில்லை. அந்தக் குடும்பத்திற்கு நடந்தது அநீதி. விசாரணைக்குப் பிறகு அவர்களுக்கு எவ்வாறு இழப்பீடு வழங்கலாம் என்பதை துறையின் மூத்த அதிகாரிகள் முடிவு செய்வார்கள்." என்றார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தெலங்கானா மனித உரிமைகள் ஆணையமும் எதிர்வினையாற்றி உள்ளது. மாவட்ட சுகாதார அதிகாரி முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஶ்ரீனிவாச ராவ் பிபிசியிடம் தெரிவித்தார்.
மறுபுறம் தெலங்கானா அரசும் இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்துக் கோணங்களிலும் முழுமையான விசாரணை நடத்தி எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக ஒரு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.
பொது சுகாதாரத் துறை இயக்குநர் மருத்துவர் ரவீந்தர் நாயக், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் இணை இயக்குநர் மருத்துவர் சுதீரா, மாவட்ட சுகாதார அதிகாரி மருத்துவர் ராத்தோட் துக்காராம் மற்றும் மருத்துவர் சேவைகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ரவி பாபு ஆகியோர் அரசாங்கம் அமைத்த உயர்மட்ட குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு