ஆண்கள் இரவில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானதா? 2-3 முறை கண்விழிப்பது ஆபத்தானதா?

    • எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
    • பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

இரவில் சிறுநீர் கழிப்பதற்காக ஒரு முறை எழுவது இயல்பானது என்று பலர் நினைக்கிறார்கள்.

தாங்கள் இரவில் தூங்கும் போது அதிக தண்ணீர் குடித்ததே இதற்குக் காரணம் என்று அவர்கள் பெரும்பாலும் கருதுகிறார்கள்.

ஆனால் இது வழக்கமாகி, ஒவ்வொரு இரவும் இரண்டு அல்லது மூன்று முறை எழ வேண்டிய நிலை ஏற்பட்டால், இதை அலட்சியப்படுத்தக் கூடாது.

மருத்துவ ரீதியாக, இது ' நாக்டூரியா' (nocturia ) என்று அழைக்கப்படுகிறது. இது நமது உடலில் ஏதோ கோளாறு இருப்பதற்கான ஒரு எச்சரிக்கையாகும்.

பெரும்பாலான ஆண்கள் இந்தப் பிரச்னை தங்களது வயது காரணமாக ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள்.

பின்னர் இதற்கான சிகிச்சை பெறுவதையும் அவர்கள் தவிர்க்கிறார்கள்.

ஆனால் இரவில் அடிக்கடி எழ வேண்டியிருப்பதால், அவர்களால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. உங்களுக்கு ஆழ்ந்த உறக்கம் கிடைக்கவில்லை என்றால், காலையில் நீங்கள் தூங்கவே இல்லை என்பது போன்ற உணர்வு ஏற்படும்.

சோர்வு அதிகரிக்கும், எரிச்சல் உண்டாகும், பின்னர் அன்றாட வழக்கமும் பாதிக்கப்படும். மேலும், தூக்கத்தின் தரம் மற்றும் தூக்கத்தின் கால அளவு ஆகியவை ஆரோக்கியத்தின் பல அம்சங்களுடன் தொடர்புடையவை. தூக்கத்தின் முறை மாறினால், அது அவற்றையும் பாதிக்கிறது.

சில நேரங்களில் இது இரவில் அதிக தண்ணீர் குடிப்பது, காஃபின் அல்லது ஆல்கஹால் அருந்துவது போன்ற எளிய விஷயங்களால் ஏற்படலாம்.

ஆனால் பெரும்பாலும் இது புரோஸ்டேட் பிரச்னைகள், சிறுநீர் பாதை தொற்றுகள், அதீத சிறுநீர்ப்பை செயல்பாடு அல்லது நீரிழிவு போன்ற நிலைகளுடனும் தொடர்புடையதாக இருக்கலாம்.

எனவே, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை உடலிலிருந்து வரும் ஒரு எச்சரிக்கையாகப் பார்ப்பது அவசியமாகும். சரியான நேரத்தில் செய்யப்படும் பரிசோதனைகள், இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும் கடுமையான சிக்கல்களைத் தடுக்கவும் உதவும்.

சில ஆண்கள் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஏன் ?

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது சிறுநீர்ப்பை சார்ந்த ஒரு எளிய பிரச்னை மட்டுமல்ல. இது சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, ஹார்மோன்கள் மற்றும் தூக்க முறைகள் ஆகியவற்றோடு தொடர்புடையது.

இந்த அமைப்புகளில் சமநிலையின்மை ஏற்படும் போது, நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டியிருக்கும்.

ஆண்களுக்கு இது ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று புரோஸ்டேட் சுரப்பியின் விரிவாக்கமாகும். புரோஸ்டேட் பெரிதாகும்போது, அது சிறுநீர்க்குழாயில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் சிறுநீர் முழுமையாக வெளியேறுவதில்லை.

இது சிறுநீர்ப்பை விரைவாக நிரம்புவதற்குக் காரணமாகி, குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தூண்டுதலை ஏற்படுத்துகிறது.

மேலும், சில நேரங்களில் உடல் இரவில் அதிக சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இது நீர்ச்சத்து குறைபாடு, மருந்துகள் அல்லது நீரிழிவு போன்ற நோய்களால் ஏற்படலாம்.

சில ஆண்களுக்கு, அதீத சிறுநீர்ப்பை செயல்பாடு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தலாம். சிறுநீர்ப்பை முழுமையாக நிரம்பாத நிலையிலும் இந்த உணர்வு ஏற்படுகிறது.

இந்த அறிகுறி தூக்கக் குறைபாடு போன்ற தூக்கம் தொடர்பான பிரச்னைகளாலும் ஏற்படலாம். பெரும்பாலும், ஒரே நேரத்தில் பல காரணங்கள் ஒன்றாகச் சேர்ந்து செயல்படுகின்றன.

எனவே, இப்பிரச்னையை 'இயல்பானது' என்று கருதுவதற்குப் பதிலாக, இதற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிவது அவசியமாகும்.

சரியான காரணத்தைப் புரிந்துகொள்வது சிகிச்சையை பயனுள்ளதாக்குகிறது மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.

விழித்திருக்கும்போது சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுவதற்கும், தூங்கிய பிறகு சிறுநீர் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுவதற்கும் இடையேயான வேறுபாடு

விழித்திருக்கும் போது சாதாரணமாக சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதற்கும், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் (நாக்டூரியா) வேறுபாடு உள்ளது.

உண்மையான நாக்டூரியாவில், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தீவிரத் தேவை ஒருவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும்.

பெரும்பாலான ஆரோக்கியமான நபர்கள், இரவில் ஒரு முறை எழுந்திருக்கலாம், குறிப்பாக படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவர்கள் அதிக தண்ணீர் குடித்திருந்தால் இது நிகழலாம்.

இருப்பினும், வழக்கமான அடிப்படையில் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை எழுந்திருப்பது இயல்பானதாகக் கருதப்படுவதில்லை.

இது உங்கள் தூக்கத்தின் தரம், அன்றாட நடவடிக்கைகள் அல்லது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதிக்கத் தொடங்கினால், நீங்கள் ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.

இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பது ஒரு நோய் அல்ல. மாறாக அது ஒரு அறிகுறியாகும்.

இது சிறுநீர் அமைப்பு, வளர்சிதை மாற்றம், சிறுநீரகங்கள், இதயம் அல்லது தூக்கம் தொடர்பான சில உள் பிரச்னைகளைக் குறிக்கலாம்.

மும்பையிலுள்ள ஜஸ்லோக் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறுநீரகவியல் துறையின் ஆலோசகரான மருத்துவர் சந்தோஷ் காவ்லியிடம், நாற்பது அல்லது ஐம்பது வயதுடைய ஆண்களுக்கு இரவில் ஏன் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை எழுகிறது என்று நாங்கள் கேட்டோம்.

"வயதாகும்போது, இரவில் சிறுநீர் கழிக்கும் பிரச்னை அதிகமாகிறது. 40-50 வயதுக்குப் பிறகு, உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன," என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் காவ்லி, "இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களில் ஒன்று புரோஸ்டேட் சுரப்பி பெரிதாவது ஆகும், இது பினைன் புரோஸ்டேடிக் ஹைப்பர் பிளேசியா (பிபிஹெச்) என்று அழைக்கப்படுகிறது. புரோஸ்டேட் பெரிதாகும்போது, அது சிறுநீர்க்குழாயில் ஓரளவு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இது சிறுநீர் ஓட்டத்தைத் தடுக்கலாம். இதன் விளைவாக, சிறுநீர்ப்பை முழுமையாக காலியாவதில்லை." என்கிறார்.

கூடுதலாக, சிறுநீர்ப்பையின் தசைகளும் வயதாகும்போது மாறுகின்றன. சிறுநீர்ப்பை அதிக உணர்திறன் உடையதாக மாறுகிறது மற்றும் குறைந்த அளவு சிறுநீர் இருக்கும்போது கூட சிறுநீர் கழிக்க வேண்டிய தேவையை உணரலாம்.

வயது உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையை மாற்றுகிறது, இது இரவில் அதிக சிறுநீர் உற்பத்தி செய்யப்படுவதற்கு வழிவகுக்கும்.

மேலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய், உடல் பருமன், இதய நோய் மற்றும் தூக்கக் குறைபாடுகள் போன்றவையும் வயதாக ஆக அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும் இவை இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் காரணமாக அமையலாம்.

"எனவே, இப்பிரச்னையை வெறும் 'முதுமையின் ஒரு பகுதி' என்று நிராகரித்துவிடாமல், இதற்குப் பின்னால் உள்ள காரணங்களை ஆராய்வது அவசியமாகும்," என்று தெரிவித்தார்.

ஆனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்ற அறிகுறி இருப்பதாலேயே புரோஸ்டேட் நோய் இருக்கிறது என்று தான் அர்த்தமா? என்று கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் சந்தோஷ் காவ்லி, "இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது தானாகவே புரோஸ்டேட் பிரச்னையைக் குறிக்கிறது என்று பல மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது எப்போதும் உண்மை அல்ல" என்கிறார்.

வயது தொடர்பான புரோஸ்டேட் சுரப்பி பெரிதாவது (பிபிஹெச்) ஒரு முக்கியக் காரணமாக இருந்தாலும், வேறு பல நோய்களின் காரணமாகவும் இதே போன்ற அறிகுறிகள் காணப்படலாம்.

இதில் பின்வரும் நிலைகள் அடங்கும்:

  • நீரிழிவு நோய்
  • சிறுநீர் பாதை தொற்று (யூடிஐ)
  • அதீத சிறுநீர்ப்பை செயல்பாடு
  • சிறுநீரக நோய்
  • இதயப் பிரச்னை (இதய செயலிழப்பு)
  • தூக்க மூச்சுத்திணறல் (தூக்கம் தொடர்பான கோளாறு)
  • பார்கின்சன் அல்லது பக்கவாதம் போன்ற நரம்பியல் நோய்கள்
  • சில மருந்துகள், குறிப்பாக டையூரிடிக்ஸ் (நீர் மாத்திரைகள்)
  • தூங்கச் செல்வதற்கு முன் அதிக தண்ணீர் குடிப்பது. சில ஆண்களுக்கு புரோஸ்டேட் அளவு சாதாரணமாக இருந்தபோதிலும் அதீத சிறுநீர்ப்பை செயல்பாடு இருக்கலாம். எனவே அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதற்கான காரணம் வெவ்வேறாக இருக்கலாம்.

அதனால் தான், சிகிச்சையின் போது, புரோஸ்டேட்டில் மட்டும் கவனம் செலுத்தாமல், துல்லியமான காரணத்தைக் கண்டறிவது முக்கியம்.

சரியான காரணத்தைப் புரிந்துகொள்ளும்போது மட்டுமே சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.

அதீத சிறுநீர்ப்பை செயல்பாடு

அதீதச் செயல்பாடுள்ள சிறுநீர்ப்பை என்பது சிறுநீர்ப்பை அதிகப்படியாகச் செயல்படும் ஒரு நிலையாகும், மேலும் இது பொதுவாக 'சிறுநீர் தேக்க அறிகுறிகளை' ஏற்படுத்துகிறது.

பகல் மற்றும் இரவு முழுவதும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, திடீரென மற்றும் வலுவாக சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு (அவசரம்), மற்றும் சில நேரங்களில் இந்தத் தூண்டுதலின் காரணமாக தன்னிச்சையாக சிறுநீர் வெளியேறிவிடுவது ஆகியவை இதில் அடங்கும்.

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழ வேண்டிய நிலை ஏற்படுவதும் நோக்டூரியா எனப்படும் ஒரு பொதுவான அறிகுறியாகும்.

இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒன்றாகத் தோன்றும் போது, ​​பெரும்பாலும் அதற்குப் பின்னால் ஒரு தெளிவான உடல்ரீதியான காரணம் இருக்கும்.

இதில் சிறுநீர்ப்பை வெளியேற்ற அடைப்பு (சிறுநீர் பாதையில் ஏற்படும் அடைப்பு) அல்லது அதனுடன் தொடர்புடைய அதீத சிறுநீர்ப்பை செயல்பாடு ஆகியவை அடங்கலாம்.

அரிதான சந்தர்ப்பங்களில், புரோஸ்டேட் அல்லது பிற அடைப்புகள் இல்லாத நிலையில் 'முதன்மை அதீத சிறுநீர்ப்பை செயல்பாடு' ஏற்படுகிறது, இது குறிப்பாக பெண்களிடம் பொதுவாகக் காணப்படுகிறது.

நவி மும்பையிலுள்ள ஃபோர்டிஸ் ஹிரானந்தானி மருத்துவமனையின் ரோபோடிக் அறுவை சிகிச்சை, சிறுநீரகப் புற்றுநோயியல் மற்றும் சிறுநீரகவியல் பிரிவின் இயக்குநரான மருத்துவர் சௌம்யன் தேயிடம், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பது முதுமையின் அறிகுறியாக மாறுகிறதா என்று நாங்கள் கேட்டோம்.

"சில நேரங்களில் சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பது வயதைப் பொறுத்து இயல்பானதாகக் கருதப்படலாம். இரவில் ஒன்று அல்லது இரண்டு முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதற்குப் பின்னால் உடல் ரீதியான அல்லது வயது தொடர்பான காரணம் இருந்தால், அது இயல்பானது. இருப்பினும், நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தால், அது மாலையில் அதிகப்படியான திரவங்களை உட்கொள்வது, தண்ணீர் குடிப்பது அல்லது வேறு ஏதேனும் ஆரோக்கிய பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்," என்று அவர் கூறினார்.

ஆனால் , சாதாரணமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் சிறுநீர் கழிப்பதற்கும், மருத்துவக் குறைபாட்டினால் ஏற்படும் சிறுநீர் கழிப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எப்படிக் கண்டறிவது என்ற கேள்வி எழுகிறது.

எனவே, இந்தக் கேள்வியை நாங்கள் மருத்துவர் சௌம்யன் தேயிடம் முன்வைத்தோம்.

"தண்ணீர் குடிப்பது அல்லது உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் இரவு நேர சிறுநீர் கழிப்பதற்கும், மருத்துவப் பிரச்னையால் ஏற்படும் சிறுநீர் கழிப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிவதற்கான மிக முக்கியமான வழி, படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பு திரவங்கள் குடிப்பதை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கை குறைகிறதா அல்லது நிற்கிறதா என்று கவனிப்பதாகும். இது ஒரு எளிய சோதனையாகவும், முதலுதவி நடவடிக்கையாகவும் உள்ளது," என்று மருத்துவர் சௌம்யன் இதுகுறித்து விவரித்தார்.

தொடர்ந்து பேசிய மருத்துவர் சௌம்யன், "இதனுடன், சில அடிப்படைப் பரிசோதனைகளையும் செய்வது அவசியமாகும். உதாரணமாக, சிறுநீர் பாதை தொற்று உள்ளதா என்பதைச் சரிபார்க்க வழக்கமான சிறுநீர் பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும், சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப்பையில் எவ்வளவு சிறுநீர் மீதமுள்ளது என்பதைப் பார்க்க சோனோகிராபியைப் பயன்படுத்தலாம். இது தவிர, பிஎஸ்ஏ (புரோஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென்) சோதனை மற்றும் யூரோஃப்ளோமெட்ரியும் செய்யப்படுகின்றன.

இந்தப் பரிசோதனைகள் சிறுநீரின் ஓட்டத்தைப் பற்றிய தகவல்களை வழங்குகின்றன, மேலும் புரோஸ்டேட் அல்லது வேறு ஏதேனும் உடல் ரீதியான பிரச்னை உள்ளதா என்பதையும் இதன் மூலம் கண்டறிய முடியும்.

இந்தச் சோதனைகளின் அடிப்படையில், சாதாரண காரணங்களுக்கும் மருத்துவப் பிரச்னைகளுக்கும் இடையே தெளிவான வித்தியாசத்தைக் காண முடியும்" என்று விளக்கினார்.

வாழ்க்கை முறைக்கும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது?

பல நோயாளிகளுக்கு இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதில் வாழ்க்கை முறை தொடர்பான பழக்கவழக்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மாலையில் அதிகளவு தண்ணீர், தேநீர், காபி, குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் அல்லது ஆல்கஹால் குடிப்பது இரவில் சிறுநீர் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கும்.

காஃபின் ஒரு தூண்டியாகவும் லேசான சிறுநீர்ப்பெருக்கியாகவும் செயல்படுகிறது, இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிப்பதோடு சிறுநீர்ப்பையை அதிக சுறுசுறுப்பாக்குகிறது. மறுபுறம், ஆல்கஹால் ஆண்டிடையூரெடிக் ஹார்மோன் என்ற ஹார்மோனை அடக்குகிறது. இந்த ஹார்மோன் உடல் தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

இதனால் தான், மது அருந்தும்போது இரவில் நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு அதிகரிக்கிறது.

இது தவிர, வேறு சில காரணிகளும் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை அதிகரிக்கக்கூடும்:

  • இரவில் தாமதமாக அதிக உணவு சாப்பிடுவது
  • உடல் பருமன்
  • புகைபிடித்தல்
  • மோசமான தூக்கப் பழக்கங்கள்
  • உடல் செயல்பாடு இல்லாமை
  • சிலருக்கு, எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட இந்தப் பிரச்னையை கணிசமாக மேம்படுத்தலாம்.

இந்தப் புகாருக்கு என்னென்ன சோதனைகள் பரிந்துரைக்கப்படுகின்றன என்று கேட்டபோது, மருத்துவர் சௌம்யன் தேய் அதற்குப் பதில் அளித்தார்.

"நோயாளி வீட்டில் 24 மணி நேர சிறுநீர்ப்பை நாட்குறிப்பை (சிறுநீர் பதிவு) பராமரிக்க வேண்டும். சிறுநீர் பரிசோதனை, சீரம் கிரியேட்டினின் மற்றும் சீரம் எலக்ட்ரோலைட்டுகள் சோதனைகள் செய்யப்பட வேண்டும்.

ஹெச்பிஏ1சி (HbA1c) பரிசோதனை மூலம் நீண்ட கால ரத்த சர்க்கரைக் கட்டுப்பாடும் சரிபார்க்கப்படுகிறது.

மேலும், சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர்ப்பையில் எவ்வளவு சிறுநீர் மீதமுள்ளது என்பதை அளவிட வயிற்று சோனோகிராஃபி செய்யப்படுகிறது.

இது தவிர, யூரோஃப்ளோமெட்ரி மற்றும் சீரம் பிஎஸ்ஏ சோதனைகளும் ஆரம்பகட்ட பரிசோதனையின் ஒரு பகுதியாகும்." என்றார்.

இதற்கான சிகிச்சை என்ன?

இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான சிகிச்சை, அதற்கான காரணத்தைப் பொறுத்து அமையும் என்று மருத்துவர் சந்தோஷ் காவ்லி கூறுகிறார்.

"புரோஸ்டேட் பெரிதாகியிருந்தால், புரோஸ்டேட்டின் தசைகளைத் தளர்த்த அல்லது அதன் அளவைக் குறைக்க மருந்துகளை வழங்கலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.

அதீத சிறுநீர்ப்பை செயல்பாட்டுக்கு சிறுநீர்ப்பை சுருக்கங்களைக் குறைக்கும் மருந்துகள் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.

மருத்துவர் சந்தோஷ் காவ்லி இதுகுறித்துக் கூறுகையில், "நீரிழிவு நோய் காரணமாக இருந்தால், ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவது அறிகுறிகளைக் கணிசமாக மேம்படுத்தும்.

சிறுநீர் பாதை தொற்றுகளுக்கு ஆன்டிபயாடிக்குகள் தேவைப்படுகின்றன, அதே நேரத்தில் ஸ்லீப் அப்னியா போன்ற நிலைகளுக்கு சிபிஏபி சிகிச்சை போன்ற சிறப்பு சிகிச்சை தேவைப்படலாம்.

இரவில் அதிகப்படியான சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்பட்டால், மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் சில குறிப்பிட்ட மருந்துகளைப் பரிந்துரைக்கலாம்.

நல்ல செய்தி என்னவென்றால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான பெரும்பாலான காரணங்களுக்கு சிகிச்சையளிக்க முடியும். பல நோயாளிகள் சரியான முறையில் கண்டறியப்பட்டவுடன் அறிகுறிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்கிறார்கள்," என்கிறார்.

உங்கள் வாழ்க்கை முறையில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய, உங்கள் உணவை மாற்ற, மருந்து உட்கொள்ள அல்லது உடற்பயிற்சியைத் தொடங்க நீங்கள் விரும்பினால், ஒரு மருத்துவர் மற்றும் தகுதியுடைய பயிற்சியாளரின் உதவியை நாடுவது அவசியமாகும்.

உங்கள் உடலையும் அறிகுறிகளையும் ஒரு மருத்துவர் மூலம் சரியான முறையில் பரிசோதித்துக் கொள்வதும், அவர்களின் ஆலோசனையுடன் மட்டுமே வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதும் மிகச் சிறந்தது. மருத்துவரை அணுகாமல் சுயமாக மருத்துவம் செய்து கொள்வது ஆபத்தானது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு