You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மணிப்பூரில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை இழக்கிறதா? என்ன நடக்கிறது?
மணிப்பூரில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு கொடுத்த வந்த ஆதரவை எம்.எல்.ஏக்கள் சிலர் திரும்ப பெற்றுள்ளதால் அம்மாநில அரசியலில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஜக எம்.எல்.ஏக்களான எஸ். சுபாஷ்சந்திர் சிங், டிடி ஹாயோகிக் மற்றும் சாமூவெல் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
மேலும், என்பிபி கட்சியை சேர்ந்த துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஜோய்குமார் சிங் உள்பட நால்வர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோபிந்த்ரோ சிங் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏவுமான ஷஹாபுதினும் பாஜக கூட்டணியிலிருந்து விலகியுள்ளனர்.
60 சட்டசபை தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு 2017ஆம் ஆண்டில்தான் தேர்தல் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வெற்றிபெற்றது. பா.ஜ.க 21 இடங்களில் வெற்றிபெற்றது. அதன்பின், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷியாம்குமார் சிங் பாஜகவில் சேர்ந்தார்.
நாகா மக்கள் முன்னணியின் 4 எம்எல்ஏக்கள், தேசிய மக்கள் முன்னணியின் நான்கு எம்.எல்.ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸ், லோக் ஜனசக்தியின் தலா ஒரு எம்எல்ஏ, ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆகியோரின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சி அமைத்தது. இதற்கிடையில், ஏழு எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசிலிருந்து விலகி பா.ஜ.கவில் சேர்ந்தனர்.
ஏற்கனவே ஷியாம்குமார் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.கவில் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் மறு உத்தரவு வரும்வரை சட்டமன்றத்திற்குள் செல்லக்கூடாது என ஜூன் 9ஆம் தேதி மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில், ராஜிநாமா செய்த மூன்று பா.ஜ.க எம் எல் ஏக்கள் மீது கட்சியோ, சட்டமன்றமோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், கட்சியின் தலைமை நிலைமையை கண்காணித்து வருகிறது என்றும், மணிப்பூர் மாநில பாஜக பொறுப்பாளர் ப்ரஹலாத் சிங் பட்டேல் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: