You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தஹில் ரமானி: "சென்னையுடன் ஒன்றிவிட்டேன்; இனி இங்கேதான் வாழப்போகிறேன்"
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தமிழ் இந்து திசை: "சென்னையுடன் ஒன்றிவிட்டேன் இனி இங்கேதான் வாழப்போகிறேன்"
சென்னையின் சூழ்நிலை மிகவும் பிடித்துப் போய்விட்டது, இனி இங்கேதான் வாழப்போகிறேன் என முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமானி, தனது பிரிவு உபச்சார விழாவில் பேசியதாக தமிழ் இந்து திசை செய்தி வெளியிட்டுள்ளது.
பதவியை ராஜினாமா செய்த தலைமை நீதிபதி தஹில் ரமானிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய அவர், "எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக கடந்த இரண்டுவாரகாலமாக எனக்கு ஆதரவளித்த, பேசிய அனைவருக்கும் எனது இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஓராண்டாக சென்னையுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றிப்போய்விட்டேன்.
கடந்த ஓராண்டாக சென்னை எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது. காரணம் மும்பையை ஒப்பிடும் போது இங்குள்ள சீதோஷ்ண நிலை, அங்குள்ளது போன்று தொடர் மழை வெள்ளம் இல்லாதது, அதுமட்டுமல்ல நல்ல சூழ்நிலை, குறைந்த மாசு, அதிக சுத்தம், சிறப்பான உட்கட்டமைப்பு வசதி என எல்லாவற்றிலும் சென்னை சிறந்து விளங்குகிறது.
சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுதும் இப்படித்தான் உள்ளது. அதனால்தான் நானும் என் கணவரும் சென்னையிலேயே குடியேறுவதென முடிவு செய்துவிட்டோம். சென்னையிலேயே குடியுயேற விரும்புவதால்தான், இங்கு வீடு வாங்கியுள்ளோம்" என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்த செய்தி
தினத்தந்தி: மோதியை ஜனாதிபதி என்று கூறிய இம்ரான் - சமூக ஊடகங்களில் விமர்சனம்
இந்திய பிரதமர் மோடியை ஜனாதிபதி என இம்ரான் கான் குறிப்பிட்டது சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருவதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
"ஐக்கிய நாடுகள் அவையின் 74-வது பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். தனது உரையின் போது, இந்தியப் பிரதமர் மோதியை இந்திய ஜனாதிபதி மோதி என இம்ரான்கான் குறிப்பிட்டது சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், இந்தியாவை பற்றியே தனது பேச்சில் அதிகம் பேசிய இம்ரான் கான் வழங்கப்பட்ட 15-20 நிமிடங்களை தாண்டி நீண்ட நேரம் பேசினார்.
இம்ரான்கான் , பொது மேடைகளில் தவறாக பேசுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, இந்த ஆண்டு துவக்கத்தில் இரான் சென்ற போதும், ஜெர்மனியும் பிரான்சும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன என்று கூறுவதற்கு பதிலாக ஜெர்மனியும் ஜப்பானும் என்று குறிப்பிட்டது நகைப்புக்குள்ளாக்கப்பட்டது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி: கீழடியில் விரைவில் அருங்காட்சியகம்
சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அமைச்சர் க. பாண்டியராஜன், "கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும். இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஏற்கெனவே, இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறையினர் மேற்கொண்ட 3 கட்ட அகழாய்வுப் பணிகளில், முதல் 2 கட்ட அகழாய்வுப் பணிகளின் இடைக்கால ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளன. முழுமையான ஆய்வறிக்கை இன்னும் ஓரிரு மாதங்களில் கிடைக்கும்.
ஏற்கெனவே அறிவித்தபடி கீழடியில் ரூ.1 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதுதவிர, அதே பகுதியில் ரூ.15 கோடியில் நவீன அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது" என்று அந்த செய்தி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
- சீனா - வங்கதேச கூட்டணியால் திருப்பூர் தொழிலாளர்களுக்கு என்ன இழப்பு?
- சிறிய நட்சத்திரத்தை சுற்றும் மிகப் பெரிய கோள் - கோட்பாடுகளை திருப்பிப்போட்ட கண்டுபிடிப்பு
- ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’- ஐ.நா. சபையில் கணியன் பூங்குன்றனாரை மேற்கோள் காட்டிய மோதி
- ’’காஷ்மீரில் இருந்திருந்தால் நானே துப்பாக்கி ஏந்தியிருப்பேன்’’ - இம்ரான் கான் ஆவேசம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்