பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு - அடுத்தடுத்து நிகழும் அரசியல் திருப்பங்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே நாடாளுமன்றத்தை கலைக்க அந்நாட்டு அதிபர் ஆரிஃப் அல்வி உத்தரவிட்டுள்ளார்.

ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், பாகிஸ்தான் அரசியலமைப்பின் 5ஆம் பிரிவுக்கு எதிராக இருப்பதாக துணை சபாநாயகர் அவையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியபோது வாக்கெடுப்பு தொடங்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் தன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் சர்வதேச சதி என்று குற்றம்சாட்டிப் பேசினார்.

அமெரிக்காவின் கொள்கை மற்றும் பிற நாடுகள் மீதான அமெரிக்க கொள்கையை தாம் விமர்சித்து வருவதாக தமது அரசாங்கத்தை வீழ்த்த அமெரிக்க சதி செய்ததாக இம்ரான் கான் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். "நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வெளி ஆட்கள் அல்ல" என்றும் அவர் கூறினார்.

ஆனால், இம்ரான் கான் சுமத்தும் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு எதிர்கட்சிகளும் அமெரிக்காவும் மறுத்துள்ளன.

342 உறுப்பினர்களை கொண்டது பாகிஸ்தான் நாடாளுமன்றம். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டுமானால், இம்ரான் கான் அரசுக்கு 172 வாக்குகள் தேவையாக இருந்தது. ஆனால், நடைமுறையில் அதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது.

"பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவில் இம்ரான் கான் பதவிக்கு வந்ததாக பரவலாக கருதப்பட்டவர். ஆனால், அதே ராணுவத்தின் ஆதரவை அவர் இழந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதும் நிலையில், தற்போதைய அரசியல் நெருக்கடியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எதிர்கட்சிகள் விரும்பின," என்று பிபிசி செய்தியாளர் செக்கந்தர் கெர்மானி கூறுகிறார்.

இம்ரான் கானின் அரசியல் எதிரிகள் மற்றும் அவரது கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பல கட்சிகளை தங்களுக்கு ஆதரவளிக்கச் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்ற பிறகே, நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை எதிர்கட்சிகள் கோரின.

அமெரிக்கா மீது குற்றச்சாட்டு

தனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உதவியோடு ஒரு வெளிநாட்டு சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக கூறிய இம்ரான் கான், இதனை உறுதி செய்யும் அதிகாரபூர்வ ஆவணம் ஒன்றை தேசிய பாதுகாப்பு கமிட்டியும், அமைச்சரவையும் பார்த்துள்ளன என்றும், அதில், இம்ரான் கானை பதவி நீக்கினால், பாகிஸ்தானோடு அமெரிக்காவின் உறவு மேம்படும் என்றும், பாகிஸ்தான் மன்னிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக இம்ரான் கான் தெரிவித்ததார்.

முன்னதாக, பாகிஸ்தான் தகவல் அமைச்சர் ஃபவாத் செளத்ரி எம்.பி.க்களிடம் பேசுகையில், "ஒரு வெளிநாட்டு அரசாங்கம் பாகிஸ்தானில் ஆட்சி மாற்ற நடவடிக்கையை மேற்கொள்வதாக அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.இது, அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதால் பிரதமருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் வாக்கெடுப்பு நடைமுறை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.இந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படாத நடவடிக்கையால் எதிர்கட்சி எம்.பிக்கள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்."ஒருங்கிணைந்த முறையில் இயங்கி வரும் எதிர்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறாமல் உள்ளனர். எங்கள் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகச் சென்றுள்ளனர். பாகிஸ்தான் அரசியலமைப்பை பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் அனைத்து தொடர்பு அமைப்புகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்," என்று எதிர்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல்-பூட்டோ சர்தாரி ட்வீட் செய்துள்ளார்.

2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட இம்ரான் கான், ஊழலை தடுத்து பொருளாதாரத்தை சரிசெய்வதாக சபதம் செய்ததன் மூலம் வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்துப் பிரபலமானார். ஆனால், ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம் மற்றும் வெளிநாட்டுக் கடன் சுமை காரணமாக அவருக்கு மக்கள் ஆதரவு குறையத் தொடங்கியதாக கருதப்படுகிறது.கடந்த ஆண்டு அக்டோபரில், பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் புதிய தலைவர் நியமனத்தில் கையெழுத்திட கான் மறுத்துவிட்டார்.இருப்பினும், ராணுவ உயரதிகாரிகளும் இம்ரான் கானும் எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் இணக்கமாக இருப்பதாகவே கூறி வந்தனர்.

இனி என்ன நடக்கும்?

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை அதிபர் அல்வி ஏற்றுக் கொண்டதால், அரசு நிர்வாகத்தை கவனிக்க காபந்து பிரதமர் ஒருவரை அவர் நியமிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

ஆட்சி கவிழலாம் என எதிர்பார்க்கப்பட்டதால் பாகிஸ்தான் முழுவதும் பதற்றமான சூழல் காணப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக, இன்று காலை பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் முகமது சர்வார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அம்மாநிலத்தின் புதிய ஆளுநராக ஒமர் சர்பராஸ் சீமா நியமிக்கப்பட்டார்.

இம்ரானுக்கு என்ன சிக்கல்?

பிரதமர் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சித் தலைவரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சித் தலைவருமான ஷபாஸ் ஷெரீஃபால் மார்ச் 28 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

69 வயதான இம்ரான் கான், ஒரு புதிய பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்தோடும், சில வாக்குறுதிகளோடும் 2018 இல் ஆட்சிக்கு வந்தார்.

ஆனால், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது, போன்ற அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்கத் தவறியதால் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.

பல தசாப்தங்களாக வேரூன்றியிருந்த ஊழலைத் துடைப்பதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த அவர், விண்ணை முட்டும் பணவீக்கம், முடக்கப்பட்ட கடன் போன்ற நிர்வாகச் சுமைகளால் ஆட்சியை நடத்த கூட்டணி கட்சிகளின் ஆதரவை தக்கவைக்கவே போராடினார்.

பாகிஸ்தானை பொறுத்தவரை அரசியல் அதிகாரத்திற்கு முக்கிய ஆதாரமாக ராணுவ பலம் இருந்துவரும் நிலையில், இம்ரான் கான் ராணுவத்தின் ஆதரவையும் இழந்துவிட்டார் என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :