You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாம்பை பால் குடிக்கச் செய்வதால் அதன் உயிருக்கே ஆபத்து வருமா?
இந்திய சமூகத்தில் நாகப் பாம்புக்கு ஆன்மீக ரீதியாக ஒரு முக்கிய இடம் உண்டு. நாகப் பாம்பு பால் குடிப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்துள்ளன.
இன்ஸ்டாகிராமில் வழிபாட்டுத் தலமாக பாவிக்கப்படும் பாம்புப் புற்றுகளில் பால் ஊற்றப்படுவது, பால் குடிக்கும் பாம்புகள் என்பன போன்ற பல்வேறு ரீல்களை பார்க்க முடிகிறது. ஆனால், இது உண்மையில் பாம்புக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில், மாநில வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பான 'வைல்ட்லைஃப் எஸ்.ஓ.எஸ்', நீண்டகாலம் பட்டினி போடப்பட்டு, நீர்ச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இருந்த பாம்புகளை பல்வேறு தருணங்களில் பாம்பு மீட்பர்கள் மீட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு அந்த அமைப்பு உத்தர பிரதேச வனத்துறையுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கையில், 57 நாகப் பாம்புகள் உள்பட 74 பாம்புகள் மீட்கப்பட்டன.
அந்த அமைப்பின் கூற்றுப்படி, உணவும் தண்ணீரும் மறுக்கப்பட்ட சூழலில் தவிக்கும் பாம்புகள், "உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தணிப்பதற்கான இறுதிக்கட்ட முயற்சியாக" பால் அல்லது கிடைக்கக்கூடிய வேறு எந்த திரவத்தையும் குடிக்கக்கூடும்.
ஆகவே, ஒரு பாம்பு பால் குடிக்கிறது என்றால், அந்தச் செயல் அது இயல்பாகவே பால் குடிக்க விரும்புவதாகப் பொருளல்ல, அது மிகக் கடுமையான தாகத்தின் எதிர்வினையாக இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படியாக, இயற்கைக்குப் புறம்பாக பாம்புகளை கட்டாயத்திற்கு உள்ளாக்கி பால் குடிக்க வைப்பதால் அவை பல்வேறு உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.
பாம்புக்கு பால் கொடுக்கும் பழக்கம்
இந்து மதத்தில், நாக பஞ்சமியின்போது பால் படைக்கப்படுகிறது. நாகப் பாம்புகள் சிவனின் குறியீடாகத் தொடர்புபடுத்தப்படுவது இதற்கான காரணங்களில் ஒன்று.
இந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி, பாம்பாட்டிகள் என்று அழைக்கப்படும் நபர்கள், தாங்கள் பிடித்து, அடைத்து வைத்திருக்கும் பாம்புகளை மக்களின் முன்பாகக் காட்சிப்படுத்தி, அவை பால் குடிப்பதை ஓர் அற்புதச் செயலாகக் காட்டும் பழக்கம் இருந்து வந்ததாக மதுரையைச் சேர்ந்த பாம்பு மீட்பு நிபுணர் சாம்சன் கிருபாகரன்.
ஊர்வன உயிரினங்களுக்கும் பாலுக்கும் இடையிலான கலாசாரத் தொடர்பு இந்தியாவில் மட்டுமே இல்லை. நாட்டுப்புறவியல் ஆய்வாளர் டேவிட் எர்மாகோரா, 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்த்ரோபோசூலாஜிகா என்ற ஆய்விதழில் வெளியிட்ட ஆய்வில், இந்த நம்பிக்கைகளை ஆராய்ந்தார்.
எர்மாகோரா, யுரேஷியா நிலப்பரப்பு முழுவதும் பாம்புகளும் பிற ஊர்வன உயிரினங்களும் கால்நடைகளிடம், பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து பாலைத் திருடுவதாகக் கூறப்படும் கதைகளைக் கண்டறிந்தார். அதேவேளையில், இந்தத் தொடர்பு மற்றும் பால் மீது ஊர்வனவற்றுக்கு விருப்பம் இருப்பதாகக் கூறப்படுவது "உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது" என்றும் அவர் விவரித்தார்.
இந்தக் கதைகளே வட அமெரிக்காவில் காணப்படும் தீங்கற்ற மில்க் ஸ்நேக் எனப்படும் பால் பாம்பு என்ற பெயருக்கு வித்திட்டது. இந்தப் பாம்புகள் மாடுகளிடம் பால் கறப்பதற்காக கொட்டகைகளின் உள்ளே நுழைவதாக நிலவிய தவறான நம்பிக்கையின் அடிப்படையில் அவற்றுக்கு இந்தப் பெயர் உருவானதாக ஸ்மித்சோனியன் தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பாதுகாப்பு நிறுவனம் விளக்கியுள்ளது.
உண்மையில், பால் பாம்புகள் பிற பாம்பினங்களைப் போலவே மாமிச உண்ணிகளாக, கொறித்துண்ணிகள் மற்றும் பிற இரைகள் கிடைக்கவல்ல இடங்களை நோக்கி ஈர்க்கப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பாம்புகள் உண்மையில் எதையெல்லாம் சாப்பிடும்?
வேட்டையாடி உயிரினங்களான பாம்புகளின் இயற்கையான உணவுகளில் எலி, பெருச்சாளி போன்ற கொறித்துண்ணிகள், பறவைகள், முட்டைகள், தவளைகள், மீன்கள், பல்லிகள் மற்றும் பிற பாம்பினங்களும்கூட அடங்கும்.
அவற்றின் தாடை அமைப்புகள், வயிற்றுப் பகுதி, குடல் ஆகிய உறுப்புகள் பொதுவாக இரையைப் பிடித்து, முழுவதுமாக விழுங்கி, ஜீரணிக்கும் வகையில் தகவமைந்துள்ளன. அந்த உடலமைப்பு, பால் பொருட்களை இயற்கையான உணவாக உட்கொள்ளும் வகையில் பரிணாம வளர்ச்சி அடையவில்லை.
2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கிகாசயின்ஸ் ஆய்விதழில் ஆராய்ச்சியாளர் ஜுன்செங் டுவான் மற்றும் அவரது குழு வெளியிட்ட ஆய்வில், பாம்புகளின் இந்தத் தகவமைப்பை மூலக்கூறு மட்டத்தில் பகுப்பாய்ந்துள்ளது. அந்த ஆய்வில், இரையை விழுங்கிய பிறகு மலைப்பாம்புகளின் உடல் உறுப்புகளில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது ஆராயப்பட்டது.
அதில், உணவூட்டம், இரைப்பையில் அமில உற்பத்தி, புரதத்தைச் செரிக்கும் பெப்சின் நொதிகள் ஆகியவை குடலின் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை விரைவுபடுத்துவதாக அவர்கள் கண்டறிந்தனர்.
"உணவூட்டத்திற்குப் பிறகு பெப்சினோஜென் தொடர்பான பல மரபணுக்கள் அதிகரித்தன. இது, பெரிய, முழுமையாக விழுங்கப்பட்ட, புரதம் நிறைந்த இரையை உடைத்து, செரிக்கச் செய்வதில் நிபுணத்துவம் பெற்ற செரிமான அமைப்பு அவற்றுக்கு இருப்பதைப் பிரதிபலிக்கிறது" என்று அந்த ஆய்வு கூறுகிறது.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, "பால் என்பது நீர், லாக்டோஸ், புரதங்கள், கொழுப்பு, தாதுக்கள் அடங்கிய பாலூட்டிகளின் உடலில் இருந்து சுரக்கப்படும் ஒரு பொருள். அது வெறுமனே வெந்நிறத்தில் காணப்படும் தண்ணீர் இல்லை, நீர்ச்சத்துக் குறைபாட்டால் அவதியுறும் ஒரு பாம்பு, பாலை உட்கொண்டாலும்கூட, நீரிழப்பை ஈடுசெய்ய உதவும் பொருத்தமான திரவமாகவோ, இயற்கை உணவாகவோ ஆகிவிடாது" என்று விளக்கினார் யுனிவர்சல் பாம்புக்கடி ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ். மனோஜ்.
கட்டாயப்படுத்தி பால் குடிக்க வைப்பதால் பாம்புகளுக்கு என்ன ஆபத்து?
நிபுணர்களின் கூற்றுப்படி, பாம்புகளுக்கு பால் குடிப்பதால் ஏற்படக்கூடிய முதன்மையான ஆபத்து சுவாசப் பிரச்னை.
கால்நடை மருத்துவர்களுக்கு வழிகாட்டும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட ஊர்வன உயிரினங்களுக்கான மெர்க் கால்நடை கையேட்டின் மருத்துவ வழிகாட்டுதல், "வாய்வழியாகத் திரவங்களைக் கொடுப்பது, குறிப்பாக ஓர் ஊர்வன விலங்கு பலவீனமான நிலையில் இருக்கும்போது கொடுப்பது, சுவாசப் பாதையை அடைப்பது, வாந்தியைத் தூண்டுவது போன்ற அபாயங்களுக்கு வித்திடும்" என்று எச்சரிக்கிறது.
அந்தக் கையேட்டின்படி, பாம்புகளின் வாயில் கட்டாயமாக ஊற்றப்படும் திரவங்கள் அவற்றின் சுவாசக் குழாயில் நுழைந்து, சுவாசிப்பதில் இடையூறு விளைவிப்பதோடு, சுவாச மண்டலத்தில் அழற்சி அல்லது தொற்று பாதிப்பு ஏற்படவும் வழிவகுக்கலாம்.
அதேபோல, "மோசமான சூழ்நிலைகளில் தள்ளப்படுவதால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருக்கும்போது, கடினமான முறையில் கையாளப்படும் போது, பொருத்தமற்ற வெப்பநிலையில் வைக்கப்படும் போது அல்லது ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டு பலவீனமாக இருக்கும் போது, அவற்றுக்கு வலுக்கட்டாயமாக அளிக்கப்படும் திரவம் கடும் வாந்தியை ஏற்படுத்தலாம். அப்படி வாந்தியெடுப்பது உடலில் நீரிழப்பை ஏற்படுத்தி, அந்தத் திரவம் நுரையீரலுக்குள் செல்வதற்கான மற்றுமொரு வாய்ப்பாக அமைந்துவிடுகிறது," என்று மெர்க் ஊர்வன பராமரிப்புக் கையேட்டில் உள்ள வழிகாட்டுதல் குறிப்பிடுகிறது.
அதை உறுதி செய்யும் வகையில் பேசிய முனைவர் என்.எஸ். மனோஜ், "வலுக்கட்டாயமாக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு, மிகவும் பலவீனமான உடல்நிலையில் இருக்கும்போது அவற்றுக்கு பால் வழங்கப்படுகிறது. இதனால் நீர்ச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்துகொள்ளும் நோக்கில் கண்முன் கிடைக்கும் திரவத்தை வேகமாக உட்கொள்ள பாம்பு முற்படும். அப்போது அந்தத் திரவம் அதன் உணவுக் குழாயில் செல்வதற்குப் பதிலாக, சுவாசப் பாதைக்குள் இழுக்கப்படலாம். அதனால் சுவாசம் தடைபட்டு, அவற்றின் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்," என்று எச்சரித்தார்.
"பாம்புகள் வாயைத் திறக்கும்போது, கீழ்பகுதியில் ஒரு துவாரம் இருப்பதைக் காணலாம். அந்த துவாரம் அவற்றுடைய சுவாசக் குழாயுடன் தொடர்புடையது, அவை சுவாசிக்க உதவுகின்றது. இந்த நிலையில் அவற்றைக் கட்டாயப்படுத்தி, பாலைக் கொடுக்கும்போது, அந்த துவாரத்திற்குள் பால் ஊடுருவி, அதற்கு சுவாசத் தடையை உண்டாக்கலாம்," என்றும் மனோஜ் விவரித்தார்.
"லாக்டோஸ் அடங்கிய உணவுப் பொருட்களை செரிக்கத் தேவைப்படும் லாக்டேஸ் நொதி பாம்புகளின் உடலில் இல்லாத காரணத்தால், பால் பொருட்களை அவற்றால் செரிமானம் செய்ய முடியாது. இது இரைப்பை, குடல் கோளாறுகளை ஏற்படுத்தும்" என்று சாம்சன் கிருபாகரன் எச்சரித்தார்.
அதேபோல, "இயல்பாகவே பாலை உணவாக உட்கொள்ள முடியாது என்னும்போது அந்தப் பழக்கத்திற்கு நிர்பந்தத்தின் பேரில் தள்ளப்பட்டு, அதை உட்கொள்ளும் பாம்புகள் நீர்ச்சத்துக் குறைபாடு, பட்டினி, நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்படுவதாக" வைல்ட்லைஃப் எஸ்.ஓ.எஸ் அமைப்பு தெரிவிக்கிறது.
மக்கள், பால் குடிக்கும் பாம்பை ஓர் அதிசயமாகப் பார்க்கவோ அல்லது அதை ஊக்குவிக்கவோ கூடாது என்பதை வலியுறுத்திய முனைவர் மனோஜ், "அந்தச் செயல், வலிந்து உருவாக்கப்பட்ட தாகம் மற்றும் பலவீனத்தால் பாதிக்கப்பட்டதன் விளைவு. நாகபஞ்சமி போன்ற நேரங்களில் இத்தகைய நடவடிக்கைகள் பாம்புகளைப் பெரிதும் அச்சுறுத்துகின்றன," என்று தெரிவித்தார்.
தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், வனத்துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் விளைவாக இந்தப் பழக்கம் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்திருந்தாலும், நாகபஞ்சமி போன்ற தினங்களில் வட இந்தியாவில் இந்தக் கொடூரமான பழக்கம் பெருவாரியாகப் பின்பற்றப்பட்டு வருவதாக சாம்சன் குறிப்பிட்டார்.
இந்திய காட்டுயிர் அறக்கட்டளை போன்ற அமைப்புகள், "பாம்புகளைப் பால் குடிக்க வைக்கும் கொடூரமான நடத்தையை, கட்டுக் கதைகள் மீதான மக்களின் மூடநம்பிக்கையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சுரண்டல் என்று வர்ணிப்பதாக" குறிப்பிடுகிறார் சாம்சன்.
மேலும் அவர் கூறுகையில், "நீர்ச்சத்துக் குறைபாட்டுடன் இருக்கும் பாம்புக்குத் தேவை ஒரு கிண்ணத்தில் கொடுக்கப்படும் பால் அல்ல, அங்கீகரிக்கப்பட்ட காட்டுயிர் மீட்பர்களின் தலையீடு, மருத்துவப் பரிசோதனை மற்றும் நீரிழப்பைச் சரிசெய்வதற்கான சிகிச்சை மட்டுமே" என்றும் அறிவுறுத்தினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு