இ20 பெட்ரோலால் பிரச்னையா? வாடிக்கையாளருக்கு புதிய கார் வழங்க ஆணையம் உத்தரவு

    • எழுதியவர், ஆலோக் புத்துல்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக, ராய்ப்பூரில் இருந்து
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நாடு முழுவதும் எத்தனால் கலந்த இ20 (E20) பெட்ரோல் குறித்த விவாதங்கள் நடந்து வரும் வேளையில், சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரின் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

நுகர்வோர் ஒருவரின் புகாரைத் தொடர்ந்து, மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் 45 நாட்களுக்குள் அதே மாடலின் புதிய இ20 எரிபொருளில் இயங்கும் காரை புகார்தாரருக்கு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நிறுவனம் அவ்வாறு செய்யத் தவறினால், வாகனத்தின் முழு விலை உட்பட மொத்தம் 20 லட்சத்து 50 ஆயிரத்து 494 ரூபாயைத் திருப்பித் தர வேண்டும் என்கிறது அந்த உத்தரவு. அத்துடன், மன உளைச்சலுக்காக ஒரு லட்சம் ரூபாயும், வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆணையத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாருதி சுசூகி, சம்பந்தப்பட்ட வாகனம் இ20 எரிபொருளால் இயங்கக்கூடியது என்றும், ஆணையத்தின் உத்தரவில் பல முக்கிய அம்சங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும் கூறியுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் மன்றத்தில் சட்டப்படி போராடப் போவதாக நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த கார் வாங்கப்பட்ட மாருதி சுசூகி டீலர்ஷிப் நிறுவனம் ஆணையத்தின் முன்னிலையில் வாதிடுகையில், புகார்தாரரின் வாகனத்தில் ஏற்பட்ட பழுது வெளிப்புறக் காரணிகளால் ஏற்பட்டது என்றும், இது எந்த சூழ்நிலையிலும் வாரண்டியின் கீழ் வராது என்றும் கூறியது.

சர்ச்சை எங்கிருந்து தொடங்கியது?

இந்த வழக்கு ராய்ப்பூரில் வசிக்கும் மருத்துவர் பிரேம்ராஜ் தேப்தா என்பவருடையது. அவர் ஜூன் 2024 இல் மாருதி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா ஐஇஇ ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஜெட்டா பிளஸ் எஸ்யூவி (Grand Vitara Strong Hybrid Zeta+ SUV) காரை வாங்கினார். இந்த வாகனம் ஜனவரி 2023இல் தயாரிக்கப்பட்டது.

வாகனத்தில் மீண்டும் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதை அடுத்து, அவர் ராய்ப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

"ஒரு நாள் மாலை நான் எனது கிளினிக்கில் இருந்து கிளம்பும்போது, எனது கார் திடீரென நின்றுவிட்டது. அது நிறுவனத்தின் சேவை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு பெட்ரோலில் கலப்படம் இருப்பதாகக் கூறப்பட்டது. இதுபோன்று பலமுறை நடந்தது. பின்னர் நாங்கள் அரசு ஆய்வகத்தில் சோதனை செய்தபோது, வெள்ளை தயிர் போன்ற உறைந்த பொருள் உண்மையில் எத்தனால் என்பது தெரியவந்தது" என மருத்துவர் பிரேம்ராஜ் தேப்தா பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறினார்.

"ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் டீலர்ஷிப்பிடம் புகார் செய்தபோது, எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாகவே இந்த கோளாறு ஏற்பட்டது என்று கூறி டீலர்ஷிப் பொறுப்பேற்க மறுத்துவிட்டது" என்று தேப்தா வாதாடுகிறார்.

இதையடுத்து அவர் நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

காரின் என்ஜின் இ20 பெட்ரோலுக்கு ஏற்றது அல்ல என்ற விவரம் கார் வாங்கும் போது தனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று புகார்தாரர் குற்றம் சாட்டினார். வாகனம் இ20 எரிபொருளுக்குத் தகுதியற்றதாக இருந்தால் அல்லது அதைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாக இருந்தால், விற்பனையின் போதே அதுகுறித்த தெளிவான தகவல் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது வாதமாக இருந்தது.

இந்த வழக்கில் வாகன விற்பனையாளரான நெக்ஸா மேக்னெட்டோ ஸ்கை ஆட்டோமொபைல்ஸ் மற்றும் வாகனத் தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டனர்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும், கிடைக்கப்பெற்ற ஆதாரங்களையும் பரிசீலித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், மருத்துவர் பிரேம்ராஜ் தேப்தா 3 ஜூன் 2024 அன்று வாங்கிய வாகனத்தின் என்ஜின், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலில் (இ20) இயங்குவதற்குப் பொருத்தமானது அல்ல என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

வாகனம் ஜனவரி 2023 இல் தயாரிக்கப்பட்டது என்பதையும், அதன் என்ஜின் இ20 பெட்ரோலில் இயங்குவதற்கு ஏற்றது அல்ல என்பதையும் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

புகார்தாரர் மீண்டும் மீண்டும் எரிபொருளை மாற்றியும், பெட்ரோல் டேங்கைச் சுத்தம் செய்தும், புதிய பெட்ரோலை நிரப்பியும் வாகனத்தை இயக்க முயன்றார், ஆனால் அப்படியிருந்தும் கார் மீண்டும் மீண்டும் நின்றுபோனது என்று ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக வாகனத்தை பலமுறை சேவை மையத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.

நவீன வாகனங்களில் எரிபொருளின் தரம் மற்றும் அதன் இணக்கத்தன்மை ஒரு முக்கிய விஷயமாகும் என்றும் ஆணையம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. தயாரிப்பாளர் அல்லது விற்பனையாளர் நுகர்வோருக்கு வாகனத்தின் எரிபொருள் இணக்கத்தன்மை மற்றும் அது தொடர்பான அத்தியாவசிய உண்மைகளைப் பற்றிய தெளிவான தகவல்களை வழங்கத் தவறி, பின்னர் அதே காரணத்திற்காக வாகனத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது சேவைக் குறைபாடாகக் கருதப்படும்.

புகார்தாரரின் பழுதடைந்த காரைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, 45 நாட்களுக்குள் அதே மாடலில் இ20 எரிபொருளில் இயங்கும் புதிய காரை வழங்குமாறு மாருதி சுசூகி நிறுவனத்திற்கு ஆணையம் உத்தரவிட்டது.

நிறுவனம் அவ்வாறு செய்யாவிட்டால், வாகனத்தின் விலை 18.29 லட்சம் ரூபாய், ஆர்டிஓ கட்டணம் 1,86,850 ரூபாய் மற்றும் காப்பீட்டு பிரீமியம் 34,644 ரூபாய், அதாவது மொத்தம் 20,50,494 ரூபாயைத் திருப்பித் தர வேண்டும்.

இதனுடன், மன உளைச்சலுக்கு ஒரு லட்சம் ரூபாயும், வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.

கார் விற்பனையாளரின் வாதம்

இது தொடர்பாக கார் விற்பனையாளரான நெக்ஸா மேக்னெட்டோ ஸ்கை ஆட்டோமொபைல்ஸ் மேலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில், "வாகனத்தில் ஏற்பட்ட பிரச்னை பெட்ரோல் காரணமாகவே ஏற்பட்டது, அதுகுறித்த சோதனையும் நடத்தப்பட்டது" என்று கூறினார்.

"ஒவ்வொரு முறையும் டேங்க் சுத்தம் செய்யப்பட்டது, ஆனால் ஒவ்வொரு முறையும் பெட்ரோலில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது."

புகார்தாரரின் வாகனத்தில் ஏற்பட்ட பழுது வெளிப்புறக் காரணிகளால் ஏற்பட்டது என்றும், இது எந்த சூழ்நிலையிலும் வாரண்டியின் கீழ் வராது என்றும் மேலாளர் வாதிட்டார்.

வாரண்டி கொள்கையின்படி, வெளிப்புறக் காரணிகளால் வாகனத்தில் பழுது ஏற்பட்டால், அது வாரண்டியின் கீழ் வராது என்று அவர் கூறினார்.

நிறுவனத்தின் மேலாளர் தனது விளக்கத்தில், புகார்தாரரின் வாகன எரிபொருளின் மாதிரியை எடுத்து, சுயாதீன அரசு அங்கீகாரம் பெற்ற எஸ்ஜிஎஸ் ஆய்வகத்திற்கு அனுப்பியதாகவும், அதில் எரிபொருளின் தரம் சரியாக இல்லை என்று கண்டறியப்பட்டதாகவும் கூறினார்.

மாருதி சுசூகி என்ன கூறியது?

மாருதி சுசூகி நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "இந்த வழக்கில் விற்கப்பட்ட கார் இ20 இணக்கத்தன்மை கொண்டது மற்றும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கும் திறன் கொண்டது. இந்தத் தகவல் வாகனத்தின் உரிமையாளர் கையேட்டில் (Owner's Manual) கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

புகார்தாரரின் வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரியில் எரிபொருள் மாசுபட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன என்றும் நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

மாருதி நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த அம்சம் உட்பட பல பிற தொடர்புடைய உண்மைகள் ஆணையத்தின் உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், ஆணையம் போதுமான அளவு கவனத்தில் கொள்ளாத பிற உண்மைகள் என்ன என்பதை நிறுவனம் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

மாருதி சுசூகி நிறுவனம், "சட்டப்படி உயர் மன்றத்தில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு