You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாங்சுக் உண்ணாவிரதம் நிறைவு, மோதி வீடியோ, பேச்சு நடத்த இடம் தேர்வு - ஒரே இரவில் என்ன நடந்தது?
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா உள்ளிட்ட தங்களின் அனைத்து கோரிக்கைகளும் அப்படியே நீடிக்கின்றன என்றும் இது குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் காக்ரோச் ஜனதா கட்சி அதாவது சிஜேபி-யின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறியுள்ளார்.
''ஏதேனும் ஒரு பொதுவான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பேச்சுவார்த்தை நடத்த 'கான்ஸ்டிடியூஷன் கிளப் ஆஃப் இந்தியா' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அரசு திறந்த மனதுடன் எங்களை அணுகியிருப்பது குறித்தும், வீதியில் இறங்கிப் போராடும் மக்களின் குரலைக் கேட்கத் தயாராக இருப்பது குறித்தும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்'' என சௌரவ் தாஸ் கூறினார்.
"அவர்கள் ஜந்தர் மந்தருக்கும் வந்திருக்கலாம். ஆனால், நாங்கள் அவர்களுக்கு ஒரு மாற்று வாய்ப்பை வழங்கினோம். ஜந்தர் மந்தருக்கு வருவதற்கு அவர்கள் தயங்கக்கூடும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. நாங்கள் புரிதல் உள்ள படித்த மனிதர்கள். எனவேதான், அவர்களுக்கு ஒரு பொதுவான இடம் என்ற மாற்று தேர்வை வழங்கினோம்'' என சௌரவ் தாஸ் மேலும் கூறினார்.
நீட் வினாத்தாள் கசிவு - பிரதமர் கூறியது என்ன?
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை நள்ளிரவில் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "வினாத்தாள் கசிவு என்பது சாதாரணமான விஷயம் அல்ல. லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இது வேதனை அளிப்பதாகும். எனவே, இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குற்றவாளிகளைப் பிடித்துள்ளது, இன்று அவர்கள் சிறையில் இருக்கிறார்கள்" என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவுக்குப் பிறகு மாணவர்களின் கல்வியாண்டு வீணாகிவிடக் கூடாது என்பதில் தனது அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
"குறுகிய காலத்தில் 22 லட்சம் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதுவதற்குத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்தது. பின்னர் ஜூன் 19 அன்று தேர்வின் முடிவுகளும் வெளியாயின, அதில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன" என்றார்.
வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களைக் கடுமையான முறையில் கையாள்வதற்குத் தனது அரசு உறுதிபூண்டுள்ளது என்றும், இதற்காக விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
இவ்வளவு குறுகிய காலத்தில் தேர்வை நடத்திவிட்டோம் என்று குறிப்பிட்ட அவர், "ஆனால், நாங்கள் அத்துடன் திருப்தியடைந்துவிடுபவர்கள் அல்ல. விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான வரைவுச் சட்டத்தைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறைகளிடம் நான் கேட்டிருந்தேன், அவர்களும் தங்களின் முழு உழைப்பையும் போட்டு அதைத் தயாரித்து எங்களிடம் வழங்கிவிட்டனர்" என்றூ தெரிவித்தார்.
திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கும்போது, இந்த மசோதாவை விரைவில் நிறைவேற்ற தனது அரசு முயற்சிக்கும் என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மிக விரைவாகவும், மிகக் கடுமையானதாகவும் தண்டனை வழங்க முடியும் என்றும் பிரதமர் கூறினார்.
பிரதமர் மோதியின் இந்த உத்தரவாதம் குறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறுகையில், "இத்தகைய பேச்சுகளாலும், இத்தகைய அறிவிப்புகளாலும் எந்தப் பயனும் இல்லை. இவை அனைத்தும் வெறும் ஏமாற்று வேலைகள். மக்கள் இந்த ஏமாற்று வேலைகளை நம்ப வேண்டாம். தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்குக் குறைவான எதற்காகவும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்" என்றார்.
மோதிக்கு ராகுல் காந்தி பதில்
பிரதமர் நரேந்திர மோதியின் இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , மாணவர்களை பிரதமர் அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
"திரு. மோதி அவர்களே, எங்கள் மாணவர்கள் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை கோரி வருகிறார்கள். நள்ளிரவில் பதிவிடப்பட்ட இந்த பயனற்ற வீடியோவின் மூலம் அவர்களின் அறிவாற்றலை அவமதிக்காதீர்கள்," என்று பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள், மாணவர்களைத் தாக்கியவர்களுக்குத் தண்டனை வழங்குங்கள், மன்னிப்புக் கேளுங்கள். எனவும் கூறியுள்ளார்.
26 நாள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட சோனம் வாங்சுக் கூறியது என்ன?
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலையில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"இதற்கு முன்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்," என வாங்சுக் எழுதியுள்ளார்.
பல நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தை மற்றும் நாட்டில் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
"மிக விரைவில் ஒரு தனி வீடியோவில் இந்த நிபந்தனைகள் குறித்து நான் விரிவாக விளக்குவேன். நீங்கள் எங்கும் எந்தவொரு வன்முறையும் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றும், இது குறித்து மிகவும் விழிப்புடன் இருக்குமாறும் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என வாங்சுக் மேலும் எழுதியுள்ளார்.
வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்தது குறித்து அபிஜித் தீப்கே கூறியது என்ன?
சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக தளமான எக்ஸில் ஒரு வீடியோவை வெளியிட்ட தீப்கே, ''சோனம் சார் 26 நாட்களுக்குப் பிறகு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது எங்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. சார், உங்களின் அசாதாரணமான தைரியத்திற்கும் தியாகத்திற்கும் நன்றி. உங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளீர்கள். உங்கள் உயிர் இந்த நாட்டிற்கு மிகவும் மதிப்புமிக்கது'' என்று கூறினார்.
''தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை காக்ரோச் ஜனதா கட்சி ஜந்தர் மந்தரில் அமைதி போராட்டத்தை தொடரும்'' எனவும் அறிவித்துள்ளார்.
நீட்-யுஜி வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் கடந்த ஒரு மாதமாக ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு ஆதரவாக சோனம் வாங்சுக் கடந்த 26 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
வியாழக்கிழமை வேறு என்ன நடந்தன?
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் வியாழக்கிழமை நாள் முழுவதும் மிகுந்த பரபரப்பு நிலவியது. மாலை நேரத்தில், டெல்லியில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தீவிரமடைந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'தீஸ் ஜனவரி மார்க்'கில் அமைந்துள்ள காந்தி ஸ்மிருதிக்கு சென்றனர். அங்கு அவர்கள், நீட் வினாத்தாள் கசிவுக்குப் பிறகு தங்கள் உயிரை இழந்த மாணவர்களுக்காகவும், போராட்டத்தின் போது காயமடைந்த மாணவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
"நமது தலைவர் மகாத்மா காந்தி இதே இடத்தில்தான் படுகொலை செய்யப்பட்டார். இன்று மோதி அரசு இந்தியாவில் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது" என ராகுல் காந்தி தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்கியே தீர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு முன்பாக ஒரு கூட்டத்திற்காக ராகுல் காந்தியின் இல்லத்திற்கு எதிர்க்கட்சிகளின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றிருந்தனர். இதன் பிறகு, அவரது இல்லத்திற்கு வெளியே தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.
மாணவர்களின் போராட்டம் தொடர்கிறது
இதற்கிடையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அரசு தரப்பிலிருந்து விடுக்கப்படும் கோரிக்கைகளும் உத்தரவாதங்களும் இளைஞர்களிடையே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு