உயிர் காக்கும் கவசம் அணிந்தும் 15 பேர் பலியானது எப்படி? வியட்நாம் படகு விபத்தில் உயிர் தப்பிய தமிழர் தகவல்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகே நேற்று (ஜூலை 11) நடந்த படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 15 இந்தியர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், கேரளாவை சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த மூவர் உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த மொபைல் விநியோகஸ்தர் முருக பிரபு இந்த விபத்தில் உயிரிழந்ததாக அவருடைய உறவினர் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இந்திய தூதரகம் எங்களிடம் தகவல் தெரிவித்தார்கள். அனைத்து வேலைகளையும் அவர்கள் தான் பார்த்து வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்படுவது குறித்து தகவல் தெரிவிப்பதாக அவர்கள் கூறினார்கள்," என்று தெரிவித்தார்.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும், விபத்துக்கான காரணம் குறித்து அவசரமான விசாரணை நடத்தவும் வியட்நாம் பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் துணை பிரதமர் ஃபாம் கியா டுக் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய குடிமக்கள் தொடர்பாக விவகாரங்களைக் கையாள வியட்நாமில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து பணியாற்றுமாறு வியட்நாம் வெளியுறவு அமைச்சகத்துக்கு வியட்நாம் அரசு அறிவுறுத்தியுள்ளது.

உதவி எண்கள் அறிவித்த தமிழ்நாடு அரசு

இந்த விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வியட்நாமில் உள்ள தமிழ்ச் சங்கங்களைத் தொடர்புகொண்டு விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்கள் பற்றி கேட்கப்பட்டுள்ளன," என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க இந்திய தூதரகம் மற்றும் தமிழ்நாடு அயலக தமிழர் நலத்துறை உதவி எண்களை அறிவித்துள்ளது.

அதன் செய்திக் குறிப்பில், "வியட்நாம் நாட்டின் படகு விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், அவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ, தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்குள் - 1800 309 3793

வெளிநாடு - +91 80 6900 9900 (மிஸ்டு கால்)

தொடர்புக்கு - +91 80 6900 9901

இந்திய தூதரகத்தின் உதவி எண்கள்

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் மற்றும் தேவையான உதவிகளை வழங்குவதற்காக, வியட்நாமின் ஹோ சி மின் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கட்டுப்பாட்டு அறை (Control Room) அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்பு எண்கள்:

+84 36 281 7930

+84 91 552 37 14

+84 33 452 0414

ஹனோயிலும் ஒரு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்பு எண்:

+84 91 308 9165

உயிர் காக்கும் கவசம் அணிந்திருந்தும் 15 பேர் பலியானது எப்படி?

ஷார்ட் வீடியோ

வியட்நாமில் படகு விபத்தில் சிக்கி உயிர் தப்பிய பழனியைச் சேர்ந்த நிர்மல் குமாரிடம் பிபிசி தமிழுக்காக செய்தியாளர் பிரபுராவ் ஆனந்தன் பேசினார். அப்போது இந்த விபத்து நடந்த தருணம் குறித்துப் பகிர்ந்த நிர்மல் குமார், "மூடிய படகில் 39 பேர் பயணித்தோம். திடீரென வீசிய அலையால் படகு மூன்றே நிமிடங்களுக்குள் கவிழ்ந்துவிட்டது." என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, படகின் முன்புறத்தில் இருந்தவர்கள் முன்புற வழியாகவும், ஜன்னல்கள் வழியாகவும் வெளியே வந்துவிட்டதாகவும், படகின் பின்புறத்தில் இருந்த 15 பேரும் உள்ளே சிக்கி கொண்டதாகவும் நிர்மல் குமார் கூறினார்.

நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சென்றவர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "சாதனை செய்தவர்களுக்காக எங்களது நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா என்றும், அனைவரும் உயிர் காக்கும் கவசங்களை அணிந்து இருந்ததாகவும், மூடப்பட்ட படகு என்பதால், காற்றில் ஆடிய படகு எதிர்பாராமல் கவிழ்ந்துவிட்டது. ஆகையால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்றும் தெரிவித்தார்.

தனது ஊரான பழனியைச் சேர்ந்த நண்பர் முருகதாஸும் இதில் பலியாகிவிட்டதாக அவர் தெரிவித்தார். எவ்வளவு உடல்கள் அடையாளம் காணப்பட்டன என்பது பற்றிப் பேசிய நிர்மல் குமார், "அனைவரின் உடலும் உடனடியாக மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டன. அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

இந்திய தூதரகம் கூறியது என்ன?

ஷார்ட் வீடியோ

வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கூடுதல் தகவல்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். உறுதி செய்யப்பட்டவுடன், மேலதிக தகவல்கள் பகிரப்படும்" என்று தெரிவித்துள்ள இந்திய தூதரகம், அந்த படகில் பயணித்த இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேரின் விவரங்களையும் வெளியிட்டுள்ளது.

பின்னர், உயிரிழந்த 10 பேரின் தகவல்களை உறுதி செய்து தனியாக எக்ஸ் தளப் பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், கேரளாவைச் சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது.

படகு விபத்தில் உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யார்?

1. வினய குமார் சித்ரபுரம் பாஸ்கரா

2. ஶ்ரீதர் சுந்தரராஜன்

3. முருகபிரபு ஆறுமுகம்

4. ஷேக் அப்துல்லா அப்துல் மஜீத்

5. பாலாஜி நடேசன்

6. செந்தில்குமார் ஜெயவேல்

7. ரவிசங்கர் சுகுமாரன்

8. சந்தோஷ்குமார் சாந்திலால் ஜெயின்

9. பாபு குப்புசாமி

10. அழகுராஜ் சிவசாமி

வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வினய குமார். இவருக்கு வயது 48. இவரது தந்தை பாஸ்கர் வேலூர் காந்திரோட்டில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். வினய குமார் சேண்பாக்கத்தில் வாசவி & கோ' என்ற பெயரில் லாவா நிறுவனத்தின் செல்போன் ஏஜென்சியை உரிமம் எடுத்து நடத்தி வருகிறார். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும் அன்னய்யா என்ற 14 வயது மகளும் உள்ளனர்.

சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருக்கு வயது 60. வியட்நாமுக்கு நண்பர்களுடன் கடந்த புதன்கிழமை சுற்றுலா சென்றுள்ளார். இவரது மனைவி பெயர் ஜெயந்தி. இவர்களுக்கு கார்த்தி என்ற மகனும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். இவர்களது மகனும் மகளும் வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு