You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பாடலின் முதல் வரிகளில் அர்த்தமே இருக்காது' - விஜய் ஆண்டனி உடனான அனுபவம் பகிரும் பிரபலங்கள்
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
தமிழின் முதல் நாவல் என்று போற்றப்படும் பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரனான இசையமைப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் இன்று.
திருச்சியில் பிறந்து வளர்ந்த விஜய் ஆண்டனி, அரசு ஊழியரான தந்தையின் திடீர் மறைவுக்குப் பின் திருநெல்வேலியில் குடியேறினார். பள்ளியில் படிக்கும்போது அவருக்கு இசை மீது ஆர்வம் ஏற்பட்டு பின்னாளில் இசைமைப்பாளராக மட்டுமின்றி நடிப்பு, இயக்கம் போன்றவற்றிலும் தடம் பதித்துள்ளார்.
நாக்கமுக்கா பாடல்
விஜய் ஆண்டனி கல்லூரிக் காலத்தில் சவுண்ட் இஞ்சினீயராக பணியாற்றிக் கொண்டே பகுதி நேரமாக இசை கற்றுக் கொண்டார். மாதம் 600 ரூபாய் சம்பளத்தைக் கொண்டு தனக்குத் தேவையான இசைக் கருவிகளை வாங்கி வீட்டையே மினி ஸ்டூடியோவாக மாற்றினார்.
அவரது இயற்பெயர் பிரான்சிஸ் ஆண்டனி சிரில் ராஜா. ஆரம்பத்தில் மணிரத்னம், படத்திற்கு இசையமைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் வந்த நேரத்தில், "சின்ன பாப்பா பெரிய பாப்பா, காதலிக்க நேரமில்லை, கனா காணும் காலங்கள் ஆகிய சீரியல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது" என்று பேட்டி ஒன்றில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
வெள்ளித் திரையில் இயக்குநர் சசி இயக்கத்தில் டிஷ்யூம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.
அதைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் 'சுக்ரன்' படத்திலும் வாய்ப்பு கிடைத்தது. இரு ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு இரு படங்களின் பாடல்களும் ஹிட்டாகவே, திரைத் துறையில் விஜய் ஆண்டனிக்கு தனி இடம் கிடைத்தது என்று கூறும் அளவுக்கு வளர்ச்சியடைந்தார். குறிப்பாக, காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்கமுக்கா பாடல் அவரை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றது.
ஹீரோ, இயக்குநர், எடிட்டர்
ஒரு கட்டத்தில் 'நான்' படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமானார். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தான் நடித்த பல படங்களைத் தயாரித்தார்.
இசையமைப்பாளராக வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சசியின் `பிச்சைக்காரன்' படம் தமிழ், தெலுங்கில் சூப்பர் ஹிட்டாக, முன்னணி நடிகராக விஜய் ஆண்டனி வளர்ந்தார்.
சலீம், இந்தியா-பாகிஸ்தான், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு பிடிச்சவன், கொலைகாரன், கோடியில் ஒருவன், ரத்தம், ஹிட்லர், நுாறுசாமி உள்படப் பல படங்களில் நடித்தார். பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குராகவும் உருவெடுத்தார்.
'தன் பாடல்களையே விமர்சிப்பார்' - தயாரிப்பாளர் தனஞ்செயன்
விஜய் ஆண்டனி குறித்துத் தெரிந்துகொள்ள அவருடன் பல படங்களில் பணியாற்றியவரும், அவரது நண்பருமான தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் பிபிசி தமிழ் பேசியது.
''விஜய் ஆண்டனி போன்ற ஒரு கடும் உழைப்பாளியைப் பார்க்கவே முடியாது. பல வெற்றிகளைப் பெற்றவர், பல தோல்விகளையும் சந்தித்தவர். தனிப்பட்ட வாழ்வில் இழப்புகளைச் சந்தித்தார். நிதிப் பிரச்னைகளை எதிர்கொண்டார். ஆனால், அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு வந்து, மீண்டும் படங்களில் நடித்தார், படங்களைத் தயாரித்தார், பல வெற்றிகளையும் கொடுத்தார்" என்று கூறுகிறார் தனஞ்செயன்.
அவரை தன்னம்பிக்கையின் சிகரம் எனக் குறிப்பிடும் தனஞ்செயன், "எப்போதும் சினிமா பற்றிய சிந்தனையில் இருக்கிறார். இசையமைப்பாளராக பல ஹிட் கொடுத்தவர், ஒரு கட்டத்தில் நடிகராகவும் ஆனார். அவருடைய பல படப் பிடிப்புகளுக்குச் சென்றுள்ளேன். சீன் நடித்து முடிந்தவுடன் அரட்டை அடிக்கமாட்டார், வீணாக நேரத்தைக் கழிக்கமாட்டார். காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு இசை கேட்கத் தொடங்கிவிடுவார் அல்லது தனது இசைப் பணிகளைச் செய்வார்" என்று விவரித்தார்.
அவருக்கு உலகம் முழுவதுமிருந்து புதுப்புது இசையை, ஒலியைக் கேட்பது பிடிக்கும் என்றும் தனது தன் பாடல்களைத் தானே விமர்சித்துக் கொள்வார் என்றும் தனஞ்செயன் குறிப்பிட்டார்.
அதனால்தான், "அவரிடம் இருந்து சிறந்த பாடல்கள் கிடைக்கின்றன. கம்போசிங்கில் நிறைய வடிகட்டுவார். எனவே, அவரது இசை தனித்துவமாகத் தெரிகிறது.
'சில்லாக்ஸ் பாடலை மறக்க முடியுமா?' - பாடகி சாருலதாமணி
இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பிரபல கர்நாடக சங்கீத பாடகி சாருலதா மணி பிபிசி தமிழிடம் பேசியபோது, "என்னை சினிமாவில் பாட வைத்தவர் விஜய் ஆண்டனிதான். அவர் இசையில் பாடுவது, அவர் ரெக்கார்ட்டிங் ஸ்டூடியோவில் இருப்பது நல்ல அனுபவம். அவரே சிறந்த பாடகர். அதனால், நமக்குக் கச்சிதமாகப் பாடிக் காட்டுவார். அவர் இசையில் நான் பாடிய பாடல்கள் ஒரு மணிநேரத்திற்குள் முடிந்துவிடும்" என்று குறிப்பிட்டார்.
அதோடு, "நான் கர்நாடக சங்கீத பாடகி என்பதால் நான் பாடும்பாதும் கர்நாடிக் டச் வரும்படி பார்த்துக் கொள்வார். அதை ரசித்துத் தனது கம்போசிங்கில் சேர்ப்பார். நான் பாடிய சில்லாக்ஸ் பாடலில் அப்படியொரு ராகத்தையும் சேர்த்துக் கொடுத்தார். அதெல்லாம் மறக்க முடியாத அனுபவம். அவர் பாடல்களில், இன்றைய முதல்வர் நடித்த படங்களுக்காக நான் பாடிய 'என் உச்சிமண்டையில (வேட்டைக்காரன்), சில்லாக்ஸ் (வேலாயுதம்)' எனக்குப் பிடித்தமானவை. இந்தப் பாடல்களைப் பாடியது நான்தான் என்பதைக் கேட்டுப் பலரும் ஆச்சர்யப்படுகின்றனர். அந்த அளவுக்கு என் குரலில் அவர் மேஜிக் செய்திருந்தார்."
இது தவிர அவர் இசையில் 'நான் அவன் இல்லை' படத்தில் வரும் மச்சக்கன்னி மற்றும் ஜெயதேவ் பாடிய ஏன் எனக்கு மயக்கம் ஆகிய பாடல்களும், பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற நுாறுசாமிகள் இருந்தாலும் என்ற தாய்ப்பாசம் தொடர்பான பாடலும் தான் ரசித்துக் கேட்பவை என்றும் அவர் தெரிவித்தார்.
'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' - இயக்குநர் சசி
விஜய் ஆண்டனியை தனது டிஷ்யூம் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குநர் சசி பிபிசி தமிழிடம் பேசியபோது, "விஜய் ஆண்டனியை நடிகராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக, சினிமா ஆர்வலராக, நல்ல மனிதராக மிகவும் பிடிக்கும்" என்றார்.
"பிச்சைக்காரன் படத்தை எடுக்க அவர் மிகவும் சிரமப்பட்டார். அவரால்தான் அந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்றது. நுாறுசாமி படத்திலும் கதையை உணர்ந்து, படத்தைத் தயாரித்து நடித்தார். அவரது உழைப்பு மற்றும் சினிமா ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன்" எனக் கூறிய அவர், விஜய் ஆண்டனி இசையில் வந்த பாடல்களில் 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை (அங்காடிதெரு), நெஞ்சாஞ்கூட்டில் நீயே நிற்கிறாய் (டிஷ்யூம்), தோழியா என் காதலியா? (காதலில் விழுந்தேன்), டைலமோ டைலமோ (டிஷ்யூம்)' ஆகிய பாடல்களைத் தான் ரசித்துக் கேட்பதாகக் குறிப்பிட்டார்.
'அர்த்தமற்ற முதல் வரிகள்' - கவிஞர் கார்த்திக் நேத்தா
கவிஞர் கார்த்திக் நேத்தா பிபிசி தமிழிடம் பேசியபோது, "அப்போது அவர் சென்னை சூளைமேட்டில் ஸ்டூடியோ வைத்திருந்தார். நான் ஆரம்பக் காலத்தில் அவரிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றேன். அப்போது நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் என்ற அவரது பாடல் மிகவும் பிரபலம். அந்தப் பாட்டை வேறு மாதிரி எழுதிக் கொடுங்க என்றார். நானும் அதைச் செய்தேன்" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
அவருக்கு அது பிடித்திருந்தாலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தன்னுடன் சேர்ந்து பாடல் எழுதிய தேன்மொழி தாஸின் வரிகள் ஆழமாக இருந்ததால், அவருடைய வரிகளையே எடுத்துக் கொண்டார் எனவும் குறிப்பிட்டார்.
விஜய் ஆண்டனி இசையில் தனக்கு மிகவும் பிடித்த விஷயம், அவருடைய பாடலின் முதல் வரிகள் சில நேரம் அர்த்தமற்றதாக இருப்பதுதான் என்கிறார் அவர். அதற்கு அர்த்தமில்லை என்றாலும், "அது மக்களிடம், இளைஞர்கள், குழந்தைகளிடம் வேகமாகச் சென்றடையும். அதுதான் அவருடைய தனிச்சிறப்பு" என்றார் கவிஞர் கார்த்திக் நேத்தா.
மேலும் பேசிய அவர், "அப்படி ஹிட்டான பாடல்கள் பல. அதேபோல் அவர் இசையை ஆழமாகப் பார்க்காமல் இளைஞர்கள் மனநிலை, உணர்வு, ரசனை ஆகியவற்றை உணர்ந்து பாடல்களை உருவாக்குவார். இசைக்கு இருந்த எந்த பாணியிலும் சிக்காமல் தனக்கென தனித்துவமான பாணியை உருவாக்கிக் கொண்டார்" என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு