கோவை இளைஞர் பாகிஸ்தான் எல்லையில் கொத்தடிமையாக 15 ஆண்டுகள் சிக்கியிருந்து, மீண்டது எப்படி?

    • எழுதியவர், ஹர்மன்தீப் சிங்
    • பதவி, செய்தியாளர், பிபிசி பஞ்சாபி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இருக்கும் தகவல்கள் சங்கடம் தரலாம்.

''என் மூத்த பையன் எப்பவோ இறந்து போயிருப்பான்னு நினைச்சேன். அவனை நினைச்சு நான் அழாத நாளே இல்லை. 23 வருஷம் கழிச்சு, திடீர்னு என் பையன் உயிரோட இருக்கான்னு தெரிஞ்சதும் நான் அடைந்த சந்தோஷத்தை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுகள் கழித்து அவனுடன் போனில் பேசியபோது வெடித்து அழுதுவிட்டேன்."

கணவரை இழந்துள்ள சுந்தரி, 23 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகன் உயிருடன் இருப்பதைப் பற்றி பிபிசியிடம் பேசியபோது அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கியிருந்தன.

யார் இந்த தாய்? காணாமல் போன அந்த மகன் எங்கு இருந்தார், எப்படி கண்டறியப்பட்டார்?

மகன் இறந்துவிட்டதாக நினைத்திருந்த தாய்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 13ஆம் தேதி திங்கள் கிழமையன்று நடந்த மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில், கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரி (வயது 68), மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனைத் தன்னிடம் மீண்டும் சேர்ப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டுமெனக் கோரியிருந்தார்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவிலுள்ள பூமாலைப்பட்டி ஆனைக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. அவருடைய மனைவி சுந்தரி. இந்த தம்பதிக்கு பிரகாசம், பிரபு என இரு மகன்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு முன், பிழைப்புக்காக இந்தக் குடும்பம் கோவைக்குக் குடிபெயர்ந்துள்ளது.

இவர்களின் மூத்த மகன் பிரகாசம், மூன்றாம் வகுப்பு வரை கவுண்டம்பாளையம் மாநகராட்சிப் பள்ளியிலும், சாய்பாபா காலனியில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பையும் படித்திருக்கிறார். அதன் பிறகு அவர் பள்ளிக்குச் செல்லவில்லை. கடந்த 2003ஆம் ஆண்டில் சிறு கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பிரகாசம் வீடு திரும்பவே இல்லை.

பிபிசி தமிழிடம் அதை நினைவுகூர்ந்து பேசிய சுந்தரி, ''அவனுக்கு படிப்பு வரவில்லை. வீட்டில்தான் இருந்தான். இரு மகன்களுக்கும் ஒரு வயது வித்தியாசம்தான். அதனால் பல விஷயங்களில் அவர்களுக்குள் சண்டை வரும். அப்போது வீட்டு உபயோகத்துக்காக ஒரு டூவீலர் வாங்கியிருந்தோம். அதை யார் ஓட்டுவது என்பதில் சண்டை ஏற்பட்டது. சின்னவன் அது தனது வண்டி எனக் கூறியதால் மூத்தவன் சண்டை போட்டு வீட்டைவிட்டுச் சென்றுவிட்டான். எங்கே தேடியும் அவன் கிடைக்கவில்லை,'' என்றார்.

சுந்தரியின் கூற்றுப்படி, ''போலீசில் புகார் கொடுத்தோம். இரு மாதம் கழித்து, எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மளிகைக் கடை தொலைபேசிக்கு அழைத்துப் பேசிய அவன், சென்னையில் இருப்பதாக தகவலை மட்டும் கடைக்காரரிடம் கூறிவிட்டு வைத்துவிட்டான். எங்களிடம் பேசவில்லை. அப்போது அவனுக்கு 16 வயது. விவரம் தெரிந்த வயது என்பதால் தானாக வந்து விடுவான் எனக் கருதினோம், ஆனால் வரவில்லை. எங்கிருக்கிறான் என்ற தகவலும் தெரியவில்லை. அவனைக் கண்டுபிடிக்க பல வழிகளில் எடுத்த முயற்சிகள் எதுவுமே பலன் தரவில்லை.''

சில ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டம்பாளையத்தில் இருந்து நீலாம்பூர் பகுதிக்கு இவர்கள் குடிபெயர்ந்துள்ளனர். எலக்டிரிக்கல் உதவியாளர், வாட்ச்மேன் போன்ற பணிகளைப் பார்த்து வந்த ராமமூர்த்தி, 2021இல் புற்றுநோய் பாதிப்பால் மரணமடைந்தார். பிறகு சுந்தரி, ஆச்சாங்குளம் பகுதியில் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து குறைந்த அளவில் காய்கறி விவசாயம் செய்வதோடு, சில மாடுகளையும் பராமரித்து வருகிறார். அவருடன் இளைய மகன் பிரபு இருக்கிறார்.

''சாலையில் யாராவது படுத்துக் கிடந்தால் அது என் மூத்த மகனாக இருக்குமோ என்று பக்கத்தில் போய்ப் பார்ப்பேன். எந்த ஊருக்குப் போனாலும் எங்கேயாவது அவன் தென்படமாட்டானா என்று கண்கள் தேடும். கடந்த மாதம் எங்களைப் பார்க்க முத்தையா என்ற பத்திரிகையாளர் வந்தார். அவர்தான் பிரகாசம், பஞ்சாபில் ஒரு காப்பகத்தில் இருப்பதாகவும் கொத்தடிமையாக இருந்த அவரை மீட்டு அங்கு வைத்துள்ளதாகவும் கூறினார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. அவர் என் மகனின் போட்டோவை காண்பித்த பிறகே எனக்கு நம்பிக்கை வந்தது'' என்றார் சுந்தரி.

பஞ்சாபை சேர்ந்த சுபாஷ் சந்தர் என்பவர் அளித்த தகவலின்பேரில், மூன்று ஆண்டுகளாக பிரகாசத்தின் குடும்பத்தினரைத் தேடுவதற்காக ஏராளமான முயற்சிகளை எடுத்ததாக பிபிசியிடம் பேசியபோது விளக்கினார் பத்திரிகையாளர் முத்தையா.

மேலும் பேசிய அவர், ''என் அண்ணனின் நண்பரான சுபாஷ் சந்தர், ஹரியாணா மாநில சட்டப் பேரவையில் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர்தான் ஒரு காப்பகத்தில் பிரகாசத்தை பார்த்து, அவர் கூறிய விவரங்களைக் கூறி, அவருடைய குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க உதவுமாறு கூறினார். அண்ணன் மூலமாக இதையறிந்து, சுபாஷ் மூலமாக பிரகாசத்திடம் பேசிய பின் அவரது குடும்பத்தைத் தேடத் தொடங்கினேன்'' என்றார்.

குடும்பத்தைக் கண்டுபிடிக்க மூன்று ஆண்டு தேடல்

கடந்த 2023ஆம் ஆண்டில் பிரகாசம் குறித்து சுபாஷ் கூறிய சில தகவல்களை வைத்து, கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி பகுதிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு இவர்களைப் பற்றி முழுமையான தகவல் எதுவும் முத்தையாவுக்கு கிடைக்கவில்லை.

''முதலில் பிரகாசம் தகவல்களைச் சரியாகக் கூறவில்லை. சுபாஷ் பலமுறை சந்தித்த பிறகே கொஞ்சம் தெளிவாகப் பேசியுள்ளார். அப்போதுதான் தனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பூமாலைப்பட்டி ஆனைக்குளம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு 3 ஆண்டுகளாக அருப்புக்கோட்டை, நரிக்குடி என்று அங்குள்ள பலரிடமும் பேசி தகவல் சேகரித்தேன். பல முயற்சிகளுக்குப் பிறகு, கடந்த மாதம்தான் பூமாலைப்பட்டியில் கடை வைத்துள்ள வாசுகியின் தொடர்பு எண் கிடைத்தது.''

சுந்தரியின் அக்கா மகளான வாசுகியை முத்தையா தொடர்பு கொண்டபோது, தனது சித்தியும், அவரது மகனும் நீலாம்பூர் ஆச்சாங்குளத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். அந்தத் தகவல் கிடைத்ததும் முத்தையா உடனடியாக சுந்தரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆச்சாங்குளம் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த சுந்தரியிடம் நேரடியாகச் சென்று, பிரகாசத்தின் புகைப்படத்தைக் காண்பித்து பஞ்சாபில் காப்பகத்தில் அவர் இருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளார். அப்போதுதான் பிரகாசம் காணாமல் போய் 23 ஆண்டுகள் ஆகிவிட்டன என்ற விவரமே தனக்குத் தெரிய வந்ததாகக் கூறுகிறார் முத்தையா.

தனது மூத்த மகன் உயிருடன் இருப்பது தெரிந்த அந்தத் தருணத்தை பிபிசியிடம் விளக்கிய சுந்தரி, ''என் மூத்த மகனை நினைத்து நான் அழாத நாளே இல்லை. கொரோனா காலத்திற்கு முன்புதான் என் கணவர் இறந்தார். கொரோனாவின்போதும் நிறைய பேர் இறந்துவிட்டதால் என் மகனும் இறந்திருப்பான் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவன் உயிரோடு இருப்பது தெரிந்ததும் எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை எப்படி விவரிப்பதென்றே தெரியவில்லை. அவனிடம் பேசும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது'' என்று கண்ணீர் மல்கப் பேசினார்.

அதைத் தொடர்ந்து, ஜூலை முதல் தேதியன்று, முத்தையா, சுந்தரியின் இளைய மகன் பிரபு ஆகியோர், ஹிந்தி மொழி தெரிந்தவர் என்பதற்காக அண்டை வீட்டுக்காரரான லாரி ஓட்டுநர் சுந்தரலிங்கம் என்பவரையும் அழைத்துக் கொண்டு ரயிலில் சண்டிகார் சென்று அங்கிருந்து பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள லச்கானி என்ற இடத்தில் இருக்கும் அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டியின் காப்பகத்திற்குச் சென்றுள்ளனர். கடந்த 2022ஆம் ஆண்டில், அதுவரை கொத்தடிமையாக இருந்து, மீட்கப்பட்டது முதல் அங்குதான் பிரகாசம் இருக்கிறார்.

'இரும்புக் கட்டிலும் போர்வையும்தான் பிரகாசத்தின் உடைமைகள்'

பிரகாசம் கொத்தடிமையாக இருந்த இடத்தில் இருந்து எப்படி மீட்கப்பட்டார் என்பதை பிபிசி பஞ்சாபி களமிறங்கி விசாரித்தது. கடந்த 2022ஆம் ஆண்டில் பாட்டியாலாவை சேர்ந்த 'அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி' என்ற அரசு சாரா அமைப்பு, பாகிஸ்தான் எல்லையிலுள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தின் அஜ்னாலா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பிரகாசத்தை மீட்டுள்ளது.

சுமார் 15 முதல் 20 ஆண்டுகள் வரை கொத்தடிமையாக வைக்கப்பட்டு, பல ஆண்டுக்கால துயரமும் இயலாமையும் நிறைந்த ஒரு வாழ்க்கையை பிரகாசம் வாழ்ந்து வந்ததாக பிபிசி பஞ்சாபியிடம் அந்த அமைப்பினர் விளக்கினர். அவர்களின் தகவல்படி, பிரகாசம் ஊதியம் ஏதுமின்றி வேலை செய்ய வைக்கப்பட்டதோடு, சங்கிலியால் பிணைக்கப்பட்டே வைக்கப்பட்டிருந்தார். இந்தப் படங்களை பிபிசி தமிழிடம் முத்தையா மூலமாக சுபாஷ் சந்தர் ஏற்கெனவே பகிர்ந்திருந்தார்.

பால் பண்ணை வைத்திருந்த ஒரு விவசாயி வீட்டில் அவர் வேலை செய்துள்ளார். கால்நடைகள் தொடர்பான அனைத்து வேலைகளும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தன. மேலும் அவர்கள் கூறுகையில், "அவர் தூங்குவதற்கு ஓர் இரும்புக் கட்டிலும் போர்வையும் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. கட்டிலில் மெத்தை, விரிப்பு என எதுவுமே இல்லை; ஒவ்வோர் இரவும் அவரது அறை வெளியில் பூட்டப்பட்டது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியமின்றி உழைத்த அவருக்கு, முறையான உணவோ, போதுமான உடைகளோ வழங்கப்படவில்லை," என்றும் பிபிசி பஞ்சாபியிடம் தெரிவித்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பிரகாசத்தை இந்த அமைப்பினர் மீட்டுக் கொண்டு வந்து காப்பகத்தில் தங்க வைத்த பின் பல மாதங்களாக அவர் பேச இயலாத நிலையில் இருந்துள்ளார். அவரிடம் பேசப் பல்வேறு முயற்சிகளை அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். அதன் பிறகே சில வார்த்தைகளைப் பேச ஆரம்பித்துள்ளார்.

முதலில் அவரது பெயரைக் கேட்டபோது 'பிரகாசம்' எனக் கூறியுள்ளார். எங்கிருந்து வருகிறார் என்று கேட்டதற்கு 'தமிழ்நாடு' என்று பதிலளித்துள்ளார். ஆனால், அவரது ஊர் பற்றிக் கேட்கும்போதெல்லாம் 'மும்பை' என்று கூறியுள்ளார். இதனால்தான் அவரது குடும்பத்தினரைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் விளக்கினர். பின்னர், சுபாஷ் சந்தர், முத்தையா ஆகியோரின் உதவியுடன் அவரது குடும்பத்தினரைக் கண்டறிய முடிந்தது. வீடியோ அழைப்பின்போது, அவரது தாயார் அவரை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டதையும் அந்த அமைப்பினர் குறிப்பிட்டனர்.

ஜூலை மாத தொடக்கத்தில் முத்தையா, பிரகாசத்தின் தம்பி பிரபு, சுந்தரலிங்கம் ஆகியோர், இந்த காப்பகத்திற்குச் சென்றபோது, பிரகாசத்தை அவர்களுடன் அனுப்பி வைக்குமாறு சுபாஷ் சந்தர் இந்த அமைப்பின் நிர்வாகிகளுடன் வாதாடியுள்ளார். ஆனால் அவர்கள் அனுப்ப மறுத்துவிட்டனர். அதுகுறித்து பிபிசி பஞ்சாபியிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகிகள், ''அவர்கள் வந்தபோதும் நாங்கள் குடும்பத்தினரிடம் இருந்து கூடுதல் ஆவணங்களைக் கோரிப் பெற்றதோடு, உள்ளூர் அரசு அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட ஆவணங்களையும் பெற்றுக்கொண்டோம். எந்தவொரு சிறு தவறும் பிரகாசத்தை மீண்டும் ஒரு பாதுகாப்பற்ற சூழலுக்குள் தள்ளிவிடக் கூடாது என்பதை உறுதி செய்யவே நாங்கள் விரும்பினோம்" என்று கூறியுள்ளனர்.

பிரகாசத்தின் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவிய சுபாஷ் சந்தரிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், "கடந்த 2022ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற பிறகு, காப்பகங்களுக்குச் சென்று கவுன்சிலிங் கொடுப்பது, அவர்களுக்குத் தேவையான சில உதவிகளைச் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறேன். அப்போதுதான் 2023ஆம் ஆண்டில் பிரகாசத்தை சந்தித்தேன். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் அப்போது எதையும் தெளிவாகக் கூறும் மனநிலையில் இருக்கவில்லை'' என்றார்.

''அவர் கூறிய சில தகவல்களை வைத்து, கோயம்புத்தூர் அவருடைய ஊர் என்று தெரிந்துகொண்டேன். பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பாலகிஷனிடம் பேசி, அவர் மூலமாக முத்தையாவின் உதவியை நாடி, பிரகாசத்தின் குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க முயன்றோம்'' என்றார் சுபாஷ் சந்தர்.

கொத்தடிமையாக இருந்தபோது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் காயமடைந்த பிரகாசம், கடந்த சில ஆண்டுகளில் தரப்பட்டுள்ள சிகிச்சையால் குணமடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தாய், மகனை சேர்த்து வைக்க களமிறங்கிய அரசு அதிகாரிகள்

''காப்பகத்திற்கு நாங்கள் சென்றபோது, உடனே பிரகாசத்தைச் சந்திக்க நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. சுபாஷ் சந்தர்தான் பேசி, சந்திக்க வைக்க ஏற்பாடு செய்தார். அங்கு நாங்கள் பார்த்த பிரகாசம், 23 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் தனது தம்பியைச் சரியாகக் கண்டுபிடித்து வேகமாக ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். ஆனால் எங்களுடன் அவரை அனுப்ப நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். அதனால்தான் அவர்கள் கேட்ட ஆவணங்களைத் தயார் செய்வதற்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்'' என்றார் முத்தையா.

கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்த குடும்ப அட்டையின் நகலை சுந்தரி வைத்துள்ளார். அதில் பிரகாசத்தின் பெயர் இடம்பெற்றுள்ளது. அது தவிர்த்து வேறு எந்த ஆவணங்களும் அவர்களிடம் தற்போது இல்லை. பிரகாசம், கவுண்டம்பாளையம் நகராட்சி துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரையிலும், சாய்பாபா காலனியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நான்காம் வகுப்பு வரையிலும் மட்டுமே படித்துள்ளார்.

தனது மகனை அழைத்து வரத் தேவையான ஆவணங்களை வழங்குமாறு, மாவட்ட ஆட்சியரிடம் சுந்தரி மனு கொடுத்த பின், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைமையில், பள்ளிக் கல்வித்துறை, தொழிலாளர் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அலுவலர்கள், சுந்தரியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக பிரகாசம் படித்த பள்ளிகள், மாநகராட்சி அலுவலகங்களில் ஆவணங்களைத் தேடி வருகின்றனர்.

பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ''அவரது மனு தொடர்பாக பாட்டியாலா மாவட்ட ஆட்சியரிடம் பேசிவிட்டேன். விருதுநகர் மாவட்டத்திலும் அவர்களின் குடும்பம் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று அறிய முயல்கிறோம். பல்வேறு துறை அலுவலர்களைக் கொண்டு ஆவணங்களைத் தேடி வருகிறோம். அத்துடன் அவரது மகனை இங்கு அழைத்து வருவதற்கான பிற ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறோம்'' என்றார்.

அவர்கள் கேட்கும் ஆவணங்கள் எதுவும் கிடைக்காதபட்சத்தில் அவரை அழைத்து வருவதில் எதுவும் சிக்கல் ஏற்படுமா என்று மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, ''அதற்கு வாய்ப்பில்லை. இருக்கும் ஆவணத்தை வைத்து, அவரது தாயார் இவர்தான் என்பதை உறுதி செய்யவும், மாவட்ட நிர்வாகத்தால் உரிய பரிந்துரைக் கடிதம் தரவும் ஏற்பாடு செய்யப்படும். இன்னும் ஒரு வாரத்தில் இங்கிருந்து சுந்தரியை பஞ்சாப் அனுப்பி, மகனை அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடும் உதவியும் செய்யப்படும்'' என்றார்.

பிரகாசத்தை ஒப்படைப்பது குறித்து பிபிசி பஞ்சாபியிடம் பேசிய 'அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி'யின் பிரதிநிதிகள், ''இந்த விவகாரத்தில் நாங்கள் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் தொடங்கவில்லை. அந்த முடிவு பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடமே இருக்க வேண்டுமெனக் கருதுகிறோம்; பிரகாசத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதா அல்லது அவர் அனுபவித்த பல ஆண்டுக்கால துயரத்திற்கு இழப்பீடு கோருவதா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும்" என்று கூறினர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு