You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'வாஷிங் மெஷின் டிரம்மில் அடைப்பு': பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்களின் குழந்தைகளுக்கு காப்பகத்தில் என்ன நடந்தது?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பெங்களூருவிலிருந்து பிபிசி ஹிந்திக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
(இந்தச் செய்தியில் சில விவரணைகள் உங்களை சங்கடப்படுத்தலாம்)
சிறு குழந்தைகளிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் கீழ் பெங்களூருவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் பெண் ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
காவல்துறை தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் போட்டதாகவும், அவர்களின் வாயில் கழிவறை ஜெட் ஸ்ப்ரே மூலம் தண்ணீரைப் பாய்ச்சியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த டே-கேர் குழந்தைகள் காப்பகம், பெங்களூரு கிழக்கில் உள்ள ஐடி துறையின் முன்னணி நிறுவனமான கேப்ஜெமினி ஊழியர்களுக்காக ஒப்பந்த அடிப்படையில் (அவுட்சோர்ஸ்) வழங்கப்பட்ட ஒன்றாகும்.
நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது இந்த காப்பகத்தை தற்காலிகமாக மூடுவதாகத் தெரிவித்துள்ளது. உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டுவருவதற்கு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பெண் ஊழியர்களையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
அதேநேரம், பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், "நாங்கள் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் உண்மையாகவே நடந்திருந்தால், இது மிகுந்த கவலைக்குரிய மற்றும் மிகவும் தீவிரமான விஷயமாகும்," என்றார்.
விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?
குழந்தைகள் உதவி மையத்திற்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது, அதில் இரண்டு முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் மோசமாக நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
பெங்களூரு கிழக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவின் சட்ட அதிகாரி திலகேஸ்வர் குமார் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார். "நாங்கள் புகாரளித்தவரிடம் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டோம், அதன்பின் எங்களுக்கு வீடியோக்கள் கிடைத்தன," என்றார்.
இதன் பின்னர், அதே புகாரைக் காவல்துறை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்தது.
அந்த வீடியோவில், ஓர் அறையின் தரையில் அமர்ந்திருக்கும் சில குழந்தைகள் அழுவது போன்ற காட்சிகள் உள்ளன. அதன் பின்னர் கழிவறையில் அவர்கள் மீது ஜெட் ஸ்ப்ரே மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. குழந்தைகளை வாஷிங் மெஷினின் டிரம்முக்குள் போடுவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.
முதல்கட்ட புகாரை, வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு முன்னாள் ஊழியர் தான் அளித்தார் என்பதை திலகேஸ்வர் குமார் உறுதிப்படுத்தினார்.
"அவர் ஏன் வேலையிலிருந்து நீக்கப்பட்டார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. வீடியோவில் இரண்டு குழந்தைகள் துன்புறுத்தப்படுவது தெரிகிறது. நிறுவனத்திடமிருந்து குழந்தைகளின் பெற்றோர்கள் குறித்த விவரங்கள் இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
ஐடி நிறுவன வளாகத்தில் உள்ள டே-கேர் குழந்தைகள் காப்பகத்தின் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "புகார் பதிவு செய்யப்பட்டுள்ள ஐந்து பெண்களுக்கு ஆதரவாக இதுவரை எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை," என்றார்.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது அவர்களின் சட்டப் பிரதிநிதிகள் தங்களின் தரப்பு வாதத்தை முன்வைத்தவுடன், அது இந்தச் செய்தியில் சேர்க்கப்படும்.
டே-கேர் குழந்தைகள் காப்பகத்தின் உரிமையாளரான 'சொசைட்டி பேபி ஜெனரல்' ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாக திலகேஸ்வர் குமார் தெரிவித்தார். காப்பகத்தின் மேற்பார்வையாளர் முதன்மைக் குற்றம்சாட்டப்பட்டவராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
கேப்ஜெமினி நிறுவனம், "தங்களது ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நலனே தங்களின் முதன்மை முன்னுரிமையாகும்" என்று தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும், உண்மைகளை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவி வருவதாகவும் நிறுவனம் மேலும் கூறியுள்ளது. அந்நிறுவனம், பெங்களூருவில் உள்ள தனது வளாகத்திற்குள் இயங்கும் டே-கேர் வசதியை தற்காலிகமாக மூடியுள்ளது.
காவல்துறைக்கோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவுக்கோ குழந்தைகளின் பெற்றோர்கள் பற்றிய தகவல்களை நிறுவனம் வழங்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மற்ற நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தங்கள் துறை கடிதம் எழுதும் என பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங் கூறினார்.
சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 75-இன் கீழ், குழந்தையின் பராமரிப்புப் பொறுப்பில் இருக்கும் ஒருவர், அக்குழந்தையை அடித்தாலோ, துஷ்பிரயோகம் செய்தாலோ அல்லது மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தினாலோ, அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம்.
எழுத்துப்பூர்வ புகாருக்குப் பின் நடவடிக்கை
"விசாரணையின் போது குழந்தைகளை ஃபிரண்ட்-லோடிங் வாஷிங் மெஷினுக்குள் போடுவதாகவும், குளியலறையில் அடைத்து வைப்பதாகவும் ஜெட் ஸ்ப்ரே மூலம் அவர்களின் வாயில் தண்ணீரைப் பாய்ச்சுவதாகவும் தொலைபேசியில் அழைத்தவர் எங்களிடம் தெரிவித்தார்," என திலகேஸ்வர் குமார் கூறினார்.
"இதனைத் தொடர்ந்து, ஜூன் 29 அன்று எங்களுக்கு ஒரு எழுத்துப்பூர்வமான புகார் கிடைத்தது, அதில் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் விவரங்களும் இருந்தன. இந்தத் தகவல் கிடைத்ததும், நாங்கள் காவல்துறையினருடன் இணைந்து முதற்கட்டமாக சம்பவ இடத்தை ஆய்வு செய்தோம். ஆய்வின் போது, புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது என்பதை உறுதி செய்தோம். சம்பவ இடத்தை ஆய்வு செய்த பிறகு, நாங்கள் காவல் நிலையம் திரும்பிப் புகாரைப் பதிவு செய்தோம்."
கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சந்தோஷ் குமார் பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் கூறுகையில், இந்த டே-கேர் காப்பகத்தில் 35 குழந்தைகள் இருந்துள்ளனர் என்றார்.
"எங்களிடம் இன்னும் குழந்தைகளின் முழுமையான பட்டியல் இல்லை. நாங்கள் நிறுவனத்திடமிருந்து பட்டியலைக் கோரினோம். அதை காவல்துறையிடம் ஒப்படைக்கப் போவதாக அவர்கள் கூறினர். நாங்கள் அந்த 35 குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் முழு விவரங்களையும் வழங்குமாறு அவர்களிடம் கேட்டுள்ளோம்." என அவர் கூறினார்.
"ஆணையத்தின் மூலம் குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் நாங்கள் திட்டமிட்டு வருகிறோம். கைது நடவடிக்கைகளை பொறுத்தவரை, அந்த டே-கேர் மையத்தில் 14 பேர் பணிபுரிந்து வந்தனர். அவர்களில் யாரும் தற்போது அங்கு இல்லை," என்றும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.