You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரொனால்டோ அதிருப்தி: குரோஷியாவை போர்ச்சுகல் வென்றாலும் விவாதத்திற்கு வித்திட்ட 'ஆஃப்சைட்' முடிவுகள்
- எழுதியவர், அலெக்ஸ் ப்ரதர்டன்
- பதவி, பிபிசி விளையாட்டு செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் குரோஷியாவுக்கு எதிராக பின்தங்கிய நிலையில் இருந்த போர்ச்சுகல் அணி மீண்டு வந்து வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் நாக் அவுட் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் கோலை அடித்துள்ளார். ஆட்டத்தின் 94-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ராமோஸ் அடித்த கோல் அந்த அணியின் வெற்றிக்கான கோலாக அமைந்தது.
இரண்டாம் பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கிய ராமோஸ், ரஃபேல் லியோவ செய்த அற்புதமான கிராஸை, இரண்டு குரோஷிய தடுப்பாட்டக்காரர்களைத் தாண்டிப் பாய்ந்து தலையால் முட்டி கோல் அடித்தார். விறுவிறுப்பாகச் சென்ற இந்தப் போட்டி கூடுதல் நேரத்தை நோக்கிச் செல்வது போல் தோன்றியது.
கூடுதல் நேரத்தின் 13-வது நிமிடத்தில் ஜோஸ்கோ குவார்டியோல் கோல் வலைக்குள் பந்தை அடித்தபோது, குரோஷியாவைக் காப்பாற்றிவிட்டதாக நினைத்தார். ஆனால், வீடியோ உதவி நடுவர் தலையிட்டு, அந்தக் கோலை ஆஃப் சைடு என்று அறிவித்தார்.
குவார்டியோல் கோல் அடிப்பதற்கு முன்பு, ஆஃப்சைடு நிலையில் இருந்த மரியோ பாசலிச்சிடம் சென்ற ஒரு கிராஸை இகோர் மட்டனோவிச் லேசாகத் தொட்டதை மறு ஒளிபரப்புகள் காட்டின.
முதல் பாதியில் போர்ச்சுகல் ஆதிக்கம் செலுத்தியது, ஆனால் பரபரப்பான இரண்டாம் பாதியில் குரோஷியாவே ஆதிக்கம் செலுத்தியது.
இரண்டாம் பாதியின் எட்டாவது நிமிடத்தில், ரூபன் டியாஸ் பின் கம்பத்திற்கு வந்த ஒரு கிராஸை அரைகுறையாக கிளியர் செய்ய, இவான் பெரிசிச் பந்தை வேகமாக உதைத்து கோல் வலைக்குள் அனுப்பினார்.
மாற்று வீரராகக் களமிறங்கிய மட்டனோவிச், இரண்டு நிமிடங்கள் கழித்து கோல் கம்பத்திற்கு அருகிலிருந்தவாறு பந்தை அடித்து குரோஷியாவின் முன்னிலையை இரட்டிப்பாக்கி விட்டதாக நினைத்தார், ஆனால் அவரது சக வீரரான நிக்கோலா விளாசிச்சுக்கு எதிராக ஆஃப்சைடு கொடி உயர்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சில நிமிடங்கள் பரபரப்பாக இருந்தன; லியோ வளைத்து அடித்த பந்து கோல் கம்பத்தில் மோதியது. ரொனால்டோ அழகாக லாவகமாக அடித்த பந்து, ஆஃப்சைடு காரணமாக நிராகரிக்கப்பட்டது.
அவர் மாற்றப்படவிருக்கிறார் என்று தோன்றிய வேளையில், ஒரு கார்னர் கிக்கின் போது ரெனாடோ வெய்கா மீது ஃபவுல் செய்யப்பட்டதை வீடியோ உதவி நடுவர் கண்டறிந்ததைத் தொடர்ந்து, கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரொனால்டோ கோலாக மாற்றினார்.
குரோஷியா சிறப்பாகப் பதிலடி கொடுத்தது. மாடியோ கோவாசிச் கோலை நோக்கி அடித்த இரண்டு பந்துகளையும் போர்ச்சுகல் கீப்பர் டியோகோ கோஸ்டா அடுத்தடுத்து தடுத்து நிறுத்தினார்.
பின்னர், கோவாசிச் வழங்கிய ஓர் அருமையான பாஸை பெற்ற பீட்டர் சூசிச், கோஸ்டாவைக் கடந்து நிதானமாக கோல் அடித்தார், ஆனால் மீண்டும் ஆஃப்சைடு கொடி உயர்த்தப்பட்டது.
81-வது நிமிடத்தில் ரொனால்டோவுக்கு பதிலாக மாற்று வீரர் களமிறக்கப்பட்டதால், அவர் வெளிப்படையாகவே அதிருப்தியை காட்டினார். அதனைத் தொடர்ந்து வெய்காவும் மரியோ பாசலிக்கும் இரு முனைகளிலும் கிடைத்த, தலையால் முட்டி கோலடிக்க கிடைத்த தெளிவான வாய்ப்புகளைத் தவறவிட்டனர்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் (Last 16), ஜூலை 6 திங்கட்கிழமை (இரவு 8:00 மணி BST) டெக்சாஸில் உள்ள டல்லாஸ் மைதானத்தில், ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணியை போர்ச்சுகல் எதிர்கொள்ளவுள்ளது.
நட்சத்திர வீரரின் கடைசி ஆட்டம்
இந்த உலகக் கோப்பையில், இந்த ஆட்டத்தைப் போல இவ்வளவு விவாதங்களுக்கு வழிவகுத்த மற்றொரு ஆட்டம் இருந்திருக்கும் என்று கற்பனை செய்வது கடினம்.
இது ஒரு ஜாம்பவான் வீரரின் உலகக் கோப்பை விடைபெறும் ஆட்டமாக அமையவிருந்தது; 40 வயதிலும் மிகச்சிறந்த மிட்ஃபீல்ட் ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், துரதிர்ஷ்வசமாக அவ்வாறு விடை கொடுக்கும் வீரராக லூகா மோட்ரிச் மாறினார்.
குரோஷிய பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிச் இடைவேளையின் போது ஒரு சிறந்த முடிவை எடுத்தார்; சிறப்பாகச் செயல்படாத ஆன்டேவுக்குப் பதிலாக மட்டானோவிக்கை களமிறக்கினார். அந்த சிறப்பான ஸ்ட்ரைக்கர் (முன்கள வீரர்) ஆட்டத்தின் மையப்புள்ளியாகத் திகழ்ந்து, பெரிசிச் கோல் அடிக்க வழிவகுத்தார்.
ரொனால்டோ அதிருப்தி
ஆனால், ஆட்டம் சரியாக அமையாதபோது மாற்றங்களைச் செய்ததற்காக போர்ச்சுகல் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸ் பலன் பெற்றார்.
முதல் பாதியில் போர்ச்சுகல் சிறந்த அணியாகத் திகழ்ந்தாலும், சிறந்த வாய்ப்புகள் இருந்தபோதிலும் அவர்களின் தாக்குதல் ஆட்டக்காரர்கள் எப்போதும் ரொனால்டோவிடம் பந்தைக் கொண்டு சேர்க்கவே முயன்றனர் என்பது தெளிவாகத் தெரிந்தது.
ராமோஸ் களமிறக்கப்பட்டதால் ரொனால்டோ தனிமைப்படுத்தப்படுவது குறைந்தது; 41 வயதான ரொனால்டோ அவரது விருப்பத்திற்கு மாறாக ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு நிலைமை இன்னும் மேம்பட்டது.
உலகக் கோப்பை நாக்-அவுட் ஆட்டம் ஒன்றில் தொடக்க வீரராகக் களமிறங்கிய மிக மூத்த வீரர் என்ற சாதனையைப் படைத்த அதே நாளில், ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டதில் ரொனால்டோ வெளிப்படையாகவே அதிருப்தி அடைந்தார். இருப்பினும், ராமோஸ் அடித்த வெற்றி கோலைக் கொண்டாட போர்ச்சுகல் மாற்று வீரர்கள் மைதானத்திற்குள் ஓடிவந்தபோது, அந்த கொண்டாட்டங்களின் மையத்தில் அவரே இருந்தார்.
ஆட்டத்தின் கடைசி நேரத்தில் வீடியோ உதவி நடுவர் தொழில்நுட்பத்தின் தலையீடு வரும் நாட்களில் பெரும் விவாதப் பொருளாக இருக்கும்.
போர்ச்சுகல் அணியின் முன்னாள் முன்கள வீரர் டியோகோ ஜோட்டாவின் மறைவு நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைவதற்குச் சில மணிநேரங்களே இருந்த நிலையில், ரொனால்டோ தனது முன்னாள் அணி வீரரின் ஜெர்சியை அணிந்துகொண்டு, கண்களில் கண்ணீருடன், தங்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட ரசிகர்களை நோக்கி அணியை வழிநடத்திச் சென்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு