இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் குறித்த விளம்பரங்கள் விவகாரம்: மெட்டாவுக்கு மத்திய அமைச்சர் சம்மன்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

எச்சரிக்கை: கட்டுரையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் சங்கடம் தரலாம்.

இந்தியாவில் பணம் பெற்றுக்கொண்டு, குழந்தைகள் பாலியல் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களைப் பரப்பும் விளம்பரங்களை இன்ஸ்டாகிராம் இயக்கி வருவதாக பிபிசி-ஐ புலனாய்வில் தெரிய வந்துள்ளது.

இது வெளியானதைத் தொடர்ந்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு அவர்களை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இது தொடர்பாக மெட்டா நிறுவனத்திடம் விளக்கம் கோர உள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமையும் தெரிவித்துள்ளது.

பிபிசி நடத்திய அந்தப் புலனாய்வில், இந்த விளம்பரங்களில் 'பாலியல் வல்லுறவு வீடியோ', 'சைல்ட் வீடியோ' போன்ற சொற்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதில் பயனர்களுக்கு டெலிகிராம் செயலியின் சேனல் லிங்க் வழங்கப்படுகிறது. அங்கு பயனர்கள் இத்தகைய உள்ளடக்கங்களை வெறும் 99 ரூபாய்க்கு வாங்க முடியும்.

சமீப காலமாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எடுத்துள்ள அடுத்தடுத்த நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. இதற்கு சில நாட்களுக்கு முன்புதான், மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய பயனர் பெயர் அம்சம் குறித்து அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிபிசி கேள்விகளுக்கு மெட்டா நிறுவனம் அளித்த பதில் என்ன?

பிபிசி இதுபோன்ற ஒரு விளம்பரத்தை இன்ஸ்டாகிராமில் புகாரளித்தபோது, 24 மணிநேரத்திற்குப் பிறகு அந்தச் சமூக ஊடக நிறுவனம் அளித்த பதிலில், அந்தப் பதிவுகள் தங்கள் 'சமூக வழிகாட்டுதல்களை' (Community Guidelines) மீறவில்லை என்று தெரிவித்தது.

இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டாவிடம் பிபிசி விளக்கம் கேட்டபோது, தாங்கள் ஏற்கெனவே பல விளம்பரங்களை முடக்கி இருப்பதாகவும், அவற்றைப் பதிவிட்ட கணக்குகளை இடைநீக்கம் செய்துள்ளதாகவும் தெரிவித்தது.

பிபிசியின் புலனாய்வுக்குப் பிறகு, தாங்கள் மேலும் சில விளம்பரங்களை நீக்கியுள்ளதாகவும், கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், தங்களது கொள்கையை மீறிய பிற உள்ளடக்கங்களின் யுஆர்எல் முகவரிகளைத் தடுத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியது.

இதற்கிடையில், 2026ஆம் ஆண்டில் மட்டும் குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறை உள்ளடக்கம் தொடர்பான 2 லட்சத்து 74 ஆயிரம் குழுக்கள் மற்றும் சேனல்களை நீக்கியுள்ளதாக டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மெட்டா நிறுவனம் பின்னர் பிபிசியிடம் கூறுகையில், "எந்தவொரு அமைப்பும் முழுமையானது அல்ல, எங்கள் ஆய்வுச் செயல்பாடுகள் அனைத்து 'கொள்கை மீறல்களையும்' கண்டறிந்துவிடாது" என்று தெரிவித்தது.

"விளம்பரங்கள் நேரலையில் வந்த பிறகும், நாங்கள் அவற்றின் மீது தொடர்ந்து 'முன்னெச்சரிக்கை கண்டறிதல் தொழில்நுட்பத்தை' இயக்குகிறோம். ஏதேனும் விளம்பரம் தங்களது விதிகளை மீறுவதாக எவரேனும் கருதினால், அவர்கள் அதை தாராளமாகப் புகாரளிக்கலாம்" என்று மெட்டா கூறியுள்ளது.

மேலும், குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவது தங்களுக்குத் தெரிய வரும்போது, சட்டப்படி 'தேசிய காணாமல்போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகள் மையத்திற்கு' (NCMEC) தகவல் தெரிவிப்பதாக அவர்கள் கூறினர். இணையத்தில் குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறை குறித்துப் புகாரளிப்பதற்கான உலகளாவிய அமைப்பாக என்.சி.எம்.இ.சி செயல்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு