You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குத்த வைத்து அமர்வது நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஏன் முக்கியமானது?
- எழுதியவர், எஸ்தர் கஹும்பி
- பதவி, பிபிசி நியூஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஆசியாவின் பெரும்பாலான பகுதிகளில், குத்த வைத்து அமர்வது (ஃபுல் ஸ்க்வாட்ஸ்) அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக உள்ளது.
மக்கள் ரயில்களுக்காகக் காத்திருக்கும்போதோ, நண்பர்களுடன் அரட்டையடிக்கும் போதோ அல்லது உணவு உண்ணும்போதோ தங்களது குதிகால்களைத் தரையில் ஊன்றி சிரமம் ஏதுமின்றி அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள்.
இருப்பினும், வெளிநாட்டினர் இவ்வாறு அமர முயலும் வீடியோக்கள் இணையத்தில் வேடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பின்னோக்கி விழுகிறார்கள், பக்கவாட்டில் சாய்ந்து விழுகிறார்கள் அல்லது ஆதரவுக்கு சுவர்களைப் பிடித்துக் கொள்கிறார்கள்.
இதன் மீதான ஈடுபாடு, வயதாகும்போது நல்ல இயக்கத்தன்மையைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்த ஒரு பரந்த கேள்விக்கு விடையளிப்பதாக உடல் இயக்க நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால், சிலரால் சிரமமின்றி அமர முடியும்போது, மற்றவர்கள் நிமிர்ந்து நிற்கவே சிரமப்படுவது ஏன்?
குத்த வைத்து அமர்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
அமர்வது என்பது மிக அடிப்படையான உடல் அசைவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
"அமராமல் உங்களால் எதையும் செய்ய முடியாது" என்று அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மனித அசைவு நிபுணரான பேராசிரியர் கிறிஸ்டோபர் பவர்ஸ் விளக்குகிறார்.
"நீங்கள் நாற்காலியில் அமர்வது, காரில் இருந்து இறங்குவது, கழிவறைக்குச் செல்வது, தரையிலிருந்து எதையாவது எடுக்கக் குனிவது என எல்லாவற்றிலும் இது தேவைப்படுகிறது."
உடற்பயிற்சிக் கூடங்களில் செய்யப்படும் அடிப்படை ஸ்குவாட் பற்றிப் பலருக்கும் தெரிந்திருக்கும். இது உங்கள் தொடைகள் தரைக்கு இணையாக வரும் வரை, ஏதோவொரு நாற்காலியில் அமர்வது போலக் கீழ்நோக்கிக் குனிவதாகும்.
இருப்பினும், டீப் ஸ்குவாட் அல்லது ஃபுல் ஸ்குவாட் என அழைக்கப்படும் ஏசியன் ஸ்குவாட் என்ற குத்த வைத்து அமரும் முறை முற்றிலும் வேறுபட்டது.
பாதங்களை அகலமாக விரித்து, மார்பை நேராக வைத்து, தொடையின் பின்புறத்தைக் கெண்டைக்கால் தசைகளில் சாய்த்தவாறு, முழங்கால்களை முழுமையாக வளைத்து வெளிப்புறமாகத் தள்ளும் வரை அமர வேண்டும்.
மக்களின் உடல் நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமையை மேம்படுத்த உதவும் ஆசிய-அமெரிக்க பயிற்சியாளரான மாட் ஹ்சு, இந்த அமரும் முறை பற்றி சமூக ஊடகங்களில் பதிவிட்ட வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன.
ஆனால், இதை ஏசியன் ஸ்குவாட்ஸ் என்ற பெயரில் குறிப்பிடுவதே தவறாக வழிநடத்தக் கூடியது என்று அவர் கூறுகிறார்.
"ஆப்பிரிக்கர்கள் இது எங்களுடையது என்று உரிமை கொண்டாடுவதைக் காணலாம். ஸ்லாவிக் நாடுகள் அல்லது கிழக்கு ஐரோப்பாவில் உள்ளவர்கள் 'இது எங்களது' என்பார்கள். ஆனால் உண்மையில், இவ்வாறு அமரும் நிலை என்பது உலகிலுள்ள அனைவரும் செய்யக்கூடியது" என்கிறார் மாட் ஹ்சு.
சாதாரண ஸ்குவாட்டைவிட, டீப் ஸ்குவாட் எனப்படும் குத்த வைத்து அமரும் முறைக்கு இடுப்பு, முழங்கால்கள் மற்றும் கணுக்கால்களில் அதிக நெகிழ்வுத்தன்மை தேவைப்படுவதோடு, உடலின் பல பாகங்களில் அதன் தாக்கம் உணரப்படுவதாக உடற்பயிற்சி சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விரிவான பயிற்சிகள் உடல் நெகிழ்வுத்தன்மையை, சுறுசுறுப்பை அதிகரிக்கவும், முதுகுவலியைக் குறைக்கவும், வாழ்நாள் முழுவதும் ஒட்டுமொத்தமாக மற்றவர்களைச் சார்ந்திராமல் தன்னிச்சையாக வாழவும் உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
உடல் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள்
குழந்தைகள் இயற்கையாகவே எந்தவொரு சிரமமும் இன்றி இந்த நிலையில் அமர்கிறார்கள். இதற்கு ஓரளவு அவர்களின் மூட்டுகளில் இருக்கும் அதிக நெகிழ்வுத்தன்மையும், உடலின் மாறுபட்ட விகிதாச்சாரமும் காரணமாக உள்ளன.
இருப்பினும், உடற்கூறியலில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே பல பெரியவர்கள் குத்த வைத்து அமரும் திறனை இழப்பதற்குக் காரணம் அல்ல.
நாற்காலிகள் மற்றும் உயரமான கழிவறைகளைப் பயன்படுத்துவது போன்ற அமர்ந்தே இருக்கும் வாழ்வியல் முறைகளால், பலர் தங்கள் அன்றாட வாழ்வில் இந்த முறையில் அமர வேண்டிய அவசியம் அரிதாகவே ஏற்படுகிறது.
இது காலப்போக்கில் அவர்களின் உடல் நெகிழ்வுத்தன்மையை, வலிமையை குறைக்கிறது.
அதாவது, "நீங்கள் எதைப் பயன்படுத்தவில்லையோ, அதை இழந்துவிடுவீர்கள்" என்கிறார் பவர்ஸ். இவரது ஆய்வுகள், உடல் அசைவுகளில் ஏற்படும் மாற்றங்கள் எவ்வாறு முழங்கால் காயங்களுக்குக் காரணமாகின்றன என்பதை ஆராய்கின்றன.
உணவகங்களுக்குச் செல்வது போன்ற பொதுவான செயல்பாடுகளில் அமர்வது இன்றியமையாததாக இருக்கும் ஜப்பான் போன்ற ஆசியாவின் சில பகுதிகளில், இத்தகைய வாழ்வியல் மாற்றங்கள் அவ்வளவாகப் பரவவில்லை.
"நீங்கள் உள்ளே சென்று, காலணிகளைக் கழற்றிவிட்டு, டடாமி (பாரம்பரிய ஜப்பானிய பாய்) கீழே தரையில் அமர்ந்து சாப்பிடத் தெரிந்திருக்க வேண்டும்" என இயக்கம் மற்றும் உடற்தகுதி கல்வியை வழங்கும் 'அப்ரைட் மூவ்மென்ட்' என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஹ்சு கூறுகிறார்.
ஆசியாவில் உள்ள பிற அடிப்படைச் செயல்பாடுகளும் இடுப்பு மற்றும் கால்களை வலுப்படுத்துவதை உள்ளடக்கியதாகவே இருக்கின்றன.
ஆசியர்களுக்கு குத்த வைத்து அமர்வது எளிதாக இருப்பது ஏன்?
"ஆசியாவின் சில பகுதிகளில், குத்த வைத்து அமரும் வகையிலான கழிவறைகள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முறை மலம் கழிக்கும்போதும் அந்த முறையில் அமர வேண்டியிருந்தால், அந்தத் திறனை அவ்வளவு எளிதில் இழக்க மாட்டீர்கள்" என்று அந்தப் பயிற்சியாளர் மேலும் கூறுகிறார்.
ஹ்சு பிபிசிக்கு அளித்த 40 நிமிட நேர்காணலின்போது, சில முறை மட்டுமே சிறிய இடைவேளை எடுத்துக்கொண்டு, நீண்ட நேரத்திற்கு குத்த வைத்த நிலையிலேயே அமர்ந்திருந்தார்.
இதன் முக்கியத்துவம் தனது குடும்பத்தினுடைய அனுபவத்தின் மூலமே மிகத் தெளிவாகப் புரிந்ததாக அவர் கூறுகிறார். "என் தந்தை ஒருமுறை கீழே விழுந்துவிட்டார், அவரால் தரையில் இருந்து தானாக எழுந்து நிற்க முடியாததால், அவரை நடைபாதையில் இருந்து தூக்க ஆம்புலன்ஸை அழைக்க வேண்டியிருந்தது" என்று ஹ்சு கூறுகிறார்.
தனக்கு ஆசிய பின்னணி இருந்தபோதிலும், விளையாட்டு காயம் ஒன்றில் இருந்து மீண்டு வரும்போது நீண்ட நேரம் அமர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், தனது 20 வயதில் அமரும் திறனை இழந்துவிட்டதாக ஹ்சு கூறுகிறார்.
"என் உடல் மிகவும் விறைப்பாக இருந்ததால், என்னால் என் கணுக்காலைக்கூடத் தொட முடியவில்லை என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது" என்கிறார் அவர்.
ஹ்சு இதற்காக மீண்டும் தனது உடலுக்குப் பயிற்சியளிக்க வேண்டியிருந்தது. மற்ற எந்தவொரு உடல்திறனைப் போலவும், முழுதாக குத்த வைத்து அமரும் திறனையும் மீண்டும் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கூறுகிறார்.
குத்த வைத்து அமர்வது எப்படி?
குத்த வைத்து அமரும் உடற்பயிற்சியில் தேர்ச்சி பெற விரும்புவோர், தங்கள் உடல் தயாராவதற்கு முன்பாக அதைத் தீவிரமாக முயல வேண்டாம் என்று ஹ்சு எச்சரிக்கிறார்.
"அவசரப்பட்டு அடிமட்டம் வரை முழுமையாக அமர வேண்டாம், உங்களை காயப்படுத்திக் கொள்ள நேரிடும்" என்று அவர் விளக்குகிறார்.
அதற்குப் பதிலாக, நாற்காலி அல்லது சமையலறை மேடை போன்ற ஆதரவுடன், படிப்படியாகச் செய்யுமாறும், எவ்வளவு தூரம் வசதியாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் மட்டுமே கீழ்நோக்கிச் செல்லுமாறும் அவர் பரிந்துரைக்கிறார்.
"இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை என சில வாரங்களுக்குச் செய்து வந்தால், 'எனக்கு நம்பிக்கையாக இருக்கிறது. என்னால் இன்னும் கொஞ்சம் ஆழமாக அமர முடிகிறது' என்பதை நீங்களே கவனிப்பீர்கள்" என்கிறார் ஹ்சு.
இருப்பினும், வயதானவர்கள் குத்த வைத்து அமரும் திறனை மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டுமா என்ற கேள்வி, வயது கூடும்போது மேலும் சிக்கலானதாக மாறுகிறது.
"நமக்கு வயதாகும்போது, மூட்டுகள், முதுகெலும்பு, இடுப்பு மற்றும் முக்கியமாகக் கணுக்கால்களில் உள்ள நெகிழ்வுத்தன்மையை இழக்கிறோம். இது இந்த வகையான ஸ்குவாட் பயிற்சிகளைச் செய்வதற்கான திறனைக் குறைக்கிறது" என்று பவர்ஸ் கூறுகிறார்.
குத்த வைத்து அமர்வது நன்மை பயக்கக்கூடியது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் ஏற்கெனவே முழங்கால், இடுப்பு அல்லது முதுகு வலி உள்ளவர்களுக்கு இது ஒரு பொதுவான இலக்காக இருக்கக்கூடாது என்று பவர்ஸ் எச்சரிக்கிறார்.
மருத்துவச் சூழல்களில், உடல்வாகு, காயம், மருத்துவ வரலாறு மற்றும் இலக்குகளின் அடிப்படையில் குத்த வைத்து அமரும் பயிற்சிகள் பெரும்பாலும் மாற்றியமைக்கப்படுகின்றன. அந்தச் சிக்கலான தன்மை இணையத்தில் அடிக்கடி கவனிக்கப்படுவதில்லை என்கிறார் பவர்ஸ்.
"ஒவ்வொரு நபருக்கும் ஒரு உடல் வடிவம் இருக்கும், ஆனால் அது அப்படிச் செயல்படுவதில்லை. ஒவ்வொரு நபரும் வித்தியாசமானவர்" என்று அவர் கூறுகிறார்.
நீளமான தொடை எலும்புகள், குறைவான கணுக்கால் நெகிழ்வுத்தன்மை அல்லது மாறுபட்ட இடுப்பு அமைப்புகளைக் கொண்டவர்கள், தங்களது உடற்தகுதி எப்படி இருந்தாலும், சமநிலையை மற்றும் அழுத்தமாக அமரும் நிலையைப் பராமரிப்பதில் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.
ஒரு நபரின் இடுப்புப் பகுதி தரையிலிருந்து சில அங்குல தூரத்தில் இருக்கும்படி அமர முடிகிறதா என்பது முக்கியமல்ல, மாறாக அவர்கள் வயதாகும்போது மற்றவர்களைச் சாராமல் தன்னிச்சையாக இயங்க முடிகிறதா என்பதுதான் மிக முக்கியமானது என்று சில உடற்பயிற்சி நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
நீண்ட காலத்திற்குத் தினமும் டீப் ஸ்குவாட் பயிற்சி செய்பவர்களின் உடலில் ஏற்படும் நீண்டகால தாக்கம் அல்லது நன்மைகளை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் எதுவும் தற்போது இல்லை.
தனது நோக்கம் முழுமையான உடல் திறனை அடைவது அல்ல, நவீன வாழ்க்கை முறை காரணமாக மக்களிடம் படிப்படியாகக் குறைந்து போன உடல் இயக்கங்களை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வருவதே என்று கூறும் ஹ்சு, "எனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், உங்கள் உடலை நீங்கள் கட்டுப்படுத்துவதும், எழுந்து நிற்பதும், புவியீர்ப்பு விசையை உங்களால் கட்டுப்படுத்த முடிவதும் முற்றிலும் அவசியமானது எனக் கூறுவேன்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு