பெட்ரோலிய ஏற்றுமதி நாடான ரஷ்யா, இந்தியாவிடம் பெட்ரோல் வாங்கும் நிலைக்கு வந்தது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ரஷ்யா உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு எண்ணெய் விற்பனை செய்கிறது, ஆனால் இப்போது ரஷ்யாவே ஒரு எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின்படி, பல மாதங்களாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைக் குறிவைத்து யுக்ரேன் நடத்திய தாக்குதல்களால் ரஷ்யாவில் எரிபொருள் விநியோகத்தைப் பாதித்துள்ளது. இதனால், ரஷ்யா முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள்.

இது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் தூண்டியுள்ளது.

பல பகுதிகளில் எரிபொருள் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது, சாலைகளில் பல மணி நேரமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காண முடிகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்கள், இந்த நீண்ட வரிசைகளைக் கண்டு வாகன ஓட்டிகள் ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதைக் காட்டுகின்றன.

எரிபொருள் இல்லாத வெற்று பெட்ரோல் பங்க்குகள் மற்றும் விலை உயர்வு குறித்து பலர் தங்களது கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சைபீரிய நகரமான இர்குட்ஸ்க்கின் மேயர், வரிசையில் நிற்கும் மக்களின் வசதிக்காக நடமாடும் கழிப்பறைகளை ஆர்டர் செய்ய வேண்டிய நிலை கூட ஏற்பட்டது.

உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நாடுகளில் ஒன்றான ரஷ்யாவிற்கு, இந்த எரிபொருள் நெருக்கடி இதற்கு முன் எப்போதும் இல்லாத ஒன்றாகக் கருதப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இதை ஒப்புக்கொண்டுள்ளார், "வாகன ஓட்டிகள் மற்றும் வணிகங்கள் இரு தரப்புக்குமே பிரச்னைகள் நீடிக்கின்றன. பெட்ரோல் நிலையங்களில் இன்னும் வரிசைகள் காணப்படுகின்றன" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ்-ன் படி, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் தங்களது பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் விலையை பணவீக்க விகிதத்திற்குள் வைத்திருக்கிறார்கள், ஆனால் சில தனியார் பெட்ரோல் பங்க்குகளில் விலை மாறுபாடுகள் காணப்படுகின்றன.

இந்த நிலைமை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு

"இந்தப் பிரச்னைகள் விலைகளில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தவரை நிறுவனங்கள் விலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதை நாம் பார்க்க முடிகிறது," என்று ரஷ்ய மத்திய வங்கியின் நிதி மாநாட்டில் அவர் கூறினார்.

யுக்ரேனின் டிரோன் தாக்குதல்களால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளைப் பாதித்து அன்றாட வாழ்க்கையை நிலைகுலையச் செய்துள்ளதால், பயிர்களை அறுவடை செய்ய முடியுமா என்று ரஷ்ய விவசாயிகள் கவலை அடைந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம், ரஷ்யாவை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரவழைக்க யுக்ரேன் முயன்று வருகிறது.

இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள், எண்ணெய் வளம் மிக்க ரஷ்யாவின் எரிபொருள் விநியோகத்தின் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

எந்தெந்த பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் கிடைக்கிறது மற்றும் எங்கு வரிசைகள் குறைவாக உள்ளன என்பது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும், வரைபடங்களை உருவாக்கவும் இந்தச் சூழ்நிலை வாகன ஓட்டிகளை ஒன்றிணையச் செய்துள்ளது.

எரிபொருள் நிரப்புவதற்காகக் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படும் சண்டைகளைச் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோக்கள் காட்டுகின்றன.

"தி அல்டிமேட் லக்சரி 2026" என்று தலைப்பிடப்பட்ட ஒரு வீடியோவில், ஒரு நபர் ஒரு கேனிலிருந்து தனது புல் வெட்டும் இயந்திரத்தில் மெதுவாக பெட்ரோலை ஊற்றுவதைக் காண முடிகிறது.

அவர் நகைச்சுவையாக, "மிகப்பெரிய செல்வம்! இப்போது யாரால் இதை வாங்க முடியும்?" என்று கூறுகிறார்.

இந்தியாவில் இருந்து பெட்ரோல் இறக்குமதி

இந்த நெருக்கடியைச் சமாளிக்க ரஷ்யா இந்தியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதாக ராய்ட்டர்ஸ் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, "எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்க ரஷ்யா கடல் வழியாக இந்தியாவிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளதாக இரண்டு தொழில்துறை ஆதாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன."

ரஷ்யா மற்ற நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஏற்றுக்கொள்ளக் கூடிய விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கிரெம்ளின் செவ்வாயன்று தெரிவித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ரஷ்யாவின் எரிசக்தி அமைச்சகமும், இந்தியாவின் எண்ணெய் அமைச்சகமும் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து ரஷ்யாவிற்கு குறைந்தபட்சம் 60,000 மெட்ரிக் டன் பெட்ரோல் அனுப்பப்பட்டுள்ளதாக எண்ணெய் தொழில்துறை வட்டாரம் ஒன்று ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது. தலா 30,000 முதல் 40,000 டன் கொள்ளளவு கொண்ட இரண்டு டாங்கர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மற்றொரு வட்டாரம் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் (source) இருந்து கிடைத்த தகவலின்படி, பல்வேறு நாடுகளிலிருந்து ஒவ்வொரு மாதமும் மொத்தம் 400,000 டன் பெட்ரோலை இறக்குமதி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே ரஷ்யாவிற்கு எரிபொருளை ஏற்றுமதி செய்து வரும் அண்டை நாடான பெலாரஸும் இதில் அடங்கும்.

கோடை காலத்தில் எரிபொருளுக்கான தேவை மிகவும் அதிகமாக இருப்பதால், ரஷ்யாவில் கோடையில் பெட்ரோலின் தினசரி நுகர்வு குறைந்தபட்சம் 110,000 டன்களாக உள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, பெலாரஸ் மே மாதத்தின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், ஜூன் மாதத்தின் முதல் பாதியில் ரஷ்யாவிற்கான தனது ரயில் வழி விநியோகத்தை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து 70,000 டன்களுக்கும் மேலாக உயர்த்தியுள்ளது.

அமெரிக்க நாளிதழான வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தனது செய்தியில், "யுக்ரேன் பல ஆண்டுகளாக ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைத்து வருகிறது, ஆனால் இப்போது யுக்ரேனிய டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் எண்ணிக்கையும் தாக்குதல் வரம்பும் அதிகரித்துள்ளன.

இது யுக்ரேனை சுமார் 1,200 மைல்கள் தொலைவில் உள்ள சைபீரியாவின் தியுமன் போன்ற தொலைதூர சுத்திகரிப்பு நிலையங்களைக் கூட குறிவைக்க அனுமதிக்கிறது.

ஜூன் 18 அன்று நடந்த பெரிய தாக்குதல் சாத்தியமாகக் காரணம், அதிகரித்துள்ள இந்தத் திறன் தான். இதில் யுக்ரேன் பல அடுக்கு வான் பாதுகாப்புகளை ஊடுருவி மாஸ்கோவின் முக்கிய சுத்திகரிப்பு நிலையத்தை அழித்தது" என்று எழுதியுள்ளது.

நெருக்கடி எவ்வாறு தீவிரமடைந்தது?

"தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் இது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது" என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.

ஜூன் 20 நிலவரப்படி, ரஷ்யாவின் மொத்த சுத்திகரிப்பு திறனில் சுமார் 28 சதவீதம் முடங்கியுள்ளது என ரஷ்ய எண்ணெய் நிறுவனமான காஸ்ப்ரோம் நெஃப்ட் -ன் முன்னாள் உத்தி பிரிவுத் தலைவரும், தற்போது பெர்லினை தளமாகக் கொண்ட கார்னகி ரஷ்யா யுரேசியா மையத்தின் மூத்த ஆய்வாளருமான செர்ஜி வகுலென்கோ தெரிவித்தார்.

"யுக்ரேன் ஏவக்கூடிய டிரோன்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாகவே இந்தச் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது பிரச்னை வெறும் தளவாட போக்குவரத்து அல்லது சந்தை சமநிலையின்மை மட்டுமல்ல. இப்போதைய உண்மையான பிரச்னை எரிபொருளின் உண்மையான பற்றாக்குறைதான்" என்று அவர் கூறினார்.

கடந்த சில தசாப்தங்களில் முதல்முறையாக எரிபொருள் இறக்குமதியை மீண்டும் தொடங்க ரஷ்யா தயாராகி வருவதாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செவ்வாயன்று தெரிவித்தார்.

ரஷ்யா பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்த நாடுகளின் பெயர்களைத் தெரிவிக்கவில்லை.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி, இந்தியாவைப் போன்ற தொலைதூர, ஆனால் பெரிய சுத்திகரிப்பு மையங்கள் உள்ள நாடுகளால் மட்டுமே இந்த மிகப்பெரிய பற்றாக்குறையை ஈடுசெய்ய முடியும், இருப்பினும் இத்தகைய இறக்குமதிகள் கடல் வழியாக ரஷ்யாவை அடைய பல வாரங்கள் ஆகும்.

இது ஏற்கனவே போர்ச் செலவுகளால் பெரும் அழுத்தத்தில் இருக்கும் ரஷ்யாவின் பட்ஜெட்டுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

ஒரு காலத்தில் உலகின் முன்னணி பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாக இருந்த ரஷ்யா, யுக்ரேனின் தாக்குதல்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல மாதங்களாக பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, அதிபர் புதின் டீசல் ஏற்றுமதிக்கும் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவித்தார்.

நிலையான எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக கிர்கிஸ்தான் புதன்கிழமை பிற்பகுதியில் கஜகஸ்தான், பெலாரஸ், அஜர்பைஜான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுமார் 7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கிர்கிஸ்தான், தனது பெட்ரோல் தேவையில் 90 சதவீதத்திற்கும் மேலாக ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. இருப்பினும், ரஷ்யா தற்போது கடுமையான எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்த நெருக்கடி எவ்வளவு காலம் நீடிக்கும்?

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவின் பெட்ரோல் இருப்பு நான்கு சதவீதம் மட்டுமே குறைவாக உள்ளது என்று அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

இதுகுறித்து பகுப்பாய்வாளர் கிறிஸ் வீஃபர் கூறுகையில், "நாடு முழுவதும் போதுமான அளவு எரிபொருள் விநியோகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், எரிபொருள் தவறான இடத்தில் இருப்பது தான் பிரச்னை " என்கிறார்.

அதாவது, எரிபொருள் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு விநியோகத்தை மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் இதன் பொருள் .

ரஷ்யா போன்ற ஒரு பெரிய நாட்டில், இந்தப் பணியை ஒரே இரவில் முடித்துவிட முடியாது என்று கூறும் வீஃபர், "போதுமான எரிபொருள் இருக்க வேண்டும், ஆனால் அது தேவைப்படும் இடத்திற்குச் சென்றடைய வாரங்கள் ஆகலாம்" என்கிறார்.

மேலும், "இதுவே ஒரு மிகப்பெரிய நடவடிக்கை " என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏபி செய்தி நிறுவனத்தின்படி, தலைநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் எரிபொருள் தேவையில் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்த மாஸ்கோவின் சுத்திகரிப்பு நிலையத்தை பழுதுபார்ப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதங்களாவது ஆகலாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு