'பசு, கன்றுகளை பலியிடத் தடை' - உச்ச நீதிமன்றம் சென்ற தவெக அரசை இந்து அமைப்புகள் விமர்சிப்பது ஏன்?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'தமிழ்நாட்டில் பொது இடங்களில் பசு மற்றும் கன்றுகளை பலியிடக் கூடாது' என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஜூன் 9ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

விலங்குகளை பலியிடுவது தொடர்பாக ஆட்சேபனைக்குரிய வகையில் தீர்ப்பு அமைந்துள்ளதாக, மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

இதை இஸ்லாமிய அமைப்புகள் வரவேற்றுள்ள நிலையில், 'நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்தாமல் அரசு மேல்முறையீடு செய்துள்ளது சரியானதல்ல' என்று இந்து அமைப்புகள் விமர்சித்துள்ளன.

கோவை செல்வபுரம் பகுதியில் வசிக்கும் சூர்யபிரசாந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இவர் இந்து மக்கள் கட்சியில் பொதுச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்.

அவர் தனது மனுவில், "கோவையில் பக்ரீத் பண்டிகையின்போது இறைச்சிக் கூடங்களாக அங்கீகரிக்கப்படாத இடங்களில் பசுக்கள் மற்றும் கன்றுகளை குர்பானி (பலி) கொடுக்கின்றனர். இதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படாததால், குர்பானியை தடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுவில் சூர்யபிரசாந்த் கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.சூர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு விசாரித்தது. அதோடு, வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "கடந்த மே 21ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட காவல்துறையினர் பசு பலிக்காக (குர்பானி) ஒதுக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டனர். அந்த ஆய்வில், பொது இடமில்லாத ஒரு பகுதியில் போக்குவரத்துக்கோ பிற மத உணர்வுகளுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் தற்காலிக கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது" எனக் கூறப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து, "வழக்கின் மனுதாரரால் முன்வைக்கப்பட்ட விஷயங்களை அரசுத் தரப்பு மறுக்கவில்லை. எனவே, அந்தக் கூற்றுகளை அவர்கள் ஏற்றுக்கொண்டதாக நீதிமன்றம் கருதுகிறது" என்று நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

'பசுவை பலியிடுவது கட்டாயமானதல்ல' - நீதிபதிகள்

தீர்ப்பில் இந்திய அரசியலமைப்பின் 48வது பிரிவை மேற்கோள் காட்டியுள்ள நீதிபதிகள், "பசுக்கள், கன்றுகள் மற்றும் உழைப்புக்கு உதவும் பிற கால்நடைகளை வெட்டுவதைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறுவதாக" குறிப்பிட்டுள்ளனர்.

பசு, கன்று மற்றும் உழவு மாடுகளைப் பாதுகாப்பது, அதை வெட்டுவதைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து இந்திய அரசியலமைப்பின் 48வது பிரிவு கூறுகிறது.

அரசியலமைப்பு நிர்ணய சபையில் நடந்த விவாதங்களில், "பசு ஒரு போற்றத்தக்க விலங்கு" என்றும் இந்திய நாகரிகத்துடன் நெடுங்காலமாகப் பிணைக்கப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டதாக நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பல மாநிலங்கள் பசு வதைத் தடைச் சட்டங்களை இயற்றியதாகவும், அந்தச் சட்டங்கள் நீதிமன்றங்களால் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

"பக்ரீத் பண்டிகை நாளில் பல முஸ்லிம்கள் பசுக்களை பலியிடுவதில்லை" என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகத் தீர்ப்பில் கூறியுள்ள நீதிபதிகள், முகமது ஹனீஃப் குரேஷி எதிர் பிகார் மாநில அரசு வழக்கை மேற்கோள் காட்டியுள்ளனர்.

"ஒரு முஸ்லிம் தனது மத நம்பிக்கை, கோட்பாட்டை வெளிப்படுத்த பசுவை பலியிடுவது கட்டாயமான செயல் அல்ல" என்று இந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் சொல்வது என்ன?

தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1958, பிரிவு 4 வகுத்துள்ள விதிமுறைகளையும் நீதிபதிகள் தீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளனர். அதன்படி,

"ஒரு விலங்கைக் கொல்வதற்கு முன் அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து தகுதி வாய்ந்த அதிகாரியிடம் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் சான்றிதழ் பெறும்வரை கொல்லக்கூடாது."

"கொல்லப்படும் விலங்கு பத்து வயதுக்கு மேற்பட்டதாகவும் வேலை செய்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் தகுதியற்றதாகவும் இருக்க வேண்டும்."

"காயம், குறைபாடு அல்லது குணப்படுத்த முடியாத நோய் காரணமாக நிரந்தர இயலாமைக்கு அந்த விலங்கு உள்ளாகியிருக்க வேண்டும்."

"அந்த வகையில், அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்கள் தவிர வேறு இடங்களில் எந்தவொரு விலங்கையும் வெட்டுவதை அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வருகிறோம்" எனத் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும், தீர்ப்பின் 17வது பத்தியில் பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாள் இரவில் அல்லது வேறு எந்த நாளிலும் பசுவோ, கன்றுக்குட்டியே பலியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தொடர்புடைய அதிகாரிகளுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டிய கடமை தலைமைச் செயலாளருக்கு உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தத் தீர்ப்பில் "அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே வெட்ட வேண்டும்" எனக் கூறிய நீதிபதிகள், அடுத்ததாக "எந்த நாளிலும் பசு அல்லது கன்றை வெட்டக் கூடாது" எனக் கூறியிருந்தனர்.

தமிழ்நாட்டில் கடந்த மே 28ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்கு முதல் நாள் உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதால் முஸ்லிம் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்தத் தீர்ப்பு தேவையற்ற அழுத்தத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிட்டதாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

"பொது இடங்களில் வைத்து விலங்குகளை அறுக்கக்கூடாது எனத் தீர்ப்பு கூறுகிறது. பிற மத நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் விழாக்களிலும் இதை நடைமுறைப்படுத்த அரசும் நீதித்துறையும் தயாரா?" என்ற கேள்வியை அவர் எழுப்பியிருந்தார்.

'தீர்ப்பில் முரண்பாடு' - தமிழ்நாடு அரசு

இந்த நிலையில், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஜூன் 9ஆம் தேதியன்று தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு, பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் தீர்ப்பு தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

"பொது இடங்களில் பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க உத்தரவு கோரி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதைத் தாண்டி பக்ரீத் அல்லது வேறு எந்த நாளிலும் பசுக்கள், கன்றுகள் பலியிடப்படுவதற்கு ஒட்டுமொத்த தடை விதித்திருக்க வேண்டுமா என்பது பரிசீலனைக்கு எழும் கேள்வியாக உள்ளது" என மேல்முறையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, தீர்ப்பில் "குறிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்கள் தவிர வேறு எந்த இடத்திலும் விலங்குகளை வெட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதிக்க கூடாது" என நீதிமன்றம் கூறியது.

அடுத்த பத்தியில், பக்ரீத் பண்டிகையின் முந்தைய நாள் அல்லது வேறு எந்த நாளிலும் பசுவோ அல்லது கன்றோ வதைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை மனுவில் குறிப்பிட்டுள்ள அரசு செயலர், "ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவு மூலம் இறைச்சிக் கூடங்களில் பசு வதைக்கு முழு தடையை நீதிமன்றம் விதித்துள்ளது" எனக் கூறியுள்ளார்.

'விலங்குகள் வதைச் சட்டம் 1960, விலங்குகள் வதைச் சட்ட விதிகள் 2001, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு முரணாக இந்தத் தீர்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

அந்த வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

'மேல்முறையீடு தேவையற்ற ஒன்று' - அர்ஜூன் சம்பத்

"தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு தேவையற்ற ஒன்று" எனக் கூறுகிறார், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்.

"நாடு முழுவதும் பொது இடங்களில் பசுக்களைக் கொல்லக்கூடாது என்ற தடைச் சட்டம் அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தையே தீர்ப்பாக ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு அளித்துள்ளது" என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களில் திருப்பரங்குன்றம் தீப வழக்கு, இஸ்லாம் மதத்திற்கு மாறிய இந்துக்களுக்கான இடஒதுக்கீடு ரத்து, பசுக்களைக் கொல்வதற்கு தடை ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இதைக் குறிப்பிட்டுப் பேசும் அர்ஜூன் சம்பத், "மூன்று விவகாரங்களிலும் திமுக அரசைப் போலவே தவெக அரசும் செயல்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதன் மூலம் மக்களின் வரிப் பணம் வீணாகிறது. இது எங்களுக்கு வேதனையைத் தருகிறது," என்கிறார்.

"பக்ரீத் கொண்டாடுவதற்கு நாங்கள் தடை கோரவில்லை" எனக் கூறிய அர்ஜூன் சம்பத், "கூட்டு குர்பானி கொடுப்பதாக இருந்தால் அதற்கென உள்ள இடங்களில் சென்று வெட்டிக் கொள்ளலாம் என மனுவில் குறிப்பிட்டோம்" என்றார்.

அத்துடன், "இது முஸ்லிம் மக்களுக்கோ, பக்ரீத் பண்டிகைக்கோ எதிரானது அல்ல. பொது இடத்தில் மாடுகளை வெட்டக்கூடாது எனக் கடந்த ஆண்டே தடை உத்தரவை வாங்குவதற்கு முயன்றோம். அது நடக்கவில்லை" என்றார்.

"நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்துவதுதான் தமிழ்நாடு அரசின் வேலை. முஸ்லிம் அமைப்புகள் வேண்டுமானால் மேல்முறையீடு செய்யலாம். மாறாக, அவர்களின் நிர்பந்தத்துக்காக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது" எனவும் அவர் விமர்சித்தார்.

'நடைமுறையில் சாத்தியமற்றது' - நவாஸ்கனி எம்.பி

இதை மறுத்துப் பேசும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ்நாடு துணைத் தலைவரும் ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி, "நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நடைமுறையில் சாத்தியமற்றது என்பதால் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளதாக" தெரிவித்தார்.

"பொது இடங்களில் மாடுகளை வெட்டக்கூடாது. அதற்கென உள்ள இறைச்சிக் கூடங்களில் அறுக்க வேண்டும்" என்ற உயர் நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டுப் பேசும் நவாஸ்கனி, "அனைத்து ஊர்களிலும் இறைச்சிக் கூடங்கள் இல்லை. அதற்கேற்ற வசதிகள் இல்லை. நீதிமன்றம் கூறுவதைப் போலச் செயல்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை" என்றார்.

மேலும், "பொது இடங்களில் யாரும் விலங்குகளை வெட்டுவதில்லை. அவரவர் வீடுகள், பள்ளிவாசல் வளாகங்களில் வெட்டுகின்றனர். இது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையாக உள்ளது. இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது" என்று குறிப்பிட்டார்.

"பொது இடங்களில் குர்பானி (பலி) கொடுக்கக்கூடாது எனக் கூறுவது சாத்தியமல்ல" எனக் கூறும் நவாஸ்கனி, "கோவில்களில் நேர்த்திக் கடனுக்காக ஆடுகளை வெட்டுகின்றனர். அவர்களிடமும் இறைச்சிக் கூடங்களில்தான் வெட்ட வேண்டும் எனக் கூறினால் அது சரியாக இருக்குமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

"அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை மறுக்கப்பட்டு இருப்பதால் தவெக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தினோம். அதை ஏற்று மேல்முறையீடு செய்துள்ளனர்" என்று நவாஸ்கனி எம்.பி தெரிவித்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு