ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி குறித்து கேள்வி எழுப்பும் 'லிவர் டாக்டர்' யார்?

    • எழுதியவர், விகாஸ் பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

கொச்சியில் உள்ள ராஜகிரி மருத்துவமனையின் ஹெபடாலஜி கிளினிக்கிற்கு வெளியே உள்ள காத்திருப்பு அறை, நம்பிக்கைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையில் அமைதியாக இருக்கிறது.

ஒரு நபர் தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கல்லீரல் நோயின் தீவிரத்தால் அவர் உடல்நலிந்து போயிருக்கிறார். அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுகிறது.

அருகில் மற்றொரு குடும்பம் பழைய மருத்துவ அறிக்கைகளின் கோப்புகளைப் பிடித்தபடி அமர்ந்திருக்கிறது. தங்கள் உறவினரை இந்த மருத்துவமனை எப்படியாவது காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.

உள்ளே, டாக்டர் சிரியாக் ஏபி பிலிப்ஸ் மிகவும் அமைதியாக இருக்கிறார். ஒரு நோயாளி அவர் முன்னால் அமர்ந்திருக்கிறார். பிலிப்ஸ் முன்னோக்கிச் சாய்ந்து ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அமைதியாகிறார்.

கேரளாவில் உள்ள இந்த மருத்துவமனையில் நான் இரண்டு நாட்கள் செலவிட்டேன். நான் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதரைச் சந்திப்பேன் என்று நினைத்தேன். இந்தியாவின் மிகவும் பேசப்படும் மற்றும் சர்ச்சைக்குரிய மருத்துவர்களில் பிலிப்ஸ் ஒருவராவார்.

அவரது ஆதரவாளர்கள் அவரை 'ஆதாரங்கள் அடிப்படையிலான மருத்துவத்தின்'அஞ்சாத ஆதரவாளர்' என்று கருதுகின்றனர். விமர்சகர்களோ அவரை கவனத்தை ஈர்க்கும் வகையில் தூண்டிவிடுபவர் என்று கூறுகின்றனர்.

சமூக ஊடகத் தளமான 'எக்ஸ்'ஸில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை "லிவர் டாக்" என்ற பெயரில் பின்தொடர்கின்றனர். அங்கு அவர் ஹோமியோபதியை "போலி மருத்துவம்" என்று சாடியுள்ளார்.

மாற்று மருத்துவ முறைகளைப் பின்பற்றுபவர்களை அவர் போலி மருத்துவர்கள் என்று அழைத்துள்ளார்.

மாற்று மருத்துவத்தைச் சேர்ந்தவர்கள், அவர் இந்திய மருத்துவ முறைகளைப் புரிந்துகொள்ளாமல், அவற்றின் மீது தவறான முறையில் தாக்குதல் நடத்துவதாகப் குற்றம் சாட்டுகின்றனர்.

அவரது சமூக ஊடகப் பக்கங்கள் பொது சுகாதாரம் குறித்த தகவல்களால் நிரம்பியுள்ளன. அதே நேரத்தில், அதில் கடுமையான விமர்சனங்களும் இடம்பெறுகின்றன.

இதில் பிரபலங்களுடன் அவர் மேற்கொள்ளும் விவாதங்களும் அடங்கும். அவரது அணுகுமுறை பலருக்கு முரட்டுத்தனமாகத் தெரிவதாகக் கூறப்படுகிறது.

இந்திய பாரம்பரிய மருத்துவத்துடன் தொடர்புடைய மத்திய ஆயுஷ் அமைச்சகம், அவரைப் பற்றி மட்டும் இரண்டு முறை அதிகாரப்பூர்வமாக ஆய்வுக் குழு கூட்டங்களை நடத்தியுள்ளது.

ஒருமுறை உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு காவல்துறை ஆய்வாளர், தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றிற்காக அவரிடம் விசாரணை நடத்த இரண்டு நாட்கள் ரயிலில் பயணம் செய்து வந்தார். கடந்த ஆறு ஆண்டுகளில் பிலிப்ஸ் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில இன்னும் நிலுவையில் உள்ளன.

சமூக ஊடக பிம்பத்தைத் தாண்டிய 'லிவர் டாக்டர்'

சமூக ஊடகங்களில் நாம் காணும் பிம்பத்திற்குப் பின்னால் இருக்கும் மனிதர், உண்மையில் வேறுபட்டவராகத் தெரிகிறார். எங்களுடனான உரையாடலின் போது, அவர் மிகவும் நிதானமாகவும் மெதுவாகவும் பேசக்கூடியவராக இருந்தார்.

நீண்ட காலமாக அவரிடம் சிகிச்சை பெறும் நோயாளிகள், சக ஊழியர்கள் மற்றும் அவரை நன்கு அறிந்த மருத்துவர்கள் ஆகியோரும் இதையே கூறுகின்றனர். அவர் மிகவும் பணிவானவர், எளிமையானவர் மற்றும் பண்பானவர் என்று அவர்கள் விவரிக்கின்றனர்.

ஆனால், அவர் மன்னிப்பு கேட்காமலேயே இவ்வாறு கூறுகிறார்: "இது ஒரு கட்டமைக்கப்பட்ட ஆளுமை."

"அவர்கள் (சமூக ஊடக விமர்சகர்கள்) என்னை வெறுக்கிறார்கள். ஆனால், நான் வழங்கும் தகவல்களை அவர்களால் தவறு என்று நிரூபிக்க முடியாது. சில நேரங்களில், மற்றவர்கள் கவனிக்கும்படி செய்ய சத்தமிட்டாக வேண்டியிருக்கிறது. நான் குறிப்பாக இணையத்தில் வம்பிழுப்பவர்களை குறிவைக்கிறேன். அப்போதுதான் அவர்கள் எனது செய்தியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முடியாது."

"மக்கள் என்னை முரட்டுத்தனமானவர் அல்லது கோபக்காரர் என்று கருதினாலும், அது உண்மையில்லை என்றாலும், அந்த விலையைத் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்" என்றும் அவர் கூறுகிறார்.

இந்தியாவின் பழமையான பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதமும், மதுவும் அவரது விமர்சனங்களுக்கு முக்கிய இலக்காக இருக்கின்றன.

ஆயுர்வேதத்தை லட்சக்கணக்கான மக்கள் நம்புகின்றனர். இது அரசாங்கத்தின் உதவியுடன் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளின் ஆதரவையும் பெற்றுள்ளது. இது சாமானிய மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

அப்படியிருக்க, அவர் ஏன் இதற்குச் சவால் விடுவதையே தனது இலக்காகக் கொண்டார்? மற்றும் ஏன் இவ்வளவு மோதல் போக்குள்ள பொது பிம்பத்தை ஏற்றுக்கொண்டார்?

இதற்கான விடை அவரது சொந்த வாழ்க்கையிலேயே மறைந்திருப்பதாக அவர் கூறுகிறார்.

டாக்டர் பிலிப்ஸ் யார்?

பிலிப்ஸ் ஒருபோதும் மருத்துவராக விரும்பியதில்லை. அவர் ஒரு எழுத்தாளராக ஆக வேண்டும் என்று விரும்பினார். அவருக்குப் படங்கள் பிடிக்கும். மருத்துவம் என்பது அவரது கனவாக இருக்கவில்லை.

ஆனால், கேரளாவில் புகழ்பெற்ற இரைப்பை மற்றும் குடல் நோய் நிபுணரான டாக்டர் பிலிப் அகஸ்டினின் மகன் என்பதால், அந்தத் தீர்மானம் கிட்டத்தட்ட முன்னரே எடுக்கப்பட்டிருந்தது.

அவர் முதல்முறை மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதன்பின், திருச்சூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியுடன் கூடிய பயிற்சி மையத்தில் ஒன்பது மாதங்களைச் செலவிட்டார்.

அங்கு 40 சிறுவர்களுடன் நெருக்கடியான அறைகளில் தங்க வேண்டியிருந்தது. "முதல் வாரம் நான் அழுதுகொண்டேதான் தூங்குவேன்" என்று அவர் நினைவுகூருகிறார். இருப்பினும், இரண்டாவது முயற்சியில் அவர் தேர்ச்சி பெற்றார்.

"பெங்களூருவின் புனித ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்" என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார்.

மதுவின் பாதிப்பு காரணமாக, தனது சொந்த பேராசிரியரின் மேற்பார்வையில் அவர் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் ஒன்றும் உருவானது.

கொல்கத்தாவில் எம்.டி. படித்துக் கொண்டிருந்தபோதுதான், மருத்துவம் அவருக்கு உண்மையாகவே முக்கியமானது. அது 3,500 படுக்கைகள் கொண்ட ஒரு அரசு மருத்துவமனை. அங்கு மருந்துகள், உபகரணங்கள் மற்றும் பணியாளர்களின் பற்றாக்குறை எப்போதும் இருந்துகொண்டே இருந்தது.

இன்சுலின் இருப்பு தீர்ந்துவிட்டதால், தீவிர நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் இல்லாமலேயே மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதை அவர் பார்த்தார்.

குறைந்த வசதிகளுக்கு மத்தியில், எந்த நோயாளியைக் காப்பாற்றலாம் என்பது போன்ற கடினமான முடிவுகளை மருத்துவர்கள் எடுக்க வேண்டியிருந்தது என்பதையும் அவர் பார்த்தார்.

"இவ்வளவு குறைவான வசதிகள் இருந்தும், மக்கள் தங்கள் முழு முயற்சியையும் மேற்கொண்டிருந்தனர். போராடிக்கொண்டிருந்தாலும், நோயாளிகளும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். மனிதர்களுக்கு இடையே இப்படிப்பட்ட ஒரு பிணைப்பை நான் இதற்கு முன் பார்த்ததில்லை" என்று அவர் கூறுகிறார்.

பின்னர், டெல்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் லிவர் அண்ட் பிலியரி சயின்சஸ் நிறுவனத்தில் ஹெபடாலஜி துறையில் பயிற்சி பெற்றார்.

அவர் ஒரு கல்விசார் பணியை உருவாக்கிக்கொண்டிருந்தார். அப்போதுதான், அவரது தந்தையின் மருத்துவமனையை ஒரு வணிகக் குழுமம் கையகப்படுத்தியது.

தனது தந்தையின் மருத்துவப் பயிற்சியை மீண்டும் கட்டியெழுப்ப டெல்லியை விட்டு அவர் வெளியேறினார். இந்தத் தீர்மானமும் முழுமையாகத் தன்னுடையது அல்ல என்று அவர் கூறுகிறார்.

மாற்று மருத்துவ விமர்சனப் பயணம்

கேரளாவின் புதிய மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபோது, மதுப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை முதன்முதலில் அவர் மிக நெருக்கமாகக் கவனித்தார். அதே நேரத்தில், கட்டுப்பாடற்ற மூலிகை மருந்துகள் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கின்றன என்பதையும் அவர் கண்டறிந்தார்.

ஒருமுறை, ஆறு வயது சிறுமி ஒருவர் தீவிர மஞ்சள் காமாலை மற்றும் திடீர் கல்லீரல் செயலிழப்புடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். காய்ச்சல் மற்றும் சளிக்காக, அந்தச் சிறுமிக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட மூலிகைக் கஷாயத்தை அவரது குடும்பத்தினர் கொடுத்திருந்ததே அதற்குப் பாதிப்பு என்று தெரியவந்தது. "அந்தக் குழந்தையைக் காப்பாற்றப் போராடிய அந்த இரண்டு வாரங்கள் எனக்கு மிகவும் பயங்கரமான அனுபவமாக இருந்தது" என்று அவர் கூறுகிறார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மாற்று மருத்துவ முறைகள் மற்றும் மதுப்பழக்கம் கல்லீரலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அவர் தீவிரமாகப் படிக்கத் தொடங்கினார். அப்போது, அவரது மாநிலத்தில் இந்தச் சிக்கல் மிகவும் பரவலாக இருந்தது. மாற்று மருத்துவத்தின் அறிவியல் மற்றும் வரலாறு ஆகியவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதாக அவர் கூறுகிறார்.

ஒரு மருத்துவராக மட்டும் இருக்க விரும்பாத அவர், தனது மருத்துவப் பணியில் கல்விசார் ஒழுக்கத்தைக் கொண்டுவர விரும்பினார். சமூக ஊடகங்களில் தனது மருத்துவக் குறிப்புகளை அவர் பகிரத் தொடங்கினார். தொடக்கத்தில் சிலரே கவனித்தனர், பின்னர் எதிர்ப்புகள் கிளம்பின.

பாரம்பரிய மருத்துவத்தில் லட்சக்கணக்கான மக்கள் ஆழ்ந்த நம்பிக்கை வைத்துள்ளனர். நவீன மருத்துவ விதிகளைப் பாரம்பரிய மருத்துவத்தின் மீது திணிப்பது, கலாச்சாரத்தை அழிப்பதற்குச் சமம் என்று பலர் கருதுகின்றனர். பிலிப்ஸ் இந்த நம்பிக்கைகளைச் சவால் செய்வதுடன், அவற்றை நம்புபவர்களை அவமதிப்பதாகவும் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆனால், அவர் பின்வாங்கவில்லை. "நான் அந்த மருத்துவர்களைப் போலி மருத்துவர்கள் என்று சொல்லவில்லை. இந்த மருத்துவ முறையின் அடிப்படைக் கோட்பாடுகள், அறிவியல் பூர்வமான அல்லது தர்க்கரீதியான ஆதாரங்களின் அடிப்படையில் இல்லை என்றுதான் கூறுகிறேன்" என்று அவர் வாதிடுகிறார். "நவீன மருத்துவம் தனது தவறுகளைத் திருத்திக்கொள்கிறது. ஆனால், மாற்று மருத்துவத்தில் அந்த முதிர்ச்சி இல்லை. அது தனது குறைகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறது" என்கிறார் அவர்.

இதனைத் தொடர்ந்து, பாரம்பரிய இந்திய மருந்துகளால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் குறித்து அவர் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இவை அனைத்தும் 'பியர்-ரிவியூடு' எனப்படும், அந்தத் துறை சார்ந்த நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட இதழ்களில் வெளியாகின.

ஆயுஷ் அமைச்சகம் அவரது ஆய்வுகளில் ஒன்றின் மீது கேள்வி எழுப்பியபோது, அவர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் பதிலளித்தார். மேலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புரதத் தூள்கள் மற்றும் பொதுவான மருந்துகளின் தரம் குறித்து, மக்கள் உதவியுடன் நிதி திரட்டி ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார்.

'என் ஒவ்வொரு நோயாளியின் மரணமும் என்னுடனேயே தங்கிவிடுகிறது..'

சமீபத்தில் டாக்டர் பிலிப்ஸ் தனது அனுபவங்களை மையமாகக் கொண்டு ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். ஆனால், இந்தப்பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காக அவர் பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பெரும் விலை கொடுத்துள்ளார்.

எவருடைய மனநலத்தையும் பாதிக்கும் வகையில் அவரது தினசரி வேலை அமைந்திருப்பதாக அவர் கூறுகிறார். அவரது நோயாளிகளில் பலர் கடுமையான கல்லீரல் பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள். இந்தியாவில், குறிப்பாக இளைஞர்களிடையே மதுப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் நோய்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. அனைவராலும் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவதில்லை; சிலர் வறுமையில் வாடுகின்றனர்.

சில நோயாளிகள் மிகவும் மோசமான உடல்நிலையில் இருக்கிறார்கள்; சிலரால் மதுப்பழக்கத்தைக் கைவிட முடிவதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் உயிரிழக்கின்றனர். இத்தகைய சூழலில், மரணத்தை இயன்றவரை வலியின்றி அமைதியாகக் கடக்க உதவுவதே அவரது பணியாக இருக்கிறது. "நோயாளி தனது இறுதி தருணம் வரை மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோயாளி இறக்கப்போகிறார் என்பதை குடும்பத்தினருக்குப் புரியவைப்பதும், கண்ணியமான முறையில் அந்த மரணம் நிகழ்வதை உறுதி செய்வதும் முக்கியம்" என்று அவர் கூறுகிறார்.

இதைச் சொல்லும்போது அவர் சிறிது நேரம் இடைவெளி விடுகிறார்.

மருத்துவர்கள் கடவுளைப் போல ஒரு பிம்பத்தைப் பேணிக்காக்க வேண்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார். எதையும் தாங்கிக்கொண்டு, எப்போதும் உறுதியாக இருக்கும் ஒரு கேடயத்தைப் போல மருத்துவர்கள் பார்க்கப்படுகிறார்கள். "ஆனால் நான் சொல்கிறேன், எல்லாமே சரியாக இருப்பதில்லை" என்கிறார் அவர்.

எத்தனை இறப்புச் சான்றிதழ்களில் தான் கையொப்பமிட்டேன் என்ற கணக்கே அவருக்கு நினைவில்லை. அந்த ஒவ்வொரு மரணத்தின் துயரமும் அவருடனேயே தங்கிவிடுகிறது.

ஒருமுறை, தீவிர சிகிச்சையிலுள்ள நோயாளி குறித்து இளநிலை மருத்துவர்களுடன் அவர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது, அவரது கார் விபத்திற்குள்ளாகும் சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு, அவர் தனது அன்றாட வழக்கத்தை மாற்றிக்கொண்டார்.

தற்போது அவர் தினமும் 25 நோயாளிகளை மட்டுமே கவனிக்கிறார். இது அவரது சக மருத்துவர்கள் மற்றும் அவரது தந்தையை விடக் குறைவான எண்ணிக்கையாகும். அவரது தந்தை இன்றும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளைப் பார்க்கிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மதுப்பழக்கத்தையும் கைவிட்டார். "நான் குடித்துக்கொண்டிருக்கும்போது, என் நோயாளிகளை எப்படி மதுவை நிறுத்துங்கள் என்று சொல்ல முடியும்?" என்று அவர் கேட்கிறார்.

அவருக்கு ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவது பிடிக்கும். தனது குடும்பத்திற்காகவும், தனது பொழுதுபோக்குகளுக்காகவும் அவர் நேரம் ஒதுக்குகிறார். "நான் எப்போதும் சமூக ஊடகங்களிலேயே இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. நான் வரையறுக்கப்பட்ட நேரமே ஆன்லைனில் இருக்கிறேன். அதுவும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத்தான்" என்கிறார் அவர்.

ஆய்வுகள் மற்றும் சட்டப் போராட்டங்களால் ஏற்பட்ட பொருளாதாரச் சுமை

கொல்கத்தாவில் பணியாற்றிய நாட்களிலிருந்தே அவரது மனைவி டினா அவருடன் இருந்து வருகிறார். நோயாளிகளுடன் பிலிப்ஸ் கொண்டுள்ள உறவை அவர் மிகவும் எளிமையாக விளக்குகிறார். "அவர் மிகுந்த பொறுமைசாலி" என்று கூறும் டினா, "எனக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்றாலோ அல்லது கற்றுக்கொடுக்க வேண்டும் என்றாலோ, அதற்காக அவர் நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக விளக்குவார்" என்கிறார். சற்று இடைவெளி விட்டுப் பேசும் அவர், "சமூக ஊடகங்களில் அவர் எப்படித் தெரிகிறாரோ, ஒரு மனிதராக அவர் அப்படிப்பட்டவர் அல்ல" என்றும் குறிப்பிடுகிறார்.

அவரது தந்தையும் மருத்துவருமான டாக்டர் அகஸ்டின், தொடக்கத்தில் தனது மகனின் சமூக ஊடகச் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி கொண்டிருந்ததாகக் கூறுகிறார். "அவனுக்காக நான் கவலைப்படுகிறேன், ஆனால் அவன் செய்யும் வேலையின் முக்கியத்துவத்தையும் நான் உணர்கிறேன்" என்கிறார் அவர்.

இருப்பினும், இந்த நிலைப்பாட்டிற்காக அவர் தனிப்பட்ட ரீதியில் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் பிலிப்ஸ் மீது பல சட்ட நடவடிக்கைகள் பாய்ந்தன. மாற்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர் மீது வழக்குகள் தொடர்ந்தன. சில வழக்கறிஞர்கள் இலவசமாக அவர் சார்பில் வாதாடினாலும், தன்னைத் தற்காத்துக்கொள்ள லட்சக்கணக்கான ரூபாய்களை அவர் செலவிட வேண்டியிருந்தது.

அவரது நெருங்கிய சக ஊழியர் ஒருவர், அவர்களது கூட்டு ஆய்வுக் கட்டுரை தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பிறகு அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். இப்போது, சில ஆராய்ச்சியாளர்கள் பிலிப்ஸுடன் இணைந்து ஆய்வுக்கட்டுரைகளை வெளியிடும்போது, அதில் தங்கள் பெயரைச் சேர்க்கத் தயங்குகிறார்கள்.

இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அவர் பின்வாங்கத் தயாராக இல்லை. "சட்டச் செலவுகளைச் சந்திப்பதற்கு முன்பே, இந்த மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்க நான் என் சொந்தப் பணத்தைச் செலவழித்து வந்தேன். சாமானிய மக்களுக்குத் தெரியாத உண்மைகளை அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிகவும் அவசியம்" என்கிறார் அவர். "எனது பாதுகாப்பையும் வசதியையும் விட, இந்த வேலைதான் எனக்கு மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்" என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு