திருச்சி சிவாவை சந்தித்த அமைச்சர் நேரு - உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வர திமுக தலைமை நடவடிக்கை

திமுக, திருச்சி சிவா, கே.என்.நேரு
பிரசுரிக்கப்பட்டது

திருச்சியில் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவாவை அவரது வீட்டுக்கே சென்று தமிழக அமைச்சர் கே.என். நேரு சந்தித்துப் பேசியுள்ளார்.

இருவருக்கும் இடையே நீடித்து வரும் பூசலை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்குடன் கட்சி மேலிட உத்தரவின்படி திருச்சி சிவாவை அமைச்சர் நேரு சந்தித்துப் பேசியிருப்பதாக தெரிகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் திருச்சி சிவாவை சந்தித்து விட்டு வெளியே வந்த அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், "முதல்வர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சிவாவை சந்தித்தேன். நடந்த மோதல் சம்பவத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை," என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, "நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்," என்று தெரிவித்தார்.

இரு தினங்களுக்கு முன்பு திருச்சி கன்டோன்மென்ட் எஸ்பிஐ காலனியில் உள்ள புதிய இறகு மைதானத்தை திறப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் கட்சியினர் மைதானத்திற்கு சென்றனர்.

ஆனால் அந்த மைதானத்திற்கான முன்னேற்பாடுகளை செய்தவர் எம்பி சிவா என்பதால் அவர் பெயர் புறக்கணிக்கப்பட்டதாக கூறி எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு கார் முன்பாக கருப்புக்கொடி காட்டினர்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்தவுடன் திரும்பி வந்த திமுகவினர் சிவாவின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அனைவரையும் தாக்கியதுடன், அவர்கள் வீடு புகுந்து கார், பைக் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவத்தில் திருச்சி சிவாவின் வீட்டில் இருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், திருச்சி சிவா நாடாளுமன்ற குழுவுடன் மேற்கொண்டிருந்த வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், "பேச நிறைய உள்ளன, ஆனால் அதை பேசும் மனநிலையில் நான் இல்லை" என்று கூறினார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இதையடுத்து கருப்பு கொடியை காட்டிய நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றபோது திமுகவின் மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜய், முத்துசெல்வம், ராமதாஸ் மற்றும் சிலர் அங்கு தாக்குதல் நடத்தியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்நது திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளரும்,மாமன்ற உறுப்பினருமான முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் துரைராஜ், 55வது வட்டச் செயலாளரரும் மாமன்ற உறுப்பினருமான ராமதாஸ் மற்றும் திருப்பதி ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து திருச்சி செஷன்ஸ் நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதாக காஜாமலை விஜய், முத்து செல்வம், ராமதாஸ், துரைராஜ், திருப்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது திருச்சி சிவா அவரது வீட்டில் இல்லை. அவரது வீட்டில் இருந்த சிலர் கல் வீச்சில் காயம் அடைந்தனர். இந்த நிலையில், ஊர் திரும்பிய திருச்சி சிவா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

திமுக, திருச்சி சிவா, கே.என்.நேரு

அப்போது பேசிய அவர்,” நாடாளுமன்ற குழுவுடன் பஹ்ரைன் சென்றிருந்த நேரத்தில் என் வீட்டை சிலர் தாக்கிய தகவலை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் வாயிலாகவும் அறிந்தேன்.

நடந்த சம்பவம் குறித்து எதையும் பேசும் மனநிலையில் நான் இல்லை. கடந்த காலங்களில் கூட நான் இத்தகைய பல சோதனைகளை சந்தித்தேன். அப்போது கூட யாரிடமும் நான் புகார் சொன்னதில்லை. தனி மனித இயக்கத்தை விட கட்சி பெரியது என கருதுபவன் நான்.

நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் எனது குடும்பத்தினரும் மன வேதனை அடைந்துள்ளனர். வீட்டில் வேலை செய்து வந்த 65 வயது பெண்மணி கூட காயம் அடைந்துள்ளார். நான் இதுவரை மனச்சோர்வில் இருப்பதாக சொன்னதில்லை. ஆனால் இப்போது அப்படித்தான் இருக்கிறேன்” என்றார் திருச்சி சிவா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: