"சாதி, மத கலவரத்தை தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்கிறார்கள்" - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியை அகற்ற சதி
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் நடக்கும் நல்லாட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சாதி, மத கலவரங்களைத் தூண்டி திமுக ஆட்சியை அகற்ற சதி செய்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவச் சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக அரசு செய்யும் பணிகளைப் பல்வேறு மாநில மக்களும் தலைவர்களும் பாராட்டுவதாகக் கூறினார்.

அதைத் தொடர்ந்து, "நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் உலவிக் கொண்டிருப்பவர்கள், நமது திராவிட மாடல் ஆட்சி மக்களைக் கவரும் வகையில் செயல்படுகிறதே, இந்த ஆட்சியை இப்படியே விட்டால் நம் பிழைப்பு என்னாவது என்று எண்ணி புழுதி வாரி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்," என்றும் பேசினார்.

மேலும், "இந்த ஆட்சியை எப்படியாவது அப்புறப்படுத்திவிட வேண்டும் என்று எண்ணி திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்காவது சாதிக் கலவரத்தைத் தூண்டலாமா, மதக் கலவரத்தை ஏற்படுத்தலாமா, ஆங்காங்கே மக்களிடையே பிளவைத் தூண்டலாமா என்று பல்வேறு காரியங்களிலே ஈடுபட்டிருக்கிறார்கள்," என்று அவர் சாடினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு பேசுகையில், "என் மீது வைக்கப்படும் தேவையற்ற விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதில்லை. அதைச் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.

தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவே அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சிறப்பான கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலில் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறோம். இந்த வெற்றிகளை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை," என்றார்.

திமுக ஆட்சியை அகற்ற சதி

பட மூலாதாரம், TWITTER/M.K.Stalin

படக்குறிப்பு, நாகர்கோவிலில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதைத் தொடர்ந்து, தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டியதன் அவசியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"மார்ச் 1ஆம் தேதி என் பிறந்தநாள் விழாவில் பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் முன்னிலையில் பேசியபோது தமிழ்நாட்டைப் போல தேசிய அளவிலும் மத சார்பற்ற கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

கருத்து வேறுபாடுகளையும். தன் முனைப்பையும் விட்டுவிட்டு பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவரும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அதைச் செய்தால் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டேன். அதைத்தான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: