சட்டம்-ஒழுங்கு முதல் மின்வெட்டு வரை: பேரவையில் உதயநிதியின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

பட மூலாதாரம், TNAssembly/Youtube

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் திங்கட்கிழமை நடைபெற்ற போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது உரை ஆரம்பிக்கும் முன் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து தொடங்கினார்.

உதயநிதியின் உரையின் தொடக்கத்தில், "தவெக ஆட்சி அமைந்து சரியாக 40 நாட்கள் கடந்துள்ளது, ஆளுநர் உரையை கேட்கும்போது 40 நாட்களில் இந்த அரசு என்னென்ன பணிகள் செய்துள்ளது, திட்டங்கள் கொண்டு வந்தார்கள், ஏதேனும் சாதனைகள் செய்தார்களா என்பதை தெரிந்துகொள்ள ஆவலோடு காத்திருந்தோம், ஆனால் ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது" என்று தெரிவித்தார்.

"நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே நான் தெரிவித்தேன், ஆளுநர் உரை நிகழ்த்தும்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கொடுங்கள் என்றேன், அதேபோல் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டாலும், இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது, இது மரபு மீறல்" என்று அவர் கூறினார்.

அதற்கு பதில் அளித்த சட்டப்பேரவை தலைவர், "ஆளுநர் உரையின்போது தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசின் உறுதியான கொள்கையில் இந்த அவை நின்றதா என்பதை பார்க்க வேண்டும், தேசிய கீதத்தை இரண்டு முறை பாடியதில் என்ன தவறு என்று எனக்கு தெரியவில்லை, அப்படி பாடப்பட்டதில் என்ன தவறு, எந்த அடிப்படையில் தவறு என்று சொல்ல வருகிறீர்கள்" என்று கேள்வி எழுப்பினார்.

"கடந்த ஆண்டுகளில் ஒரு முறை பாடப்பட்ட தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதுபோல, தமிழ்த்தாய் வாழ்த்தையும் இரண்டு முறை பாட சொல்ல ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கலாம், தமிழ்த்தாய் வாழ்த்தை விட ஆளுநர்தான் இந்த அரசுக்கு முக்கியம் என்ற எண்ணம் எங்களுக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது" என்று உதயநிதி தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "முந்தைய ஆட்சியில் ஆளுநர் சபையில் இருந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை, ஆளுநர் அவையில் இருக்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது எங்களின் முதல் வெற்றி" என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர்

பட மூலாதாரம், TNAssembly/Youtube

படக்குறிப்பு, சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர்

பாஜகவின் குரலாக செயல்படுகிறதா தவெக?

அறநிலையத்துறை மீதான உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலளித்தார்.

பட மூலாதாரம், TNAssembly/Youtube

படக்குறிப்பு, அறநிலையத்துறை மீதான உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலளித்தார்.

"ஆளுநர் உரை அரசின் கொள்கை மற்றும் திட்டங்களுக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும், ஆனால் இந்த அரசின் ஆளுநர் உரை, ரீல்ஸ் போட உதவும், ரியல் பிரச்னைகளுக்கு எந்த தீர்வும் தருவதாக தெரியவில்லை" என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

மேலும், "கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகையை கடந்த இரண்டு மாதமாக 15ம் தேதியன்று வரவு வைத்ததற்கும், 1 முதல் 5ம் வகுப்பு வரை வழங்கப்பட்ட காலை உணவுத்திட்டத்தை 8ம் வகுப்பு வரை நீட்டிக்கப்போவதாக செய்திகளில் பார்த்தோம், அதற்கு நன்றி. ஆனால் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 'நான் முதல்வன்' திட்டத்தை இந்த அரசு முடக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தெரிகிறது, இந்த திட்டத்தின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் 41 லட்சம் மாணவர்கள் இதில் நேரடியாக பலனடைந்துள்ளார்கள். இப்படிப்பட்ட திட்டத்தை கைவிட வேண்டிய அவசியம் என்ன" என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட திட்டங்களுக்கு இந்த அரசு ஸ்டிக்கர் ஒட்டும் புதிய பழக்கம் உருவாகியுள்ளது என்று குறிப்பிட்டார். மேலும், முதியோர்கள் , மாணவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து சேவைகள் இப்போதுதான் முதல்முறையாக கொண்டு வரப்படுகிறது என்று சொல்கிறார்கள்"

"அறநிலையத்துறையின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் வருவாய் அதன் புனிதமான நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது, அறநிலையத்துறையே இருக்கக்கூடாது என்று சொல்லும் பாஜகவின் குரலாக இந்த அரசு உள்ளதா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது" என்று அவர் கூறினார்.

அதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "கோவில்களின் வருமானம் கோவில்களுக்காகவும், கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்காகவும் செலவிடப்படும் என்று ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது. கோவில்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதை காட்டிலும், வணிக நோக்கமாக வணிக வளாகங்கள் , திருமண மண்டபங்கள் கட்டி வருவாய் ஈட்டும் நோக்கம் மட்டுமே இருந்தன. மேலும் அதில் நீதிமன்ற தடை உத்தரவும் இருந்ததால் அதனை இந்த அரசு ரத்து செய்தது." என்று அவர் குறிப்பிட்டார்.

வணிக நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை ரத்து செய்ததற்கு உதாரணத்தை குறிப்பிட்ட ரமேஷ், "குன்னூரில் உள்ள விநாயகர் கோவிலின் நிதியை பயன்படுத்தி அந்த கோவிலுக்கு பன்னடுக்கு கார் நிறுத்தம் கட்ட 10 கோடி ரூபாய் நிதி திட்டமிடப்பட்டது, இந்த கோவிலுக்கு மாதத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையே சராசரியாக 500 தான், மேலும் இந்த கோவிலில் அடிப்படையாக கழிப்பறை வசதிகள் கிடையாது, அப்படியிருக்க எதற்கு கார் நிறுத்தம்?எனவே, மக்களுக்கு பயன் தரும் திட்டங்களை எந்த இடத்திலும் நாங்கள் தடுக்கவும் இல்லை, யாருக்கும் 'பி டீமாக' இருந்து வேலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை" என்று விளக்கமளித்தார்.

மின் வெட்டு விவகாரம்

மின் துறை மீதான உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்தார்.

பட மூலாதாரம், TNAssembly/Youtube

படக்குறிப்பு, மின் துறை மீதான உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்தார்.

"முதலமைச்சர் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழ்நாட்டில் பெரம்பூர் தொகுதியை மின்வெட்டில் முதல் தொகுதியாக மாற்றிவிட்டார்" என்று விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டினார்.

இதற்கு விளக்கமளித்து பேசிய மின் துறை அமைச்சர் நிர்மல் குமார், "தமிழ்நாட்டுக்கே மின் வெட்டு ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார், மின் வெட்டு ஏற்படும் போதெல்லாம், அதற்குறிய காரணங்களை துறை சார்பாக தெரிவித்து வருகிறோம். இந்த துறையில் இரண்டரை லட்சம் கோடி கடன் உள்ளது, மேலும் கடந்த 15 ஆண்டுகளாக எந்த அடிப்படை கட்டமைப்புகளும் செய்யப்படவில்லை. இது தொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த விவாதத்துக்கிடையே பேசிய திமுக உறுப்பினர் செந்தில்பாலாஜி, "கடந்த 5 ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்துக்கு 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு பெரும்பான்மையான பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன, கடந்த 5 ஆண்டுகளில் 90 ஆயிரம் மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன, மின் தேவை அதிகரிக்கும்போது அதற்கான ஏற்பாடுகளை நிர்வாக ரீதியாக செய்ய வேண்டியது அரசின் கடமை, அரசு பொறுபேற்றதும், அந்த துறையின் உயரதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தி, குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியது துறையின் கடமை, ஆனால் துறையின் ஆய்வுக்கூட்டம் இதுவரை நடைபெறவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல்குமார், "கடந்த ஆட்சியில் அதிக அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்று சொன்னார்கள், அறிவிப்பு மட்டும்தான் செய்தார்கள் எதையும் செயல்படுத்தவில்லை, அதுகுறித்து வெள்ளை அறிக்கையில் பதில் கிடைக்கும்" என்று விளக்கமளித்தார்.

"பியூஸ் கேரியர் திருடு போவதாக அமைச்சர் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார், அதில் மதியம் காணாமல் போனதாக தெரிகிறது, ஆனால் இரவு நேரத்தில் மின் வெட்டு ஏற்படுகிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. வெளியே பேசுவது போல அமைச்சர் சட்டப்பேரவையிலும் பேசக்கூடாது" என்று திமுக உறுப்பினர் சிவசங்கர் தெரிவித்தார்.

இதன்பிறகு விவாதத்தில் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, "மின்வெட்டு பிரச்னையால் தமிழ்நாட்டில் முதலீடுகளை விட்டுவிடக்கூடாது என்று கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார், மேலும் 2 நாட்கள் பொறுமையாக இருங்கள் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று சொல்கிறார், அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மின்சாரம் இருக்குமா, இருக்காதா? அதற்காகத்தான் அனைவரையும் பொறுமையாக இருக்கச் சொல்கிறாரா அமைச்சர் என்ற சந்தேகம் எழுகிறது" அவர் குறிப்பிட்டார்.

மேலும், "அறிவிக்கப்படாத மின்வெட்டால் குடும்பங்கள் குழந்தைகளோடு சாலை மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். சில நாட்கள் முன் திமுக சார்பாக அம்பத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், திடீர் மின் வெட்டு ஏற்பட்டது, 30 நிமிடங்கள் காத்திருந்தோம், பிறகு பொதுக்கூட்டத்தை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக மாற்றிவிட்டோம்" என்று தெரிவித்தார்.

" திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மக்கள் நடந்து செல்கையில் திடீரென மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது" என்று உதயநிதி பேசினார்.

"புயல், மழை நேரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த ஆட்சியில் மின்சாரம் இல்லை என பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது" என்று உதயநிதி குற்றம்சாட்டினார்.

"அனைத்துக்கும் திமுக மீது பழி சுமத்தும் அரசு, மின் வெட்டுக்கும் அதையே செய்துள்ளது, பழி போடுவதில் காட்டும் வேகத்தை மின்வெட்டு பிரச்னையை சரி செய்வதில் காட்டினால் சிறப்பாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

"திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளும் குறுவை சாகுபடிக்கு சொன்ன தேதியில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளோம், ஆனால் புதிய அரசு பொறுப்பேற்றதும் தண்ணீர் திறக்கும் அளவுக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை, ஜூன் மாதத்தில் 9.91 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் இன்று வரை அந்த உத்தரவை கர்நாடகா நிறைவேற்றவில்லை. அதில் அரசு என்ன செய்ய போகிறது?" என்று பேரவையில் கேள்வி எழுப்பினார்.

"டெல்டாவில் 6 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு குறுவை சாகுபடி ஆகும், ஆனால் மேட்டூர் அணை திறக்கப்படாததால் 134 குறுவை சிறப்பு தொகுப்பு போதவில்லை என விவசாயிகள் போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து முதலமைச்சர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும்"

"விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடியில் விவசாயிகளை குழப்பாமல் இந்த அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும்" என்று உதயநிதி கேட்டுக்கொண்டார்.

'200க்கும் அதிகமான பாலியல் வன்கொடுமைகள்'

சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.

பட மூலாதாரம், TNAssembly/Youtube

படக்குறிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்தார்.

ஒரே மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளன, அதில் 100க்கும் அதிகமான குற்றங்கள் சிறுமிகள் மீதான வன்கொடுமைகள் " என்று அவர் சுட்டிக்காட்டினார்.

"புதிய அரசு ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே கோவையில் 10 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அதேபோல, கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு புதரில் வீசப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலை பெற்றோர்களிடம் வழங்காமல் காவல்துறையிடம் வழங்கியுள்ளனர், இதை பார்க்கும்போது நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா, இல்லை மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்தில் இருக்கிறோமா என்று சந்தேகம் வந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

"சிங்கப்பெண் திட்டம் தொடங்கப்பட்ட மறுநாளே காவல்துறை சேர்ந்த பெண்ணுக்கு 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் ஜூன் 12ம் தேதி 24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமை வழக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சிங்கப்பெண் படை குற்றவாளிகளை பிடிக்காமல் ரீல்ஸ் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்று சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா, "2023, 2024க்குள் 40 சதவிகிதம் அளவுக்கு குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகமான என்சிஆர்பி அறிக்கை தெரிவித்து. கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருட்களுக்கு எதிராக எத்தனை ஆய்வுகூட்டங்கள் நடத்தப்பட்டு அதனை குறைத்தீர்கள் . ஆனால், கடந்த 40 நாட்களாக காவல்துறையில் கடுமையான மாற்றங்களை எங்கள் முதலமைச்சர் செய்துகொண்டிருக்கிறார்" என்று விளக்கமளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு