சூர்யவன்ஷியின் சாதனை ஆட்டத்திற்குப் பின் சஞ்சய் மஞ்சரேக்கர் ட்ரோல் செய்யப்படுவதுஏன்?

 வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ஏ vs இலங்கை ஏ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஞாயிற்றுக்கிழமை இந்தியா 'ஏ' அணிக்காக பேட்டிங் செய்த வைபவ் சூர்யவன்ஷி, 11 பந்துகளில் சாதனை அரைசதம் அடித்தார் (கோப்புப் படம்).
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இலங்கை தம்புல்லாவில் நடைபெற்ற 50 ஓவர் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங்கை கண்டு முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கரும் அவரது ரசிகராகியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் விளாசியதோடு, 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்தார். இவரது அதிரடி பேட்டிங்கால் இலங்கை ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 9 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் என்ற பிரமாண்ட ஸ்கோரை எட்டியது.

இருப்பினும், இதற்கு முன்பு இந்தத் தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா ஏ - இலங்கை ஏ அணிகள் இடையிலான ஆட்டத்தின் போது ஏற்பட்ட சர்ச்சையால் வைபவ் சூர்யவன்ஷி பேசப்பட்டார்.

அப்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "நான் இந்தியா ஏ அணியின் பயிற்சியாளராகவோ அல்லது மேலாளராகவோ இருந்திருந்தால், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய ஏ அணியின் ஆடும் லெவனில் வைபவ் சூர்யவன்ஷியைச் சேர்த்திருக்க மாட்டேன்" என்று கூறியிருந்தார்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியைப் பார்த்த பிறகு, சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது எக்ஸ் பக்கத்தில் அவரை பாராட்டும் வகையில் பதிவிட்டிருந்தார்.

"50 ஓவர் கிரிக்கெட்டை இன்னும் கூடுதலான அதிரடியை உருவாக்கக்கூடிய ஒரு வடிவமாக வைபவ் பார்க்கிறார் என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்! குறிப்பாக, முதல் 10 ஓவர்களுக்கு வட்டத்திற்கு வெளியே ஆறு ஃபீல்டர்கள் அல்ல, இரண்டு பேர் மட்டுமே இருக்கிறார்கள்" என்று சஞ்சய் கூறிப்பிட்டுள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இதற்கு முன்பு கூறிய கருத்துக்கும் அவரது தற்போதைய கருத்துக்கும் சமூக ஊடகங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

சிலர் அவர் இப்போது "தனது தவறை உணர்ந்திருக்கலாம்" என்று கூறுகின்றனர்.

ஆத்யா என்ற எக்ஸ் பயனர் ஒருவர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் சமீபத்திய பதிவைப் பகிர்ந்து, "இப்போது நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று எழுதியுள்ளார்.

மற்றொரு பயனர், "வீரர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த ஊக்குவிக்கும் உங்களது பகுப்பாய்வு பாராட்டப்பட வேண்டும்" என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு பதிலளித்திருந்தார்.

11 பந்துகளில் 50 ரன் விளாசியும் சாதனையைத் தவறவிட்ட சூர்யவன்ஷி

 வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ஏ vs இலங்கை ஏ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிவேக சதம் அடிக்கும் வாய்ப்பை வைபவ் சூர்யவன்ஷி தவறவிட்டார் (கோப்புப் படம்).
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஞாயிற்றுக்கிழமை தம்புல்லாவில் நடைபெற்ற 50 ஓவர் முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி இலங்கை ஏ அணியின் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார்.

இலங்கை ஏ அணி டாஸ் வென்று இந்தியா ஏ அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

கடந்த போட்டியின் சர்ச்சைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, வைபவ் ஆரம்பத்திலிருந்தே டி20 பாணியில் தனது ஆக்ரோஷமான பேட்டிங் மூலம் எதிரணியை எதிர்கொண்டார்.

சூர்யவன்ஷி தனது அரைசதத்தை வெறும் 11 பந்துகளில் எட்டினார். இது லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையாகும்.

இருப்பினும், 15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி , லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை எட்டுவதை தவறவிட்டார்.

வைபவ் சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சூர்யவன்ஷி 29-வது பந்தில் ஆட்டமிழக்காமல், அந்தப் பந்தில் ஒரு சிக்ஸர் அடித்திருந்தால், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த வீரர்களில் ஒருவராக இணைந்திருப்பார்.

ஆஸ்திரேலியாவின் ஜேக் ஃப்ரேசர் மெக்கர்க் 29 பந்துகளில் சதம் அடித்ததே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் சாதனையாக இருந்து வருகிறது. 2023-24 சீசனில் டாஸ்மேனியாவுக்கு எதிராக தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய போது அவர் இந்த சாதனையை படைத்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இணைந்து நடத்திய 2015 உலகக் கோப்பையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அவர் வெறும் 31 பந்துகளில் சதம் அடித்தார்.

சூர்யவன்ஷியின் செயல்பாடு

 வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ஏ vs இலங்கை ஏ

பட மூலாதாரம், Johan Rynners-ICC/ICC via Getty Images

படக்குறிப்பு, விமர்சகர்களுக்கு வைபவ் சூர்யவன்ஷி தனது திறமையால் பதிலடி கொடுத்தார்.

இந்த முத்தரப்பு தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இடையே விளையாடப்பட்ட முதல் போட்டியில் நடந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, சூர்யவன்ஷி இப்போட்டியில் மிகவும் நிதானமாகக் காணப்பட்டார்.

உண்மையில், கடந்த போட்டியில் அவரது செயல்பாடு எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக இருந்தது. களத்தில் அவர் நிதானம் இல்லாமல் இருந்ததற்காகவும் விமர்சிக்கப்பட்டார்.

இறுதிப்போட்டியில் அவர் ஆடிய இன்னிங்ஸ் அவரது சொந்த கண்ணோட்டத்திலும் மிக முக்கியமானதாக இருந்தது. முந்தைய நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்காதது அவரது செயல்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியிருந்தது.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை அவர் கிரீஸிற்குள் நுழைந்தபோது, உறுதியுடன் காணப்பட்டார். இலங்கை ஏ அணியின் வேகப்பந்து வீச்சாளர் அல்லது சுழற்பந்து வீச்சாளர் என அவர் யாரையும் விட்டுவைக்கவில்லை.

அவர் சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தயாராகிவிட்டாரா இல்லையா என்ற விவாதமும் எழுந்தது. லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த உலகின் மிக இள வயது பேட்ஸ்மேனான சூர்யவன்ஷி, இந்த இன்னிங்ஸில் தனது பேட்டிங்கால் அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.

கடைசி போட்டியில் எழுந்த சர்ச்சை

 வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ஏ vs இலங்கை ஏ

பட மூலாதாரம், Ashley Allen-ICC/ICC via Getty Images

படக்குறிப்பு, தம்புல்லாவில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியின் முடிவில், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கையின் விஷென் ஹலம்பகே ஆகிய இருவருக்குமிடையே மைதானத்தில் சண்டை ஏற்பட்டது.

சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணியிடம் இந்தியா ஏ அணி தோல்வியடைந்த பிறகு, மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் வீரருடன் சூர்யவன்ஷி கடும் வாக்குவாதத்திலும் மோதலிலும் ஈடுபட்டார்.

தம்புல்லாவில் நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கையின் விஷென் ஹலம்பகே ஆகிய இருவருக்குமிடையே மைதானத்தில் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இலங்கை ஏ அணியின் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா தலையிட்டு இரு வீரர்களையும் சமாதானப்படுத்தினார்.

தம்புல்லாவில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 49.2 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தது. இதற்குப் பதிலடியாக இலங்கை ஏ அணியும் 50 ஓவர்களில் 265 ரன்கள் எடுத்தது.

சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணி 16 ரன்கள் எடுத்தது, ஆனால் இந்தியா ஏ அணியால் 9 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை வெற்றி பெற்றது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட போட்டியில், டிஎல்எஸ் விதியின் கீழ் இந்த அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.

திலக் வர்மா தலைமையிலான இந்தியா ஏ அணி, இலங்கை ஏ அணிக்கு எதிரான விறுவிறுப்பான குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியில் வெற்றியுடன் இந்த முத்தரப்பத் தொடரில் தனது பயணத்தைத் தொடங்கியிருந்தது.

சூர்யவன்ஷிக்கு பாராட்டு மழை

 வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ஏ vs இலங்கை ஏ

பட மூலாதாரம், Ashley Allen-ICC/ICC via Getty Images

படக்குறிப்பு, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷியைப் புகழ்ந்துள்ளனர் (கோப்புப் படம்)

வைபவ் சூர்யவன்ஷியின் சிறப்பான ஆட்டத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டுப் பகுப்பாய்வாளர்கள் பலரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

"29 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் எட்டு சிக்ஸர்களுடன் 94 ரன்கள். முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி சிறந்த ஃபார்மில் இருந்தார்" என்று பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது.

சூர்யவன்ஷியின் சிறுவயது பயிற்சியாளர் மனிஷ் ஓஜா கூறுகையில், "வைபவ் போட்டியை நல்ல தொடக்கத்துடன் ஆரம்பித்தார். அவரது நோக்கம் தெளிவாகத் தெரிந்தது. ஆம், இதற்கு முன்பு அவரால் நல்ல தொடக்கங்களை பெரிய இன்னிங்ஸாக மாற்ற முடியவில்லை, வாய்ப்புகளையும் தவறவிட்டு வந்தார். ஆனால் இன்று, அவர் அந்த குறைபாடுகள் அனைத்தையும் கடந்து வந்துள்ளார்..." என்று கூறினார்.

முந்தைய போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை குறித்து அவர் பேசுகையில், "ஒவ்வொரு மனிதனும் உணர்ச்சிகளுடன் தொடர்புடையவர்கள். சில நேரங்களில் உணர்ச்சிகளுக்கு ஆட்படுவதால் இதுபோன்ற எதிர்வினைகள் வெளிவருகின்றன. ஆனால் வைபவ் இன்னும் மிகவும் இளையவர். கிரிக்கெட்டில் ஒருவர் தனது விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அவர் படிப்படியாகப் புரிந்துகொள்வார்" என்றார்.

"மக்கள் பேசிக்கொண்டே தான் இருப்பார்கள், எனவே அவர் அதில் கவனம் செலுத்தக் கூடாது. அவர் தனது விளையாட்டில் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எனது அறிவுரை" என்றும் அவர் கூறினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் எக்ஸ் தளத்தில் "திறமைக்கு எல்லைகள் இல்லை என்பதை வைபவ் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறார். 29 பந்துகளில் 94 ரன்கள் மற்றும் அதிவேக லிஸ்ட் ஏ அரைசதம். அச்சமற்ற, விறுவிறுப்பான மற்றும் உறுதியான ஆட்டம். தொடர்ந்து ஜொலியுங்கள், சாம்பியன்," என்று எழுதியுள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, "அழுத்தமா? என்ன அழுத்தம்? வைபவ் சூர்யவன்ஷி முற்றிலும் மாறுபட்ட ஒரு மட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்! 50 ஓவர் இறுதிப் போட்டியில் 29 பந்துகளில் 94 ரன்கள். இந்த வீரரின் ஆட்டம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு" என்று எழுதியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சியின் ராஜ்யசபா எம்பியான சஞ்சய் குமார் ஜா தனது எக்ஸ் பக்கத்தில், "மற்றொரு நாள், மற்றொரு சாதனை. வைபவ் சூர்யவன்ஷி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்துள்ளார். சில நேரங்களில் பார்வைக் குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் தங்கள் கண்ணாடியைக் கழற்றிவிட்டு தூரத்து பிம்பங்களைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். அப்போது யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும்" என்று எழுதியுள்ளார்.

"வர்ணனை அறையில் இருந்த ஒரு கிரிக்கெட் வீரரின் விசித்திரமான அறிவுரை சுவையற்றதாக இருந்தது மட்டுமின்றி, தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவும் இருந்தது. இளம் திறமைகளை வளர்க்க வேண்டும், வழிநடத்த வேண்டும் மற்றும் ஊக்குவிக்க வேண்டும், மாறாக அவசரமான முடிவுகளை எடுக்க அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு