மீண்டும் வரலாறு படைத்த மெஸ்ஸி: உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை

அர்ஜெண்டினா, மெஸ்ஸி

பட மூலாதாரம், Tullio Puglia - FIFA/FIFA via Getty Images

    • எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஜூன் 22 - ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் பெரும் சர்ச்சைக்குள்ளான, அதிகம் விவாதிக்கப்பட்ட, விமரிசையாகக் கொண்டாடப்பட்ட 2 கோல்கள் இந்த நாளில் அடிக்கப்பட்டன. அந்த இரண்டு கோல்களும் ஒரே போட்டியில் அடிக்கப்பட்டன. அர்ஜெண்டினாவின் 10ம் நம்பர் ஜெர்ஸி அணிந்திருந்த அந்த ஒரே வீரரால் அடிக்கப்பட்டன.

1986 உலகக் கோப்பையில், மெக்ஸிகோ சிட்டி நகரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில் அந்த 2 கோல்களையும் அடித்திருந்தார் டியாகோ மாரடோனா. அவர் கை பட்டு உள்ளே சென்ற முதல் கோல், 'ஹேண்ட் ஆஃப் காட்' (Hand of God) என்று பெயரே பெற்றது.

அதன்பிறகு நடுகளத்தில் பந்தைப் பெற்று, தனி ஆளாக டிரிபிள் செய்து 11 நொடிகளில் 11 டச்கள் செய்து 6 இங்கிலாந்து வீரர்களை ஏமாற்றி அவர் அடித்த கோல், 'நூற்றாண்டின் கோல்' என்று பலராலும் கொண்டாடப்படுகிறது.

அந்த இரு கோல்களுமே வெவ்வேறு காரணங்களுக்காக உலகக் கோப்பை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தன.

40 ஆண்டுகள் கழித்து... மெக்ஸிகோவின் எல்லையில் அமைந்திருக்கும் டெக்சாஸ்... அதே ஜூன் 22, அதே அர்ஜெண்டீன அணியின் 10ம் நம்பர் ஜெர்ஸி அணிந்த லியோனல் மெஸ்ஸி, அதேபோல் 2 கோல்கள் அடித்ததோடு ஒரு மாபெரும் வரலாற்றையும் படைத்தார்.

ஆஸ்திரியாவுக்கு எதிராக நேற்று அவர் அடித்த முதல் கோல் மூலம், ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார் மெஸ்ஸி.

ஆட்டத்தின் 38வது நிமிடத்தில் அவர் அடித்த கோல், உலகக் கோப்பையில் அவர் அடித்த 17வது கோலாக அமைந்தது. இதன்மூலம் ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசா வைத்திருந்த சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி. அதோடு நிற்காமல் ஆட்டம் முடியும் தருவாயில் தன் 18வது உலகக் கோப்பை கோலையும் அடித்தார் அவர்.

அர்ஜெண்டினா அணி இந்தப் போட்டியை வெல்ல மெஸ்ஸியின் அந்த இரு கோல்கள் போதுமானதாக இருந்தன. அதன் மூலம் ஜே பிரிவில் இருந்து முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது அந்த தென்னமெரிக்க அணி. இந்தத் தொடரில் அந்த அணியின் 5 கோல்களையும் தானே அடித்து அவர்களை நாக் அவுட் சுற்றுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் மெஸ்ஸி.

தவறிய ஒன்று, தவறாத இரண்டு

அர்ஜெண்டினா, மெஸ்ஸி

பட மூலாதாரம், Stacy Revere/Getty Images

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக தாக்கம் ஏற்படுத்தினார் மெஸ்ஸி. வலது விங்கில் மட்டுமே ஆடாமல் லௌடாரோ மார்டினஸ் உடன் தன் இடத்தை தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டிருந்தார். பல தருணங்களில் நடுகளத்துகுச் சென்று தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கும் பணியையும் செய்தார்.

ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே மெஸ்ஸிக்கு கோல் அடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. முன்னதாக ஸ்டிரைக்கர் லௌடாரோ மார்டினஸை, ஆஸ்திரியாவின் ஜேவர் ஷ்லேகர் மற்றும் ஸ்டெஃபன் பாஷ் இருவரும் பாக்சுக்குள் ஃபவுல் செய்ய, அர்ஜெடினாவுக்கு பெனால்டி கொடுக்கப்பட்டது. ஆனால், அதை மெஸ்ஸியால் கோலாக்க முடியவில்லை. சாதாரணமாக நடந்து வந்து அவர் அடித்த அந்த ஷாட் கோல் போஸ்ட்டுக்கு வெளியே சென்றது.

அந்த வாய்ப்பு தவறினாலும், 38வது நிமிடத்தில் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோலை அடித்தார் மெஸ்ஸி. பாக்ஸின் இடதுபுறம் இருந்த மெடினாவுக்கு பந்தை அல்மாடா பாஸ் செய்ய, அதை பெனால்டி ஏரியாவுக்கு அனுப்பினார் அல்மாடா. அதை சரியாக பாக்சுக்குள் நுழைந்து தன் இடது கால் மூலம் துல்லியமாக அடித்து கோலாக்கினார் மெஸ்ஸி. இதன்மூலம் தொடர்ந்து 6 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளில் கோலடித்த 3வது வீரரானார் அவர். இதற்கு முன் பிரான்ஸின் ஜஸ்ட் ஃபான்டெய்ன் மற்றும் பிரேசிலின் ஜேர்ஸினியோ ஆகியோர் தொடர்ந்து 6 உலகக் கோப்பை போட்டிகளில் கோலடித்த மற்ற இரு வீரர்கள்.

அந்த முதல் கோலுக்குப் பிறகு வெகுநேரம் முயற்சி செய்தும் இரு அணிகளாலும் கோலடிக்க முடியவில்லை. இந்நிலையில், ஆட்டம் முடிவதற்கு சில நொடிகள் முன்பாக இரண்டாவது கோலை அடித்தார் மெஸ்ஸி.

ஆட்டத்தை சமன் செய்ய ஆஸ்திரிய வீரர்கள் முயற்சி செய்துகொண்டிருந்ததால் பெரும்பாலான வீரர்கள் தங்கள் பாதியில் தான் இருந்தார்கள். அப்போது ஆஸ்திரியாவின் பாதியில் வலது விங்கில் இருந்த மெஸ்ஸிக்கு பந்து கிடைத்தது. மறுபக்கம் படுவேகமாக முன்னேறிய யூலியன் ஆல்வரஸுக்கு துல்லியமாக பாஸ் கொடுத்தார் மெஸ்ஸி. ஆல்வரஸ் அடித்த ஷாட் தடுக்கப்பட்ட நிலையில், அது மீண்டும் மெஸ்ஸிக்கு சென்றது. அவர் முதல் அடித்த ஷாட் ஆஸ்திரிய டிஃபண்டரால் தடுக்கப்பட்டது. இருந்தாலும், மீண்டும் பந்தை நோக்கிப் பாய்ந்து அதை கோலுக்குள் அனுப்பினார் மெஸ்ஸி. இந்த முறை அதை ஆஸ்திரிய வீரர்களால் தடுக்க முடியாமல் போக, அர்ஜெண்டினா 3 புள்ளிகளை உறுதி செய்தது.

எல்லாமே மெஸ்ஸி மயம்

அர்ஜெண்டினா, மெஸ்ஸி

பட மூலாதாரம், Stacy Revere/Getty Images

இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் ஃபிஃபா உலகக் கோப்பையில் 18 கோல்களுடன் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் மெஸ்ஸி. அதேசமயம் இந்தத் தொடரில் அவர் 5 கோல்கள் அடித்திருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலிலும் முதலிடத்துக்கு மீண்டும் முன்னேறியிருக்கிறார் மெஸ்ஸி.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்த உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா அடித்திருக்கும் 5 கோல்களுமே மெஸ்ஸி அடித்தது. இந்த 180 நிமிடங்களில் அந்த அணி மேற்கொண்ட 22 கோல் முயற்சிகளில் 13 மெஸ்ஸியிடமிருந்து மட்டுமே வந்தன. நாளை (ஜூன் 24) 39 வயதை எட்டப்போகும் வீரர் அந்த அணியின் 59% கோல் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்தத் தொடரிலேயே அதிக கோல் முயற்சிகள் மேற்கொண்டிருப்பது (போட்டி எண் 43 வரை) அவர் தான். அதில் 8 இலக்கை நோக்கி அடிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் அவருக்கே முதலிடம்.

கோல் முயற்சிகள் மட்டுமல்ல, பெரும்பாலான அட்டாகிங் நகர்வுகள் அவரிடமிருந்தே தொடங்குகின்றன. அவர் தொடர்ச்சியாக சிறிய இடைவெளிகளுக்குள் நகர்ந்துகொண்டே இருந்ததால், அவரை சரியாகப் பின்தொடர்ந்து தடுப்பது எதிரணிகளுக்கும் கடினமாகிவிடுகிறது. அவர் தொடர்ச்சியாக நடுகளத்துக்கு நகர்வதால், தன்னுடைய பாஸிங் மூலம் நொடிப்பொழுதில் அட்டாகிங் தேர்டுக்குள் செல்லும் நகர்வுகளுக்கு வித்திடுகிறார். அர்ஜெடினா வீரர்களில், எதிரணியின் டிஃபன்ஸிவ் கட்டமைப்பை உடைக்கும் முயற்சிகளை அதிகம் (4 முயற்சிகள்) மேற்கொண்டது மெஸ்ஸி தான் என்பது சொல்லிவிடும் அவர் எப்படி ஒரு வாய்ப்புகளை உருவாக்கும் வீரராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை.

தன்னுடைய முழுமையான ஆட்டத்தின் மூலம் எதிரணிகளுக்கு தொடர்ச்சியாக சவால் கொடுத்துக்கொண்டே இருக்கிறார் லியோனல் மெஸ்ஸி.

ஆஸ்திரியா தவறவிட்டது எங்கே?

அர்ஜெண்டினா, மெஸ்ஸி

பட மூலாதாரம், Maja Hitij - FIFA/FIFA via Getty Images

மெஸ்ஸி ஒருபக்கம் ஜொலிக்க, ஆஸ்திரிய அணியோ அட்டாக்கில் எதுவும் செய்ய முடியாமல் தடுமாறியது. இந்தப் போட்டியில் அந்த அணி கோல் நோக்கி அடித்தது ஒரேயொரு ஷாட் மட்டும் தான். அதுவும் மார்சல் சபிட்சர் அடித்த ஃப்ரீ கிக் மூலம் வந்தது. மற்றபடி 'ஓப்பன் பிளே' தருணத்தில் அவர்களால் பெரிய வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. அந்த அணியின் ஸ்டிரைக்கர் கிரகோரிட்ச் தனக்குக் கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளை மாற்ற தடுமாறினார். அப்படியொரு நிலையில், சிறப்பாக ஷாட்கள் அடிக்ககூடிய, மையப் பகுதியில் தாக்கம் ஏற்படத்தக்கூடிய சபிட்சர் இடது விங்கில் ஆடியதால், ஆஸ்திரிய அணியால் அவரது திறனையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை.

மேலும், அர்ஜெண்டினா அணியின் நடுகளமும் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அர்ஜெடினா மிட்ஃபீல்டர்கள் வழக்கம்போல் தங்கள் 'பிரஸ்ஸிங்' ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொரு பந்துக்கும் அவர்கள் அதிவேகமாக சவால் கொடுத்தார்கள். ஆனால், ஆஸ்திரிய நடுகளத்திடம் அந்த வேகம் இல்லை. அதனால் அவர்கள் பந்துகளை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியாமல் இருந்தது.

அதனால், 43 சதவிகித நேரம் பந்தை தங்கள் பந்தில் வைத்திருந்தாலும் அவர்களால் மொத்தமே 6 கோல் முயற்சிகளையே மேற்கொள்ள முடிந்தது. ஏனெனில், அவர்கள் பெரும்பகுதி நேரம் தங்கள் பாதியில் தான் பந்தை பாஸ் செய்துகொண்டிருந்தார்கள். அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நினைக்கும்போதெல்லாம், தங்கள் 'பிரஸ்ஸிங்' மூலம் பந்தை மீட்டார்கள் அர்ஜெண்டினா வீரர்கள். பல தருணங்களில் பாஸ்களை வாங்க ஆஸ்திரிய வீரர்கள் சற்று தாமதித்தார்கள். அவர்கள் பந்துக்காக காத்திருந்த ஒரு நொடி இடைவெளியில், பந்தை நோக்கிப் பாய்ந்த அர்ஜெண்டினா வீரர்கள் அதை தங்கள் வசப்படுத்தினார்கள்.

மெஸ்ஸியின் மேஜிக் அவ்வப்போது ஆஸ்திரியாவுக்கு சவால் கொடுக்க, அர்ஜெண்டினாவின் நடுகளம் போட்டி முழுவதுமே அவர்களுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. அதனால், ஆஸ்திரிய அணி தோல்வியையும் தழுவியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு