You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஈஸ்டர் குண்டுவெடிப்பு: கொழும்பு அதிகார வட்டத்தை உலுக்கிய புதிய விசாரணைகள் - என்ன நடக்கிறது?
- எழுதியவர், ராஜகோபால் யசிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியான் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகிய மூன்று கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும், கொழும்பின் சொகுசு ஹோட்டல்களையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட அந்தத் தொடர் தாக்குதல்களின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை.
வெளிநாட்டுப் பிரஜைகள் உள்பட 269 பேர் இந்தத் தாக்குதல்களில் பலியாகினர், 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னால் உள்ள சூத்திரதாரிகள் யார் என்ற கேள்விக்கு மூன்று அரசுகள் மாறிய பிறகும் விடை அறியப்படாமலே இருந்து வந்தது.
தாக்குதல் நடந்த 2019இல் ஆட்சியில் இருந்த மைத்ரி-ரணில் அரசாங்கம், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், அதைத் தொடர்ந்து அமைந்த ரணில்-ராஜபக்ச அரசாங்கம் என மூன்று ஆட்சிக் காலங்களிலும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சமூகமும், பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான திருச்சபையும் நீதிகோரி வீதிகளில் இறங்கிப் போராடின.
இந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசின் கீழ், இந்த விசாரணைகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. அதன் விளைவாக, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடை ஆகியவை கொழும்பு அதிகார மையங்களின் அஸ்திவாரத்தையே உலுக்கியுள்ளன.
சலேவின் உண்ணாவிரதப் போராட்டம்
கடந்த பெப்ரவரி 25ஆம் தேதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தார். எனினும், ஜூன் 5ஆம் தேதி முதல் இந்த விவகாரம் ஒரு புதிய திருப்பத்தைப் பெற்றது.
விசாரணைக்குத் தேவையான தனது தரவுக் கடவுச்சொற்களை வழங்க மறுத்த சலே, சிறைக்குள் தனக்கு இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
"தடுப்புக் காவலில் எனக்கு வழங்கப்பட்ட இரவு உணவான சோறும் கறியும் ஒரு தட்டில்கூட இல்லாமல், வெறும் காகிதத்தில் வைக்கப்பட்டுத் தரையில் கொட்டப்பட்டது. அதுவே எனது பொறுமையின் எல்லை மீறிய புள்ளி," என்று சலே தனது உறவினர்களிடம் வேதனைப்பட்டதாக அவரை சிறையில் பார்வையிட்ட அவரது குடும்பத்தினர் ஊடகங்கள் முன் தெரிவித்திருந்தனர்.
மருந்துகள், தண்ணீர் என அனைத்தையும் அவர் முற்றாக மறுத்ததைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் அவசரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலத்த சிஐடி பாதுகாப்புக்கு மத்தியில் அனுமதிக்கப்பட்டார். "நான் மீண்டும் அந்த நரகத்திற்குச் செல்ல விரும்பவில்லை, எனக்கு மரணமே பொருத்தமானது," என்று அவர் மருத்துவமனையில் இருந்து விடுத்த எச்சரிக்கை கொழும்பு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நடைபெற்று வரும் விசாரணையை எளிதாக்கும் பொருட்டு, சலே தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அதிகாரபூர்வமாக உத்தரவிட்டுள்ளது.
அது மட்டுமின்றி, சுரேஷ் சலே தனது வழக்கறிஞர்களின் சட்ட ஆலோசனையின் அடிப்படையில், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார். அவர் தொடர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுரேஷ் சலேவின் கைது மற்றும் சிஐடி காவலில் அவரது உடல்நிலை மோசமடைந்த விவகாரம் முற்றிலும் ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பதே கூட்டு எதிர்க்கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்வைக்கும் பிரதான வாதம்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இந்த விவகாரத்தை தேசியப் பாதுகாப்புடன் தொடர்புபடுத்திப் பேசினார்.
அப்போது அவர், "சுரேஷ் சலேவின் உண்ணாவிரதப் போராட்டம், அவரது தேசபக்தி நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அவர், 35 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர்க்களத்திலும் தேசிய பாதுகாப்புத் துறையிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, பல பதக்கங்களைப் பெற்ற சிரேஷ்ட ராணுவ அதிகாரி. உளவுத்துறைக்குத் தலைமை தாங்கிய ஓர் அதிகாரியை மிகக் கேவலமான முறையில் சித்திரவதைகளுக்கு உட்படுத்துவது ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறையையும் காட்டிக் கொடுக்கும் செயல்" என்று விமர்சித்தார். மேலும், சுரேஷ் சலே மற்றும் அவரது குடும்பத்தினரைத் தங்களது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் வீரசேகர வலியுறுத்தினார்.
பாதுகாப்புத் துறையைச் சிதைக்கும் முயற்சி என்ற இந்த ஒற்றை கோஷத்தை முன்வைத்து, கூட்டு எதிர்க்கட்சிகளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி, 'சர்வஜன பலய' கூட்டணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மாபெரும் கண்டனப் போராட்டமும் சத்தியாகிரகமும் நடத்தப்பட்டது.
"நாட்டிற்காகப் போராடிய உளவுத்துறை அதிகாரிகளைப் பழிவாங்காதே!", "சலேவுக்கு இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை உடனடியாக நிறுத்து" போன்ற வாசகங்கள் அடங்கிய கோஷங்களுடன் வீதியில் இறங்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தற்போதைய அரசு ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகளைத் தேடவில்லை என்றும், கடந்த யுத்த காலத்தில் நாட்டைப் பாதுகாத்த உளவுத்துறைப் பிரதானிகளைப் பழிவாங்கி, நாட்டின் தேசிய பாதுகாப்புப் பொறிமுறையைச் சிதைக்க முற்படுகிறது என்றும் காட்டமாகக் குற்றம் சாட்டினார்.
பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம விதித்த தடை உத்தரவு மற்றும் சுரேஷ் சலேவுக்குச் சிறைக்குள் சித்திரவதைகள் இழைக்கப்பட்டதா என்பதை ஆராய 5 பேர் கொண்ட விசேட மனநல மருத்துவக் குழுவை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்த சத்தியாகிரகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
'ஈஸ்டர் தாக்குதல் குறித்து வழங்கப்பட்ட ரகசிய வாக்குமூலம்'
எதிர்த்தரப்பு இதை அரசியல் நாடகம் என வர்ணித்துக் கொண்டிருந்த வேளையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஜூன் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட உத்தியோகபூர்வ விவரங்கள், இந்த விவாதங்களை வெறும் அரசியல் தளத்தில் இருந்து நீதிமன்ற விவகாரமாக மாற்றின.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில் சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டதாகக் கூறி, அமைச்சர் சபையில் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தது.
"கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்கள் நடப்பதற்குச் சரியாக மூன்று வாரங்களுக்கு முன்பு, மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மூன்று முஸ்லிம்களை நீர்கொழும்பு பிரதேசத்திற்கு அனுப்பி, அங்குள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஞாயிறு விசேட வழிபாடுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை போன்ற மிக உன்னிப்பான உளவு விவரங்களைத் திரட்டியுள்ளார்" என்று அமைச்சர் கூறினார்.
அத்துடன், "எத்தனை கூடாரங்களை அமைத்துப் போராடினாலும், என்னதான் உண்ணாவிரத நாடகங்களை நடத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் இந்த உத்தியோகபூர்வ விசாரணைகளை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை," என்றும் அமைச்சர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தாக்குதல்களின் முதன்மைச் சதிகாரராகக் கருதப்பட்ட சஹாரான் ஹாஷிமின் நெருங்கிய சகா ஒருவர் தற்போது அரச சாட்சியாக மாறி, நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலங்கள் வழங்கியுள்ளதாக அரசு கூறுகிறது. இந்தச் சூழலில், சுரேஷ் சலே விசாரணைக்குத் தேவையான கடவுச் சொற்களை வழங்க மறுப்பது, "தாக்குதல்களுடன் அவருக்கு இருக்கும் மறைமுகத் தொடர்பை மேலும் வலுப்படுத்துவதாக" அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரித்தார்.
கிறிஸ்தவ சமூகத்தின் புதிய நம்பிக்கையும் அருட்தந்தை சிறில் காமினியின் சவாலும்
கடந்த ஏழு ஆண்டுகளாக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கத்தோலிக்க திருச்சபைக்கு தற்போதைய சட்ட நகர்வுகள் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. "அரசியல் மேடை நாடகங்கள் மற்றும் போலியான விவாதங்கள் மூலம், இந்த மகா கொடூரக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை மறைக்க முற்படும் அனைவரும் மிகவும் மோசமானவர்கள்," என பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்து இருப்பதுடன் தற்போதைய விசாரணைகளை அவர் வரவேற்றுள்ளார்.
அதேபோல, கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளரான அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, சலேவின் விவகாரம் குறித்து திருச்சபையின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
அப்போது அவர், "மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் தற்போதைய நிலை மற்றும் அவரது தடுத்து வைப்பு குறித்து நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரது விதி என்ன என்பதை நாட்டின் சுயாதீன நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். இதில் யாரும் தலையிடக் கூடாது," என்றார். மேலும், விசாரணைகளின்போது எவரும் மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தப்படுவதைத் தாம் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் தமிழ் அரசியல் தரப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசனும், மைத்ரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகிய மூன்று முன்னாள் ஜனாதிபதிகளின் காலத்திலும் இந்தத் தாக்குதலின் உண்மைகள் திட்டமிட்டு மூடிமறைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, தற்போதைய விசாரணைகளை வரவேற்றுள்ளார்.
'பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் இரட்டை முகம்'
உளவுத் துறை அதிகாரி ஒருவர், அதே உளவுத் துறை பல ஆண்டுகளாகப் பயன்படுத்திய பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிக்கியிருப்பதை, காலத்தின் விசித்திரமான தீர்ப்பு என்கிறார் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா. ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் இதே சட்டத்தின் கீழ் 22 மாதங்கள் எவ்வித ஆதாரமுமின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், தற்போதைய சூழல் குறித்த தனது பார்வையை முன்வைத்தார்.
"கடந்த காலங்களில் இந்தக் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டமானது சிறுபான்மையின சமூகங்களை இலக்கு வைக்கவும், உண்மையான குற்றவாளிகளைத் தப்பவிட்டு அப்பாவி மக்கள் மீது பழி சுமத்தவுமே பயன்படுத்தப்பட்டது. அன்று நீண்டகால நிர்வாகத் தடுப்புக் காவல், சித்திரவதைகள் குறித்து நாங்கள் வீதிகளில் இறங்கிப் போராடியபோது, இன்று சுரேஷ் சலேவுக்காக குரல் கொடுக்கும் அரசியல் தரப்புகள் மௌனமாக இருந்தது மாத்திரமன்றி, இந்தச் சட்டத்தை நியாயப்படுத்திக் கொண்டும் இருந்தார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, "அன்று எத்தனையோ அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் சிஐடி நிலவறைகளில் அடைக்கப்பட்டபோது அதை தேசபக்தி என்று கொண்டாடியவர்கள், இன்று தங்கள் அரசியல் கூட்டாளி சிக்கியவுடன் மனித உரிமைகள் குறித்துப் பேசுவது வெளிப்படையான அரசியல் நாடகம்."
எவ்வாறாயினும், "கடந்த 7 ஆண்டுகளாக இந்தச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுபான்மையின மக்களின் கண்ணீருக்குக் காரணமான அதே உளவுத்துறைப் பொறிமுறை, இன்று அதே சட்டத்தின் வளையத்திற்குள் சிக்கியிருப்பது காலத்தின் விசித்திரமான தீர்ப்பு" எனத் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை வழிமொழியும் வகையில் பேசியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, "அமைதி நிலவிய காலப் பகுதியில் சஹரான் ஹாஷிம் உள்ளிட்டோருக்கு சம்பளம் வழங்கிப் பராமரித்தவர் சுரேஷ் சலேவே என்பது உலகறிந்த உண்மை. கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்குக் கொண்டு வருவதற்கான அரசியல் தேவையை நிறைவேற்றவே இந்தத் தாக்குதலுக்கு உளவுத்துறை மறைமுகமாக வழிவகுத்தது" என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் அவசர மனு
சுரேஷ் சலேவின் கைதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை அடுத்து, கடந்த ஜூன் 3ஆம் தேதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் பயணத் தடை தம்மைக் கைது செய்வதற்கான முதல்கட்ட முன்னோடி நடவடிக்கை என்ற காரணமாக, தம்மை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவசரமாக விசேட மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
வத்திக்கானுக்கு பறந்த கடிதங்களும் சர்வதேச பின்னணியும்
மறுபுறம், இந்தச் சட்டப் போராட்டத்தை எதிர்கொள்ள சுரேஷ் சலேவின் குடும்பத்தினர் சர்வதேச கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளனர். சலேவின் மனைவி மனோரி சலே, கத்தோலிக்க ஆயர் பேரவைக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பிய கடிதத்தில், எஃப்.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய எந்தவொரு விசாரணையிலும் தனது கணவர் சந்தேக நபராக அடையாளம் காணப்படவில்லை என்றும், நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் முன்பே அவரது கௌரவம் அழிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, சுரேஷ் சலேவின் தாயார் கிளோடியா சலே, கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தின் ஊடாக கத்தோலிக்க தலைமை பீடத்திற்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், திருச்சபை குருமார்கள் தனது மகனைத் திட்டமிட்டுப் பழிவாங்குவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், "யாரோ சிலரது அலட்சியத்தால் இந்தத் தாக்குதல் நடந்ததாக ஏற்கெனவே ஆணைக் குழுக்களால் யார் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்ததோ, அதே நபர்களே தற்போது பழிவாங்கும் நோக்கில் என் மகனுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்," என விசாரணைக் குழுவின் பின்னணியில் நலன்களின் முரண்பாடு இருப்பதாகத் தனது கடிதத்தில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
இலங்கையின் பாதுகாப்புத் தரப்புக்குள் நிலவிய இத்தகைய ஒருங்கிணைப்பற்ற சூழல் குறித்து அண்மையில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாக்குதல் நடந்த தினத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டு முயற்சியில் ஈடுபடாமல் தனித்தனி அறைகளில் கடிதப் பரிமாற்றங்களை மட்டுமே செய்து கொண்டிருந்ததாக ஒப்புக் கொண்டார்.
மேலும், தாக்குதலில் அமெரிக்க பிரஜைகளும் உயிரிழந்ததால், அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வு அமைப்பு இலங்கைக்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்ததாகவும், அந்த இறுதி அறிக்கையை எவராலும் நிராகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'உண்ணாவிரதம் ஒரு நாடகம்' – அரசின் இறுதி விளக்கம்
விசாரணைகளுக்கு எதிராகக் கிளம்பியுள்ள அரசியல் போராட்டங்கள் மற்றும் சலேவின் உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.
அப்போது, "குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு என்று பிரத்யேகமாக எந்தவொரு விசேட அறையும் தயாரிக்கப்படவில்லை. அங்குள்ள சாதாரண அறையிலேயே அவர் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உணவு வழங்கப்படாமை இங்கு பிரச்னையல்ல, மாறாக அவர் உணவு உட்கொள்ள மறுப்பதே பிரதான பிரச்னை" எனக் குறிப்பிட்டார் அவர்.
மேலும், சலே தற்போது தேசிய வைத்தியசாலையில் சுயநினைவுடன் நடமாடுவதுடன், தனது ஆடைகளையும் அவரே அணிந்து கொள்வதாகவும், மூக்கின் ஊடாக இடப்பட்டுள்ள குழாய் வழியே உணவு நேரடியாக அவரது வயிற்றுக்குச் செலுத்தப்படுவதால் அவருக்குரிய ஊட்டச்சத்துகள் சரியாகக் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
"அவருக்கு வீட்டில் இருந்தும் உணவு கொண்டு வந்து கொடுக்கப்படுவதுடன், அவரது மனைவியே அந்தக் குழாய் வழியாக அவரது வயிற்றுக்குள் செலுத்துகிறார். அவரது உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை," எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த அரசாங்கம், "என்னதான் உண்ணாவிரத நாடகங்களை நடத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் இந்த உத்தியோகபூர்வ விசாரணைகளை நிறுத்தப் போவதில்லை" எனத் தனது இறுதி முழக்கத்தை முன்வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன?
கொழும்பு அதிகார மையங்களின் இந்த அதிரடித் திருப்பங்கள், உளவுத்துறை அதிகாரிகளின் சட்டப் போராட்டங்கள் மற்றும் அரசியல் பழிவாங்கல் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், இந்த ஒட்டுமொத்த விவகாரத்தின் மையப் புள்ளியாக இருக்கும் பாதிக்கப்பட்ட மக்களின் குரல் என்ன? அவர்களின் உண்மையான எதிர்பார்ப்பு என்ன?
கடந்த ஏழு ஆண்டுகளாக, கொடூரமான தற்கொலைத் தாக்குதல்களில் தங்கள் பிள்ளைகளை, பெற்றோரை, உறவினர்களைப் பறிகொடுத்துவிட்டு, கைகால்களை இழந்து இன்றும் ஆறாத உடல் மற்றும் மன வடுக்களுடன் வாழும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களின் ஒரே எதிர்பார்ப்பானது, அரசியல் கலப்பற்ற, நேர்மையான நீதி மட்டுமே.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சில பிரதான கோரிக்கைகள் உள்ளன. அவை,
"உண்மையான சூத்திரதாரிகள் அம்பலமாக வேண்டும்: தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகளுக்குப் பின்னால் இருந்து, தங்கள் சுயநல அரசியல் லாபங்களுக்காகவோ அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவோ இந்த மகா கொடூரச் சதியைத் திட்டமிட்ட மறைமுகக் கரங்கள் யார் என்பது உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட வேண்டும்."
"விசாரணைகள் இறுதிவரை நகர வேண்டும்: இந்த விசாரணைகள் தற்போதைய அரசின் அரசியல் விளம்பரத்திற்காகவோ, தற்காலிக மேடை நாடகமாகவோ சுருங்கிவிடக் கூடாது. கடந்த காலங்களைப் போல, அரசியல் சமரசங்கள் காரணமாக இந்த விசாரணைக் கோப்புகளும் காலப்போக்கில் தூசு படிந்துவிடக் கூடாது என்பதில் பாதிக்கப்பட்ட மக்கள் உறுதியாக உள்ளனர்."
"சட்டத்தின் முன் அனைவரும் சமம்: குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய உளவுத்துறை அதிகாரியாக இருந்தாலும் அல்லது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாகவே இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சுயாதீன நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டிக்கப்பட வேண்டும்."
ஏழு ஆண்டுகள், நான்கு அரசாங்கங்களைக் கடந்த பின்னரும், "நீதிக்கான இந்த நீண்ட இழுத்தடிப்பு என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் மற்றொரு அநீதி" என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில்,, கொழும்பு அதிகார வர்க்கத்தின் இந்த அரசியல் மோதல்களுக்கு அப்பாற்பட்டு, "எங்கள் அன்புக்குரியவர்களின் உயிரைப் பறித்தவர்களுக்குத் தகுந்த தண்டனை எப்போது கிடைக்கும்? இந்த மண்ணில் நமக்கான நீதி எப்போது நிலைநாட்டப்படும்?" என்ற ஒற்றைக் கேள்விக்கான விடையே பாதிக்கப்பட்ட மக்களின் முதன்மை எதிர்பார்ப்பாக உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு