மதுரை நகரில் ஆண்டுதோறும் பல்லாயிரம் வண்ணத்துப் பூச்சிகள் ஒன்றுகூடுவது ஏன் தெரியுமா?

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பரபரப்பான ஒரு நகரின் மையத்தில் இருக்கும் பகுதி ஒன்றில், பல ஆயிரம் வண்ணத்துப்பூச்சிகளைக் காண்பது சற்றே அரிதான ஒன்று. ஆனால், அத்தகைய அரிதான விஷயம் மதுரையிலுள்ள அமெரிக்கன் கல்லூரியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் நடக்கிறது.

இந்தக் கல்லூரியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் ஜூன் மாத இறுதியில் வந்து அமர்கின்றன. சில நாட்களுக்குப் பிறகு இவை வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன.

அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, "மழைக்காலம் தொடங்கியவுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் கேரள பகுதிகளில் இருந்து வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் இடம்பெயரும். கல்லூரி வளாகத்தில் மரங்கள் அதிகமாக இருப்பதால், இடப்பெயர்ச்சி காலத்தில் இந்த வளாகம் அவற்றுக்குத் தற்காலிக ஓய்விடமாக இருக்கிறது" என்று கூறினார் அமெரிக்கன் கல்லூரியின் விலங்கியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர், முனைவர் ஜாய் ஷர்மிளா.

வண்ணத்துப்பூச்சிகளின் இடப்பெயர்வு

"இந்தப் பகுதிக்கு வண்ணத்துப்பூச்சிகள் வருவதைக் கடந்த 2018 முதல் ஆய்வு செய்து வருகிறோம். முந்தைய ஆண்டுகளைவிட இந்த முறை அவை அதிகளவில் வந்துள்ளன" என்கிறார் முனைவர் ஜாய் ஷர்மிளா.

இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரத்தில் 20,000க்கும் அதிகமான வண்ணத்துப் பூச்சிகள் மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்திற்கு வந்துள்ளதாகவும், அதில் நான்கு வகையான வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"டார்க் ப்ளூ டைகர், ப்ளூ டைகர், காமன் க்ரோ, டபுள் பிராண்டட் க்ரோ ஆகிய இனங்களைச் சேர்ந்தவை அதிக எண்ணிக்கையில் பதிவாகியுள்ளதாக" ஜாய் ஷர்மிளா குறிப்பிட்டார்.

இந்தியாவில் இவ்வாறு வண்ணத்துப் பூச்சிகள் இடம்பெயர்வது என்பது சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமல்ல, 19ஆம் நூற்றாண்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.

"ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத் தொடக்கத்தில் வண்ணத்துப் பூச்சிகள் வழக்கத்திற்கு மாறான எண்ணிக்கையில் தோன்றி, தொடர்ந்து வடக்கு நோக்கி இடம்பெயர்கின்றன" என்று பிரிட்டிஷ் இயற்கையியலாளர் ஈ.ஹெச். ஐட்கென் 1897இல் தான் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து, 'தி ஜர்னல் ஆஃப் தி பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டி' என்ற நூலில் பதிவு செய்துள்ளார்.

"வண்ணத்துப்பூச்சிகள் இடப்பெயர்வை உள்ளூர் மக்கள் கவனித்துள்ளனர். அவை வந்து மூன்று நாட்களுக்குப் பிறகு மழை வரும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இது எப்போதுமே நடப்பதாக நான் கண்டறியவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார் ஈ.ஹெச். ஐட்கென்.

மேலும், "1897இல் ஜூன் 7 அன்று இடப்பெயர்வு தொடங்கியது. வழக்கமான பருவமழை பெய்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இது நிகழ்ந்தது. முதல் கனமழையால் முந்தைய பருவத்தின் கூட்டுப் புழு (Pupae) பருவத்தில் இருந்து வெளிவரும் வண்ணத்துப் பூச்சிகளே இவ்வாறு இடம்பெயர்கின்றன. அவை பருவமழையில் இருந்து தப்பவே இடம் பெயர்வதாக நான் கருதுகிறேன்" என்று ஈ.ஹெச். ஐட்கென் பதிவு செய்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, "அவை இடம்பெயரும்போது, ஜன்னலுக்கு வெளியே அவற்றைக் காணாமல் இருக்க முடியாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் அவை கடந்து செல்கின்றன."

வண்ணத்துப்பூச்சிகள் இடம்பெயர்வது ஏன்?

மேற்கு மலைத்தொடரில் பெய்யும் பருவ மழையே வண்ணத்துப் பூச்சிகளின் தற்காலிக இடப்பெயர்வுக்கு காரணம் எனப் பலவேறு வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இடம் பெயர்வது அல்லது வலசை செல்வது என்று அறியப்படும் இந்தச் செயல்முறை, பருவநிலைகளுக்கு ஏற்றவாறு பூச்சிகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களில் காணப்படும் பொதுவான ஒரு நிகழ்வு.

"உணவு, நீர், இடம், கூடு கட்டும் வசதிகள் அல்லது பிற வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு வாழ்விடத்தில் இருந்து, வளங்கள் அதிகமாகக் கிடைக்கும் பகுதி நோக்கி உயிரினங்கள் நகர்வது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் நிகழும்" என இந்த இயற்கை நிகழ்வை அமெரிக்காவின் பிரபல உயிரியலாளர் ஸ்னீட் பி. கொல்லார்ட் ஓர் ஆய்வுக் கட்டுரையில் விவரிக்கிறார்.

"பல வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஒரு நிலவியல் பகுதியில் பிறந்து வளர்ச்சியடைகின்றன. பின்னர், அவை முழு வளர்ச்சியை அடைந்தவுடன் வெகுதொலைவில் உள்ள மற்றொரு நிலவியல் பகுதிக்கு இடம்பெயர்கின்றன. அங்கு அவை புதிய சந்ததிகளை உருவாக்குகின்றன. அந்தச் சந்ததிகள் அந்த இரண்டாவது நிலப் பகுதியிலேயே வளர்ச்சியடைகின்றன. இத்தகைய இடப்பெயர்வுகள் தலைமுறைகளுக்கு இடையே நிகழ்கின்றன" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் கனமழையின் காரணமாக, வெப்பநிலை குறைந்து, பனிமூட்டம் போன்ற சூழல்கள் உருவாகும். இதனால் முதிர்ந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு பறப்பதில் சிரமம், தேன் கிடைப்பது குறைதல் போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே அவை கனமழை தொடங்குவதற்கு முன்பு வறண்ட சமவெளிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகளை நோக்கி இடம்பெயர்கின்றன என்பதே உயிரியலாளர்கள், ஆய்வாளர்கள் அளிக்கும் விளக்கமாக உள்ளது.

ஆண்டின் பிற்பகுதியில் (அக்டோபர்- டிசம்பர் மாதங்களில்), கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் வடகிழக்குப் பருவமழை பெய்யும்போது, இந்த வண்ணத்துப் பூச்சிகள் மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குத் திரும்புகின்றன, இதில் அடுத்த தலைமுறை வண்ணத்துப் பூச்சிகளும் அடங்கும்.

வண்ணத்துப் பூச்சிகளின் இடப்பெயர்வு எதைக் குறிக்கிறது?

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாத இறுதியில், வளாகத்தின் மரங்களில் கூட்டங்கூட்டமாகப் பல ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகளைக் காண்பது மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் மிகவும் வழக்கமான நிகழ்வாக மாறிவிட்டது.

வண்ணத்துப் பூச்சிகளின் வலசைக்கு குறிப்பிடத்தக்க காரணங்கள் இருந்தாலும், அவை ஏன் மதுரை போன்ற மக்கள் நெருக்கம் அதிகமுள்ள ஒரு நகரின் மையத்தில் அமைந்திருக்கும் கல்லூரிக்கு சில நாட்களுக்கு வருகை தருகின்றன என்பதை இன்னும் தாங்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறுகிறார் முனைவர் ஜாய் ஷர்மிளா.

"வளாகத்தில் அதிகளவு மரங்கள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். பல ஆண்டுகளாக அவை இங்கு வருகை தருவதால், 2014ஆம் ஆண்டு ஒரு வண்ணத்துப்பூச்சி தோட்டம் வளாகத்தில் உருவாக்கப்பட்டது. இந்த வளாகத்தில் மட்டும் சுமார் 45 வண்ணத்துப்பூச்சி இனங்களை நாங்கள் பதிவு செய்துள்ளோம்" என்றார் அவர்.

கல்லூரி வளாகத்தில் திவி திவி (Divi-Divi) வகை மரங்கள் இருப்பது வண்ணத்துப் பூச்சிகள் அதிகம் வருவதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என்கிறார் வண்ணத்துப்பூச்சிகள் குறித்த முனைவர் ஆய்வை மேற்கொண்டு வரும் அர்ச்சனா.

அதற்குக் காரணம், "இந்த திவி திவி மரங்களின் உச்சியில் கொத்துக் கொத்தாகப் பூக்கள் இருக்கும். வண்ணத்துப்பூச்சிகள் தொடர்ந்து தேன் குடிக்க இது வசதியாக இருக்கும். இந்தப் பூக்கள் மலர்வதற்கான தட்பவெப்ப சூழலும் இப்போது நிலவும். எனவே வலசையின்போது, தங்களுக்கான ஓய்விடமாக இந்தப் பகுதியை அவை பயன்படுத்திக் கொள்கின்றன" என்கிறார் அவர்.

"வண்ணத்துப் பூச்சிகள் சுற்றுச்சூழல் குறிகாட்டிகள் (Sensitive bioindicators). அதாவது, ஓரிடத்தில் அவை அதிகம் இருப்பது அந்த இடம் மாசு குறைவாகவும், அதிக பசுமையாக இருப்பதைக் குறிக்கும்."

"மறுபுறம், இந்தியாவில் வண்ணத்துப்பூச்சி இனங்கள் அருகி வருகின்றன. இதற்கு வாழ்விட இழப்பு, காலநிலை மாற்றம் ஆகியவை முக்கியக் காரணங்கள். எனவே நகரங்களுக்குள் இத்தகைய பசுமையான வளாகங்களை அதிகம் உருவாக்க வேண்டும்" என்று கூறுகிறார் அர்ச்சனா.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கைப்படி, உலகின் மொத்த விவசாய நிலத்தில் 35% நிலங்கள், அதாவது மனிதர்களின் உணவுப் பொருள் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் போன்ற மகரந்தச் சேர்க்கை மேற்கொள்ளும் உயிரினங்களை நம்பியே உள்ளது.

"உணவுச் சங்கிலி மற்றும் மகரந்தச் சேர்க்கைகளில் வண்ணத்துப் பூச்சிகளின் பங்கு முக்கியமானது. குறிப்பாக காடுகளின் வளர்ச்சியில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன" என்கிறார் முனைவர் ஜாய் ஷர்மிளா.

"எனவே வெறும் அழகியல் கண்ணோட்டத்தில் வண்ணத்துப் பூச்சிகளை பார்ப்பதைத் தாண்டி அவற்றைப் பாதுகாப்பது குறித்தும், அவற்றின் வலசை குறித்தும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.