சிஎஸ்கே அணி பெங்களூருவிடம் தோல்வி: சென்னையின் பிளேஆஃப் கனவு தகர்ந்ததா?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் 15வது சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் கடினம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு அணியை எதிர்த்துக் களமிறங்கியது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. இதில், மஹிபால் லாம்ரோர் 42 ரன்களையும் விராட் கோலி 30 ரன்களையும் கேப்டன் டூ பிளஸ்ஸிஸ் 38 ரன்களையும் தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 26 ரன்களையும் எடுத்தனர். இந்த நான்கு கிரிக்கெட் வீரர்களும் 99 பந்துகளில் மொத்தமாக 136 ரன்களை எடுத்தனர்.

இதையடுத்துக் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முதல் விக்கெட்டுக்கு 54 ரன்களை சேர்த்தனர். அடுத்து களமிறங்கிய உத்தப்பா, ராயுடு, ஜடேஜா, கேப்டன் தோனி, டுவைன் பிரிட்டோரியஸ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சென்னை அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக, டெவான் கான்வே 56 ரன்களையும் மொயீன் அலி 34 ரன்களையும் ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களையும் எடுத்தனர்.

சென்னை தரப்பில் மஹீஷ் தீக்ஷணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மொயீன் அலி 2 விக்கெட்டுகளையும் டுவைன் பிரிட்டோரியஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஆனால், சென்னை அணியின் டெவான் கான்வே அரை சதத்தை (56) எட்டியபோதும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 160 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த மேட்ச்சில் வென்ற பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திலிருந்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆனால், நடைபெற்ற 10 மேட்ச்களில் சென்னை அணி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இனி அடுத்துள்ள 4 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றாலும், பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதில் கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது.

தோனி கூறியது என்ன?

போட்டி நிறைவுற்றபின் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன், "பேட்டிங்கில் நீங்கள் உங்கள் இயல்பான கிரிக்கெட்டை விளையாடலாம். ஆனால், பேட்டிங் செய்த பிறகு நீங்கள் இலக்கை கண்காணித்து அதற்கேற்ப கணக்கிட வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் அந்த விஷயங்களில் முடிவுகளை எடுக்க வேண்டும். இன்றைய ஆட்டத்தில் இது ஒரு பிரச்னையாக இல்லை.

எங்கு தவறு நடந்தது என தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். புள்ளிப்பட்டியலில் உள்ள புள்ளிகளின் எண்ணிக்கையால் திசைதிருப்பப்படுவது எளிது. புள்ளிகள் அட்டவணையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை விட செயல்முறையே முக்கியம்" என்றார்.

இனி, மே 8 அன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடனும் மே 12 அன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடனும் மே 15 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும் மே 20 அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோத உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :