You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மெஸ்ஸி சாதனைகள் படைத்தாலும், எதிரணி வீரரின் 'காலை மிதித்தது' சர்ச்சையாவது ஏன்?
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் இன்று ஒரே நாளில் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த உலகக் கோப்பையில் களமிறங்கிய மெஸ்ஸி, அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். அவரது ஹாட்ரிக் காரணமாக அர்ஜெண்டினா அணி 3-0 என வெற்றி பெற்றது.
அதிக வயதில் உலகக் கோப்பை ஹாட்ரிக் அடித்தவர், உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோலடித்தவர், அதிக உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றவர் எனப் பல்வேறு சாதனைகளைப் படைத்தார் மெஸ்ஸி.
அதேசமயம், இந்தப் போட்டியின்போது சிவப்பு அட்டை கொடுத்து மெஸ்ஸி வெளியேற்றப்பட்டிருக்கவேண்டும் என்றும், அவர் மெஸ்ஸி என்பதால் அவருக்கு சலுகை வழங்கப்பட்டதாகவும் ஒருபக்கம் விவாதம் எழுந்திருக்கிறது.
மெஸ்ஸியின் ஹாட்ரிக்கால் வென்ற அர்ஜெண்டினா
கான்சாஸ் சிட்டி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே மெஸ்ஸி மிகச் சிறப்பாக விளையாடினார். வலது விங்கில் தொடங்கியிருந்தாலும், நடுப்பகுதிக்கு நகர்ந்து வந்து டிஃபண்டர்களுக்கு சவால் கொடுப்பது, அவ்வப்போது நடுகளத்தோடு இணைந்து அட்டாக்கைத் தொடங்குவது என முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆட்டத்தின் 6-ஆவது நிமிடத்திலேயே பந்தை கோலுக்குள் அனுப்பினார் மெஸ்ஸி. ஆனால், ஆஃப் சைட் காரணமாக அந்த கோல் மறுக்கப்பட்டது. இருந்தாலும் விரைவிலேயே தன் அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் அவர்.
ராட்ரிகோ டி பால் கொடுத்த பாஸை பெற்று பாக்சை நோக்கி முன்னேறிய மெஸ்ஸி, பாக்சுக்கு வெளியே இருந்து தன் இடது காலால் அடித்த அதிவேக ஷாட்டை, அல்ஜீரிய கோல் கீப்பரால் தடுக்க முடியவில்லை. கோல்கீப்பரின் கையில் பட்டும் பந்து கோலுக்குள் செல்ல, அர்ஜெண்டினா இந்த உலகக் கோப்பையில் தங்கள் முதல் கோலை அடித்தது.
மெஸ்ஸின் இரண்டாவது கோல் 60ஆவது நிமிடத்தில் வந்தது. பாக்சுக்கு வெளியே இருந்து அலெக்சிஸ் மெக்காலிஸ்டர் அடித்த ஷாட்டை அல்ஜீரிய கோல்கீப்பர் லூகா ஜிடேன் சரியாகத் தடுக்காமல் விட்டுவிட்டார். அவர் மீது பட்டு வந்த பந்தை, துரிதமாக செயல்பட்டு கோலாக்கினார் மெஸ்ஸி.
தொடர்ந்து வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டிருந்த மெஸ்ஸி, 76வது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்து ஹாட்ரிக்கை நிறைவு செய்தார். இடது விங்கில் இருந்து நிகோ கொன்சாலஸ் கொடுத்த பாஸை, பாக்சுக்கு வெளியே இருந்து அடித்து கோலாக்கினார் மெஸ்ஸி.
இந்தப் போட்டியில் மொத்தம் அவர் கோல் நோக்கி அடித்த 4 ஷாட்களில் 3 கோலாகின. அது மட்டுமல்லாமல், 2 வாய்ப்புகளையும் உருவாக்கினார் மெஸ்ஸி. 54வது நிமிடத்தில் மெஸ்ஸி உருவாக்கிக்கொடுத்த ஒரு வாய்ப்பை லௌடாரா மார்டினஸ் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அவர் அந்த ஷாட்டை நிதானமாக அடித்திருந்தால் அது கோலாகியிருக்கும்.
மெஸ்ஸி அடித்த கோலின் சிறப்பு என்ன?
இந்தப் போட்டியில் மெஸ்ஸியின் செயல்பாடு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய இந்திய முன்னாள் கால்பந்து வீரரும், தமிழ்நாடு சந்தோஷ் டிராபி அணியின் பயிற்சியாளருமான தர்மராஜ் ராவணன், "இதுவொரு முழுமையான செயல்பாடு. இந்த வயதிலும் கூட அவரால் அனைத்து வீரர்களை விடவும் சிறப்பாக செயல்பாட்டைக் கொடுக்க முடிந்தது என்று நினைக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. வாய்ப்புகளை உருவாக்குவது, முடிப்பது என அனைத்தும் செய்தார். சொல்லப்போனால், மெஸ்ஸியைத் தவிர்த்து மற்ற அர்ஜெண்டினா வீரர்கள் பெரிதாக வாய்ப்புகளை உருவாக்க தவறினார்கள். இன்னமும் அவர் அந்த அணிக்கு எவ்வளவு முக்கியமானவராக இருக்கிறார் என்பதையும் இந்த செயல்பாடு உணர்த்தியது." என்றார்.
""மெஸ்ஸி 'ஜோன் 14' பகுதியிலிருந்து அடித்த அவரது முதல் மற்றும் மூன்றாவது கோல்கள் உலகத்தரம் வாய்ந்தவை. அல்ஜீரிய டிஃபண்டர்கள் அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்த வெளியை அவர் தனக்கு நன்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். அதேசமயம், எளிமையானதாகக் கருதப்படும் அந்த 2வது கோல் மெஸ்ஸியின் தரத்தைக் காட்டியது."
"அந்த கோல் வெறுமனே 'டேப் இன்' (tap in) கோலாகத் தோன்றலாம். ஆனால், அதை எல்லோராலும் கோலாக்கிவிட முடியாது. பந்து அந்த இடத்தில் ஒரு வாய்ப்பு உருவாவதை சரியாக மோப்பம் பிடிக்கவேண்டுமே! அதை மிகச் சிறந்த கோல் ஸ்கோரர்கள் மட்டுமே செய்வார்கள். அங்கு வாய்ப்பு உருவானதை விரைந்து உணர்ந்தது, உடனடியாக அதற்கு ரியாக்ட் செய்து அதை கோலாக்கியது போன்றவை தான் அவர் ஏன் மெஸ்ஸி என்பதை உணர்த்துகிறது. அல்ஜீரிய டிஃபண்டர்கள் கூட யாருமே அந்த இடத்தில் எதிர்பார்த்து பந்தை நோக்கி நகரவில்லை. அதுதான் மெஸ்ஸியின் தரம்" என்று கூறினார்.
ஒரே போட்டியில் மெஸ்ஸி படைத்த சாதனைகள்
இந்தப் போட்டியில் களமிறங்கியபோதே பல்வேறு சாதனைகள் படைத்தார் மெஸ்ஸி. ஆறு ஃபிஃபா உலகக் கோப்பை தொடர்களில் களமிறங்கிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அவர். 2006 உலகக் கோப்பையில் அறிமுகமான மெஸ்ஸி, தொடர்ந்து ஆறாவது தொடரில் தற்போது களமிறங்கியிருக்கிறார்.
இந்தப் போட்டி மெஸ்ஸிக்கு 200ஆவது சர்வதேசப் போட்டியாகவும் அமைந்தது. இதன்மூலம் 200 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய முதல் அர்ஜெண்டீன வீரர் என்ற சாதனையும் படைத்தார் அவர். உலக அரங்கில் இந்த மைல்கல்லை எட்டும் மூன்றாவது வீரர் மெஸ்ஸி. இதற்கு முன் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் குவைத்தின் பாடெர் அல்-முடாவா ஆகியோர் மட்டுமே ஆண்கள் கால்பந்தில் தங்கள் நாட்டுக்காக 200 போட்டிகளுக்கும் மேல் விளையாடியவர்கள்.
அல்ஜீரியாவுக்கு எதிராக தன் முதல் கோலை அடித்தபோது தொடர்ந்து 5 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகளில் கோலடித்து முதல் அர்ஜெண்டினா வீரர் என்ற சாதனையைப் படைத்த மெஸ்ஸி, இரண்டாவது கோல் அடித்தபோது அதிக வயதில் ஒரு ஃபிஃபா உலகக் கோப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட கோல் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தார்.
76-ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி அடித்த மூன்றாவது கோல் இரண்டு சாதனைகளைப் படைத்தது. இது மெஸ்ஸியின் முதல் உலகக் கோப்பை ஹாட்ரிக்காக அமைந்தது. மேலும், உலகக் கோப்பையில் அதிக வயதில் ஹாட்ரிக் அடித்தவர் என்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை உடைத்தார் மெஸ்ஸி.
மேலும், அந்த கோல் ஃபிஃபா உலகக் கோப்பையில் மெஸ்ஸி அடித்த 16வது கோல். இதன்மூலம், ஃபிஃபா உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவரான ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோசாவின் சாதனையை சமன் செய்தார் மெஸ்ஸி.
மெஸ்ஸிக்கு சலுகை வழங்கப்பட்டதா?
இந்தப் போட்டியில் மெஸ்ஸி பல்வேறு சாதனைகள் படைத்தாலும், ஒரு மிகப் பெரிய சர்ச்சையும் தற்போது எழுந்திருக்கிறது.
ஆட்டத்தின் 32-ஆவது நிமிடத்தில் அல்ஜீரிய கேப்டன் ஐசா மண்டி மெஸ்ஸியால் ஃபவுல் செய்யப்பட்டார். பின்னால் இருந்து மண்டியை டேக்கிள் செய்த மெஸ்ஸி, மண்டியின் காலின் பிற்பகுதியில் தன் காலால் மிதித்தார். நடுவர் சைமன் மார்சினியாக் அதற்கு ஃபவுல் கொடுத்தாலும், மஞ்சள் அட்டையோ, சிவப்பு அட்டையோ கொடுக்கவில்லை. அது இற்போது விவாதத்துக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.
அந்த ஃபவுலுக்காக மெஸ்ஸி சிவப்பு அட்டை பெற்றிருக்கவேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு வீரர் மற்றொரு வீரரை இதுபோல் மிதிக்கும்போது பல தருணங்களில் சிவப்பு அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மெஸ்ஸியின் இந்த ஃபவுல் மெஸ்ஸிக்கு மஞ்சள் அட்டை பெறாததாலும், விஏஆர் (VAR) தலையீடே செய்யாததாலும், மெஸ்ஸிக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் பலரும் கருதுகிறார்கள்.
இந்தப் போட்டிக்கான இஎஸ்பிஎன் கால்பந்து நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கால்பந்து வீரர்களான அலெஹான்ட்ரொ மொரேனோ மற்றும் நெதும் ஒனோஹா இருவரும் மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று பேசினார்கள்.
மெஸ்ஸியின் ஃபவுல் பற்றியும், அவருக்கு சலுகை வழங்கப்படுகிறது என்ற விவாதங்கள் பற்றியும் பேசிய மொரேனோ, "இது 100 சதவிகிதம் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டிருக்கவேண்டிய தருணம். இதில் இன்னும் பிரச்னைக்குறிய விஷயத்தையும் நான் சொல்கிறேன்... 'பெரிய வீரர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படுகின்றன' என்பதற்கு ஏற்ப நடந்தவொரு விஷயம். மெஸ்ஸி ஹாட்ரிக் அடிப்பதற்கு முன் அடித்த ஒரு ஷாட்டை கோல்கீப்பர் ஜிடேன் தடுத்ததும், கேமரா ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோவைக் காட்டியது. அவர் சிரித்துக்கொண்டே, 'அது கிட்டத்தட்ட கோலாகிவிட்டது' என்பதுபோல் ரியாக்ட் செய்தார். இவையெல்லாம், இந்த வீரர் வித்தியாசமாக நடத்தப்படுகிறார் என்று சொல்வதற்கேற்பவே நடக்கிறது.
நாம் நிறுத்தப்பட்ட காட்சிகளைப் பார்க்கவேண்டியதில்லை, நேரலை வீடியோவைப் பார்த்தாலே தெரிகிறது அது மோசமான ஃபவுல் என்று. யாராவது அதை மீண்டும் பார்த்திருக்கவேண்டும். ஏன் கள நடுவரை விஏஆர் அழைக்கவில்லை? நான் என்னதான் மெஸ்ஸியை விரும்பினாலும், அது மோசமான ஃபவுல், முழுங்காலுக்குக் கீழே காலின் பின்பகுதியில் ஒரு வீரரை மிதிக்கும்போது அங்கு நிச்சயம் சிவப்பு அட்டைக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்" என்று கூறினார்.
தி அத்லெடிக் தளத்தில் இதுபற்றி எழுதிய ஆலிவர் மெக்கே, "மெஸ்ஸிக்கு சலுகை வழங்கப்பட்டதா என்று சொல்ல முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் நடுவர் தாராளமான மனதோடு முடிவெடுத்தார் என்று சொல்லலாம். ஒரு மஞ்சள் அட்டை அநேகமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முடிவாக இருந்திருக்கும் - இரண்டாவதாக ஒரு சிவப்பு அட்டை - ஆனால் மெஸ்ஸி எந்தவித தண்டனையுமின்றி தப்பியது நிச்சயமாக அவரது அதிர்ஷ்டம் தான்" என்று குறிப்பிட்டார்.
மறுபக்கம், வீரரைக் காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் மெஸ்ஸி இதை செய்யாததால், இது சிவப்பு அட்டை தரக்கூடிய தருணமாகக் கருதவேண்டியதில்லை என்ற விவாதங்களும் எழவே செய்கின்றன.
இந்நிலையில், இந்த சர்ச்சை பற்றி பிபிசி தமிழிடம் பேசிய தர்மராஜ் ராவணன், "காயப்படுத்தும் நோக்கம் இருந்ததா, இல்லையா என்பதெல்லாம் இரண்டாவது விஷயம், அது நிச்சயம் மோசமான ஃபவுல். பல தருணங்களில் சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் குறைந்தபட்சம் மஞ்சள் அட்டையாவது கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். 100% மஞ்சள் அட்டை பெறுவதற்கான ஃபவுல் தான் அது. ஆனால், இந்த விஏஆர் காலகட்டத்தில் அதுகூட கொடுக்கப்படாதது தான் ஆச்சர்யமாக இருக்கிறது" என்று கூறினார்.
மெஸ்ஸிக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது என்ற விவாதம் பற்றிப் பேசிய அவர் இன்னொரு பார்வையை முன்வைத்தார். "உண்மையைச் சொல்லப்போனால் கிறிஸ்டியானோ ரொனால்டோவாக இருந்திருந்தாலும் இதுவே நடந்திருக்கும். பொதுவாகவே கால்பந்து அட்டாக்கர்களுக்கு சாதகமாகத்தானே இருக்கிறது. அது பெரிய பெயர் கொண்ட அட்டாக்கர்களுக்கு சாதகமாகவே இருக்கும். இந்த இடத்தில் அதுவே ஒரு டிஃபண்டர் மேற்கொண்ட டிஃபன்ஸிவான நகர்வாக இருந்தால், முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். இந்தப் பார்வை நிச்சயம் மாறவேண்டும்" என்று கூறினார். தான் விளையாடிய காலத்தில் ராவணன் ஒரு டிஃபண்டராக இருந்தவர்.
மெஸ்ஸியின் சாதனைகள் ஒருபக்கம் கொண்டாடப்பட்டுவந்தாலும், இந்த சர்ச்சையும் மறுபக்கம் பேசப்பட்டு வருகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு