அயோத்தி ராமர் கோவில் காணிக்கையில் பல கோடி ரூபாய் முறைகேடா? சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

    • எழுதியவர், கௌரவ் குல்மோஹர்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் காணிக்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம் கடந்த சில நாட்களாகப் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கடந்த ஜூன் 7ஆம் தேதி, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராமர் கோவிலுடன் தொடர்புடைய பல கோடி ரூபாய் காணிக்கை பணம் மாயமாகிவிட்டதாக எக்ஸ் தளத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

அவர் எக்ஸ் தளத்தில், "உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் அனைவருக்கும் இது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு செய்தி, 'ராமர் கோவில்' காணிக்கையில் பல கோடி ரூபாய் பணம் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது" என்று எழுதியிருந்தார்.

அதே நேரத்தில், அயோத்தி மாவட்ட ஆட்சியர் ஷசாங்க் திரிபாதி பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "ராமர் கோவில் காணிக்கை தொடர்பாக என்னென்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளனவோ, அவை தொடர்பாகத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிந்த பிறகு, அதுகுறித்த உண்மைகளும் தகவல்களும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படும்" என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பரஸ்பர குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டு, ராமர் கோவில் நிதி சர்ச்சை குறித்து விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு மூன்று பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரி விஜய் விஸ்வாஸ் பந்த், ஐபிஎஸ் அதிகாரி கிரண் மற்றும் நிதித்துறையின் சிறப்புச் செயலாளர் நீல் ரத்தன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்ஐடி ) திங்கட்கிழமை அயோத்தியைச் சென்றடைந்தது.

மறுபுறம், எதிர்க்கட்சிகள் இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

விசாரணை முடிந்த பிறகு, இந்த குழு தனது அறிக்கையை உத்தரப் பிரதேச அரசிடம் சமர்ப்பிக்கும்.

முழு விவகாரம் என்ன?

ராமர் கோவிலின் காணிக்கை அல்லது நன்கொடைகளில் முறைகேடுகள் நடப்பதாக உள்ளூர் அளவில் அவ்வப்போது கேள்விகள் எழுப்பப்பட்டுத்தான் வருகின்றன.

அயோத்தியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி அரசின் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பவன் பாண்டே பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "இந்தக் கொள்ளை ஒன்றும் புதியதல்ல. இந்த டிரஸ்ட் (ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா) அமைக்கப்பட்டதில் இருந்தே ஊழல் நடந்து கொண்டுதான் இருக்கிறது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "முதலில் டிரஸ்டின் நில ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது, அதற்குப் பிறகு காணிக்கைப் பணத்தை எண்ணும் பணியை மேற்பார்வையிட்டு வந்த மகிபால் சிங், காணிக்கைப் பணம் திருடப்படுவதாகப் புகார் அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் அயோத்திவாசிகள், கோவிலில் பத்து-பதினைந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்தவர்கள் இன்று என்ன நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

ஆனால், இந்த முறை முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் இதைப் பதிவிட்ட பிறகுதான், இந்த விவகாரம் ஒரு பெரிய அரசியல் விவாதமாக மாறியது.

அவர் எக்ஸ் தளத்தில், "உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் அனைவருக்கும் இது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு செய்தி, 'ராமர் கோவில்' காணிக்கையின் பல கோடி ரூபாய் பணம் காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளது. இது கோவில் டிரஸ்டிற்கு மிகவும் அவமானகரமான ஒரு சூழ்நிலை. இதற்கு விளக்கம் அளிக்க யாருமே முன்வர மறுக்கிறார்கள். நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் உலக அளவில் ஒட்டுமொத்த சனாதன சமூகமும் ராமர் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கையோடு இது நேரடியாகத் தொடர்புடையது. அரசின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று எழுதியுள்ளார்.

அதே நாளில் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இரண்டாவது பதிவில் "டிரஸ்டின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றாக அமர வைத்து விளக்கம் பெற வேண்டும். கணக்குகளைச் சரிபார்க்க சிசிடிவி ஆதாரங்களின் உதவியை நாட வேண்டும். அனைத்து டிரஸ்டிகளும் ஒன்றாக அமர்ந்தவுடனேயே உண்மை வெளியே வந்துவிடும், ஏனெனில் அவர்களில் உள்ள எல்லாரும் ஒரே மாதிரியானவர்கள் கிடையாது. இந்த முறைகேட்டுச் சந்தேகத்தின் மையப் புள்ளியாக ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே இல்லாதபோது, யாரோ ஒருவரின் விளக்கத்திற்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?" என்று எழுதியிருந்தார்.

கடந்த ஒன்பது நாட்களில், அகிலேஷ் யாதவ் ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரம் தொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து 8 பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

உள்ளூர் பாஜக தலைவரான ரஜினிஷ் சிங்கும், ராமர் கோவில் கட்டுமானத்திற்காகத் திரட்டப்பட்ட நிதி குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கொண்டு விசாரிக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

மறுபுறம், ராமர் கோவில் இயக்கத்தின் முக்கிய முகமாக இருந்தவரும், பஜ்ரங் தளத்தின் நிறுவனருமான வினய் கட்டியாரும், காணிக்கைப் பணத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறப்படுவது ஒரு தீவிரமான விஷயம் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

"இதுவொரு தீவிரமான விஷயம். இதற்காக மக்கள் தியாகம் செய்துள்ளார்கள். எங்களைப் போன்றவர்களும், கல்யாண் சிங் போன்றவர்களும் சிறைக்குச் சென்றிருக்கிறோம். கல்யாண் சிங் தனது பதவியையே ராஜினாமா செய்தார். இப்போது இங்கு இருப்பவர்கள் எல்லாரும் திருடர்கள். இவர்களை வினய் கட்டியார் வீட்டுக்கு அனுப்புவார். இவர்கள் இரண்டு நாட்களுக்குள் இங்கிருந்து ஓடிவிட வேண்டும், இல்லையென்றால் சிறைக்குள் செல்ல வேண்டும்" என வினய் கட்டியார் குறிப்பிட்டார்.

சிறப்பு புலனாய்வுக் குழு மீது எதிர்க்கட்சிகள் அவநம்பிக்கை

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, 'ஸ்ரீராம் ஜென்மபூமி கோவில் டிரஸ்ட்' கொடுத்த கோரிக்கையின் பேரில் தான் உத்தரப் பிரதேச அரசு இந்த சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.

இந்த மூன்று பேர் கொண்ட குழு, தீர்த்த க்ஷேத்திரத்தின் காணிக்கைப் பெட்டிகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்துத் தனது அறிக்கையை அரசிடம் வழங்கும்.

இன்னொரு பக்கம், அயோத்தியின் சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி, இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றம் மூலம் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

"இந்தக் கொள்ளை நாட்டின் மிகப்பெரிய கொள்ளை. இது ஸ்ரீராமரின் கோவிலில் நடந்த கொள்ளை. இது மிக உயர்மட்டத்தில் விசாரிக்கப்பட வேண்டும். உச்ச நீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு இந்த விசாரணையை நடத்த வேண்டும். அதற்கு முன்பாக, விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு டிரஸ்டின் அனைத்து உறுப்பினர்களையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இது தர்மத்திற்கு ஏற்பட்ட இழப்பு" என அவதேஷ் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறினார்,

சமாஜ்வாதி கட்சி அரசின் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான பவன் பாண்டே பிபிசியிடம் பேசுகையில், "சம்பத் ராய் முதல் அனில் மிஸ்ரா வரை எல்லாரிடமும் காணிக்கைப் பணத்தில் முறைகேடு நடப்பதாக கணக்கு அதிகாரியாக இருந்த மகிபால் முதலில்புகார் செய்திருந்தார். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் அர்த்தம் இந்த கொள்ளை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்திருக்கிறது" என்றார்.

"கோவிலுக்குள் வேலை செய்பவர்கள் இரண்டு வருடத்திற்குள் பல பிளாட்டுகளும் நிலங்களும் வாங்கியிருக்கிறார்கள், அப்படி இரண்டு வருடத்தில் என்ன தொழில் செய்து இவ்வளவு சம்பாதித்தார்கள்? அரசு சிறப்பு புலனாய்வுக் குழு கொண்டு விசாரணை நடத்துகிறது, என்ன நடக்கும் என்று கடவுளுக்குத்தான் தெரியும். ஸ்ரீராமர் தான் நம்மை பாதுகாக்க வேண்டும்."

முன்னாள் கணக்கு அதிகாரி என்ன சொன்னார்?

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா டிரஸ்டில் மகிபால் சிங் ஜனவரி 2021 முதல் மே 2022 வரை கணக்கு அதிகாரியாகப் பணியாற்றினார். ராமர் கோவில் காணிக்கைப் பணத்தை எண்ணும் பணி இவருடைய மேற்பார்வையில் தான் நடந்து வந்தது.

ராமர் கோவில் நன்கொடைகளில் முறைகேடு நடந்துள்ளதாக அவர்தான் குற்றம் சாட்டியுள்ளார்.

மகிபால் சிங்கின் கூற்றுப்படி, அலுவலகத்தின் வாராந்திரக் கூட்டத்தில் காணிக்கைப் பணத்தில் முறைகேடு நடப்பதாகப் புகார் அளித்தபோது, அவருக்குப் பதிலாக வேறு ஒரு கணக்கு அதிகாரி நியமிக்கப்பட்டார், அதன் பிறகு அவராகவே இந்த அமைப்பிலிருந்து விலகிவிட்டார்.

பிபிசி ஹிந்தி மகிபால் சிங்கிடம் பேச முயன்றபோது, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அவர் பேச மறுத்துவிட்டார்.

அவர் பிபிசி ஹிந்தியிடம், "எனக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது. நான் மிகுந்த மன அழுத்தத்திலும் பயத்திலும் இருக்கிறேன். என்னால் இப்போது எதுவும் பேசக்கூடிய சூழ்நிலை இல்லை. நான் இதுவரை பொதுவெளியில் என்ன சொல்லியிருக்கிறேனோ, அதையே எனது கருத்தாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

மகிபால் சிங் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், "எங்களது வாராந்திரக் கூட்டத்தை அலுவலகத்தில் கோபால் பாய் சாஹப் தான் நடத்துவார். கோபால் பாய் சாஹப், சம்பத் ராய்க்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருக்கிறார். நான் அவரிடம் காணிக்கை முறைகேடு பற்றிச் சொன்ன அடுத்த நாளே, எனக்குப் பதிலாக அனில் மிஸ்ரா (டிரஸ்ட் உறுப்பினர்) வேறொருவரை அந்த இடத்தில் உட்கார வைத்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.

முன்னாள் கணக்கு அதிகாரி மகிபால் சிங் அதே நேர்காணலில், காணிக்கைப் பணம் மட்டுமில்லாமல், காணிக்கையாக வந்த தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்பு மிக்க உலோகங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டிரஸ்ட் தரப்பு என்ன சொல்கிறது?

ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா டிரஸ்டின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் ஒரு வீடியோவை வெளியிட்டு, காணிக்கையில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளார்.

அவர் அந்த வீடியோவில், "ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தனது வெவ்வேறு பணிகளின் தணிக்கையை அவ்வப்போது செய்து வருகிறது. உண்டி எண்ணும் அறையும் தணிக்கை செய்யப்படுகிறது. உண்டி எண்ணும் அறையின் தணிக்கையை ராமர் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அறங்காவலர்கள், ஊழியர்கள் மற்றும் ஸ்டேட் பேங்க் ஊழியர்கள் இணைந்து செய்கிறார்கள். இந்த வேலை பல நாட்களுக்கு நடக்கும். இந்த வேலைதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை யாருடைய கவனத்திற்கும் தவறான விஷயம் எதுவும் வரவில்லை" என்று கூறியுள்ளார்.

நாங்கள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா டிரஸ்டின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் டிரஸ்டின் தற்போதைய பதினான்கு உறுப்பினர்களில் ஒருவரான அனில் மிஸ்ராவிடம் பேச பலமுறை முயன்றோம், ஆனால் அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் ஜூன் 9ஆம் தேதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுப் பல விஷயங்களில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில், "நாட்டின் சனாதன நம்பிக்கையோடு விளையாடும் இவர்களுக்கெல்லாம் பின்னால் இருப்பது யார்? காணிக்கையைத் திருடும் பாவம் செய்தவர்களை யார் காப்பாற்றுகிறார்கள்? இந்த குற்றத்தின் பின்னணி யார் யாருடன் இணைக்கப்பட்டுள்ளது, இது எவ்வளவு தூரம் செல்கிறது? இந்த முழுச் சம்பவத்தின் கடிவாளத்தை கையில் வைத்திருக்கும் அந்த அதர்மி யார்? இந்த மோசடியின் தலைவன் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறான்?" என்று எழுதியுள்ளார்.

பாஜக தலைவரும், பலமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங், ராமர் கோவில் நிதி முறைகேடு என்று கூறப்படும் கேள்விக்கு செய்தியாளர்களிடம் பேசும்போது, "பெரிய மனிதர்களைப் பார்த்துப் பயமாக இருக்கிறது" என்று பேசியுள்ளார்.

பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் இந்த அறிக்கை, டிரஸ்ட் உறுப்பினர்களின் செல்வாக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.

பிரிஜ் பூஷண் சரண் சிங் செய்தியாளர்களிடம், "நான் உண்மையைச் சொல்லிவிட்டால் பெரிய ஆபத்தில் சிக்கிக் கொள்வேன், ஏனென்றால் அவர்கள் (ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா டிரஸ்ட்) மிகவும் பெரிய மனிதர்கள். உண்மையைச் சொல்லும் தைரியம் இப்போது எனக்கு இல்லை. அதற்கான நேரம் வரும்போது பேசுவேன்" என்றார்.

இதற்கிடையில், உள்ளூர் பாஜக தலைவர் ரஜினிஷ் சிங் மீண்டும் பிரதமருக்குக் கடிதம் எழுதிப் பல விஷயங்களில் விசாரணை நடத்தக் கோரியுள்ளார்.

ரஜினிஷ் சிங் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "ரமாசங்கர் யாதவ் என்கிற டின்னு, சம்பத் ராயின் பல வருட டிரைவர் ஆவார். ராமர் கோவிலுக்குள் யாரும் ஒரு பேனாவைக் கூட எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல முடியாது, ஆனால் டின்னுவின் கார் மட்டும் உள்ளே என்ன இருந்தாலும் எந்தச் சோதனையும் இல்லாமல் கடைசி வரை செல்லும். இந்த கொள்ளையில் டின்னுவைத் தவிர அவருடைய அண்ணன் மகன் மனிஷ் யாதவ், லவ்குஷ் மிஸ்ரா, அனில் மிஸ்ரா, அனுகல்ப் மிஸ்ரா மற்றும் அவனிஷ் மிஸ்ரா எனப் பல பெயர்கள் உள்ளன. எல்லாரிடமும் கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்துள்ளது, இதை விசாரிக்க வேண்டும். இவர்கள் எல்லாரும் ஒரு சங்கிலியின் கண்ணிகள் போன்றவர்கள். ஏதோ ஒரு உதவியாளரைப் பிடிப்பதால் எந்தப் பயனும் இல்லை. இதன் சூத்திரதாரியைப் பிடிப்பதுதான் முக்கியம்" என்றார்.

பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறுகையில், ராமர் கோவில் காணிக்கை முறைகேடு குறித்துக் கேள்வி எழுப்பச் சமாஜ்வாதி கட்சிக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றார்.

அவர் பிபிசி ஹிந்தியிடம், "சமாஜ்வாதி கட்சிக்கு இதனைப் பேச தார்மீக ரீதியாக உரிமை இல்லை. ராமர் கோவில் கட்டுவதற்கு சமாஜ்வாதி கட்சி பல தடைகளை ஏற்படுத்தியது. அவர்கள் ராமர் கோவில் கட்டுமானத்திற்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பாவம் இன்னும் சமாஜ்வாதி கட்சியின் மீது ஒரு கறையாக இருக்கிறது." என்றார்.

இருப்பினும் அவர், "எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் நிச்சயமாகத் தீவிரமானவை, அதைப் பற்றி ராமர் பக்தர்களிடையே கவலை உள்ளது. இந்தக் கேள்விகளுக்குத் தீர்வு காணவே சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தனது அறிக்கையில் உண்மைகளைக் கொண்டுவரும் என்று நம்புகிறோம். விசாரணையில் யாராவது முறைகேடு அல்லது தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு