தொப்புளில் சிலருக்கு அரிப்பு, துர்நாற்றம் ஏற்படுவது ஏன்?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நம் உடலில் நாம் பெரிதும் கண்டுகொள்ளப்படாத பகுதி என்றால் தொப்புள் பகுதியை சொல்லலாம். ஆனால், தாய்க்கும் குழந்தைக்குமான பிணைப்பின் ஓர் அடையாளமாக இந்த பகுதி உள்ளது.

குழந்தையாக பிறக்கும்போது தாயுடன் இணைக்கப்பட்ட தொப்புள் கொடி நீக்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மிச்ச பகுதி தானாக சிறிது நாட்களில் உதிர்ந்துவிடும். அதன்பின், நாளடைவில் அந்த பகுதியில் சிறிய வெற்றிடமான பகுதியாக உருமாறும், அதுதான் தொப்புள் (பெல்லி பட்டன்). தாயின் நஞ்சுக்கொடியில் இருந்து முக்கிய ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவை தொப்புள் கொடி மூலமாகவே உறிஞ்சப்படும், குழந்தையிடமிருந்து கழிவுகளும் அதன்வழியே வெளியேறும்.

தாய்க்கும் குழந்தைக்குமான பிணைப்பாக கருதப்படும் தொப்புள் கொடியின் ஓர் அடையாளமாகவே தொப்புள் உள்ளது என மருத்துவர் சந்திரசேகர் குறிப்பிடுகிறார். உடலியல் ரீதியாக தொப்புளுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என குறிப்பிடுகின்றனர் மருத்துவர்கள்.

ஆனால், தொப்புளில் சிலருக்கு அரிப்பு மற்றும் துர்நாற்றம் எழுவது போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

'அதிகம் பேசப்படாத பகுதி'

தொப்புளில் அரிப்பு மற்றும் துர்நாற்றம் ஏற்படுவது ஏன் என, அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரியில் மருந்தியல் துறை தலைவராக உள்ள எஸ். சந்திரசேகர் விளக்கினார்.

"தொப்புள் தான் நம் உடலில் மிகவும் பேசப்படாத, புறக்கணிக்கப்படும் பகுதி. அதை பலரும் சரிவர சுத்தம் கூட செய்ய மாட்டார்கள். ஆனால், அப்பகுதியை தினசரி குளிக்கும்போது சுத்தம் செய்வது அவசியமாகும். இல்லையென்றால், நாளடைவில் அப்பகுதியில் தொற்று ஏற்படலாம். தொற்று ஏற்படும்போது அப்பகுதியில் அரிப்பு மற்றும் துர்நாற்றம் ஏற்படும்" என்றார்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, தொப்புள் பகுதியில் பூஞ்சை தொற்று மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பூஞ்சை தொற்றை பொறுத்தவரை தொப்புள் போன்ற உடலின் மூடப்பட்ட எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவர் சந்திரசேகர் பூஞ்சை தொற்று குறித்து விவரிக்கையில், கேண்டிடா (Candida) எனும் ஈஸ்ட் (பூஞ்சையின் ஒரு வகை) மூலமாக கேண்டிடியாசிஸ் (Candidiasis) எனும் பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.

"ஆரோக்கியமான மனிதர்களுக்கு இது பொதுவாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால், ஈரப்பதமான பகுதிகளில் 'கேண்டிடா' பூஞ்சை சேரும்போது, ​​அது சருமத்தின் மேற்பரப்புக்கு அடியில் ஊடுருவக்கூடும். இது சருமத் தொற்றை ஏற்படுத்தலாம். கேண்டிடியாஸிஸ் பாதிப்பு உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம். இருப்பினும், தொப்புள் போன்ற சருமத்தின் கதகதப்பான மற்றும் ஈரப்பதமான மடிப்புகளிலேயே இது பெரும்பாலும் காணப்படுகிறது." என்கிறது, க்ளீவ்லேண்ட் (Cleveland) க்ளீனிக்கின் இணையதளம். இது அமெரிக்காவின் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் அமைந்துள்ள ஒரு லாப நோக்கற்ற கல்வி மருத்துவ மையமாகும்.

"தொப்புளில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு மிக எளிமையான காரணம் சுகாதாரம் சார்ந்ததாகும். அதனைச் சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அப்பகுதியில் அழுக்கு, கழிவுகள், பாக்டீரியா மற்றும் பிற கிருமிகள் சேருவதற்கான வாய்ப்புள்ளது" என தெரிவிக்கிறது, 'ஹெல்த்லைன்' எனும் மருத்துவ ஆய்வு இணையதளம்.

பூஞ்சை பாக்டீரியா தொற்று

"நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இத்தகைய ஈஸ்ட் தொற்று ஏற்படலாம். தொப்புளில் இருந்து நீர் வெளியேறுதல், துர்நாற்றம், அரிப்பு ஏற்படுதல், தொப்புள் பகுதி சிவந்துபோதல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். உடலில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள், இறுக்கமான ஆடை அணிபவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் போன்றவர்களுக்கு இந்த பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது." என்கிறார், மருத்துவர் சந்திரசேகர் .

மருத்துவர்களின் கூற்றுப்படி, இறுக்கமான ஆடை அணியும்போது தொப்புள் பகுதியில் ஈரப்பதம் மற்றும் வெப்பம் ஆகியவை காரணமாக, இத்தகைய தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இவைதவிர, ஈரப்பதமான மற்றும் வெப்பமான சூழலும் இத்தகைய தொற்று ஏற்படுவதற்கு காரணங்களாக உள்ளன. வியர்வை, குளித்தல் காரணமாக ஈரத்தை சரிவர துடைக்காவிட்டாலும் இத்தகைய பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தொப்புள் பகுதியை சுத்தமாக வைத்திருக்காவிட்டாலும் இத்தகைய தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

"மனித உடலில் வியர்வையை உருவாக்கக்கூடிய சுரப்பிகள் போன்று இத்தகைய துர்நாற்றத்தை ஏற்படுத்தும் சுரப்பிகளும் உண்டு. எனவே, தொப்புள் பகுதி ஈரப்பதமாக இருக்கும்போதோ அல்லது புழுக்கமாக இருக்கும்போதோ அதில் அத்தகைய சுரப்பிகள் உள்செல்லும். பலரும் குளிக்கும்போது தொப்புளை சுத்தம் செய்வதில்லை. அதனாலும் சில சமயங்களில் துர்நாற்றம் ஏற்படும். மேலும், அப்பகுதியில் பாக்டீரியா தொற்று ஏற்படும்போது அதிலிருந்து நீர் வெளியேறி அதன்மூலமும் துர்நாற்றம் ஏற்படும்" என்கிறார் அவர்.

பரிசோதனையும் சிகிச்சையும்

தொப்புள் பகுதியில் அரிப்போ, அதனால் சிறுபுண்கள் (rash) ஏற்பட்டாலோ, அதில் ஏதேனும் தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். என்ன வகையான தொற்று என்பதை பரிசோதித்து, பூஞ்சை தொற்றாக இருப்பின் ஆன்ட்டிஃபங்கல் மற்றும் பாக்டீரியா தொற்றாக இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியா மருந்துகளும் சிகிச்சைக்காக வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். "மருந்துகள் எடுத்த சில நாட்களில் இத்தகைய தொற்றுகள் சரியாகிவிடும்." என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

"இத்தகைய தொற்றுகள் ஏற்படும்போது தொப்புள் பகுதியில் நீர் சேரவிடக் கூடாது. அதை வறண்ட நிலையில் வைத்திருக்க வேண்டும்." என்கிறார் மருத்துவர் ஜனனி சங்கர்.

"சிலருக்கு குழந்தையாக இருந்து தொப்புள் கொடி சரியாக விழாமல் அப்பகுதியில் சிறு வீக்கம் (umbilical hernia) போன்று ஏற்படும். இந்த பிரச்னையில் தொப்புளை சுற்றி தசை வலுவிழந்தால், அத்தசை பலூன் போன்று வீங்கிவிடும். இப்பிரச்னை பெரியவர்களுக்கும் வரலாம். சிறு வயதில் தொப்புள் கொடியின் எஞ்சிய பகுதி சரியாக கீழே விழாமல் இருந்தால் இத்தகைய பிரச்னை ஏற்படலாம். இதுதவிர, தொப்புள் பகுதியில் பெரிய பிரச்னை ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை." என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

மேலும், தொப்புளில் பருத்தி நார் இழை சேரும் பிரச்னையும் சிலருக்கு ஏற்படும். தொப்புளைச் சுற்றியுள்ள முடி, நாம் அணியும் ஆடையின் உள்புறம் இருந்து சிறிய நாரிழைகளை இழுத்து தொப்புளில் சேர்க்கிறது. இந்த செயல்பாடு ஒருவழிப் பாதையாக, அதாவது ஆடையில் இருந்து தொப்புளுக்கு முடி வாயிலாக நாரிழைகள் கடத்தப்படுவது மட்டுமே நடைபெறுகிறது.

அறிவியல் ரீதியாக "நேவல் ஃப்ளஃப்" (naval fluff) என்று அழைக்கப்படும் இதனை, 'பெல்லி பட்டன் லிண்ட்' என்று அழைக்கிறார்கள்.

வயிற்றில் அதிக முடி உள்ள நடுத்தர வயது ஆண்கள், எடை அதிகமாக உள்ளவர்களுக்கு தொப்புளில் இந்த கழிவுகள் அதிகமாக இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு