You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன? ஏன் இது வெளியிடப்படுகிறது?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
தமிழ்நாட்டின் நிதிநிலைமை பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதனை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.
2021-ஆம் ஆண்டில் முந்தைய திமுக அரசு பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தது.
2024-ஆம் ஆண்டு இந்தியாவின் நிதிநிலைமை பற்றி மத்திய அரசு வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
2014 முதல் 2024 வரையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக் காலத்தை அதற்கு முந்தைய பத்து ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்திருந்தது.
வெள்ளை அறிக்கை என்பது பெரும்பாலும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளால் வெளியிடப்பட்டாலும் தனியார் துறைகளிலும் வெள்ளை அறிக்கையின் பயன்பாடு வழக்கத்தில் இருந்துள்ளது.
"வெள்ளை அறிக்கை என்பது ஒரு நெருக்கடி இருக்கிறது என்றால், அதற்கு மூலக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்து, புரிந்துகொண்டு அவற்றை ஆழமாக ஆராய்ந்து வெளியே சொல்வது தான்," என பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
ஆங்கிலத்தில் வைட் பேப்பர் (white paper) என்பதன் தமிழாக்கமே வெள்ளை அறிக்கை என்று அறியப்படுகிறது. வைட் பேப்பர் என்கிற வார்த்தை 1446-ஆம் ஆண்டு தொடங்கி பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆகஸ்ஃபோர்டு ஆங்கில அகராதி கூறுகிறது.
ஸ்டான்ஃபர்ட் சட்டப் பள்ளி கொடுத்துள்ள விளக்கத்தின்படி, அரசாங்க ஆவணங்கள் அவை விநியோகம் செய்யப்பட வேண்டிய இடங்களைக் குறிப்பிட வெவ்வேறு நிறங்களால் குறிக்கப்பட்டன. அவ்வாறு வெள்ளை நிற ஆவணம் என்பது பொது அணுகலுக்கானதாகப் பயன்படுத்தப்பட்டது.
வெள்ளை அறிக்கை என்பது அரசியல், வணிகம் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
வைட் பேப்பர் போன்றே க்ரீன் பேப்பர் மற்றும் பிங்க் பேப்பர் என்கிற இரு வேறு ஆவணங்கள் இருப்பதாகவும் ஸ்டான்ஃபர்ட் ஆவணம் தெரிவிக்கிறது.
க்ரீன் பேப்பர்:
அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளில் இவை பயன்பாட்டில் உள்ளன. க்ரீன் பேப்பர் என்பது அரசாங்கம் வழங்கும் ஒரு முன்மொழிவின் தற்காலிகமான அறிக்கை. அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒரு சட்டத்தை மாற்றுவதற்கான முதல்படியாக க்ரீன் பேப்பர் உள்ளது.
பிங்க் பேப்பர்:
பிங்க் பேப்பர் என்பது அமெரிக்க கூட்டாட்சி மற்றும் மாகாண அரசு முகமைகள் இடையே உள்விநியோகத்துக்காக பயன்படுத்தப்படும் கொள்கை ஆவணமாக உள்ளது.
எதற்கெல்லாம் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்?
வெள்ளை அறிக்கை என்பது பொருளாதார விவகாரங்களுக்கு மட்டுமல்லாது பாதுகாப்பு மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசாங்கம் தொடர்பான பல்வேறு விஷயங்களுக்கும் வெளியிடப்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் பொது வெளியில் வைப்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்படுகின்றன.
வெள்ளை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
வெள்ளை அறிக்கை என்பது ஒரு விளக்க ஆவணமாகவே உள்ளது. குறிப்பிட்ட தலைப்பில் தெளிவு ஏற்படுத்த அல்லது விவாதங்களை உருவாக்கவே வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இதில் எந்தப் பரிந்துரைகளும் வழங்கப்படாது. அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு இல்லை.
இந்தியாவைப் பொருத்தவரை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மட்டுமல்லாமல் நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் வெள்ளை அறிக்கைகளை வெளியிடுகின்றன.
தமிழ்நாடு அரசு இதற்கு முன்னர் வெளியிட்ட வெள்ளை அறிக்கைகள் என்ன?
2001-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
2021-இல் திமுக அரசும் நிதிநிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
மத்திய அரசு இதற்கு முன்னர் வெளியிட்ட முக்கியமான வெள்ளை அறிக்கைகள் என்ன?
1950-ஆம் ஆண்டு மத்திய அரசு சமஸ்தானங்கள் இணைப்பு தொடர்பாக "இந்திய மாநிலங்கள் பற்றிய வெள்ளை அறிக்கை - (White paper on Indian states) என்கிற தலைப்பில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மாநிலங்கள் இணைப்பு தொடர்பான சர்ச்சைகள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை அந்த அறிக்கை விளக்குகிறது. சுதந்திர இந்தியாவில் வெளியிடப்பட்ட முக்கியமான வெள்ளை அறிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
1984-ஆம் ஆண்டு மத்திய அரசால் "பஞ்சாப் கிளர்ச்சி பற்றிய வெள்ளை அறிக்கை (White paper on Punjab agitation) என்கிற பெயரில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வந்த போராட்டங்கள் மற்றும் அங்கு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த அறிக்கையில் விளக்கப்பட்டிருந்தது.
1993-ஆம் ஆண்டு பி.வி.நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு "அயோத்தி மீதான வெள்ளை அறிக்கை (White paper on Ayodhya) என்கிற அறிக்கையை வெளியிட்டிருந்தது. 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூடி இடிக்கப்பட்டதை ஒட்டிய நிகழ்வுகள், அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை அதில் விளக்கப்பட்டிருந்தன.
இதே விஷயத்தில் பாரதிய ஜனதா கட்சியும் தனியாக வெள்ளை அறிக்கை ஒன்றை கட்சி சார்பில் வெளியிட்டிருந்தது.
2009-ஆம் ஆண்டில் மத்திய ரயில்வே அமைச்சகத்தால் இந்திய ரயில்வே தொடர்பாக வெள்ளை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதேபோல, 2012-ஆம் ஆண்டு கருப்பு பணம் தொடர்பான வெள்ளை அறிக்கை ஒன்றையும் மத்திய அரசு வெளியிட்டிருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு