You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிஎஸ்கே அணிக்கு மீண்டும் கேப்டன் ஆன தோனி - ரவீந்திர ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ஆட்டத்தில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பதாக அவர் கூறியதையடுத்து சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பு எம்.எஸ் தோனியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு, சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளிவந்துள்ளது.
அதில், "ரவீந்திர ஜடேஜா தனது விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியை துறக்க முடிவு செய்துள்ளார், மேலும் சிஎஸ்கேயை வழிநடத்த எம்எஸ் தோனிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜடேஜா தனது விளையாட்டில் கவனம் செலுத்த அனுமதிக்கும் வகையில் சிஎஸ்கே அணியை வழிநடத்த எம்எஸ் தோனி ஒப்புக்கொண்டுள்ளார்," என்று கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் 15ஆம் சீசன் தொடக்கத்தில் எம்.எஸ் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலகினார். அப்போது ரவீந்திர ஜடேஜா அணியின் கேப்டன் ஆக பொறுப்பேற்றார். ஆனால், ரவீந்திர ஜடேஜா அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து, இந்திய ஆல்-ரவுண்டர் ஆக அறியப்பட்ட அவர் பேட்டிங் அல்லது பந்து வீச்சு என எதிலும் பரிணமிக்கவில்லை.
33 வயதாகும் ஜடேஜா எட்டு போட்டிகளில் 112 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக அவர் எடுத்தது 26 ரன்கள் மட்டுமே.
இருப்பை தக்க வைக்க போராடிய ஜடேஜா
ஐபிஎல் 2022 சீசனில் ஜடேஜாவின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, அவர் 8.19 என ஏமாற்றம் தரும் வகையில் 213 ரன்களை விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.
கடந்த சீசனில் நான்காவது முறையாக பட்டத்தை வென்ற போதிலும், ஐபிஎல் 2022 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஒன்பதாவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது, ரவீந்திர ஜடேஜாவின் தலைமையின் கீழ் எட்டு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே அந்த அணி வெற்றி பெற்றது.சமீபத்தில் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பை அணியின் வளர்ச்சிக்காக ஒப்படைப்பதாகக் கூறி பதவி விலகினார். அதுபோலவே தமது கேப்டன் பதவியை ஜடேஜா ஒப்படைத்திருப்பதாக நம்பப்படுகிறது.
எம்.எஸ். தோனி 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சிஎஸ்கே அணியை வழிநடத்தினார். இந்த 13 ஆண்டுகளில், நான்கு ஐபிஎல் வெற்றிகள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராஃபி வெற்றிகளை தோனியின் தலைமை சிஎஸ்கேவுக்காக பெற்றுத் தந்துள்ளது.
தோனி மீண்டும் சிஎஸ்கே தலைமை பொறுப்பை ஏற்றிருப்பதற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவும் வரவேற்பும் காணப்படுகிறது. பலரும் சமூக ஊடகங்களில் தோனியின் வருகையை பாராட்டியும் ரவீந்திர ஜடேஜாவின் விலகலை விமர்சித்தும் இடுகைகளைப் பகிர்ந்து வருகிறார்கள். தோனியின் தலைமை பிரவேசத்தால் இந்த சீசனில் சிஎஸ்கேவை பிளேஆஃபுக்கு தகுதி பெற முயற்சிப்பார் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்