கிரிக்கெட் உலகக் கோப்பை 2011: இலங்கையின் அணியின் அரவிந்த டி சில்வா, சங்கக்காராவிடம் காவல்துறையினர் விசாரணை

பிரசுரிக்கப்பட்டது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் இலங்கை போலீஸின் விளையாட்டு விசாரணை பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் தெரிவுக்குழு தலைவருமான அரவிந்த டி சில்வாவிடம், விசாரணை நடத்தியுள்ளது.

சுமார் 5 மணித்தியாலங்களுக்கு மேல் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது, இலங்கை அணி உலகக் கோப்பையை இந்திய அணிக்கு தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தன்னிடமுள்ள சாட்சியங்கள் அனைத்தையும் அண்மையில் இலங்கை போலீஸின் விளையாட்டு விசாரணை பிரிவிடம் கையளித்திருந்தார்.

இதையடுத்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக அப்போதைய தெரிவுக்குழு தலைவராக செயற்பட்ட அரவிந்த டி சில்வா மற்றும் உபுல் தரங்க ஆகியோரிடம் இலங்கை போலீஸ் விளையாட்டு விசாரணை பிரிவு ஏற்கனவே விசாரணைகளை நடத்தியுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவிடம் சுமார் இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைகள் தொடர்பில் பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட வேண்டாம் என விசாரணை பிரிவு அறிவித்துள்ளதாக தெரிவித்த அரவிந்த டி சில்வா மற்றும் உபுல் தரங்க, ஊடகங்களுக்கு அதுதொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

எனினும், 2011ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியாவிற்கு தாரைவார்த்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் தெரிவுக்குழு தலைவர் அரவிந்த டி சில்வா அண்மையில் நிராகரித்திருந்தார்.

குறித்த குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் ஐ.சி.சி. ஊழல் ஒழிப்பு பிரிவிடம் முன்வைக்க வேண்டும் எனவும், சுயாதீன விசாரணையொன்றை நடத்துமாறு ஐ.சி.சியிடம் கோருமாறும் அரவிந்த டி சில்வா கூறியுள்ளார்.

இவ்வாறு விசாரணை நடத்தப்படும் பட்சத்தில், தாம் அதை எந்தநேரத்திலும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த போட்டி நடைபெற்ற காலப் பகுதியில் ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் உபாதைக்குள்ளாகியிருந்தமை, தமக்கு அப்போது பெரிய பிரச்சனையாக காணப்பட்டது என அவர் கூறுகின்றார்.

அவர் உபாதைக்குள்ளானது, கிரிக்கெட் அணியை சமநிலைப்படுத்த பெரிய சவாலாக அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலக கோப்பை போட்டிகளின் போது அணியில் மாற்றங்களை ஏற்படுத்த ஐ.சி.சி அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், இலங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியின்றி அணியில் மாற்றம் ஏற்படுத்தப்படாது எனவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், தன்னிடம் அனுமதியின்றியே அணியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்டு விசாரணையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்காரா நேற்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

விளையாட்டு வீரர்களை அரசியலுக்காக பழி வாங்குவது தவறானது என்றும் சங்கக்காரா, அரவிந்த, உபுல் தரங்க உள்ளிட்ட வீரர்கள் விசாரணை செய்யப்படுவதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: