ஜெயக்குமாரின் பிணை மனு தள்ளுபடி: சென்னை நீதிமன்றம்

தேர்தல் விதிகளை மீறியதாகவும் வன்முறையை தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மறுத்து விட்டது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 218 பதவிகளுக்கு போட்டியின்றி தேர்வு

    தேர்தல்

    பட மூலாதாரம், TWITTER

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்கனவே 218 பேர் போட்டியின்றி தேர்வாகினர்.

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப். 22) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இதனிடையே, மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 4 பேர், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 18 பேர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 196 பேர் என, மொத்தம் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என, முன்னதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    மேலும், மாநகராட்சி, நகராட்சிகளில் தலா 1, பேரூராட்சியில் 4 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  2. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வாக்கு எண்ணும் பணி தொடங்கியது

    தேர்தல்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வாக்களித்ததற்கு அடையாளமாக விரலில் வைக்கப்படும் நீல மை

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (பிப். 22) காலை 8 மணிக்குத் தொடங்கியது.

    தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவாகின.

    இந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலாவதாக, தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

    வாக்குகள் 279 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் 11,797 சிசிடிவி கேமராக்கள் கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகின்றன.

    வாக்கு எண்ணும் மையங்களில் 40,910 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின், பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க 60,000 போலீசார் கண்காணிப்பில் உள்ளனர்.

  3. பிகாரில் கைகள் கட்டப்பட்ட பெண்களின் வைரல் காணொளி - கள நிலவரம் என்ன?

      • எழுதியவர், சீது திவாரி
      • பதவி, கயாவிலிருந்து பிபிசி ஹிந்திக்காக
    பெண்ணின் கைகளை காட்டும் படம்

    பட மூலாதாரம், SEETU TIWARI/BBC

    படக்குறிப்பு, பெண்ணின் கைகளை காட்டும் படம்

    பிகாரின் கயாவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிகார் காவல்துறையினர், சில பெண்கள் மற்றும் ஆண்களின் கைகளை பின்னால் கட்டி அவர்களை ஆற்றங்கரையில் உட்கார வைத்திருப்பது போல அந்த காணொளியில் சில காட்சிகளைப் பார்க்க முடிகிறது.

  4. டி. ஜெயக்குமார் திடீர் கைது: 10 பிரிவுகளில் போலீஸ் வழக்குப்பதிவு - என்ன நடந்தது?

    ஜெயக்குமார்
    படக்குறிப்பு, ராயபுரம் 49ஆவது வார்டில் பிடிபட்ட நபரை அரை நிர்வாணமாக்கி அதிமுக தொண்டர்களுடன் ஊர்வலமாக அழைத்து வரும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்

    சென்னை ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவரை கள்ள ஓட்டு போட வந்ததாகக் கூறி அரை நிர்வாணமாக்கி தாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் விவகாரத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை சென்னை நகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  5. ரஷ்யப் படைகள் யுக்ரேனுக்குள் நுழைய புதின் உத்தரவு

    விளாடிமிர் புதின்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகளை ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.

    தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், யுக்ரேன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அது அமெரிக்காவின் காலனியாகவே இருந்து வந்திருக்கிறது என்று கூறினார்.

    நேட்டோ அமைப்பில் யுக்ரேன் சேருவது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் கூறினார்.

    ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலையை நேட்டோ அமைப்பு புறக்கணிப்பதாக புதின் தனது உரையில் மீண்டும் குறிப்பிட்டார்.

    யுக்ரேனிடம் இருந்து பிரிந்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுகான்ஸ்க் மற்றும் டனெட்ஸ்க் ஆகிய பகுதிகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பதாக புடின் அறிவித்தார்.

    தொலைபேசி உரை முடிந்த சிறிது நேரத்தில் இரு பிராந்தியங்களையும் அங்கீகரிப்பது தொடர்பான ஆவணங்களில் புதின் கையெழுத்திட்டார். அதில் ரஷ்யப் படைகள் அப் பிராந்தியங்களில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    இதற்கு என்ன பொருள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் இது யுக்ரேனின் எல்லைக்கும் படைகளை அனுப்புவதற்கான அறிவிப்பு என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

  6. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம்தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும்.

    நேற்றைய நேரலைப் பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    • கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்க இந்தியா, இலங்கையைச் சேர்ந்த தலா 50 பேருக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    • பிகார் முதல்வராக இருந்தபோது அரசு கருவூலத்தில் இருந்து மாட்டுத்தீவனம் வாங்க பணம் எடுத்ததாக தொடரப்பட்ட 5 வழக்கில் லாலு பிரசாதுக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • யுக்ரேன் மீதான நெருக்கடி குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் "கொள்கை அடிப்படையில்" ஒப்புக்கொண்டுள்ளார்.
    • திறந்த வெளியில் சுற்றித்திரியும் விலங்குகளால் ஏற்படும் பிரச்னைகளைக் களைய மார்ச் 10-ம் தேதிக்கு பிறகு புதிய முறை வகுக்கப்படும் பிரதமர் நரேந்திர மோதி உறுதியளித்துள்ளார்.
    • மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • நேற்று நடந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 65.32% வாக்குகளும், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் 60.46% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

    இந்த நாள் இனியதாகட்டும்.