கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க 50 இந்தியர்களுக்கு இலங்கை அனுமதி

இந்தியா - இலங்கை எல்லையில் சுமார் 290 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்களுக்கு தேவாலய திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி.

    இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும்.

    இன்றைய நேரலைப் பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.

    • யுக்ரேனிய உள்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோஃப், யுக்ரேனின் விமான போக்குவரத்து இப்போது வரை செயல்பட்டு வருகிறது என்றும் 10 விமான நிறுவனங்கள் அவற்றின் விமான சேவைக்கான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
    • கடந்த மாதம் அரியலூர் மாணவி உயிரிழந்த வழக்கில், சிபிஐ ஐ.ஜி வித்யா குல்கர்னி தலைமையில், எஸ்பி, டிஎஸ்பி உட்பட சுமார் 10 அதிகாரிகள் கொண்ட குழு இன்று முதல் விசாரணையை தொடங்கினார்கள்.
    • கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்க இலங்கையைச் சேர்ந்த 50 பேர், இந்தியாவைச் சேர்ந்த 50 பேர் என மொத்தம் 100 பேர் மட்டும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
    • பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீதான ஐந்தாவது ஊழல் ஊழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 60 லட்சம் அபராதமும் விதித்து ஜார்கண்ட் மாநில தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. திருமங்கலத்தில் மறுவாக்குப்பதிவு நிறைவு 73.55 சதவீதம் வாக்குகள் பதிவு

    மதுரை
    படக்குறிப்பு, பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும் வாக்கு இயந்திரங்கள்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் 17வது வார்டு பெண்கள் வாக்குச்சாவடிக்கு இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இது சம்பந்தமாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி மறுவாக்குப்பதிவில் பெண்கள் வாக்குச் சாவடியில் மொத்தம் 698 வாக்குகள் பதிவாகின எனவும். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 73.55 சதவீதம் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரம் திருமங்கலம் வாக்கு எண்ணிக்கை மையமான பி.கே. என். பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது

    ஜெயக்குமார்

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, திமுக பிரமுகரை ஊர்வலமாக அதிமுக தொண்டர்களுடன் சேர்ந்து அழைத்து வரும் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்

    முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை சென்னை நகர காவல்துறை கைது செய்துள்ளது.

    சென்னை வண்ணாரப்பேட்டை 49ஆவது வார்டில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது திமுக பிரமுகர் ரமேஷ் என்பவரை பொது வெளியில் அரை நிர்வாணமாக்கி, அடித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

    இந்த விவகாரத்தை சட்டப்படி அணுகாமல் சட்டத்தை தமது கையில் ஜெயக்குமார் எடுத்ததாக சர்ச்சை எழுந்தது.

    இந்த நிலையில், ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது சென்னை நகர காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் இருந்த ஜெயக்குமாரை அவரது வீட்டில் இருந்து காவல்துறையினர் இன்று மாலையில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

    அவர் மீது கொலை மிரட்டல், கலகம் விளைவித்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  4. கோவை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது - சென்னை உயர்நீதிமன்றம்

    சித்தரிக்கப்பட்ட படம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிக்கப்பட்ட படம்

    கோவை மாநகராட்சியில் வாக்குக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளதாகக் கூறி அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த தேர்தல் முடிவு விசாரணைக்கு உட்பட்டது என்று தெரிவித்துள்ளது.

    இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    மேலும் கோவை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிட தடையில்லை. ஆனால் அந்த முடிவுகள் வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டு இருக்கும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

    இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் நிறுவனர் ஈஸ்வரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், `தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பான மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருப்பது இதுவே முதல்முறை," என்றார்.

    "இந்த வழக்கில் கிடைக்கக்கூடிய தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். கோவையில் பணப்பட்டுவாடா நடைபெற்றது தொடர்பாக எங்களிடம் உள்ள ஆதாரங்களை இந்த வழக்கில் நிச்சயம் சமர்பிப்போம்," என்றார் ஈஸ்வரன்.

  5. ரஷ்யாவுக்கு அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை.

  6. தமிழ்நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் அரசியல் கொலைகள் அதிகரிப்பா? என்ன சொல்கிறது ஆளும் கட்சி?

    சித்தரிக்கப்பட்ட படம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிக்கப்பட்ட படம்

    சென்னையில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். `தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும். இந்த ஆட்சியிலும் அது விதிவிலக்கல்ல' என அ.தி.மு.க குற்றம் சுமத்துகிறது. `முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருப்பதால்தான் ஆளும்கட்சியினர் தவறு செய்தால் கூட கைது செய்யப்படுகிறார்கள்' என்கிறது தி.மு.க. என்ன நடக்கிறது?

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்க மொத்தம் 100 பேருக்கு அனுமதி: இலங்கை அரசு

    கச்சத்தீவு திருவிழா

    பட மூலாதாரம், get

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் பங்கேற்க இலங்கையைச் சேர்ந்த 50 பேர், இந்தியாவைச் சேர்ந்த 50 பேர் என மொத்தம் 100 பேர் மட்டும் பங்கேற்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

    கச்சத்தீவு தேவாலய விழா ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறும். பாரம்பரியமாக இந்த விழாவில் இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் கலந்து கொள்வர்.

    கச்சத்தீவு இலங்கை வசம் இருப்பதால், அங்கு சென்று வர அந்நாட்டின் அனுமதியை இந்திய மீனவர்கள் பெற்றிருப்பது கட்டாயமாகும்.

    இந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக கச்சத்தீவுக்கு இந்திய மீனவர்களை அனுமதிக்க முடியாது என்று முதலில் இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழக மீனவர்களை கச்சத்தீவுக்குள்அனுமதிக்க கோரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இந்திய நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து வலியுறுத்தினார். பிறகு அவர் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு தமிழக முதல்வரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து தமிழக அரசு கோரிக்கையை இலங்கை அரசு ஏற்கும் என்று டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.

    இந்த நிலையில், தற்போது கச்சத்தீவு புனித அந்தோணி தேவாலய திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 50 பேரும் இந்தியாவைச் சேர்ந்த 50 பேரும் பங்கேற்க அனுமதிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

  8. இந்த வாரம் எடுக்கப்பட்ட சுவாரசிய புகைப்படம்.

    பெய்ஜிங் குளிர்கால

    பட மூலாதாரம், HANNAH MCKAY / REUTERS

    படக்குறிப்பு, 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில், ஆண்களுக்கான பனி சறுக்கு விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வெல்லும் இலக்கை நோக்கி செல்லும் ஸ்வீடனைச் சேர்ந்த ஜெஸ்பர் டிஜாடர்.
  9. யுக்ரேன் உடனான விமான சேவைகளை நிறுத்தி வரும் அண்டை நாடுகள்

    விமானம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, விமானம்

    யுக்ரேனிய உள்கட்டமைப்பு அமைச்சர் ஒலெக்சாண்டர் குப்ராகோஃப், யுக்ரேனின் விமான போக்குவரத்து இப்போது வரை செயல்பட்டு வருகிறது என்றும் 10 விமான நிறுவனங்கள் அவற்றின் விமான சேவைக்கான நேரத்தில் சில மாற்றங்களை செய்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் மேலும் கூறுகையில், தற்போதைய போர் பதற்ற சூழல் காரணமாக சில விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

    "இருந்த போதும் மாற்று ஏற்பாடாய் யுக்ரேனிய சர்வதேச விமான நிறுவனம் யுக்ரேனிய தலைநகரிலிருந்து முனிக் மற்றும் ஜெனீவாவிற்கு கூடுதல் விமானங்களை இயக்குகின்றன," என அவர் கூறினார்.

    ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிறுவனங்களும் பாதுகாப்பு கருதி யுக்ரேனுக்கான விமான சேவைகளை நிறுத்தி உள்ளன. இதேபோல, ஜெர்மனியின் லுஃப்தான்சா இன்று முதல் யுக்ரேன் செல்லும் விமானங்களின் சேவையை நிறுத்துவதாக கூறியுள்ளது. முன்னதாக டச்சு விமான நிறுவனமான கே.எல்.எம் அதன் விமான சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, 12 வயது முதல் 18 வயது உடையவர்கள் இந்த புதிய‌ கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசி 12 லிருந்து 18 வயது உடையவர்கள் செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஜ செய்தி முகமே ட்வீட் செய்துள்ளது.

    பயலாஜிக்கல் இ என்ற தனியார் நிறுவனம் இந்த தடுப்பூசியை தயாரித்துள்ளது. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது.

  11. நைஜீரியாவில் பறிமுதல் செய்யப்பட்ட 120 டன் விலங்குத் தோல்கள்.

    பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு தோல்கள்

    பட மூலாதாரம், AFP

    படக்குறிப்பு, பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு தோல்கள்

    லாகோஸ் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட 120 டன் மாட்டுத் தோல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நைஜீரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது என்றும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட விலங்குகளின் தோல் மீது ரசாயனம் தடவப்பட்டு உள்ளது எனவும், ரசாயனம் தடவப்பட்ட விலங்குகளின் தோல் ஆடைத் தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுகின்ற சூழலில், ரசாயனம் தடவப்பட்ட விலங்குகளின் தோல் உணவுக்காகவும் விற்கப்படுகிறது என உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நைஜீரியாவில், மாட்டுத் தோல்கள் "பொன்மோ" எனப்படும் பிரபலமான உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. முதல் கட்ட விசாரணையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட தோல்கள் எந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது என உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

  12. யுக்ரேனிய பதற்றத்தால் வெளியேறும் மக்கள்

    ரஷ்யா
    படக்குறிப்பு, யுக்ரேனின் கிழக்குப் பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகள் பகுதிகளிலிருந்து வெளியேறிய மக்கள் பல மணிநேரப் பயணத்திற்குப் பிறகு யுக்ரேனிய எல்லை அருகில் உள்ள ரஷ்ய நகரமான தாகன்ரோக் நகருக்குக் வந்து கொண்டிருக்கின்றனர் .
  13. யுக்ரேன் நெருக்கடி குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் கொள்கை அடிப்படையில் பேச ஒப்புக் கொண்டார் அமெரிக்க அதிபர்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. மனித வாழ்வில் மறுபிறப்பு சாத்தியமா? அறிவியல் சொல்வது என்ன?

    சித்தரிப்புப் படம்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

    மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஆறாவது கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

  15. ஹிஜாப் விவகாரம்: "பாஜக முகவர் செய்தது தவறில்லை" - பொன் ராதாகிருஷ்ணன், பிரபுராவ் ஆனந்தன்

    பொன் ராதாகிருஷ்ணன்.
    படக்குறிப்பு, பொன் ராதாகிருஷ்ணன்.

    வாக்குச்சாவடிக்குள் ஓட்டு போட வந்த முஸ்லிம் பெண் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க ஆட்சேபம் தெரிவித்த பாஜக முகவரின் செயல் தவறு கிடையாது என்று தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.

    தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் பொன் ராதாகிருஷ்ணன்.

    அப்போது அவர், "நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக அரசு அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது," என்று கூறினார்.

    பணபலம், அதிகார பலம், ஆள் பலம் ஆகியவற்றின் மூலமாக, தங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்களை களத்திலிருந்து வெளியேற்றக் கூடிய வேலையில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் ஆணையத்தின் பார்வை சற்று மாற வேண்டும். ஆளுங்கட்சி அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், "மதுரை மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த பெண்ணிடம் பாஜக முகவர் செய்தது தவறில்லை. தேர்தல் ஆணையம் எந்த ஒரு நபரும் முகத்தை மூடிக்கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா?

    நாளை வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா? விமான நிலையத்தில் முகத்திரை கழட்டி முகத்தைக் காட்டுங்கள் என தெரிவிக்கிறார்கள். அது சரியா? தவறா ? முகவர் தன்னுடைய கடமையை செய்து இருக்கிறார். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரிதான். கேள்விகள் கேட்கும்போது அதிகாரிகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் தான்.

    எங்களைப் பொறுத்தவரை பல இடங்களில் நடைபெறும் தவறுகள், திருத்த முடியாத அளவுக்கு உள்ள தவறுகள், பிரச்னைகள் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்படாமலே உள்ளன. இது சரியான தேர்தல் நடைமுறையாக தெரியவில்லை. ஆளுங்கட்சியின் அழுத்தம் தான் இதன் காரணம் என நினைக்கிறேன். இவற்றையெல்லாம் மீறி பாஜக மிகச்சிறந்த வெற்றியைப் பெறும்," என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

  16. கூடங்குளம்: ஸ்டாலின், சூழல் செயல்பாட்டாளர்கள் வெளிப்படுத்தும் கவலைகள்

    கூடங்குளம்
    படக்குறிப்பு, கூடங்குளம் அணுமின் நிலையம்

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் கழிவுகளை சேகரிக்கும் மையம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சூழல் ஆர்வலர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். "அணு உலைக்கு வெளியே பயன்படுத்தப்படும் எரிபொருள் சேமிப்பு கிடங்கு என்பது அணு உலை இயக்கத்துக்குத் தேவையானது, பல மடங்கு பாதுகாப்பானது. அது அணுக்கழிவு மையம் இல்லை" என அந்த கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் இயங்கி வருகின்றன. இங்கு மேலும் நான்கு அணு உலைகளை அமைப்பதற்கான பணிகளை இந்திய அணுசக்தி கழகம் மேற்கொண்டு வருகிறது. அதேநேரம், இந்த உலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை சேமித்து வைப்பதற்கான அனுமதியை இந்திய அணுசக்தி ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ளது.

  17. ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழு தளர்வு

    ஆஸ்திரேலியா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஆஸ்திரேலியா

    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு, வெளிநாட்டவர் வருவதற்கான அனுமதியை அளிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா நோய் கட்டுப்பாட்டால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வெளிநாட்டினர் தங்களுடைய நாட்டிற்குள் வருவதற்கு ஆஸ்திரேலிய அரசு கட்டுப்பாடு விதித்தது. அந்த கட்டுப்பாடுகள் தற்போது விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.

    இதையடுத்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தில், நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் சந்தித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள தகவலின்படி, கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டு வருபவர்களுக்கு, எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்றும் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலா பயணிகள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கான செலவை அவர்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான தடை மார்ச் 3 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அங்கு செல்ல விரும்புவோர் மூன்று டோஸ் தடுப்பு ஊசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவில் உள்ள உலக பாரம்பரியம் மிக்க நீல மலைகளில் உள்ள லியூரா என்ற சுற்றுலா தலத்தில் மக்கள் இதனால் மீண்டும் கூடவும் அதனால் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  18. நைஜீரியாவில் நடந்த வான் தாக்குதலில் 7 குழந்தைகள் பலி

    நைஜர் மற்றும் நைஜீரியா ராணுவ

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, நைஜர் மற்றும் நைஜீரியா எல்லைப் பகுதிகளில், ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களுக்கு எதிராக கூட்டு ராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர்.

    நைஜீரிய ராணுவம் "ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களை" குறிவைத்து நடத்திய வான் தாக்குதலில், நைஜரை சேர்ந்த ஏழு குழந்தைகள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஆளுநர் தரப்பிலும் அரசு ஊடகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக நைஜர் நாட்டின் மராட்டின் பகுதி ஆளுநர் சைபோ அபுபக்கர் ஏஎஃப்பி செய்தி முகமையிடன் கூறும்போது‍, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் குழந்தைகள் ஒரு விழாவில் கலந்துகொள்ள வந்ததாகவும், விமானங்கள் தாக்கியபோது "குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்திருக்கலாம்," என்றும் கூறினார்.

    இந்தத் தாக்குதலில் மேலும் 5 பேர் காயம் அடைந்து உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், "நைஜர் மற்றும் நைஜீரியா இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள எல்லைப் பகுதியில் இந்தக் கொள்ளையர்கள் இருக்கிறார்கள். அவர்களை மையப்படுத்தி தாக்குதல் திட்டமிடப்பட்டது. ஆனால் அது தவறாக அந்தப் பகுதியில் உள்ள நச்சடே என்ற கிராமத்தைத் தாக்கியது," எனவும் தெரிவித்தார்.

    நைஜர், நைஜீரியா ஆகிய இரண்டு நாடுகளில் "ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களை" கட்டுப்படுத்த நைஜர் நாடு, ராணுவ ரோந்து பணியை கடந்த சில வருடங்களாக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    நைஜர் நைஜீரியா மராட்டின் பகுதி
    படக்குறிப்பு, நைஜர் மற்றும் நைஜீரியா இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள மராட்டின் பகுதி
  19. கேரள அரசை கண்டித்து மானாமதுரையில் விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்

    விவசாயிகள்
    படக்குறிப்பு, மானாமதுரை சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

    முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்றும் அந்த அணைக்கு முன்பாக புதிதாக ஒரு அணை கட்டப் போவதாகவும் கேரள சட்டமன்றத்தில் அம்மாநில ஆளுநர் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகியவற்றைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர் இன்று மானாமதுரை பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் மேற்கொண்ட இந்த போராட்டத்தில் மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்கம் சார்பில் சிலரும் கலந்து கொண்டனர்.

    முல்லை பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட வலியுறுத்தும் கேரள அரசின் தீர்மானத்திற்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தென் மண்டல தலைவர் மதுரைவீரன் சிவகங்கை மாவட்ட தலைவர் மாணிக்கவாசகம், சிவகங்கை மாவட்ட செயலாளர் இராம.முருகன், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் வேந்தை சிவா, மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்கத் தலைவர் சி.மு.முத்துக்குமார், மெழுகுவர்த்தி நண்பர்கள் இயக்க மானாமதுரை பொறுப்பாளர் முத்து உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.