ஜெயக்குமாரின் பிணை மனு தள்ளுபடி: சென்னை நீதிமன்றம்

தேர்தல் விதிகளை மீறியதாகவும் வன்முறையை தூண்டியதாகவும் தொடரப்பட்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமாரை பிணையில் விடுவிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மறுத்து விட்டது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முழு முடிவுகள் வெளியீடு

    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முழு முடிவுகள் வெளியீடு

    தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த மற்றும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

    1374 மாநகராட்சி வார்டுகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட ஓரிடம் போக 1373 இடங்களுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

    3843 நகராட்சி வார்டுகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட ஓரிடம் போக 3842 இடங்களுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

    7621 பேரூராட்சி வார்டுகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நான்கு இடங்கள், தேர்தல் ரத்து செய்யப்பட்ட 12 இடங்கள் போக 7603 இடங்களுக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

  2. ரஷ்யாவில் இருந்து 1200 கி.மீ நீள எரிவாயு குழாய் நிறுத்தம், ஒப்புதலை நிறுத்தி வைத்த ஜெர்மனி

    திங்களன்று யுக்ரேன் பிரிவினைவாதப் பகுதிகளுக்கு ரஷ்யா தனது படைகளை அனுப்பி வைத்ததைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக நார்டு ஸ்ட்ரீம் -2 எனும் முக்கிய எரிவாயு குழாய்க்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது.

    ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடலோரப் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1200 கிலோ மீட்டர் நீளத்துக்கு இந்த எரிவாயு குழாய் அமைந்துள்ளது.

    Nord Stream 2

    ரஷ்ய அரசு மற்றும் மேற்கத்திய எரிவாயு நிறுவனங்கள் ஆகியவற்றால் கூட்டாக அமைக்கப்பட்டுள்ள இந்த எரிவாயுக் குழாய் ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை சுமந்து செல்ல அமைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான பணிகள் முழுமையடைந்தாலும் இன்னும் எரிவாயு கொண்டு செல்லப்படுவது தொடங்கப்படவில்லை. இந்நிலையிலேயே இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டதை ஜெர்மனி ரத்து செய்துள்ளது.

    நார்டு ஸ்ட்ரீம் என்ற முதல் எரிவாயு குழாய் 2011ஆம் ஆண்டு முதல் இயக்கத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  3. வணக்கம் நேயர்களே.

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    நேரலையில் செய்திகளை இனி தொகுத்து வழங்க உள்ளது விக்னேஷ்.அ.

    முக்கியச் செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

    நேற்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.

    • யுக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு பிரிவினைவாத பகுதிகளை அங்கீகரிக்கும் ரஷ்யாவின் முடிவால், அந்த இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமாகியிருக்கிறது.
    • யுக்ரேனுக்கு அதிக அளவில் தற்காப்புக்கான உதவிகளை அமெரிக்கா வழங்கும். நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பால்டிக் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க படைகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
    • நடந்து முடிந்த தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. திமுக தலைமையிலான கூட்டணி 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது. 138 நகராட்சிகளில் 132க்கும் மேலான நகராட்சிகளில் திமுக கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ளது.
    • யுக்ரேனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க செவ்வாய்கிழமை காலையில் அந்நாட்டின் தலைநகர் கீவுக்கு சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் கொடுத்துள்ள அங்கீகாரமாக நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உள்ளன என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  4. மின்ஸ்க் ஒப்பந்தம் என்றால் என்ன?

    2014 இல் மின்ஸ்க் தலைவர்கள் (இடமிருந்து: விளாடிமிர் புடின், ஃபிராங்கோயிஸ் ஹாலண்ட், ஏஞ்சலா மேர்க்கெல், பெட்ரோ போரோஷென்கோ)

    பட மூலாதாரம், AFP

    படக்குறிப்பு, 2014ஆம் ஆண்டில் மின்ஸ்க் தலைவர்கள் (இடமிருந்து: விளாதிமிர் புதின், ஃபிராங்சுவாஸ் ஹாலண்ட், ஏங்கலா மெர்க்கெல், பெட்ரோ போரோஷென்கோ)

    மின்ஸ்க் ஒப்பந்தம் நீண்ட காலத்திற்கு முன்பே வழக்கொழிந்து விட்டதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.

    இந்த மின்ஸ்க் ஒப்பந்தம் என்றால் என்ன? அதில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது?

    யுக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மின்ஸ்க் ஒப்பந்தம், டான்பாஸில் யுக்ரேனிய மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத சக்திகளுக்கு இடையேயான மோதலை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றிய திட்டத்தை கோடிட்டுக் காட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பிரிவனைவாத குழுக்கள், சுயமாக தங்களின் ஆதிக்க பகுதிகளை 'குடியரசுகள்' என்று அறிவித்துக் கொண்டிருந்த நிலையில், அவற்றை ரஷ்யா செவ்வாய்க்கிழமை அங்கீகரித்துள்ளது.

    இந்த மின்ஸ்க் ஒப்பந்தத்தின் பெரும்பாலான குறிப்புகள் - ரஷ்யா, யுக்ரேன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இடையே நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு பெலாரூஸ் தலைநகர் மின்ஸ்கில் 2014ஆம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தையின்போது ஒப்புக் கொள்ளப்பட்டன.

    அதில் மிக முக்கியமானவை:

    • முழு யுக்ரேனிய அரசாங்க கட்டுப்பாடு எல்லை நெடுகிலும் பராமரிக்கப்படும். அது பிரிவினைவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்தும் மோதல் மண்டலத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
    • யுக்ரேனிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஆயுதக் குழுக்கள், ஆயுதங்கள் மற்றும் கூலிப்படைகளை திரும்பப் பெறப்பட வேண்டும்.
    • இரு தரப்பிலும் அனைத்து கனரக ஆயுதங்களை பயன்படுத்தாமல் திரும்பப் பெறப்பட வேண்டும்.
  5. யுக்ரேன் பதற்றம்: ரஷ்யா மீதான மற்ற நாடுகளின் கட்டுப்பாடுகள் என்ன?

    பிரிட்டன்:பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஐந்து வங்கிகளின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று ரஷ்ய பெரும் கோடீஸ்வரர்கள், பிரிட்டன் விதித்துள்ள பயணத் தடைகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

    முன்னதாக ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அவர் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அறிவித்தபோது, சில எம்.பி.க்கள் இந்த நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று வாதிட்டனர். ஆனால் இந்த கட்டுப்பாடுகள் விரிவடையலாம் என்று போரிஸ் ஜான்சன் விளக்கம் அளித்தார்.

    ஜெர்மனி:

    ரஷ்யாவிலிருந்து எரிவாயு கொண்டு வருவதற்காக செயல்படுத்தப்படவிருந்த நார்ட் ஸ்ட்ரீம் 2 குழாய் எரிவாயு திட்டத்தை ஜெர்மனி அரசு நிறுத்தியிருக்கிறது.

    ரஷ்யாவின் கிழக்கில் உள்ள மிகப்பெரிய எரிவாயு வளத்தில் 40% அளவை ஐரோப்பாவிற்கு ரஷ்யா வழங்கி வருகிறது.

    ஐரோப்பிய ஒன்றியம்:

    ரஷ்யாவுக்கு எதிரான முதலாவது நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய நாடாளுமன்ற முடிவை அங்கீகரித்த அந்நாட்டு எம்.பிக்களை இலக்கு வைக்கும் நடவடிக்கை, ரஷ்ய வங்கிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிச் சந்தைகளுக்கான அணுகலுக்கு தடை விதிப்பது போன்றவை அடங்கும்.

  6. ரஷ்யா மீதான நடவடிக்கை: அதிபர் ஜோ பைடன் உரையின் முக்கிய துளிகள்

    வெள்ளை மாளிகை

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    வெள்ளை மாளிகையில் இருந்து ஆற்றிய தமது தொலைக்காட்சி உரையின்போது அதிபர் ஜோ பைடன் பதிவு செய்த ரஷ்யா மீதான நடவடிக்கைகளின் முக்கிய அம்சங்களை மீண்டும் இங்கே வழங்குகிறோம்:

    • யுக்ரேன் பதற்றங்களில் தெளிவான ஆக்கிரமிப்பாளர் ஆக ரஷ்யா இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.

    • கிழக்கு யுக்ரேனில் உள்ள இரண்டு பிரிவினைவாத குழுக்களின் ஆளுகைக்கு புதின் வழங்கிய "வினோதமான" அங்கீகரிப்புக்கு அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்தார். ரஷ்யாவின் செயல் சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

    • ரஷ்யாவின் இரண்டு நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை இப்போது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன. இது தவிர ரஷ்ய உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு எதிராக மேலும் பொருளாதார தடைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

    • யுக்ரேனுக்கு அதிக அளவில் தற்காப்புக்கான உதவிகளை அமெரிக்கா வழங்கும். நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பால்டிக் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க படைகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்படும்.

    இந்த தொலைக்காட்சி உரையின்போது அதிபர் ஜோ பைடன் முன்பு செய்தியாளர்களும் இருந்தனர். ஆனால், அவர்கள் விடுத்த எந்தவொரு கேள்விக்கும் அதிபர் பைடன் பதில் அளிக்கவில்லை.

    இந்த விவகாரத்தில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகியின் விளக்கம் இன்றைய நாளின் பிற்பகுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேன் Vs ரஷ்யா: இரு வங்கிகளுக்கு எதிராக நடவடிக்கை - ஜோ பைடன்

    ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளின் "முதல் கட்டம்" என்ற பெயரில் இரு வங்கிகள் மீதான நடவடிக்கையை அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

    அதன்படி, இரண்டு பெரிய வங்கிகளான விஇபி மற்றும் ரஷ்ய ராணுவ வங்கியை உள்ளடக்கிய வர்த்தகத்தைத் தடுக்கும் நடவடிக்கையை வெளியிட்டார்.

    இப்போதைய நடவடிக்கை அந்த வங்கிகள் மீதான முந்தைய கட்டுப்பாடுகளில் இருந்து வேறுபட்டவை என்றும் ரஷ்ய அரசாங்கத்தை அதன் இறையாண்மைக் கடனுக்கான மேற்கத்திய நிதியுதவியிலிருந்து துண்டிக்கும் வகையில் தற்போதைய நடவடிக்கை இருக்கும் என்றும் ஜோ பைடன் தெரிவித்தார்.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனின் இருப்பு உரிமையை தாக்கிய புதின் - பைடன் குற்றச்சாட்டு

    யுக்ரேன் நாட்டின் 'அதன் இருப்பு உரிமையையே' தாக்கியிருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

    யுக்ரேன் எல்லையில் அதிகரித்து வரும் போர் பதற்றங்கள் குறித்து தொலைக்காட்சி உரையின்போது பேசிய ஜோ பைடன், "யுக்ரேனின் இருப்புக்கான உரிமை" மீதே விளாதிமிர் புதின் தாக்குதல் நடத்தியுள்ளார் என்றார்.

    ஐரோப்பிய பாதுகாப்பு விவகாரத்தில் உண்மையாகவே பேச்சுவார்த்தையை தொடர புதினுக்கு விருப்பமில்லை என்பதை அவரது பேச்சு காட்டுகிறது என்று பைடன் குறிப்பிட்டார்.

    "இன்று வளரும் ஜனநாயக நாடுகள் மற்றும் நேட்டோவின் உறுப்பு நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அதிபர் புதின் பேசினார்," என்று பைடன் கூறினார்.

    "தனது தீவிர கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் என்ற வகையில் புதின் வெளிப்படையாகவும் அச்சுறுத்தினார்" என்று பைடன் தெரிவித்தார்.

  9. வந்துகொண்டிருக்கும் செய்தி, பால்டிக் நாடுகளுக்கு உதவு கூடுதல் துருப்புகள், தளவாடங்கள் - ஜோ பைடன்

    கிழக்கு ஐரோப்பாவில் உள்ள எங்களின் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க படை துருப்புகள் கூடுதலாக அனுப்பி வைக்கப்புடம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

    ஏற்கெனவே ஐரோப்பாவில் உள்ள படைகள் மற்றும் உபகரணங்கள் - எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய பால்டிக் நாடுகளுக்கு அனுப்பப்படும் என்று பைடன் தெரிவித்தார்.

    "இதில் ஒன்றை தெளிவாகக் கூறுகிறேன். இவை எங்கள் தரப்பு தற்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே," என்றும் தமது உரையின்போது அதிபர் பைடன் விளக்கம் அளித்தார்.

    "ரஷ்யாவுடன் போரிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை," என்றும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார்.

    நேட்டோ பிராந்தியத்தை பாதுகாக்கவும் அதன் ஒப்பந்தங்களுக்கு கீழ்படியும் வகையிலும் நடப்போம் என்ற செய்தியை நட்பு நாடுகளுக்கு அனுப்பும் வகையிலேயே அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன என்று அதிபர் பைடன் கூறினார்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகள்: பட்டியலிடும் ஜோ பைடன்

    அதிபர் ஜோ பைடன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, அதிபர் ஜோ பைடன்

    ரஷ்யாவுடன் சண்டையிடும் எண்ணம் அமெரிக்காவுக்கு இருக்கவில்லை என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    அதே சமயம், நேட்டோ பிராந்தியத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம் என்று சபதம் செய்கிறேன் என்று கூறினார்.

    யுக்ரேன் எல்லையில் ரத்த சேமிப்பு கிடங்குகளை தேக்கு வைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கை குறித்துப் பேசிய பைடன், நீங்கள் ஒரு போரைத் தொடங்காததுவரை உங்களுக்கு ரத்தம் தேவைப்படாது என்று தெரிவித்தார்.

    ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளின் முதல் கட்டத்தை பைடன் பிறகு அறிவித்தார்.

    இறையாண்மை அடிப்படையில் வழங்கப்படும் கடன் கள் மீதான தடைகளை அறிவித்த அதிபர் பைடன், ரஷ்ய அரசாங்கத்துக்கு இனி மேற்கத்திய நிதி கிடைக்கக் கூடாது என்று வலியுறுத்தினார்.

    "இது இனி மேற்கில் இருந்து உங்களால் (ரஷ்யா) பணம் திரட்ட முடியாது," என்றார் அதிபர் பைடன்.

    யுக்ரேன் மீது ரஷ்யா தனது நடவடிக்கைகளைத் தொடர்ந்தால், அமெரிக்கா "இந்த தடைகளை அதிகரிக்கும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  11. ஜோ பைடன்: ரஷ்யா சர்வதேச சட்டத்தை மீறுகிறது

    யுக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா சர்வதேச சட்டத்தை மீறிச்செயல்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக ஆற்றிய உரையில், "எங்களுடைய நட்பு நாடுகளுக்கு சொந்தமான நிலப்பரப்பை தங்களுடையது என அழைத்துக் கொள்ளும் உரிமையை ரஷ்யாவுக்கு யார் கொடுத்தது?" "இது "சர்வதேச சட்டத்தை அப்பட்டமான மீறும் செயல்" என்று அமெரிக்க அதிபர் பைடன் கூறினார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உரையை தொடங்கினார்

    யுக்ரேன் - ரஷ்யா எல்லை பதற்றம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அந்நாட்டு தொலைக்காட்சியில் உரையாற்றத் தொடங்கினார்.

    அவர் ரஷ்யாவிற்கு எதிரான புதிய தடைகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்த பக்கத்தில் காண இங்கே இணைந்திருங்கள்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, துயரமான போரை ரஷ்யாவால் இப்போதும் தவிர்க்க முடியும்: அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர்

    யுக்ரேன் ரஷ்யா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, பென்டகனில் யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை வரவேற்கும் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின்.

    ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இப்போதும் கூட தமது போக்கை மாற்றிக்கொண்டு யுக்ரேன் உடனான போரை தவிர்க்கலாம் என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

    யுக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடனான சந்திப்பிற்கு முன்னதாக பென்டகனில் பேசிய ஆஸ்டின், "மேலும் மோதலைத் தவிர்க்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்" என்று கூறினார்.

    "புதினால் இன்னும் கூட முழுமையான, சோகமான ஒரு போரைத் தவிர்க்க முடியும்" என்று கூறும் ஆஸ்டின், யுக்ரேன் மீதான "சமீபத்திய படையெடுப்பு" அந்நாட்டின் அமைதி, பாதுகாப்பு, வளம் மற்றும் அட்லான்டிக் பகுதி சமூகத்துக்கு அச்சுறுத்தல்," என்று தெரிவித்தார்.

  14. வந்துகொண்டிருக்கும் செய்தி, பொருளாதார தடைகள் ரஷ்யாவை கடுமையாக பாதிக்கும் - ஐரோப்பிய ஒன்றியம்

    பொருளாதார தடைகள் ரஷ்யாவை மிகவும் பாதிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது.

    கிழக்கு யுக்ரேனின் பிரிவினைவாத கட்டுப்பாட்டுப் பகுதிகளை அங்கீகரிக்கும் முடிவை ரஷ்யா எடுத்துள்ள நிலையில், அந்நாடு மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் சாத்தியம் மிக்க பொருளாதாரத் தடைகள் பற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் பாரிஸில் நடந்த செய்தி யாளர் சந்திப்பில் விவரித்தார்.

    பொருளாதாரத் தடைகள் "ரஷ்யாவை காயப்படுத்தும்.அது மோசமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

    அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடாவுடன் கொண்டுள்ள வலுவான ஒருங்கிணைப்பின் வரிசையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதிநிதிகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

    இது குறித்து விவரித்த ஜோசப் பொரெல், இந்த தடைகள் யுக்ரேனிய பிரிவினைவாத பகுதிகளில் ரஷ்யா அதன் படைகளை குவிக்க ஆதரவாக வாக்களித்த 351 எம்பிக்களுக்கும் மற்றும் அதை முன்மொழிந்த 11 பேருக்கு எதிராகவும் இருக்கும் என்று கூறினார்.

    "யுக்ரேனின் இறையாண்மையை குறை மதிப்பிட்ட நடவடிக்கையில் அவர்களும் ஒருவராக கருதப்படுவர்" என்றார் பொரெல்.

    அவரது கூற்றுப்படி, யுக்ரேனிய நிறுவனங்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட முடிவெடுப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளிப்பவர்கள் மீது இந்த தடை பாயும்.

    யுக்ரேனுக்கு எதிராக தவறான தகவலை பரப்புவோர் மற்றும் அந்நாடு மீதான படையெடுப்பு நடவடிக்கையில் தொடர்புடைய பாதுகாப்புத்துறை, பாதுகாப்பு தளவாட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மீது தடை பாயும்.

    யுக்ரேனிய பிராந்தியங்களில் இயங்கும் பிரிவினையாத பகுதிகளுக்கு நிதியளிக்கும் வங்கிகள் மீதும் பொருளாதார தடை நடவடிக்கை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  15. வந்துகொண்டிருக்கும் செய்தி, யுக்ரேனில் சிக்கிய 242 இந்தியர்களுடன் டெல்லியில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்

    யுக்ரேன் - ரஷ்யா போர் பதற்றங்களுக்கு மத்தியில் யுக்ரேனிய தலைநகர் கீஃபில் சிக்கியிருக்கும் இந்தியர்களில் 242 பேர் தலைநகர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    இவர்களை அழைத்து வருவதற்காக செவ்வாய்க்கிழமை காலையில் சிறப்பு விமானத்தை இந்திய அரசு கீஃபுக்கு அனுப்பி வைத்தது.

    அந்த விமானத்தில் முதலாவதாக 242 இந்தியர்கள் தலைநகர் டெல்லிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  16. யுக்ரேன் - ரஷ்யா பதற்றம்: எப்போது பேசுவார் ஜோ பைடன்?

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்ற திட்டமிட்டிருக்கிறார்.

    யுக்ரேன் - ரஷ்யா இடையிலான எல்லை பதற்றம் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் ரஷ்யா மீது எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கை குறித்து அதிபர் பைடன் பேசுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக இந்த தொலைக்காட்சி உரை இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டிருந்தது.

    இப்போது பிப்ரவரி 22ஆம் தேதி நள்ளிரவைக் கடந்த மறுநாள் 12.30 மணியளவில் அதிபர் பைடன் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த தாமதத்திற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.

  17. யுக்ரேன் Vs ரஷ்யா பதற்றம்: சமீபத்திய முன்னேற்றங்கள் என்ன?

    யுக்ரேன்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஹங்கேரி எல்லை பகுதியில் கண்காணிப்பில் ராணுவ வீரர் (கோப்புப்படம்)

    யுக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு பிரிவினைவாத பகுதிகளை அங்கீகரிக்கும் ரஷ்யாவின் முடிவால், அந்த இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமாகியிருக்கிறது.

    உலக நாடுகளின் தலையீட்டால் இந்த பதற்றம் கடந்த வாரம் தணிந்தது போலத் தோன்றியது. ஆனாலும், அமெரிக்காவும் பிரிட்டனும் யுக்ரேன் எல்லையில் ரஷ்யா ஏற்கெனவே அத்துமீறிய ஆக்கிரமிப்பை தொடங்கி விட்டதாக குற்றம்சாட்டி வந்தன.

    யுக்ரேனிய பிரிவினைவாத சக்திகள் ஆதிக்கம் உள்ள இரு பகுதிகளில் ரஷ்யா தமது படையினரை குவித்து வருவதாக செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தன.

    இந்த நிலையில், வெளிநாட்டு மண்ணில் ரஷ்ய படைகள் இருப்பது அத்துமீறிய படையெடுப்பின் தொடக்கம் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் எச்சரித்துள்ளன.

    அமெரிக்காவின் கூற்றுை எதிரொலிக்கும் நேட்டோ அமைப்பும், ரஷ்யா யுக்ரேன் மீது முழு அளவிலான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் இருப்பதாக கூறியிருக்கிறது.

    இந்த விவகாரத்தில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பாவின் சில நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆயத்தமாகி வருகின்றன.

    ரஷ்யாவில் இருந்து செயல்படுத்தப்படும் நார்ட் ஸ்ட்ரீம் 2 என்ற மிகப்பெரிய எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்துமாறு யுக்ரேன் அதிபர் வொலோடிமீர் ஸெலென்ஸ்கியோன் கோரியுள்ளார். ஆனால், அந்த திட்டத்தை ஏற்கெனவே தமது அரசு நிறுத்தி வைத்துள்ளதாக ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோல்ஸ் அறிவித்துள்ளார்.

    இதற்கிடையே, யுக்ரேனில் உள்ள தமது தூதரக அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  18. தீவிரம் அடையும் யுக்ரேன் Vs ரஷ்யா எல்லை பதற்றம்: மீண்டும் தொடரும் பிபிசி தமிழ் நேரலை

    யுக்ரேன், ரஷ்யா இடையிலான எல்லை பதற்றம் மீண்டும் தீவிரமாகி வருகிறது. இதையடுத்து ரஷ்யா மீதான தடைகளை விதிப்பது தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றவிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

    இதையடுத்து இன்று நிறைவு செய்யப்பட்ட நேரலை பக்கத்தை மீண்டும் தொடர்கிறோம்.

    மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  19. இன்றைய நேரலை நிறைவடைகிறது

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்தில் இதுவரை இணைந்திருந்ததற்கு நன்றி.

    இத்துடன் இன்றைய நேரலைப் பக்கம் நிறைவடைகிறது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுவதுமான செய்திகளுடன் நாளை காலை மீண்டும் நேரலைப் பக்கம் தொடங்கும்.

    இன்றைய நேரலை பக்கத்தின் முக்கியமான செய்திகளை கீழே காணலாம்.

    • யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகளை ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார்.
    • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். முழுமையான தேர்தல் முடிவு வராத சூழலில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
    • ரஷ்யா - யுக்ரேன் இடையே தீவிரமாகி வரும் நெருக்கடிக்கு மத்தியில் யுக்ரேனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க செவ்வாய்கிழமை காலையில் அந்நாட்டின் தலைநகர் கீவுக்கு சிறப்பு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் புதிய சமூக ஊடக தளம், ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் அறிமுகமாகியிருக்கிறது.

    மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  20. வந்துகொண்டிருக்கும் செய்தி, புவனகிரியில் வாக்கு இயந்திரத்தில் பழுது காரணமாக மறு வாக்கு பதிவு

    கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில், 5 பேர் போட்டியிட்டனர். அதில் மொத்தம் 827 வாக்குகள் பதிவான நிலையில், காலை 10 மணி அளவில் வாக்கு இயந்திரம் பழுதாகி பதிவான விவரங்கள் காட்டப்படவில்லை.

    இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பழுது நீக்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் காலை முதல் ஈடுபட்டனர். ஆனால் வாக்கு இயந்திரத்தின் கோளாறை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் இயந்திரத்தை சரி செய்ய முடியவில்லை.

    இந்நிலையில் குறிப்பிட்ட வார்டுக்கு மறு வாக்குபதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்த மறுதேர்தல் 4வது வார்டின் 4AV வாக்குச்சாவடியில் நாளை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.