தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
பட மூலாதாரம், IMD
வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி விரும் நிலையில், புதிதாக மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 22-ஆம் தேதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று, தமிழ்நாட்டின் அரியலூர், கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆயுவு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, சேலம், ராம்நாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.
"தென் தமிழ்நாடு, மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வேகத்துக்கு சூறைக்காற்று அடிக்கலாம். அது மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்துக்கு வலுப்பெறலாம். அதனால் இந்தப் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வணக்கம் நேயர்களே!
இன்று (19.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளைத் தொகுத்து வழங்குவது பிரதீப் கிருஷ்ணா.
"இஸ்ரேல் சிறைகளில் 94 பாலத்தீனர்கள் உயிரிழப்பு" - பிரபல மனித உரிமை அமைப்பு தகவல்
பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டிருந்த பாலத்தீன சிறைவாசிகளில் குறைந்தது 94 பேர் கடந்த இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்துள்ளதாக பிரபல மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
ஃபிசியன்ஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் இஸ்ரேல் (பி.ஹச்.ஆர்.ஐ) அமைப்பு வெளியிட்ட "சிஸ்டமேடிக் கில்லிங்ஸ் அண்ட் கவர்-அப்ஸ்" என்கிற புதிய அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை இஸ்ரேல் - பாலத்தீன் மோதல் தொடங்கிய அக்டோபர் 7, 2023-இல் இருந்து ஆகஸ்ட் 31, 2025 வரையிலான காலகட்டத்தில் கவனம் செலுத்துகிறது. அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் 30-க்கும் குறைவான பாலத்தீனர்களே இஸ்ரேல் காவலில் உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய சிறை சேவை (ஐபிஎஸ்), "தாங்கள் சட்டத்திற்கு உட்பட்டும் அதிகாரப்பூர்வ அமைப்புகளின் மேற்பார்வையிலுமே செயல்படுவதாக." பிபிசியிடம் தெரிவித்தது.
வெளி அமைப்புகளிடமிருந்து வரும் தரவுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு தான் பதிலளிப்பதில்லை என ஐபிஎஸ் தெரிவித்துள்ளது.
"அனைத்து சிறைவாசிகளும் சட்ட நடைமுறைகளின் படியே சிறைவைக்கப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவ உதவு, சுகாதாரம், போதிய வாழ்நிலை போன்றவற்றுக்கான அவர்களின் உரிமைகள் தொழில்முறையில் பயிற்சியளிக்கப்பட்ட பணியாளர்களால் வழங்கப்படுகிறது," என்றும் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு படை தாக்குதலில் கொல்லப்பட்ட முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்
பட மூலாதாரம், Bastar Police
படக்குறிப்பு, மாத்வி ஹித்மா
மாவோயிஸ்ட் தலைவர் மாத்வி ஹிட்மா கொல்லப்பட்டதாக ஆந்திர மாநில உளவுத் துறை கூடுதல் டிஜிபி மகேஷ் சந்திர லத்தா செவ்வாய்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மாவோயிஸ்ட் அமைப்பில் ஹித்மா மிக முக்கியமான நபராக உள்ளார். 51 வயதான இவர் பாதுகாப்பு படைகளால் மிகவும் தேடப்படுவராக கருதப்பட்டார்.
ஹித்மா உடன் அவர் மனைவியின் உடலும் மீட்கப்பட்டதாக மகேஷ் சந்திர லத்தா தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசத்தில் மரேதுமல்லி காட்டுப் பகுதியில் செவ்வாய்கிழமை காலை பாதுகாப்பு படைகளுடன் ஏற்பட்ட சண்டையில் ஹித்மா உயிரிழந்ததாக லத்தா தெரிவித்தார்.
ஹித்மாவின் தலைக்கு மத்திய மற்றும் பல மாநில அரசுகளும் ரூ.1 கோடி வரை விலை வைத்திருந்தன. தேசிய புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ) மிகவும் தேடப்பட்டவர் பட்டியலிலும் அவர் இருந்தார்.
அரசு ஆவணங்களின்படி மாவோயிஸ்டுகளின் வலுவான ராணுவ அலகான முதலாவது படாலியனின் தலைவரான ஹித்மா, 2010-இல் 76 வீரர்கள் கொல்லப்பட்ட தாண்டேவாடா தாக்குதல், 2013-இல் காங்கிரஸ் தலைவர்கள் மீது நடந்த தாக்குதல் மற்றும் 2017 மற்றும் 2021-இல் பாதுகாப்பு படைகளின் மீதான தாக்குதலில் சம்மந்தப்பட்டவர்.
ஹித்மா 1996 - 1997 ஆண்டுகளில், 17 வயதான போது மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்தார். இவர் ஹிட்மல்லு மற்றும் சந்தோஷ் என்கிற புனைப்பெயர்களில் செயல்பட்டு வந்தார். ஹித்மா தெற்கு பஸ்டரில் உள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள புர்வர்தி கிராமத்தைச் சேர்ந்தவர்.
வணக்கம் நேயர்களே!
இன்று (18.11.2025) இரவு வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது மோகன்.
"திமுக மீது தூக்கிப் போட்ட ரிமோட்டை ஒளித்து வைத்துவிட்டேன்" - கமல்
தஞ்சாவூரில் கவிஞர் சினேகன் தந்தையின்
படத்திறப்பு விழாவில் மக்கள் நீதி மய்யத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக மீது
ரிமோட்டை கொண்டு அடித்தேன். இப்போது ரிமோட்டை ஒளித்து வைத்து விட்டேன்” என்று திமுக
கூட்டணியில் இணைந்ததற்கான காரணம் குறித்து பேசினார்.
“எதற்காக நீங்கள் திமுகவில் போய்
சேர்ந்தீர்கள்? ரிமோட் கண்ட்ரோலை தொலைக்காட்சி மீது தூக்கி எறிந்தீர்களே (என்று கேட்கிறார்கள்).
ஆமாம் ரிமோட்டை தூக்கிப் போட்டேன். விமர்சிக்கும் உரிமை ஜனநாயகத்தில் உண்டு. நான் தூக்கிப்
போட்ட ரிமோட்டை வேறு ஒரு ஆள் தூக்கிக் கொண்டு ஓடிவிட்டார். அங்க போகக் கூடாது ரிமோட்.
ரிமோட் ஸ்டேட் (மாநிலத்துடன்) உடன் இருக்க வேண்டும். கல்வியே அப்படி தான் இருக்க வேண்டும்
என்று கூறுகிறோம். ரிமோட்டை கொடுப்போமா நாங்கள். எடுத்துக் கொண்டு வா திருப்பி. ஒளித்தாவது
வைப்போம். ஒருத்தர் மேல் ஒருத்தர் அடித்துக் கொள்ள வேண்டாம் இனிமேல். எவனோ ஒருவன் வந்து
தூக்கிக் கொண்டு போய்விட்டான். அதனால் எடுத்த முடிவு தான்.
இந்த கூட்டணி புரிந்தால்
புரிந்துக் கொள்ளுங்கள். புரியவில்லை என்றால் சும்மா இருங்கள். ஜனநாயகம் என்று வந்துவிட்டால்,
இந்த தொல்லைகள் எல்லாம் இருந்தே தீரும். புரிந்துக் கொள்க. இதற்கு மாற்று அரசியல் என்பது
பாசிசம், அது எங்களுக்கு வேண்டாம்." என்று கமல் மேலும் கூறினார்.
தொண்டி கடலோர பகுதிகளில் துள்ளி குதித்து விளையாடிய டால்பின்கள்
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலோரப் பகுதிகளில் இன்று காலை டால்பின்கள் கூட்டம்
கூட்டமாக துள்ளி குதித்து விளையாடின.
டால்பின்கள் கூட்டமாக
கடலின் மேல் பகுதிக்கு வந்து குதித்து விளையாடுவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு
அல்ல. எனவே பல டால்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்தியதை தொண்டி கடலோரப் பகுதி
மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். இந்த அழகான காட்சிகளை அப்பகுதியினர் பலர் செல்போன்களில் வீடியோ
எடுத்துள்ளனர்.
கரைக்கு மிகவும் அருகில்
டால்பின் கூட்டங்கள் வருவதற்கான காரணம்
குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கு.சிவக்குமார் பிபிசி தமிழிடம்
கூறுகையில், கடல் பசு, திமிங்கலம், டால்பின், உள்ளிட்ட சில கடல் வாழ்
உயிரினங்கள் அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றி வேறு இடத்திற்கு குடியேறும்
வழக்கத்தை கொண்டவை என்றார்.
“இவ்வகையான கடல் வாழ்
உயிரினங்கள் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரள கடற்கரை வழியாக தமிழக கடற்பகுதிக்கு பின்னர் மீண்டும் அவை மகாராஷ்டிரா செல்லும்.
பருவமழை காலங்களில் மழை நீர் கடலில் சேர்வதன் காரணமாக கடல் நீரில் உப்பு தன்மை குறைவதால்
கடல் புற்கள் நல்ல வளர்ச்சி அடையும். பொதுவாக கடல் மீன்கள் கடல் புற்களுக்கு
மத்தியில் வாழ்விடத்தை அமைத்து கொள்ளும். அப்படி அமைக்கும் போது கடல் மீன்களை
உண்ணும் கடல் பசு, கடல் ஆமை, திமிங்கலம், டால்பின் போன்றவை கடல் புற்களை நோக்கி கரை பகுதிக்கு வர நேரிடுகிறது” என்றார்.
'வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும்'
பட மூலாதாரம், IMD
வங்கக்கடலில் ஏற்கனவே ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி விரும் நிலையில், புதிதாக மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை,
தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தேனி, தூத்துக்குடி ஆகிய எட்டு மாவட்டங்களில்
இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில்
அநேக இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்
மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதை
சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில்
உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மழை எச்சரிக்கை காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில்
ஏற்கெனவே காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவி வருகிறது. தென்கிழக்கு வங்கக்
கடல் பகுதியில் வரும் 22ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். அது
மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
டிரம்பின் காஸா திட்டத்திற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு
பட மூலாதாரம், gett
காஸாவுக்கான டொனால்ட்
ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தை அங்கீகரிக்கும் அமெரிக்கா தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த திட்டம் ஒரு சர்வதேச
அமைதி படையை (ISF) காஸாவில்நிறுவுவதை உள்ளடக்கியது. இதில் பல நாடுகள் பங்களிக்க
முன்வந்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சோமாலியா உட்பட 13 நாடுகள் இந்த தீர்மானத்தை
ஆதரித்தன. ரஷ்யாவும் சீனாவும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
எந்த நாடும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை.
பாலத்தீனர்களின்
உரிமைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிவிட்டது என்று கூறி ஹமாஸ் இந்த தீர்மானத்தை நிராகரித்துள்ளது.
இந்த திட்டம் "காஸா பகுதியில் ஒரு
சர்வதேச பாதுகாப்பு நடைமுறையை திணிக்கிறது,
அதை எங்கள் மக்கள் நிராகரிக்கின்றனர்" என்று டெலிகிராம் சமூக வலைதளம் வழியாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஹமாஸிடமிருந்து ஆயுதங்களை அகற்றுவது
உள்ளிட்ட பணிகள் சர்வதேச படைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மூலம், சர்வதேச படை
நடுநிலை இன்றி, ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக செயல்பட வழிவகுக்கிறது என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
வணக்கம் நேயர்களே!
இன்று (18.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது சாரதா வி.
நன்றி நேயர்களே
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக , தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!
டெல்லி கார் வெடிப்பு - மேலும் ஒருவர் கைது
பட மூலாதாரம், Getty Images
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10ம் தேதி நடந்த கார் வெடிப்பில் தொடர்புடையதாக, மேலும் ஒருவரை என்ஐஏ கைது செய்துள்ளது.
இதுதொடர்பான தகவலை என்ஐஏ திங்கட்கிழமை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளது.
அதன்படி, காஷ்மீரை சேர்ந்த ஜசீர் பிலால் வானி என்பவரை ஸ்ரீநகரில் உள்ள என்ஐஏ குழு கைது செய்துள்ளது. ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாகில் உள்ள காஸிகுண்ட் பகுதியை சேர்ந்தவர் இவர்.
பயங்கரவாத தாக்குதல்களில் இவர் தொழில்நுட்ப உதவியை வழங்கியதாக ஜசீர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக என்ஐஏ அறிக்கை கூறுகிறது. இந்த கார் வெடிப்புக்கு முன்பாக ராக்கெட்டுகளை உருவாக்கவும் இவர் முயற்சி செய்துள்ளதாக என்ஐஏ கூறியுள்ளது.
கார் வெடிப்புடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் உமர் உன் நபியுடன் சேர்ந்து ஜசீர் சதி செய்தார் என என்ஐஏ குற்றம் சாட்டுகிறது.
நவம்பர் 10 அன்று செங்கோட்டை அருகே கார் வெடிப்பு நடந்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.
ஷேக் ஹசீனாவுக்கு எதிரான தீர்ப்பு குறித்து இந்தியா கூறியது என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
டாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், அந்த உத்தரவு "ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேசம் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்கு இந்திய அரசும் பதிலளித்துள்ளது.
தற்போது இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோரை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரியுள்ளது.
வங்கதேச வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது .
அதில், "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தப்பியோடிய ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது" என்று எழுதப்பட்டுள்ளது.
"மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இந்த நபர்களுக்கு எந்த நாடு அடைக்கலம் வழங்கினலும் அது நட்பற்ற நடத்தையாகவும், நீதியை அவமதிக்கும் ஒரு செயலாகவும் இருக்கும்."
"இந்திய அரசாங்கம் உடனடியாக இரு குற்றவாளிகளையும் வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி இது இந்தியாவின் பொறுப்பாகும்" என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குறித்து அந்நாட்டின் "சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்" வழங்கிய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம்.
நெருங்கிய அண்டை நாடாக, இந்தியா அமைதி, ஜனநாயகம், நிலைத்தன்மை உள்ளிட்ட வங்கதேச மக்களின் நலன்களுக்கு உறுதிபூண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, இந்தியா எப்போதும் அனைத்து தரப்பினருடனும் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியா விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை
பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபியாவுக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் இறந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒருவரின் உறவினரான முகமது மன்சூஃப் கூறுகையில், "என்னுடைய மூத்த சகோதரர் முகமது மன்சூர், தாய் ஷோஹ்ரத் பேகம், என்னுடைய அண்ணி ஃபர்ஹீன் பேகம் மற்றும் உடன்பிறந்தவரின் மகன் ஷாஹீன் ஆகிய நால்வரும் மெதீனாவுக்கு சென்றனர்." என்றார்.
அவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், தனது குடும்பத்தினர் குறித்து தகவல் அளிக்கப்பட வேண்டும் எனவும், தாங்கள் அங்கு செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா அரசு ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது.
மேலும், மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் தலைமையிலான அரசுக் குழுவை அனுப்பவும் அமைச்சரவை திட்டமிட்டுள்ளது.
என்ன நடந்தது?
சௌதி அரேபியாவுக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் இறந்துவிட்டதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜனார் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மொத்தம் 54 பேர் ஹைதராபாத்தில் இருந்து ஜெட்டாவுக்கு நவம்பர் 9ம் தேதி கிளம்பியிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் மெக்காவிலேயே இருந்துவிட்டனர். இன்னும் நான்கு பேர், கார் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதினா சென்றடைந்தனர். மீதமிருந்த 46 பேர் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்" என்று கூறினார்.
"பேருந்தில் சென்றவர்களில் ஒருவர் தவிர 45 பேர் இறந்துவிட்டனர். காயமடைந்த ஒரேயொரு பயணி மொஹம்மது அப்துல் ஷோயப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்று தெரிவித்தார் வி.சி.சஜனார்.
'உடனடியாக ஷேக் ஹசீனாவை அனுப்புக' - இந்தியாவுக்கு கோரிக்கை
பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
தாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், அந்த உத்தரவு "ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது" என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் இல்லாத நேரத்தில் (in absentia) நடத்தப்பட்டது.
தற்போது இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோரை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரியுள்ளது.
இந்நிலையில், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து, வங்கதேச வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது
அதில், "சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தப்பியோடிய ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இந்த நபர்களுக்கு அடைக்கலம் வழங்கும் எந்தவொரு நாடும் நட்பற்ற நடத்தை மற்றும் நீதியை அவமதிக்கும் ஒரு செயலாகும்."
"இந்திய அரசாங்கம் உடனடியாக இரு குற்றவாளிகளையும் வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி இது இந்தியாவின் பொறுப்பாகும்" என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக பல கடிதங்களை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த கோரிக்கைகளுக்கு இந்தியா பதிலளிக்கவில்லை.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வங்கதேச வெளியுறவு ஆலோசகர், அவர்களை திருப்பி அனுப்பக் கோரி வங்கதேசம் பலமுறை கடிதங்களை அனுப்பியதாகவும், ஆனால் இந்தியாவிடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
மூளையை தின்னும் அமீபா பாதிப்பு: சபரிமலை பக்தர்களுக்கு கேரள அரசின் எச்சரிக்கை என்ன?
பட மூலாதாரம், Getty Images
கேரள மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக, நேக்ரீரியா ஃபவ்லெரி (Naegleria fowleri) எனப்படும் மூளையைத் தின்னும் அமீபா பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த அமீபா, நீரிலிருந்து மூக்கின் வழியே மூளைக்குச் சென்று அந்த திசுக்களை அழிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் இந்த அமீபா தொற்றுக்கு 39 பேர் பாதிக்கப்பட்டு, 9 பேர் இறந்தநிலையில், கடந்த அக்டோபர் 12 வரையிலும் 104 பேர் பாதிப்புக்குள்ளாகி 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சபரிமலை சீசன் துவங்கியுள்ளது. கார்த்திகை மாதம் முதல் நாளிலிருந்து மகர விளக்கு நாள் வரையிலுமாக மொத்தம் 65 நாட்களுக்கு சபரிமலை நடை திறக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமின்றி வெவ்வேறு மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு பல லட்சம் பக்தர்கள் வரும் நிலையில், கேரள அரசு இந்த அமீபா பாதிப்பு தொடர்பாக முக்கியமான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட அந்த அறிவிப்பில், ‘‘தேங்கிய நீரிலிருந்து பரவும் அமீபா பாதிப்பால் மூளைக்காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் நீர்நிலைகளில் குளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆறுகள், குளங்களில் குளிக்கும்போது, மூக்கு மற்றும் வாயை மூடி குளிக்க வேண்டும். குளிக்கப் பயன்படுத்திய துணியை நன்கு உதறிய பின்பு பயன்படுத்த வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். திறந்தவெளிகளில் மலம் கழிக்காமல் கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பை ஆகிய இடங்களில், சிறப்பு மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர மருத்துவ வசதிகள் தேவைப்படுவோர் இந்த எண்ணில்(04735-203232) தொடர்புகொள்ளலாம் என்றும் கேரள அரசு அறிவித்துள்ளது. மலையாளம், ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் விழிப்புணர்வு செய்யப்படுவதோடு, இந்த மொழிகளில் உதவி செய்வதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
பிகாரில் புதிய அரசு வரும் 20ம் தேதி பதவியேற்பு
பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, பிகார் அமைச்சர் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியடைந்த நிலையில், புதிய அரசு வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளது. பிகார் அமைச்சர் பிரேம் குமார் இந்த தவவலை கூறினார்.
பிரேம் குமார் கூறுகையில், “மாநிலத்தில் புதிய அரசு அமைய உள்ளது. 20ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற (அமைச்சரவை) கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிகாரின் தற்போதைய அரசு வரும் 19ம் தேதி கலைக்கப்படும்.” என்றார்.
அவர் கூறுகையில், “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதவியேற்பு விழா பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும். பிரதமர் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் இதில் கலந்துகொள்வர்.” என்றார்.
பிகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்றது, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி வெறும் 35 இடங்களை வென்றது.
வணக்கம் நேயர்களே!
இன்று (17-12-2025) இரவு வரை உலகம் முழுவதும் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி.
கோவை: அரசுப் பேருந்தில் தீண்டாமையா? தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்
கோவையில் சாதிய தீண்டாமை காரணமாக பட்டியல் பிரிவு மக்கள் வசிக்கும் பகுதியில் அரசு பேருந்து இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பூதாகரமாகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து துறை செயலருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
சாதிய தீண்டாமை காரணமாக கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள கெம்பனூரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் பட்டியல் பிரிவினர் வசிக்கும் பகுதியான அண்ணா நகருக்கு 21-ஆம் எண் பேருந்து இயக்கப்படுவதில்லை என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதன் பின்னணியில் சாதிய தீண்டாமை இருப்பதாக அவர்கள் புகார் கூறினர்.
அண்ணா நகருக்கு செப்டம்பர் 24-ம் தேதிதிக்குள் அந்த பேருந்தை இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்தும் கூட களத்தில் அது செயல்படுத்தப்படவில்லை.
இதனை தொடர்ந்து 21-ஆம் எண் பேருந்தை இயக்கக் கோரி, அப்பகுதி மக்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடந்த மாதம் புகார் அனுப்பினர். அதன் தொடர்ச்சியாகவே, தற்போது கோவை மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்து செயலருக்கும், தேசிய தாழ்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புதுச்சேரியில் தொடரும் கனமழை: மக்களுக்கு எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முதல் அவ்வப்போதுபலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாகப் புதுச்சேரியின் மையப் பகுதியில், தலைமைச் செயலகம் எதிரே செயற்கையாக உருவாக்கப்பட்ட மணற்பரப்பில் கடும் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் செலவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக உருவாக்கப்பட்டஇந்த மணற்பரப்பு, கடல் அலைகளின் தாக்கத்தால் தற்போது அரிக்கப்பட்டு வருகின்றது.
இச்சூழலில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடற்கரைப் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அதன்படி மண்ணரிப்பு ஏற்பட்டுள்ள செயற்கை மணற்பரப்புப் பகுதியில், சிறப்புப் பயிற்சி பெற்ற நீச்சல் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள், பொதுமக்கள் யாரும் கடலுக்குள் செல்லாதவாறு 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். மீறிச் செல்லும் நபர்களை உடனடியாக எச்சரித்துத் திருப்பி அனுப்பும் பணியிலும் இந்த வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வானிலை சீராகும் வரை பொதுமக்கள் யாரும் கடற்கரைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மழை பாதிப்பு குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேரிடர் மேலாண்மைத் துறை ஆலோசித்து வருகிறது.