201 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்; 288 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. இதன்மூலம் 288 ரன்கள் முன்னிலை பெற்றது தென்னாப்பிரிக்கா.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கவுஹாத்தியில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 489 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் செனுரன் முத்துசாமி சதமடித்தார். அதிரடியாக விளையாடிய யான்சன் 93 ரன்கள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 9-0 என்றிருந்தது.
மூன்றாவது நாளில் இந்திய பேட்டர்களால் தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. ஜெய்ஸ்வால் (58 ரன்கள்) ஒருபுறம் அரைசதம் அடித்திருக்க, மறுபக்கம் விக்கெட்டுகள் மடமடவென விழுந்தன. யான்சன், ஹார்மர் இருவரும் பெரும் சவாலாக இருந்தார்கள்.
லோயர் ஆர்டரில் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 48 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் பெரிய ஸ்கோர் எடுக்காததால் இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பேட்டிங்கில் சிறப்பாக ஆடிய மார்கோ யான்சன் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சைமன் ஹார்மர் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
தென்னாப்பிரிக்காவை விட 288 ரன்கள் பின்தங்கிய இந்தியாவால் ஃபாலோ ஆனை தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும், தென்னாப்பிரிக்க அணி ஃபாலோ ஆன் கொடுக்காமல் இரண்டாவது இன்னிங்ஸை பேட்டிங் செய்யத் தீர்மானித்தது.



















