வணக்கம் நேயர்களே!
இன்று (24.12.2025) மதியம் வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்தில் நிகழ்வுகளை தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி.
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்
இன்று (24.12.2025) மதியம் வரை நேரலைப் பக்கத்தில் சமீபத்தில் நிகழ்வுகளை தொகுத்து அளிப்பது நந்தினி வெள்ளைச்சாமி.

பட மூலாதாரம், Kavindu Gishan
இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அனார்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 334 ஆகவும் காணாமல் போனோர் எண்ணிக்கை 370 ஆகவும் அதிகரித்துள்ளது.
309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உயிரிழப்புகளுள் அதிகபட்சமாகக் கண்டி மாவட்டத்தில் 88 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
அமலாக்கத் துறை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக டெல்லி காவல்துறை முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது.
இவர்கள் இருவர் தவிர வேறு சிலரின் பெயர்களும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தி பிரிவு தலைவர் ஜெயராம் ரமேஷ் பாஜகவை விமர்சித்ததோடு நேஷனல் ஹெரால்ட் வழக்கு பொய் மற்றும் ஆதாரமற்றது எனத் தெரிவித்துள்ளார்.
"மோதி மற்றும் அமித் ஷா தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது மிரட்டல் மற்றும் பழிவாங்கும் அரசியலை செய்து வருகிறது." என தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் காந்தி குடும்பம் தவிர வேறு 7 பெயர்களும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை அமலாக்கத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Screenshot
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்களை கொண்டு சென்ற ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தியது.
இதில் பயணித்த 5 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் உட்கோட்டம் நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகே காங்கேயத்தில் இருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்தும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் எட்டுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. காயமடைந்தவர்கள் காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் திட்வா புயல் பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193 ஆக அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. மேலும் 228 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,66,114 குடும்பங்களைச் சேர்ந்த 9,68,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளதாக பிபிசி செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து செல்லும் 4 பிரதான சாலைகளும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இன்று (30.11.2025) இரவு வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது மோகன்.

பட மூலாதாரம், Getty Images
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கான (எஸ்.ஐ.ஆர், Special Intensive Revision - SIR) கால அவகாசத்தை இந்திய தேர்தல் ஆணையம் நீட்டித்திருக்கிறது.
12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்காக ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த அட்டவணையை மாற்றி புதிய அட்டவணையை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு கட்டத்துக்கும் முன்பு கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவை ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4-ஆம் தேதியோடு முடியவேண்டிய கணக்கெடுப்பு இப்போது டிசம்பர் 11 வரை நடைபெறும். அதேபோல் டிசம்பர் 9 வெளியிடப்படுவதாக இருந்த வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16-ஆம் தேதி வெளியிடப்படும். பிப்ரவரி 7- ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த இறுதி வாக்காளர் பட்டியல், ஒரு வாரம் கழித்து பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும்.
எஸ்ஐஆர் முக்கிய தேதிகளின் விவரம் (மாற்றப்பட்ட அட்டவணை)

பட மூலாதாரம், Getty Images
தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. சற்று முன் வரை இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 8 ஓவர்களில் 62 ரன்களை எடுத்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
கே.எல்.ராகுல் தலைமையில் விளையாடும் இந்திய அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்குவாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாடு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜெய்ஸ்வால் விக்கெட்டை மட்டும் இழந்து 8 ஓவர்களில் 62 ரன்களை எடுத்துள்ளது. முன்னாள் கேப்டன்களான ரோகித்தும் கோலியும் ஜோடி சேர்ந்து ஆடி வருகின்றனர்.
290 நாள்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆடுவதும் இந்தப் போட்டியின் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஷ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், வாஷிங்டன் சுந்தர், கே.எல்.ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.
தென்னாப்பிரிக்கா பிளேயிங் லெவன்: குவின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரயன் ரிக்கில்டன், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), மேத்யூ பிரிட்ஸ்கி, டோனி டி சோர்ஸி, டெவால் பிரெவிஸ், மார்கோ யான்சன், கார்பின் பாஷ், பிரெனலன் சுப்ரயன், நாண்ட்ரே பர்கர், ஓட்னீல் பார்ட்மேன்.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா இந்தப் போட்டியில் ஆடாததால் மார்க்ரம் அணியை வழிநடத்துகிறார்.

பட மூலாதாரம், Turkish Directorate General for Maritime Affairs/HANDOUT/EPA/Shutterstock
கருங்கடல் வழியாகச் சென்ற ரஷ்யாவின் இரண்டு எண்ணெய் கப்பல்களை யுக்ரேன் கடற்படையின் டிரோன்கள் குறிவைத்துத் தாக்கியதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிபிசி அந்த வீடியோவிலன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியுள்ளது. காம்பிய நாட்டுக் கொடி பறந்த கெய்ரோஸ் மற்றும் விராட் ஆகிய இரண்டு டாங்கர்கள் தாக்கப்பட்டதாக துருக்கிய அதிகாரிகள் கூறினர். அவை வெள்ளிக்கிழமை துருக்கிய கடற்கரையில் தாக்கப்பட்டன. சனிக்கிழமையன்று விராட் மீண்டும் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யுக்ரேனில் நடந்து வரும் போரைத் தொடர முக்கியமானதாகக் கருதப்படும் ரஷ்யாவின் எண்ணெய் வருவாயை சீர்குலைக்க இப்போது யுக்ரேன் முயற்சிக்கிறது என்பதை இந்தத் தாக்குதல் காட்டுகிறது. அறிக்கைகளின்படி, இரண்டு எண்ணெய்க் கப்பல்களும் ரஷ்ய 'நிழற்படையின்' ஒரு பகுதியாகும். மேற்கத்திய தடைகளைத் தவிர்க்க ரஷ்யா பயன்படுத்திய எண்ணெய்க் கப்பல்களை குறிக்க அந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.
2022ல் ரஷ்யா யுக்ரேன் மீது பெரிய அளவிலான தாக்குதலை தொடங்கிய போது, இந்த தடைகள் விதிக்கப்பட்டன. இந்த நிழற்படை பெரும்பாலும் பழைய எண்ணெய்க் கப்பல்களை கொண்டுள்ளது. அவற்றில் பலவற்றின் உரிமம் மற்றும் காப்பீட்டு விவரங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன.
இன்று (30.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது பிரதீப் கிருஷ்ணா.
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக , தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அனார்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனார்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 153 ஆகவும் காணாமல் போனோர் எண்ணிக்கை 191 ஆகவும் அதிகரித்துள்ளது.
2,17,263 குடும்பங்களை சேர்ந்த 7,74,724 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த உயிரிழப்புகளுள் 52 பேர் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக, இலங்கை முழுவதும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், PMD
திட்வா புயலால் இலங்கையில் கன மழை பெய்து வரும் நிலையில், நாடு முழுக்க அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேவையான சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர நிலையை அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பொது இயக்குநர் பிரசன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று (29.11.2025) இரவு வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது நந்தினி வெள்ளைச்சாமி.

பட மூலாதாரம், Getty Images
விமானம் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஏர்பஸ், தனது ஆயிரக்கணக்கான A320 விமானங்களுக்கான மென்பொருளை புதுப்பிக்க போவதாக (software update) அறிவித்தது. இது விமானக் கட்டுப்பாட்டுக் கணினிகளில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கத்தை நிவர்த்தி செய்யும்.
இதனால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏர்பஸ் ஏ320 விமானங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மென்பொருள் புதுப்பித்தலுக்குப் பிறகு பெரும்பாலான விமானங்களின் சேவை மீண்டும் தொடங்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த புதுப்பிப்பு காரணமாக, உலகம் முழுவதும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல விமானங்கள் தாமதமாக செயல்படுகின்றன.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, ஜப்பானின் ஆல் நிப்பான் ஏர்வேஸ் (ஏஎன்ஏ) சனிக்கிழமை 65 விமானங்களை ரத்து செய்துள்ளது.
விமானப் போக்குவரத்தில் காஸ்மிக் மற்றும் சூரியக் கதிர்வீச்சில் முனைவர் பட்டம் பெற்ற குவான்டாஸ் ஏர்வேஸ் முன்னாள் கேப்டனான டாக்டர் இயன் கேட்லி, சூரியனில் இருந்து பிளாஸ்மாவை வெளியேற்றும் கரோனல் மாஸ் எஜெக்ஷன்களால் (சிஎம்இ-க்கள்) விமானங்கள் பாதிக்கப்படலாம் என்கிறார்.
ஒரு சிஎம்இ-யின் போது, சூரியனில் இருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் பூமியின் வளிமண்டலத்தை அடைகின்றன. இந்த துகள்கள் மேல் வளிமண்டலத்தில் இன்னும் அதிக மின்னூட்டப்பட்ட துகள்களை உருவாக்குகின்றன. இது விமான மின்னணு அமைப்புகளை பாதிக்கலாம்.
சிஎம்இ மிகவும் கடுமையானது, 28,000 அடிக்கு (8.5 கிமீ) மேலே பறக்கும் செயற்கைக்கோள்கள் மற்றும் விமானங்களின் மின்னணு அமைப்புகளுக்கு இடையூறு ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் கேட்லி விளக்குகிறார்.

பட மூலாதாரம், AFP via Getty Images
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் நான்காவது சீசன் வரும் ஜனவரி 9-ம் தேதி தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
5 அணிகள் மோதும் டபிள்யூபிஎல் தொடர் 2023ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் நான்காவது சீசனுக்கான ஏலம் கடந்த வியாழக்கிழமை நடந்தது. இந்நிலையில், இந்தத் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று (நவம்பர் 29) வெளியிட்டிருக்கிறது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி பிப்ரவரி 5-ஆம் தேதி நடக்கிறது.
நான்காவது சீசன் போட்டிகள் நவி மும்பை மற்றும் வதோதரா ஆகிய இரு இடங்களில் நடக்கின்றன. முதல் 11 போட்டிகள் நவி மும்பையிலும், அடுத்த 11 போட்டிகள் வதோதராவிலும் நடக்கின்றன.
சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் முன்னாள் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
வழக்கமாக வார இறுதி நாள்களில் நடக்கும் இறுதிப் போட்டியை இம்முறை வியாழக்கிழமை (பிப்ரவரி 5) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
திட்வா புயல் காரணமாக இலங்கையில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் விளைவாக பிரதான ஆறுகளில் ஒன்றான மஹா ஓயா ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்படக்கூடும் என்று நீரியல் மற்றும் பேரிடர் மேலான்மை துறை எச்சரித்துள்ளது.
அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "மஹா ஓயா ஆற்றுப்படுகையின் மேல் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழை காரணமாகவும், ஆற்றின் நீர் மட்டம் சம்பந்தமான தரவுகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பகுப்பாய்வு செய்யப்பட்டதன் மூலமாகவும் கிடைத்த முடிவுகளின் அடிப்படையிலும் அடுத்த 24 மணி நேரங்களில் மஹா ஓயா ஆற்றுப்படுக்கையின் தாழ்நிலப் பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு பெருவள்ளம் ஏற்படக்கூடிய சாத்திய உள்ளதாக எச்சரிக்கை விடப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டது.
மேலும், "அந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்களது உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாக்க மிக எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த விஷயத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பேரிடர் மேலாண்மை அதிகாரிகளும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

பட மூலாதாரம், Nainar Nagenthran/FB
தமிழக காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படுவதாகவும், இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதாகவும் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், உதயநிதி ஸ்டாலின் கையில் கத்தியைப் பிடித்து போஸ் கொடுத்தது ஒரு கேலிக்குரிய நிகழ்வு என்று கூறியதுடன், "சாதாரண மக்களுக்கு ஒருவித நீதி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வேறொரு விதமான நீதி என இருந்தால் நாடு எவ்வாறு நீதி வழியில் செல்லும்?" என்றும் கேள்வி எழுப்பினார்.
அதோடு, பிரதமரை கொலை செய்வேன் என்று பேசியவர்களுக்கு எதிராகக்கூட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது திமுக ஆட்சியின் சார்பான நிலையைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார் அவர்.
மேலும், அன்புமணிக்கு 'மாம்பழம்' சின்னம் வழங்குவது தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும் விஷயம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசிய அவர், "மத்திய அரசு தமிழகத்தில் ஆறு இடங்களில் நெல் கொள்முதல் மையங்களை அமைத்திருந்தும், திமுக அரசு மத்திய அரசையே குறைகூறுவது தவறு" என்றார்.
அத்துடன், திட்வா புயல் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரன், "நாளைய புயல் தாக்கம் அதிகரிக்கும் நிலையில் மாநில அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. டெல்டா பகுதியைச் சேர்ந்த முதலமைச்சர் எனப் பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஸ்டாலின் டெல்டா விவசாயிகளின் பிரச்னைகளில் எந்த அக்கறையும் செலுத்தவில்லை" என்று விமர்சித்தார்.