நன்றி நேயர்களே!
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

பட மூலாதாரம், Getty Images
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்திருப்பதாக என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இதன் மூலம் டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது,” என்று கூறியுள்ளது.
“கைது செய்யப்பட்டவர்களில் புல்வாமா (ஜம்மு-காஷ்மீர்) பகுதியைச் சேர்ந்த டாக்டர் முசாமில் ஷகீல் கனாய், அனந்த்நாக் (ஜம்மு-காஷ்மீர்) பகுதியைச் சேர்ந்த டாக்டர் அடில் அகமது ராதர், லக்னௌ (உத்தர பிரதேசம்) பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஷாஹீன் சயீத், ஷோபியை (ஜம்மு-காஷ்மீர்) சேர்ந்த முஃப்தி இர்பான் அகமது வாகே ஆகியோர் அடங்குவர்,” என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ தனது விசாரணையின்படி, “இந்த பயங்கரவாத தாக்குதலில் இவர்கள் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்” என்றும் கூறியுள்ளது.
ஏ.என்.ஐ செய்தி முகமையின் செய்திப்படி, நான்கு சந்தேக நபர்களும் டெல்லியின் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 10 நாட்கள் காவலில் வைக்கப்பட்டனர்.
இதற்கு முன்பு, என்.ஐ.ஏ இருவரைக் கைது செய்திருந்தது. அவர்களில் ஒருவர் ரஷீத் அலி. அவர் பெயரில் குண்டுவெடிப்பு நடந்த கார் பதிவு செய்யப்பட்டிருந்தது. மற்றொரு நபர் ஜாசிர் பிலால் வானி. அவர் தொழில்நுட்ப உதவி வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
தேசிய புலனாய்வு முகமையின் கூற்றுப்படி, டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.

பட மூலாதாரம், Boxing Federation of India
டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மீனாட்சி ஹூடா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் குத்துச்சண்டை வீராங்கனை ஃபோசிலோவாவை 5-0 என்ற கணக்கில் தோற்கடித்து மீனாட்சி ஹூடா தங்கம் வென்றார்.
அதோடு, நுபுர் ஷெரோன் 80 கிலோவுக்கு மேற்பட்டவர்கள் என்ற எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். அவர் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த ஒல்டினோய் சொதிம்பேவாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 54 கிலோ எடைப் பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பிரீத்தி பவார் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இத்தாலியின் சிரின் சரபியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்திய பிரீத்தி பவார் தங்கப் பதக்கம் வென்றார்.

பட மூலாதாரம், Boxing Federation of India
இரண்டு மாதங்களுக்கு முன்பு செப்டம்பரில், லிவர்பூலில் நடைபெற்ற பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியிலும் மீனாட்சி ஹூடா தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
ஹரியாணாவின் ரோஹ்தக்கில் உள்ள ரூர்க்கி கிலோரி கிராமத்தைச் சேர்ந்த மீனாட்சி,எளிய பின்னணியைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஸ்ரீகிருஷ்ணா ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றுகிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இந்திய துணை ராணுவப் படையில் பணிபுரியும் மீனாட்சி ஹூடா, தனது பணியிடத்தில் தனக்கு நல்ல ஆதரவு கொடுக்கப்படுவதாக கடந்த செப்டம்பரில் தங்கம் வென்ற பிறகு கூறியிருந்தார்.
தங்கப் பதக்கங்களை வென்ற வீராங்கனைகளில் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரின் மகள், மற்றொருவர் குத்துச்சண்டை சாம்பியன்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும். அதற்குக் காரணம் என்ன?

மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் திட்டம் கோவைக்கு வரக்கூடாது என்பதற்காகவே டி.பி.ஆர் அறிக்கை தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “கோவை மாவட்டத்தின் பத்து சட்டப் பேரவை உறுப்பினர்களும் அதிமுகவை சேர்ந்தவர்களே.
இந்நிலையில், கோவைக்கு மெட்ரோ ரயில் வரக்கூடாது என்ற அடிப்படையிலேயே திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது,” என்று குற்றம் சாட்டினார்.

பட மூலாதாரம், H.RAJA/X
மேலும், “பேருந்து பயணத்திற்கும் மெட்ரோ பயணத்திற்கும் சில நிமிடங்கள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. ரயில் நிலையம் அமைக்க 20 மீட்டர் அகலத்திற்கு அதிகமான இடம் தேவைப்படும் நிலையில் பல ரயில் நிலையங்கள் 10 முதல் 12 மீட்டர் மட்டுமே இடம் வழங்க முடியும், சில இடங்களில் கட்டடங்களை இடிக்க வேண்டும் என்பன போன்ற தகவல்கள் திட்டம் வரக்கூடாது என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
“பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருக்கும் நகரங்களில் மெட்ரோ திட்டத்தைக் கொண்டு வர வேண்டுமென்ற அடிப்படையில் டி.பி.ஆர் அறிக்கை தயார் செய்யப்பட்டு, வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க, தமிழக அரசின் டி.பி.ஆர் அறிக்கை 15ஆம் தேதியே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு மறுநாளே முதலமைச்சர் அதுகுறித்து அறிக்கை வெளியிடாதது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதோடு, பிரதமர் வரும்போது போராட்டம் நடத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவே திமுக இந்தப் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், “அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு மெட்ரோ ரயில் திட்டம் கோவையில் நிச்சயமாகக் கொண்டு வரப்படும்” என்றும் தெரிவித்தார்.

பட மூலாதாரம், X/NarendraModi
பிகாரில் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ் குமார். அவருடன் சாம்ராட் சௌத்ரி, விஜய் சின்ஹா உள்பட அனைத்து அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமாரை வாழ்த்தி, பிரதமர் மோதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிகார் முதல்வராகப் பதவியேற்றுள்ள நிதிஷ் குமாருக்கு மிகுந்த வாழ்த்துகள். அவர் ஒரு திறமையான, அனுபவம் வாய்ந்த நிர்வாகி. சிறந்த நல்லாட்சியை செய்துகொண்டுள்ளார். அவரது புதிய பதவிக் காலத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்,” என்று பதிவிட்டுள்ளார்.
சாம்ராட் சௌத்ரி, விஜய் சின்ஹா ஆகியோரை வாழ்த்தியுள்ள பிரதமர் மோதி, “பிகாரின் துணை முதல்வர்களாகப் பதவியேற்ற சாம்ராஜ் சௌத்ரி, விஜய் சின்ஹா ஆகியோருக்கு வாழ்த்துகள். இரு தலைவர்களும் அடிமட்ட அளவில் பொது சேவையில் நீண்ட அனுபவம் பெற்றவர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “பிகார் அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். பிகாரை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் அர்ப்பணிப்புள்ள தலைவர்களின் அற்புதமான குழு இது,” என்று பதிவிட்டுள்ளார்.

பட மூலாதாரம், X/@Jduonline
பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநிலத்தில் யார் ஆட்சி அமைப்பார் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், அங்கு நிதிஷ் குமார் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார்.
அவர் பிகாரின் முதலமைச்சராக பத்தாவது முறை பதவியேற்றுக் கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருடன் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 26 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிதிஷ் குமார் பொறுப்பேற்ற பிறகு, பாஜகவின் சாம்ராட் சவுத்ரி அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் மற்றும் பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
பாட்னா வந்த மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் கலந்துகொண்ட ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், "நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது... பிகாரும் எதிர்காலத்தில் நிறைய முன்னேறும்" என்று கூறினார்.
உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், "நிதிஷ் குமார் மற்றும் அமைச்சரவையில் உள்ள அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பிகாரில் பிரதமர் மோதி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்துள்ளது.
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "உத்தரபிரதேச மக்கள் சார்பாக, பிகாரில் புதிய அரசை வாழ்த்த நான் வந்துள்ளேன். நிதிஷ் குமாரின் அனுபவம் மற்றும் இரட்டை எஞ்சின் அரசின் அர்த்தமுள்ள முயற்சிகளின் விளைவை இன்று நாம் இங்கு காண்கிறோம்” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசு தலைவருக்கோ, ஆளுநருக்கோ காலக்கெடுவை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனினும் ஆளுநர்கள் காலவரையறையின்றி மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்றும், அப்படி செய்தால் கட்டுப்படுத்தப்பட்ட/ குறுகிய (limited) நீதிமன்ற மறு ஆய்வு செய்யப்படலாம் என்று தெரிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால், மசோதாக்கள் சட்டமாகிவிடும் என்று ஏப்ரல் மாதம் வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியது அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் செயல்பட காலக்கெடு விதிப்பது பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டிருந்த நிலையில், இந்த தீர்ப்பை இன்று (நவ. 20) உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து கோப்புகளையும் வெளியிட உத்தரவிடும் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மசோதா ஜெஃப்ரி எப்ஸ்டீன் விசாரணை தொடர்பான தகவல்களை 30 நாட்களுக்குள் "தேடக்கூடிய மற்றும் பதிவிறக்கம் செய்யக்கூடிய வடிவத்தில்" நீதித் துறை வெளியிட வேண்டும் என்கிறது.
பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2019 இல் இறந்தார்.
இந்த கோப்புகளை வெளியிடுவதை டிரம்ப் முன்பு எதிர்த்தார். ஆனால் எப்ஸ்டீன் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது சொந்த குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் ஆட்சேபனைகளுக்குப் பிறகு கடந்த வாரம் தனது முடிவை மாற்றினார்.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை வெளியிட வாக்களிக்குமாறு டிரம்ப் தனது கட்சியின் உறுப்பினர்களை வலியுறுத்தினார். பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார் "ஏனென்றால் நாம் மறைக்க எதுவும் இல்லை" என்றார்.
செவ்வாயன்று, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
பிரதிநிதிகள் சபை கோப்புகளை வெளியிடுவதற்கு ஆதரவாக 427-1 க்கு வாக்களித்தது, மேலும் செனட் அதை வாக்கெடுப்பு இல்லாமல் ஒருமனதாக நிறைவேற்றியது.
புதன்கிழமை ட்ரூத் சோஷியலில் ஒரு பதிவில், டிரம்ப் தனது நிர்வாகத்தின் வெற்றிகளில் இருந்து கவனத்தை திசைதிருப்ப ஜனநாயகக் கட்சியினர் இந்த பிரச்னையை தீவிரப்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
பல முக்கிய ஜனநாயகக் கட்சியினருக்கு ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்புகள் இருந்ததாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
"ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் இந்த ஜனநாயகக் கட்சியினரின் உறவுகள் பற்றிய உண்மை விரைவில் வெளிப்படும், ஏனெனில் எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை வெளியிடுவதற்கான ஒரு மசோதாவில் நான் கையெழுத்திட்டேன்!" என்றார்.
சமீபத்தில், அமெரிக்க ஹவுஸ் மேற்பார்வைக் குழு 20,000 க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்ட ஆவணங்களை வெளியிட்டது. அவற்றில் சில அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பெயரைக் குறிப்பிடுகின்றன.
டிரம்ப் மற்றும் எப்ஸ்டீன் பல ஆண்டுகளாக நட்பு உறவைக் கொண்டிருந்தனர், ஆனால் 2000 களின் முற்பகுதியில் எப்ஸ்டீனுடனான உறவுகளை துண்டித்ததாக டிரம்ப் கூறுகிறார்.

பட மூலாதாரம், ANI
பிகார் முதலமைச்சராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் இன்று பதவியேற்கிறார்.
புதன்கிழமை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நிதிஷ் குமார் மாலை ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்தார்.
பிகாரில் ஆட்சி அமைக்க நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிற தலைவர்களுடன் சென்று உரிமை கோரினார்.
பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் பதவியேற்பு விழா பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொள்கிறார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை மாலை பாட்னா சென்றடைந்தார்.

பட மூலாதாரம், Anadolu via Getty Images
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸா நகரின் கிழக்கு ஜீட்டூன் பகுதியில் உள்ள மத அறநிலைய அமைச்சகத்தின் கட்டடம் தாக்கப்பட்டதில் ஒரு பெண் மற்றும் ஒரு இளம் பெண் உட்பட பத்து பேர் கொல்லப்பட்டனர் என்று மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
ஐந்து வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தெற்கு நகரமான கான் யூனிஸில் தனது வீரர்கள் செயல்படும் பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறிய இஸ்ரேல் ராணுவம் இதையடுத்து "ஹமாஸ் பயங்கரவாத இலக்குகளை" தாக்கியதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹமாஸிடம் இருந்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
இரண்டு ஆண்டுகால பேரழிவு தரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் காஸா திட்டத்தை அங்கீகரித்த ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் பின்னர் இந்த வன்முறை வெடித்துள்ளது.
காஸாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பசல் பிபிசியிடம் கூறுகையில், புதன்கிழமை மாலை காஸா நகரம் மற்றும் கான் யூனிஸில் இஸ்ரேலிய வான், ட்ரோன் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் பல இடங்களைத் தாக்கின என்றார்.
இந்த தாக்குதல்கள் கடந்த பல நாட்களாக ஒப்பீட்டளவில் அமைதி நிலவிய பின்னர் அதிகரிக்கும் பதட்டத்தை குறிக்கின்றன என்று அவர் கூறினார்.
இன்று (20.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது சாரதா வி.
பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து 272 முக்கிய நபர்கள் எழுதிய கடிதத்திற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாகப் பதிலளித்துள்ளது.
இது குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால், இது யாருக்கு ஆதரவான கடிதம் என்பதை "கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் யார் என்பதைப் பார்த்தாலே அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். மத்திய அமைச்சர் ஒருவரின் மனைவியும் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்" என்று கூறினார்.
"தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்து வாக்காளர் பட்டியலில் மோசடியில் ஈடுபட்டுள்ளது என்ற உண்மையையும் ஆதாரங்களையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தேசத்திற்கு வழங்கினார்," என காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் சிங் ஹூடா தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "எழுப்பப்படும் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். ஆனால் கேள்விகள் கண்ணுக்குத் தெரியாத சக்தியால் கேட்கப்படுவது போல் தெரிகிறது. நமது நாட்டின் ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க, தேர்தல் செயல்முறை நியாயமானதாக இருக்க வேண்டும். அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என நான் நம்புகிறேன்." என்று கூறினார்.
"தலைமை தேர்தல் ஆணையராக செயல்படுவதற்குப் பதிலாக, ஞானேஷ் குமார் பாஜகவுக்கு ஆதரவானவர் போல செயல்படுகிறார்," என்று அவர் குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், "ராகுல் காந்தி அளித்த ஆதாரங்களுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும். நீங்கள் ஆதாரங்களை நிராகரித்தால், அதற்கான அடிப்படைக் காரணத்தை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI
பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜகூ) பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான இடங்களில் வென்றுள்ளது. இந்த நிலையில் தேஜகூ கூட்டத்தில் முதல்வராக நிதிஷ் குமார் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் 10வது முறையாக பதவியேற்க உள்ளார்.
புதன்கிழமை மதியம் 03:30 மணிக்கு பாட்னாவில் நடைபெற்ற தேஜகூவின் சட்டமன்ற குழு கூட்டத்தில் நிதிஷ் குமாரின் பெயர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வியாழக்கிழமை காலை 11:30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் பல மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
முன்னதாக நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டத்தில் நிதிஷ் குமார் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பாஜக சட்டமன்ற குழு கூட்டத்தில் சம்ரத் சௌத்ரி தலைவராகவும் விஜய் சின்ஹா துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பட மூலாதாரம், SLPP Media
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவின் சட்ட படிப்படிப்பு தொடர்பில் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கை சட்ட கல்லூரியில் சேர்வதற்கு போலியான சான்றிதழை நாமல் ராஜபக்ஸ வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலங்கை சட்ட கல்லூரியில் நுழைவு தேர்வு இல்லாமல் சேர்வதற்கு சிட்டி யுனிவசிட்டி லண்டனில் பட்டப்படிப்பு பெற்ற சான்றிதழை நாமல் ராஜபக்ஸ சமர்பித்துள்ளார்.
ஆனால் அந்த சான்றிதழ் போலியானது எனக் குற்றம்சாட்டியுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதன் நகல் தன்வசம் இருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
பட்டப்படிப்பு சான்றிதழில் உள்ள கையெழுத்து தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
''நாமல் ராஜபக்ஸ சிட்டி யுனிவசிட்டி லண்டன் எனக் கூறப்படும் நிறுவனத்தில் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் சட்ட படிப்பு குறித்த ஆவணங்களை ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அவர் சமர்ப்பித்துள்ளார். அந்த பட்டப்படிப்புக்கான சான்றிதழ் 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், அந்த சான்றிதழில் கையெழுத்திட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அந்த உபவேந்தர் பதவியிலிருந்து விலகி 54 நாட்களுக்கு பின்னர் அவர் பெயரிலே அதில் கையெழுத்திடப்பட்டுள்ளது." என்றார்.

பட மூலாதாரம், NALINTHA JAYATHISSA
மேலும் சில கேள்விகளையும் எழுப்பிய அவர், "ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்ட கல்லூரிகளில் கல்வி பயின்று சான்றிதழ் பெற்றால் மாத்திரமே இலங்கை சட்ட கல்லூரிக்கு உள்நுழைவதற்கான சந்தர்ப்பம் அமைகின்றது. எனினும் நாமல் ராஜபக்ஸ் பட்டம் பெற்றதாக சமர்பித்துள்ள சிட்டி யுனிவசிட்டி லண்டன், என்பது லண்டன் பல்கலைக்கழகம் கிடையாது. இந்த நிறுவனம் இலங்கை சட்ட கல்லூரியில் 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியே பதிவு செய்துள்ளது. ஆனால் நாமல் ராஜபக்ஸ அதற்கு முன்னதாகவே அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதியே சட்ட கல்லூரியில் இணைவதற்கு கோரிக்கை விடுத்துள்ளார்." எனத் தெரிவித்தார்.
"விண்ணப்பத்த தேதியிலேயே நாமல் ராஜபக்ஸவின் விண்ணப்பத்தை சட்ட கல்லூரி ஏற்றுக்கொண்டுள்ளது. அவர் விண்ணப்பத்த தேதியில், சிட்டி யுனிவசிட்டி லண்டன் நிறுவனத்தை இலங்கை சட்ட கல்லூரி ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியே அந்த நிறுவனத்தை அங்கீகரித்துள்ளது. என்னிடமுள்ள ஆவணங்களை நான் சபையில் சமர்பிக்கின்றேன்.'' என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இவ்வாறு எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.
''இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்து சில வாரங்களில் நீதிமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்பித்து, எமது பட்டப்படிப்பு குறித்து விசாரணை நடத்த அனுமதியை பெற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து, பல மாத காலமாக இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர். இன்று வரை நீதிமன்றத்தில் எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. நுகேகொடை கூட்டத்தை கண்டு அரசாங்கம் அச்சப்பட்டுள்ளது. போலியானவற்றை பிரசாரம் செய்கின்றனர். இவை அனைத்திற்கும் 21-ஆம் தேதி அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் பதில் வழங்கப்படும்." என நாமல் ராஜபக்ஸ ஊடகவியலாளர்களிடம் பதிலளித்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் செப்டம்பர் மாதம் நடந்த குடியேற்ற சோதனைக்காக வெள்ளை மாளிகை மன்னிப்பு கேட்டதாக ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹோசே முன்யோஸ்க் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவில் கடந்த செபம்பர் மாதம் ஹூண்டாய் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் நடத்தும் ஒரு பேட்டரி தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் 300க்கும் மேற்பட்ட தென் கொரிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சோதனையின்போது தொழிலாளர்கள் தரையில் அமரவைக்கப்பட்டு அவர்களது கால்களில் சங்கிலியிடும் காட்சிகள் தென்கொரியாவில் சலசலப்பைக் கிளப்பியது. கைது செய்யப்பட்டிருந்த தொழிலாளர்கள், தென் கொரிய அரசின் தலையீட்டுக்குப் பின் ஒரு வாரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இதுபற்றி சிங்கப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய முன்யோஸ், "யாரோ ஃபோன் செய்து அவர்களெல்லாம் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அது உண்மை அல்ல" என்று கூறினார்.
ஜார்ஜியாவின் கவர்னர் தன்னை அழைத்து, "என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. இது மாகாண அதிகார வரம்பே இல்லை" என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுபற்றி முன்பு ஒருமுறை பேசியிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் அந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.

பட மூலாதாரம், AIFF Media Team
2027 ஏஎஃப்சி ஆசிய கோப்பை கால்பந்து தொடர் சௌதி அரேபியாவில் நடக்கவிருக்கிறது. இதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று (நவம்பர் 18) வங்கதேசத்துக்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது இந்தியா.
தாக்காவில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில் இந்தியா 1-0 என தோல்வியைத் தழுவியது. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் வங்கதேச வீரர் ஷேக் மொர்சலின் அடித்த கோல் இந்தப் போட்டியை முடிவு செய்தது.
இந்த தகுதிச் சுற்றின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி ஏற்கெனவே இழந்திருந்தது.
சிங்கப்பூர், ஹாங் காங் மற்றும் வங்கதேசம் அடங்கிய பிரிவில் இடம்பெற்றிருக்கும் இந்திய அணி, இந்தத் தகுதிச் சுற்றில் இதுவரை விளையாடிய ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 2 போட்டிகளில் டிரா செய்திருக்கும் இந்திய அணி, மூன்றில் தோற்றிருக்கிறது.
இன்றைய நிலவரப்படி ஃபிஃபா சர்வதேச தரவரிசையில் இந்திய ஆண்கள் அணி 136வது இடத்தில் இருக்கிறது. வங்கதேசமோ 183வது இடத்தில் இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், சிங்கப்பூர் அணி 155வது இடத்திலும், ஹாங் காங் 148வது இடத்திலும் இருக்கின்றன. பிரிவில் இடம்பெற்றிருக்கும் அனைத்து அணிகளுமே இந்தியாவுக்குப் பின் இருக்கும் நிலையில், தொடர்ந்து வெற்றி பெறத் தவறுவது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பட மூலாதாரம், bbc
கோவையில் பிரதமர் மோதியின் வருகையை கண்டித்து விவசாயிகள் கூட்டமைப்பினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் மோதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
"மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்க ரூ.500 கோடி ஒதுக்கிய பிரதமர் மோதிக்கு, இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தார்மீக உரிமை இல்லை, விளைபொருட்களுக்கு 2 மடங்கு விலை கொடுப்போம் என்ற வாக்குறுதியை மோதி நிறைவேற்றவில்லை" என்று அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பிரதமர் மோதி வருகையை முன்னிட்டு கோவை முழுவதும் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்பகுதியாக, போலீசார் இன்று காலை விரிவான பாதுகாப்பு ஒத்திகையை நடத்தினர்.
கோவை கொடிசியா வளாகத்தில் 3 நாள் இயற்கை விவசாயிகள் மாநாட்டை பிரதமர் மோதி தொடங்கி வைக்கிறார். தனி விமானத்தில் புறப்படும் பிரதமர், மதியம் 1.30 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விமான நிலையத்திலிருந்து கொடிசியா வளாகம் வரை பிரதமரின் கான்வாய் செல்லும் வழித்தடத்தில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. துப்பாக்கியுடன் கூடிய போலீசார் இருபுறமும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு நிலையைச் சோதித்தனர். ஒத்திகை காரணமாக அவினாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைப்பை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.