சிவகங்கையில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 11 பேர் பலி

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகம் முழுவதுமான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்

முக்கிய சாராம்சம்

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 'விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்' - திருமாவளவன் கூறியது என்ன?

    திருமாவளவன், விஜய், செங்கோட்டையன்

    பட மூலாதாரம், Facebook/Thol.Thirumavalavan

    படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைவது பற்றி திருமாவளவன் பேசியுள்ளார் (கோப்புப்படம்)

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது தொடர்பான தகவல்கள் பரவுவது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்துப் பேசிய திருமாவளவன், “அது எந்த அளவிற்கு உறுதியான தகவல் என்று தெரியவில்லை. சேர்ந்த பிறகுதான் தெரியும். அவர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருக்கிறாரா அல்லது இதற்குப் பின்னால் வேறு ஏதேனும் அரசியல் சூது, சூழ்ச்சி இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.”

    “நண்பர் விஜய் பாஜகவிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவருடைய கட்சியில் சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்கள் ஏற்கெனவே ஊடுருவி இருக்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் இருக்கின்றன. மேன்மேலும் ஊடுருவல்கள் நிகழ்ந்தால் அவருடைய அரசியல் கேள்விக்குள்ளாகும் என்பது என் கருத்து” எனத் தெரிவித்தார்.

  2. “என் எதிர்காலம்…” - இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் செய்தியாளர்களிடம் கூறியது என்ன?

    கௌதம் கம்பீர், இந்தியா, கிரிக்கெட், பிசிசிஐ

    பட மூலாதாரம், Getty Images

    தென்னாப்பிரிக்கா அணி உடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்கிற கணக்கில் தோற்றது. இதைத் தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது சமூக ஊடகங்களில் விமர்சனம் வைக்கப்படுகிறது.

    இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய கம்பீர், “என் எதிர்காலம் பற்றிய முடிவை பிசிசிஐ தான் எடுக்க வேண்டும். இந்திய அணிதான் முக்கியம், நான் முக்கியமில்லை” என்றார்.

    தன்னுடைய பதவிக் காலத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியைக் குறிப்பிட்டும் பேசினார் கம்பீர்.

    “இளம் அணியை வைத்துக் கொண்டு இங்கிலாந்தில் சாதகமான முடிவை பெற்றுத் தந்த அதே நபரும் நான்தான். என் பதவிக் காலத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஆசிய கோப்பையை வென்றது” என்றார்.

    இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்கிற கணக்கில் சமன் செய்தது.

  3. 300 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு - தாய்லாந்து கனமழை பாதிப்பை காட்டும் புகைப்படங்கள்

    தாய்லாந்து, கனமழை, வெள்ளம்

    பட மூலாதாரம், Getty Images

    தாய்லாந்தில் பெய்த கனமழையால் பல ஊர்களும் நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

    மீட்புப் பணிகளில் படகுகளையும் ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்துமாறு ராணுவத்திடம் அரசு கோரியுள்ளது.

    தாய்லாந்து, கனமழை, வெள்ளம்

    பட மூலாதாரம், Getty Images

    நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள 10 மாகாணங்கள் கடந்த வாரத்தில் இருந்து முழுவதும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. மலேசியா எல்லை அருகே அமைந்துள்ள தொழில்நகரமான ஹாட் யாய்-இல் ஒரே நாளில் 33.5 செமீ மழை பதிவாகியுள்ளது. இது 300 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு எனக் கூறப்படுகிறது.

    தாய்லாந்து, கனமழை, வெள்ளம்

    பட மூலாதாரம், Getty Images

    வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளின் புகைப்படங்கள் மூலமாக வீடுகளும் வாகனங்களும் மூழ்கியுள்ளதைப் பார்க்க முடிகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணப் பொருட்களைப் பெறுவதற்காக வீடுகளின் மாடிகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

    தாய்லாந்து, கனமழை, வெள்ளம்

    பட மூலாதாரம், Getty Images

    இடைவிடாத மழை அண்டைநாடுகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாமில் ஒரு வாரத்தில் மட்டும் 98 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் 19,000 பேர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

    தாய்லாந்து, கனமழை, வெள்ளம்

    பட மூலாதாரம், Getty Images

    தாய்லாந்தில் 20 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலரும் தனித்துவிடப்பட்டு இருப்பதாகவும் உதவிகள் பெறுவதில் சிரமங்கள் இருப்பதாகவும் ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

    தாய்லாந்து, கனமழை, வெள்ளம்

    பட மூலாதாரம், Getty Images

  4. எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

    எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

    அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

    இன்று (நவம்பர் 26) தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவைச் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அவர் அளித்தார்.

    முன்னதாக நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், “எனது 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில், ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து, இயக்கத்திற்காக உழைத்துள்ளேன். அப்படிப்பட்ட என்னை கட்சியின் உறுப்பினராகக் கூட இருக்கக் கூடாது என்று முடிவு செய்து, நீக்கம் செய்து பரிசு கொடுத்துள்ளனர். இந்த மன வேதனை என்பது உங்களைப் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். இதற்கு மேல் எந்த கருத்தையும் சொல்வதற்கு இல்லை” என்று கூறியிருந்தார்.

    கடந்த அக்டோபர் 31ஆம் தேதி, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

  5. வங்கதேசம்: நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி

    வங்கதேசம்: நாடு தழுவிய போராட்டங்களை அழைப்பு விடுத்துள்ள ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி

    பட மூலாதாரம், Getty Images

    வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நவம்பர் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    நவம்பர் 17 அன்று, வங்கதேச சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (வயது 78) மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் கமாலுக்கு மரண தண்டனை விதித்தது.

    அவாமி லீக், அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில், “தீர்ப்பாயத்தின் இந்த முடிவு, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தல்களில் இருந்து ஹசீனாவையும் அவரது கட்சியையும் விலக்கி வைப்பதற்கான முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கத்தின் அரசியல் ‘சதியின்’ ஒரு பகுதியாகும்” என்று குற்றம் சாட்டியது.

    தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நிராகரித்த அந்தக் கட்சி, அதை 'சட்டவிரோதம்' என்று கூறி, முகமது யூனுஸ் பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளது.

    யூனுஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் 'விடுதலைக்கு எதிரானவர்கள்' (வங்கதேச விடுதலையைக் குறிப்பிட்டு) மற்றும் 'தேச விரோதிகள்' என்று அவாமி லீக் குற்றம் சாட்டியுள்ளது.

    "வங்கதேசத்தில் போலித் தேர்தல்கள் அனுமதிக்கப்படாது. அது நிச்சயம் எதிர்க்கப்படும்" என்றும் அக்கட்சி கூறியுள்ளது.

  6. வணக்கம் நேயர்களே!

    இன்று (26.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளைத் தொகுத்து வழங்குவது சிராஜ்.

  7. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் இன்றைய நேரலை பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. மீண்டும் நாளை காலை முதல் நேரலையாக தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய நிகழ்வுகளை இங்கே பார்க்கலாம். நன்றி! வணக்கம்!

  8. டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?

    இந்தியா, பாகிஸ்தான், டி20 உலக கோப்பை

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியாகியுள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன.

    இந்தியா பிப்ரவரி 7ஆம் தேதி அமெரிக்காவையும், 12ஆம் தேதி நமீபியாவையும், 15ஆம் தேதி பாகிஸ்தானையும், 18ஆம் தேதி நெதர்லாந்தையும் சந்திக்கிறது.

    இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி கொழும்புவில் நடைபெறுகிறது. பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகிறது.

    பிப்ரவரில் 7ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை லீக் சுற்றில் மொத்தம் 40 போட்டிகளில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் 21ஆம் தேதி தொடங்கும் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். சூப்பர் 8 சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும்.

  9. 'மனவேதனையில் இருக்கிறேன்' - செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியது என்ன?

    அதிமுக, செங்கோட்டையன்

    பட மூலாதாரம், Getty Images

    முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், "நான் உறுப்பினராகக்கூட இருக்கக்கூடாது என்கிற முறையில் நீக்கப்பட்டிருப்பதுதான் 50 ஆண்டுக்கால அரசியல் வரலாற்றில் ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து இயக்கத்திற்காக உழைத்த எனக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசு.

    இந்த மன வேதனை என்பது உங்களைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதற்கு மேல் எந்தக் கருத்தும் இப்போது சொல்வதற்கு இல்லை" எனத் தெரிவித்தார்.

    அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து பிரிந்துபோன தலைவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து அவர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்பதில் இருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  10. யுக்ரேன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெறும்: அமெரிக்கா புதிய தகவல்

    அமெரிக்கா, ரஷ்யா

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, ஜெனிவாவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிகாரிகள்

    ரஷ்யா - யுக்ரேன் போர் நிறுத்த முயற்சிகளின் ஒரு பகுதியாக அபுதாபியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

    ரஷ்யா - யுக்ரேன் போரை நிறுத்த டிரம்ப் முன்மொழிந்த 'அமைதித் திட்டம்' பற்றிய சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவில் நடைபெற்றது.

    இந்தச் சந்திப்பில் அமெரிக்கா, யுக்ரேன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகள் கலந்து கொண்டனர். டிரம்பின் திட்டத்தை மேலும் திருத்த வேண்டுமென யுக்ரேன் மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் யுக்ரேனும் ரஷ்யாவும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர்.

    யுக்ரேன் நகரங்களில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே போல ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் யுக்ரேன் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  11. தென் ஆப்ரிக்க 260 ரன்களில் டிக்ளேர் - 2 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா

    இந்தியா, தென் ஆப்ரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியா - தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் தென் ஆப்ரிக்கா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 260 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்துள்ளது.

    முதல் இன்னிங்ஸில் பெற்ற 288 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து தென் ஆப்ரிக்க அணி 548 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. தென் ஆப்ரிக்காவின் இரண்டாவது இன்னிங்கிஸில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிகபட்சமாக 94 ரன்கள் எடுத்திருந்தார்.

    இந்திய அணிக்கு நான்காவது இன்னிங்ஸில் 549 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் தென் ஆப்ரிக்கா 1-0 என்கிற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

    தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 21 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க வீரர்கள் யஷஷ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும் கே.எல்.ராகுல் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    ஈஎஸ்பின் க்ரிக்இன்ஃபோ தளத்தின்படி, நான்காவது இன்னிங்ஸில் இந்தியா அதிகபட்சமாக சேஸ் செய்த ஸ்கோர் 403 ஆக உள்ளது. 1976ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் இந்த ஸ்கோரை இந்தியா சேஸ் செய்திருந்தது.

    அதற்கு அடுத்தபடியாக 2008ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் 387 ரன்களை இந்திய அணி சேஸ் செய்திருந்தது.

  12. இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்ததால், சீன அதிகாரிகளால் துன்புறுத்தப்பட்ட அருணாச்சல பிரதேச பெண்

    பிரேமா வாங்கியோம் தோங்டாக்

    பட மூலாதாரம், ANI

    அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஷாங்காய் புடாங் விமான நிலையத்தில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்ததன் காரணமாக, சீன குடிவரவு அதிகாரிகளால் பல மணி நேரம் துன்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

    பிரேமா வாங்கியோம் தோங்டாக், "நான் ஒரு இந்திய குடிமகள். 14 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறேன். நான் லண்டனில் இருந்து ஷாங்காய் வழியாக ஜப்பானுக்கு பயணம் செய்தேன்" என்று கூறியதாக ஏஎன்ஐ செய்திக்குறிப்பு தெரிவித்திருக்கிறது.

    ஷாங்காயில் தான் நிறுத்தப்பட்டதாகவும், தனது பாஸ்போர்ட் செல்லாது என்று கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    "அதிகாரிகள் என்னை கேலி செய்தார்கள். அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் பகுதி அல்ல, அது சீனாவின் ஒரு பகுதி என்று கூறினார்கள். நான் பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்தை அழைத்தேன். ஒரு அதிகாரி என்னைச் சந்திக்க வந்தார்" என்று தோங்டாக் கூறினார்.

    தான் 18 மணிநேரத்திற்குப் பிறகே தப்பிக்க முடிந்தது என்று பிரேமா தோங்டோக் கூறினார். அதோடு, இந்திய வெளியுறவு அமைச்சகம், பிரதமர் அலுவலகம், அருணாச்சல பிரதேச முதல்வர், வெளியுறவுச் செயலர் ஆகியோருக்கு 'இதுபோன்ற ஒரு சம்பவம் எந்தவொரு சாதாரண குடிமகனுக்கும் நடக்கக்கூடாது' என்று கவலை தெரிவித்து மின்னஞ்சல்கள் எழுதியுள்ளார்.

    சம்பவத்தன்று பெய்ஜிங் மற்றும் டெல்லியில் சீனத் தரப்பிற்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும், ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் உள்ளூர் மட்டத்தில் இந்த விஷயத்தை அணுகி, சிக்கித் தவித்த பயணிக்கு முழு உதவி வழங்கியதாகவும் பிபிசி தங்கள் ஆதாரங்கள் (sources) மூலம் தெரிந்து கொண்டது.

    அருணாச்சல பிரதேசம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் பிரதேசம் என்றும், இந்திய பாஸ்போர்ட்டை வைத்துக்கொண்டு பயணிப்பதற்கு அங்கு வசிப்பவர்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் இந்தியா சீனாவிடம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சீன அதிகாரிகளின் நடவடிக்கைகள் சிகாகோ மற்றும் மாண்ட்ரியல் சிவில் விமானப்ப் போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்களை மீறுவதாக இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  13. தாக்குதல் மூலம் 9 குழந்தைகளை பாகிஸ்தான் கொன்றதாக தாலிபன் குற்றச்சாட்டு

    ஜபியுல்லா முஜாஹித்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, குண்டுவெடிப்பில் ஒன்பது குழந்தைகளும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக முஜாஹித் கூறியிருக்கிறார்

    ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர், கோஸ்ட் மாகாணத்தின் ஒரு வீட்டில் குண்டுவீசி 10 குழந்தைகள் மற்றும் பெண்களையும் பாகிஸ்தான் கொன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    தாலிபன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கோஸ்ட் மாகாணத்தின் கர்பூஸ் மாவட்டத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் இடையே (நள்ளிரவு 12 மணியளவில்) ஒரு வெடிப்பு ஏற்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

    பிபிசி உருது செய்தியின்படி, குண்டுவெடிப்பில் ஒன்பது குழந்தைகளும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக முஜாஹித் கூறியிருக்கிறார். குனார் மற்றும் பாக்டியாவிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், குறைந்தது நான்கு பொதுமக்கள் காயமடைந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

    குனார் மாகாணத்தில் உள்ள உள்ளூர் மக்கள் பிபிசி பாஷ்தோவிடம் முந்தைய இரவு மரவாரா, அசதாபாத் மற்றும் ஷெலிடன் பகுதிகளில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக தெரிவித்தனர்.

    ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் இதுவரை பதிலளிக்கவில்லை.

  14. வணக்கம் நேயர்களே!

    இன்று (25.11.2025) இரவு வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளைத் தொகுத்து வழங்குவது மோகன்.

  15. 500 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்காவின் முன்னிலை!

    இந்தியா - தென்னாப்பிரிக்கா - கிரிக்கெட்

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னிலை 500 ரன்களைக் கடந்திருக்கிறது.

    கவுஹாத்தியில் நடந்துவரும் இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க பேட்டர்கள் நிதானமாக ரன் சேர்த்தனர். டிரிஸ்டன் ஸ்ட்பஸ் - டோனி டி சோர்ஸி இருவரும் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதிகம் ஸ்வீப் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை ஆடிய அவர்கள் விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்ததோடு சீராக ரன்களும் சேர்த்தனர்.

    டி சோர்ஸி 49 ரன்களில் ஆட்டமிழக்க, டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய மூன்றாவது அரைசதம் அடித்தார்.

    நான்காவது நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷன் முடிவில் தென்னாப்பிரிக்க அணி தங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 220/4 என்ற நிலையில் இருக்கிறது.

    முன்னதாக தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸிலேயே தென்னாப்பிரிக்க அணி 288 ரன்கள் முன்னிலை பெற்றது.

    இப்போது இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோரையும் சேர்த்து தென்னாப்பிரிக்கவின் முன்னிலை 508 ரன்களாக உயர்ந்திருக்கிறது. இந்தப் போட்டியில் இன்னும் 4 செஷன்கள் மீதமிருக்கின்றன.

  16. எத்தியோப்பியா எரிமலை வெடிப்பு - ஏர் இந்தியா விமானங்கள் ரத்து

    ஏர் இந்தியா விமானம்

    பட மூலாதாரம், Getty Images

    எத்தியோப்பியாவின் ஹைலி குப்பி எரிமலை வெடிப்பின் தாக்கத்தை இந்திய விமானப் போக்குவரத்துத் துறை உணர்ந்துகொண்டிருக்கிறது.

    எரிமலை வெடிப்பின் சாம்பலால் ஏர் இந்தியா நிறுவனம் 11 சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்களை ரத்து செய்திருக்கிறது.

    "ஹைலி குப்பி எரிமலை வெடிப்புக்குப் பிறகு குறிப்பிட்ட சில பகுதிகளின் மேல் பறக்கும் சில விமானங்களை நாங்கள் ரத்து செய்திருக்கிறோம். எங்கள் தரைக் குழுக்கள் பயணிகளின் விமானங்களின் நிலையைப் புதுப்பித்து, தங்குமிடம் உள்பட உடனடி உதவிகளை வழங்குகின்றன. முடிந்தவரை விரைவாக மறு பயணத்தை ஏற்பாடு செய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று ஏர் இந்தியாவின் X பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது.

    பயணிகளின் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஏர் இந்தியா, பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே தனது முதன்மையான முன்னுரிமை என்று கூறியுள்ளது.

  17. ரஷ்யா- யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவரும் டிரம்ப் திட்டத்தில் திருத்தங்கள் - என்ன ஒப்புக்கொள்ளப்பட்டது?

    யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியின் தூதுவர், ஆண்ட்ரே யெர்மக் (இடது) மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ.

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு யுக்ரேனும் அமெரிக்காவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் 'புதுப்பிக்கப்பட்ட அமைதித் திட்டம்' பற்றி பேசப்பட்டுள்ளது.

    இரு தரப்பும் இதை 'புதுப்பிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட கட்டமைப்பு ஆவணம்' என்று அழைத்தன.

    அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் யுக்ரேன் பிரதிநிதிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    முன்னதாக, அமெரிக்கா முன்மொழிந்திருந்த அமைதி திட்டம், ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாகக் கருதப்பட்டது.

    புதிய புதுப்பிக்கப்பட்ட அமைதித் திட்டம் குறித்து அதிக தகவல்கள் இல்லையென்றாலும், செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் படி, மேற்கத்திய நாடுகள் யுக்ரேனில் நிரந்தரமாக தங்கள் படைகளை நிலைநிறுத்த முடியாது என்று கூறுகிறது, ஆனால் அது முழுமையாக தடை செய்யப்படவில்லை.

    மேலும், யுக்ரேன் அதன் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மீண்டும் பெற ராஜ்ஜிய வழிமுறைகளை பின்பற்றலாம்.

    போர்க் குற்றங்களுக்கான பொது மன்னிப்பும் நீக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இந்த உரையாடலில் 'கணிசமான முன்னேற்றம்' ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.

  18. வணக்கம் நேயர்களே!

    இன்று (25.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளைத் தொகுத்து வழங்குவது பிரதீப் கிருஷ்ணா.

  19. மகளிர் உலகக் கோப்பை கபடி: இந்தியா சாம்பியன்

    மகளிர் கபடி

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, (கோப்புப் படம்)

    உலகக் கோப்பை மகளிர் கபடியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சீன தைபேவை வீழ்த்தியது.

    2025 மகளிர் உலகக் கோப்பை கபடித் தொடர் வங்கதேசத்தில் நடந்துவந்தது. இன்று (நவம்பர் 24) சீன தைபேவுக்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் 35-28 என வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    11 நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்தது. குரூப் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளிலுமே இந்தியா வெற்றி பெற்றது. அதன்பிறகு அரையிறுதியில் இரானை வீழ்த்தியது.

    குரூப் சுற்று:

    இந்தியா 65 - 20 தாய்லாந்து

    இந்தியா 43 - 18 வங்கதேசம்

    இந்தியா 63 - 22 ஜெர்மனி

    இந்தியா 51 - 16 உகாண்டா

    அரையிறுதி:

    இந்தியா 33 - 21 இரான்

    இறுதிப் போட்டி:

    இந்தியா 35 - 28 சீன தைபே

  20. பாகிஸ்தான்: பெஷாவரில் தற்கொலைத் தாக்குதலில் 5 பேர் பலி

      • எழுதியவர், Caroline Davis
      • பதவி, BBC's Pakistan correspondent
    பாகிஸ்தான் தற்கொலை தாக்குதல்

    பட மூலாதாரம், Getty Images

    பாகிஸ்தான் துணை ராணுவப் படையின் தலைமையகத்தில் திங்கள்கிழமை இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தாக்குதல் நடத்தியதில் மூன்று பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மேலும், குறைந்தது 12 பேர் காயமடைந்தனர்.

    வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ஃபெடரல் கான்ஸ்டாபுலரியின் (Federal Constabulary) தலைமையகத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் ஆயுதம் ஏந்தியிருந்ததாக பிபிசி உருதுவிடம் போலீசார் தெரிவித்தனர்.

    முன்பு எல்லைப்புற கான்ஸ்டாபுலரி என்று அழைக்கப்பட்ட, பாகிஸ்தானின் ஃபெடரல் கான்ஸ்டாபுலரிக்கு, பழங்குடியினரின் ஊடுருவல்கள் மற்றும் குற்றக் கும்பல்களின் வன்முறை போன்ற காவல்துறையின் திறன்களுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளைக் கையாளும் பொறுப்பு உள்ளது.

    கான்ஸ்டாபுலரி வளாகம் பெஷாவரில் மிகவும் பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ளது. அதனால், தாக்குதல் நடத்தியவர்கள் பல கட்ட பாதுகாப்பை மீறியே உள்ளே நுழைந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

    இந்த தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

    "இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்" என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் கூறியுள்ளார்.