கூகுள் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது ஏன்?

பிரசுரிக்கப்பட்டது

ஆண்ட்ராய்டு தளத்தை பன்படுத்தி சந்தையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதத்தை இந்திய போட்டிகள் ஆணையம் விதித்துள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தனது செயலிகள் ஆதிக்கம் செலுத்து வகையில் ஒரு தரப்பான ஒப்பந்தங்களை உலகின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மேற்கொள்வதாக இந்திய போட்டிகள் ஒழுங்குமுறை அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. இது போன்ற நடைமுறைகளைத் தவிர்த்து சட்டத்தை மதித்து செயல்படும்படி கூகுளுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அபராதம் விதிக்கப்பட்டது குறித்தும், குற்றச்சாட்டு குறித்தும் கூகுள் இன்னும் பதில் அளிக்கவில்லை.

வியாழக்கிழமையன்று இந்திய போட்டிகள் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வீடியோ வெளியீடு சேவைகள், இணைய உலாவுதல், இணைய தேடுதல், ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றுக்காக ஆன்ட்ராய்டு இயங்கு முறைக்கான லைசென்ஸ் முறையில் கூகுள் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறியுள்ளது.

கூகுள் மேப்கள், யூடியூப், கூகுள் குரோம் போன்ற தங்களது செயலி தொகுப்புகளை இடம்பெற செய்ய ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோரிடம் வலுக்கட்டாயமான ஒப்பந்தத்தில் கூகுள் ஈடுபடுவதாகும் இந்திய அரசு கூறுகிறது.

கூகுளின் இந்த நடைமுறையானது போட்டி மனப்பான்மையில் அதிருப்தியை ஏற்படுகிறது. வாடிக்கையாளர்களின் தரவுகளை தொடர்ந்து பயன்படுத்தும் அனுமதி, விளம்பர வருவாய் வாய்ப்புகளுக்கும் கூகுள் உரிமை பெறுகிறது.

தன்னுடைய செயலிகளை முன்கூட்டியே தரவிறக்கம் செய்ய வேண்டும் என ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோரை கூகுள் வலுக்கட்டாயப்படுத்தக் கூடாது என இந்திய போட்டிகள் ஆணையம் கூறியிருக்கிறது. மேலும், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் , அதனை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் ஸ்மார்ட் போன் செட் அப் செய்யும்போது தங்களது விருப்பப்படி செயலிகளை நிறுவ அனுமதிக்க வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

"தகுதியின் அடிப்படையில் போட்டியை அனுமதிக்கும்படி சந்தை திகழ வேண்டும். ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்களின் இந்த செயல்கள் (தற்போது கூகுள்) அதன் நடைமுறைகள் தகுதி வாய்ந்த போட்டியில் முட்டுக்கட்டை போடுவதாக இருக்கக்கூடாது," என போட்டிகள் ஆணையம் கூறியுள்ளது.

போட்டிகள் நடைமுறைக்கு எதிரான ஆன்டி டிரஸ்ட்(anti-trust) வழக்குகளை கூகுள் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. தவிர ஸ்மார்ட் டிவி சந்தையில் கூகுளின் செயல்கள் மற்றும் அதன் செயலி வழியிலான பணம் செலுத்தும் முறை குறித்தும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களின் புகார்களைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு தொடர்பான விசாரணை 2019ஆம் ஆண்டு தொடங்கியது.

ஐரோப்பாவின் ஒழுங்குமுறை அமைப்புகள், கூகுள் நிறுவனமானது ஆண்ட்ராய்டு இயங்கு முறையை சந்தையில் நியாயமற்ற முறையை பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்தன. ஐரோப்பாவில் கூகுள் எதிர்கொண்டுள்ள வழக்கைப் போன்று இந்திய வழக்கும் உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: