சசி தரூர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் எவ்வளவு வலுவாக இருக்கிறார்?

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி இந்திக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தன் கருத்துகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் தன்னுடைய நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் எதிரிகளை ஆச்சர்யப்படுத்துவதில் எப்போதும் சசி தரூர் தோற்றுப்போனதில்லை. ஆச்சர்யப்படுத்த எதுவும் இல்லாதபோதும் கூட, முன்பு கேட்டறிந்திராத ஆங்கில வார்த்தைகளை கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவார்.

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவை கையிலெடுப்பதற்கு உண்மையிலேயே அவருக்கு தைரியம் இருக்கிறதா என ஒவ்வொருவரும் ஆச்சர்யப்பட்டபோது, தன் நண்பர்கள் மற்றும் விமர்சகர்களின் யூகம் தவறு என சசி தரூர் நிரூபித்தார்.

அரசியல் விமர்சகர் ஒருவரால், அனைவரையும் வசீகரிக்கும் பாலிவுட் நடிகர் போன்றவர் என வர்ணிக்கப்பட்ட சசி தரூர், தற்போது காங்கிரஸ் தலைவர்களின் பெரும் அரசியல் போட்டி ஒன்றில், தான் ஜெயிப்போமா அல்லது தோற்போமா என்பதையும் கடந்து தேர்தலில் பங்கேற்கிறார்.

ராகுல் காந்தியின் அரசியல் போக்கை முதன்மையாக எதிர்த்து, கட்சியில் சீர்திருத்தங்களை கோரி அமைக்கப்பட்ட ஜி-23 தலைவர்களுள் ஒருவரான சசி தரூர், பின்னால் ராகுலின் 'பாரத் ஜோடோ' யாத்திரையில் பங்கேற்று, பின்னர் கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தன் விருப்பத்தை தெரிவித்தபோது பலரும் ஆச்சர்யப்பட்டனர்.

ஆனால், அவரை அறிந்தவர்கள் அல்லது அவரை நெருக்கமாக கவனித்து வருபவர்களிடம் கேட்டால், சசி தரூர் அப்படிப்பட்டவர்தான் என்று கூறுவார்கள். சோனியா காந்தியின் அனுமதியை கேட்பதன்மூலம், சசி தரூர் தான் ஜி-23 குழுவில் இருந்ததற்கான அனைத்து முன்முடிவுகளையும் நீர்த்துப்போகச் செய்தார். ஆனால், சோனியாவை சந்தித்தது மரியாதை நிமித்தமாகவா என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், காந்தி குடும்பம் அவரை ஆதரிக்குமா என்பதும் தெரியவில்லை.

"அவர் ஒரு சுவாரஸ்யமான அரசியல்வாதி. எவ்வித அகங்காரமும் அற்றவர். அவரால் உலக தலைவர்கள், கார்ப்பரேட் முதலாளிகள், சிறந்த அறிவுஜீவிகளுடன் பேச முடிவதுபோன்றே எவ்வித வித்தியாசமும் இன்றி அடிமட்ட கட்சி தொண்டர்களுடனும் பேசுவார்," என அரசியல் விமர்சகர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

கேரள காங்கிரசின் ஆதரவு இல்லாமை

அவருக்கு இயல்பாகவே உள்ள தொடர்பு திறன் காரணமாக, 2009 மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் வெற்றி பெற்றார். ஒருமுறை அல்ல, தொடர்ந்து மூன்று முறை அவர் வெற்றி பெற்றார். இதனால், அப்போது உள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் அவரை ஆதரித்தனர் என்று அர்த்தமாகாது. இப்போதும் அப்படியல்ல.

எனவேதான், கட்சி மேலிடத்தின் ஆதரவை பெற்ற வேட்பாளரை தாங்கள் ஆதரிப்போம் என்று கேரள காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. "அவருக்கு ஒரு ஓட்டு கிடைக்கலாம். அதுவும் கேரளாவில் அவருடைய சொந்த ஓட்டாக இருக்கும். நேரு குடும்பத்தின் ஆதரவு எந்த வேட்பாளருக்கு இருக்கிறதோ அந்த வேட்பாளரைத்தான் ஆதரிப்போம் என கேரள காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது," என கே. முரளிதரன் எம்.பி பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

மற்றொரு எம்.பி பென்னி பெஹனான் பிபிசி இந்தியிடம் கூறுகையில், "இதனை அவர் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளார் என நான் நினைக்கவில்லை. இங்குள்ள அவருடைய நண்பர்களிடம் கூட அவர் பேசவில்லை. நானும் அவருடைய நண்பர், ஆனால், இதுகுறித்து அவர் என்னிடம் பேசவில்லை. மாநில காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்திற்கு எதிராக யாரும் செயல்பட மாட்டர்கள்," என்றார்.

அவர் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாலேயே மாநில கமிட்டியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பவில்லை. மாறாக, பல சந்தர்ப்பங்களில் சசி தரூர் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கேரள அரசின் முடிவு ஒன்றை ஆதரித்ததாலும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

சமீபத்தில் கேரள முதலமைச்சரின் விருப்பமான, சர்ச்சைக்குரிய சில்வர்லைன் ரயில் திட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை திரும்பப்பெறும் முடிவுக்குத் தள்ளப்பட்டார் சசி தரூர். இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே நிலவும் போட்டி அரசியலில், இத்தகைய பிரச்னைகளில் சசி தரூரின் கருத்துகள் அவரின் கட்சியினரால் மதிப்புக்கேடானவையாக கருதப்படுகின்றன.

"நாடாளுமன்றத்தில் அவருடைய திறமையை சோனியா காந்தி அங்கீகரித்துள்ளார். ஆனால், சோனியா காந்தியின் தொடர்பைத் தாண்டி அவரால், காங்கிரஸ் ஆட்சியில் கேபினெட் அமைச்சராகவோ அல்லது காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவோ அவரால் ஆக முடியவில்லை. அவர் பல சர்ச்சைகளில் சிக்கி, டாக்டர் மன்மோகன் சிங் அமைச்சரவையிலிருந்து வெளியேறும் நிலைக்கு ஆளானார்," என அரசியல் விமர்சகர் ராதிகா ராமசேஷன் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

சசி தரூரின் ரோலர் கோஸ்டர் சவாரி

மற்ற அறிவுஜீவிகளைப் போன்றே டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீஃபன் கல்லூரியில் பயின்றார் சசி தரூர். பின்னர், வெளிநாட்டில் புகழ்பெற்ற கல்வி வாழ்க்கையை நிறைவு செய்த அவர், இளம் வயதிலேயே ஐநாவில் இணைந்தார். ஐநாவின் துணைப் பொதுச் செயலாளராகும் அளவுக்கு உயர்ந்தார். ஐநா பொதுச் செயலாளர் பதவிக்கு இந்தியா அவரை ஆதரித்தாலும் அவரால் அதில் வெற்றி பெற முடியவில்லை.

அரசியல் ராஜரீக பணியில் பொறுப்புகள் வகித்தாலும், 10 வயது சிறுவனாக இருந்தது முதல் நீடிக்கும் புத்தகம் எழுதும் பழக்கத்தை அவர் தொடர்ந்தார். விருது பெற்ற எழுத்தாளரான தரூர், அரசியல், மதம் உள்ளிட்ட தலைப்புகளில் புனைவு, அபுனைவின் கீழ் 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஐநா பதவிக்குப் பின்னர் பல்வேறு வெளியீடுகளில் அவர் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளார். தன்னுடைய சிந்தனைக்கு நெருக்கமாக இருப்பதால், அவர் காங்கிரசில் இணைந்தார். பின்னர், திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட சோனியா காந்தி அவரை பரிந்துரைத்தார்.

பின்னர் வெளியுறவு துறை இணையமைச்சராக்கப்பட்ட அவர், தன்னுடைய தோழியும் பின்னால் அவரின் மனைவியுமான சுனந்தா புஷ்கருடன் தொடர்புடைய கொச்சி ஐபிஎல் அணியை ஊக்குவித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து கருத்து வேறுபாட்டால் அப்பதவியிலிருந்து விலக நேர்ந்தது. சுனந்தா புஷ்கரை அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி, "50 கோடி ரூபாய் பெண் தோழி" என கூறியிருந்தார்.

ஆனால், தன் பேச்சுத்திறனுக்காக அறியப்பட்ட சசி தரூரிடமிருந்து மீண்டும் பதிலடியை பெற்றார் மோதி. "கற்பனையான எந்த 50 கோடி ரூபாயையும் கடந்து என் மனைவி விலைமதிப்பற்றவர். ஆனால், அதனை புரிந்துகொள்ள நீங்கள் யாரையாவது அன்பு செய்திருக்க வேண்டும். அதனை புரிந்துகொள்ளும் திறன் அவருக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்," என்று சசி தரூர் கூறினார். அதன் பின்னர், மீண்டும் இந்திய அமைச்சரவைக்கு திரும்பிய அவர், இந்த முறை மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக பொறுப்பேற்றார்.

1700ம் ஆண்டில் 27 சதவீத ஜிடிபியுடன் இருந்த உலகின் பணக்கார நாடுகளுள் ஒன்றை கைப்பற்றி, "அதன் அனைத்து செல்வங்களையும் சுரண்டி ஏழை நாடாக ஆக்கியதற்கு" பிரிட்டிஷாரிடமிருந்து இழப்பீடு கோரி அவர் விவாதம் செய்த காணொளி, இப்போதும் அடிக்கடி பல சமூக ஊடக தளங்களில் பரவுகிறது.

இந்த பேச்சுதான் அவருக்கு பிடித்த சமூக ஊடக தளத்தில் பிரதமர் நரேந்திர மோதியிடமிருந்து பாராட்டைப் பெற்றுத்தந்தது. இதற்கு ஒருநாள் முன்புதான், அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கும் திட்டம் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவித்ததற்காக, சசிதரூருக்கு சோனியா காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார். தூய்மை இந்தியா திட்டத்திற்காக பிரதமரை சசிதரூர் ஆதரித்ததையும் காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை.

மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் உயிரிழந்ததும் சசிதரூர் மீது எதிர்மறையான கவனம் ஏற்பட்டது. அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக சசி தரூர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்த வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இளைஞர்களின் விருப்பமான நபர்

சர்ச்சைகளையும் தாண்டி, இளைஞர்களுக்கு குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களுக்கு, ஆங்கிலம் பேசும் நடுத்தர வகுப்பினருக்கு எப்போதும் பிடித்த நபராக சசி தரூர் உள்ளார். பொது நிகழ்ச்சிகளில் அவருடைய எந்தவொரு பேச்சும், "வசீகரமிக்க நபரை" பார்க்க இளைஞர்கள் ஆர்ப்பரிக்காமல் நிறைவுபெற்றதில்லை.

சபரிமலை கோவில் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சசி தரூர் ஏற்காதது பலருக்கும் ஆச்சர்யம். மாதவிடாய் வயதில் உள்ள பெண்களை கோவிலுக்குள் நுழைய நீதிமன்றம் அனுமதித்தது. 50 வயதை நிறைவு செய்யாத பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காத வழக்கத்தை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது. ஆனால், இந்து மதத்தைக் கடைபிடிப்பதாக கூறிக்கொள்ளும், தேவாலயம் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவையும் அனுபவிக்கும் சசி தரூர், தன் தொகுதியில் உள்ள பெண்களின் ஆதரவையும் பெற்றவராக உள்ளார்.

"அவர் ஒரு முழுமையான இணக்கவாதி. நடுத்தர வகுப்பினருக்கு அவரை மிகவும் பிடிக்கும். தன் தொகுதிக்காக பெரிதாக அவர் எதையும் செய்யாதது எனக்கு ஏமாற்றம். இன்றைக்கு தேர்தல் நடந்தாலும், தன் தொகுதியில் மீண்டும் அவர் வெற்றி பெறுவார். ஏனெனில், தொடர்பில் சிறந்து விளங்குபவராக அவர் உள்ளார். ஆனால், உத்தர பிரதேசம் மற்றும் மற்ற வட மாநிலங்களில் அவர் ஆதரவு பெறவில்லை," என்கிறார் ராதாகிருஷ்ணன்.

"அவருக்கு இந்தியா முழுமையும் ரசிகர்கள் உள்ளனர். இந்தி மாநிலங்களில் சில வாக்குகளை பெறுவார் என்ற நம்பிக்கையில் அங்குள்ளவர்களிடம் இந்தியில் பேசுகிறார். ஆனால் அது நடக்காது. ஆனால், கே. காமராஜ், எஸ். நிஜலிங்கப்பா மற்றும் பி.வி. நரசிம்ம ராவுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தென்னிந்தியாவிலிருந்து யாரும் வரவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காந்தி குடும்ப விசுவாசிகள் தரூர் பக்கம் செல்வார்கள் என கூற முடியாது" என ராதிகா ராமசேஷன் தெரிவித்தார்.

சசி தரூர் தேர்தலில் போட்டியிடுவதால் எந்த எதிர்மறை விளைவும் ஏற்படாது என, தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத டெல்லியை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார். "காந்தி குடும்பத்திடம் அவர் சவால் விடுக்கவில்லை. கட்சி தலைவர் பதவிக்கு கட்சியில் உள்ள எவரொருவரும் போட்டியிடலாம் என்பதையே இது காட்டுகிறது. இதுதான் முக்கியமான செய்தி" என தெரிவித்தார்.

சசி தரூருக்கு என்ன நடக்கும்?

"அவர் அதிக வாக்குகளை பெற மாட்டார் என்ற பார்வை இருக்கிறது. அதை அறிந்திருக்கும் அளவுக்கு அவர் அறிவானவர். தலைமை பதவிக்கான பெரும் போட்டிக்குள் செல்ல அவர் நினைக்கிறார் என்பது தெளிவாகிறது," என தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மற்றொரு காங்கிரஸ் தலைவர் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: