You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தர பிரதேசம் - "என் மகளை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தனர், பிறகு கொன்றனர்"
- எழுதியவர், ஷபாஸ் அன்வர்
- பதவி, பிபிசி ஹிந்திக்காக சம்பலில் இருந்து
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
"என் மகளை அவர்கள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார்கள். நானும் எனது மகளும் நீதிக்காக பெரிய மற்றும் சிறிய அதிகாரிகள் என எல்லோரையும் பார்த்தோம். முதலமைச்சருக்கு கடிதங்கள் அனுப்பினோம், ஆனால் எதுவும் நடக்கவில்லை." உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியைச் சேர்ந்த தனது 16 வயது மகளுக்கு நடந்த கொடுமை குறித்து விவரிக்கும் ஒரு தாயின் வரிகள் இவை.
"ஆகஸ்ட் 24ஆம் தேதி, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு எனது மகள் ஆளான ஒன்றேகால் மாதத்துக்குப் பிறகு, அவர்கள் என் மகளை கொன்றே விட்டனர். குற்றவாளி சரியான நேரத்தில் பிடிபட்டிருந்தால், என் மகள் இந்நேரம் உயிருடன் இருந்திருக்கலாம். இந்த உலகில் அவள் இல்லை. என் மகளை தூக்கிலிட்டு கொன்றது போல் குற்றவாளிகளையும் அரசாங்கம் தூக்கிலிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்கிறார் அந்தத் தாய்.
சம்பல் மாவட்டத்தின் சந்தௌசி காவல் நிலையத்தின் கீழ் வரும் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த அந்த தாயின் பெயர் மாலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அங்குள்ள நிலையை அறியச் சென்ற நம்மிடம் நீண்ட நேரம் பேசினார். சில சமயம் அவரது முகத்தில் கோபமும் சில சமயம் சோகமும் வெளிப்பட்டது.
இதே மாலாவின் பதினெட்டு வயது கூட நிரம்பாத மகள் தான் ஆகஸ்ட் 24ஆம் தேதி மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
8ஆம் வகுப்பு படித்து வந்த இவரது மகளின் வயது 16. அக்கம் பக்கத்தில் வசிக்கும் மூன்று சகோதரர்களாலும் உறவினர் ஒருவராலும் ஜூலை 12ஆம் தேதி இரவு கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக மாலா போலீஸில் புகார் அளித்திருந்தார்.
இதன் பிறகு ஜூலை 15ஆம் தேதி, குற்றம்சாட்டப்பட்ட சோவேந்திரன் மீது மட்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் ஆகஸ்ட் 25ஆம் தேதி, மாஜிஸ்திரேட் முன் அளிக்கப்பட்ட வாக்குமூலத்துக்குப் பிறகு மீதமுள்ள மூன்று குற்றம்சாட்டப்பட்ட விரேஷ் குர்ஜார், விபின் குர்ஜார், ஜினேஷ் குர்ஜார் ஆகியோரின் பெயர்களும் விசாரணையில் சேர்க்கப்பட்டன.
எனினும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாததால், புலனாய்வில் அலட்சியம் காட்டியதாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) ஷலப் மாத்தூர் கூறுகையில், "இந்த வழக்கில், விசாரணை அதிகாரி அலட்சியம் காட்டியதாக முகாந்திரம் இருந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்," என்று கூறினார்.
அன்று நடந்தது என்ன?
ஆகஸ்ட் 24 ஆம் தேதி, சம்பல் மாவட்டத்தின் சந்தௌசி தாலுகாவில் உள்ள ஓர் காவல் நிலைய வரம்புக்கு உள்பட்ட கிராமத்தில் உள்ள இந்த வீட்டில் இருந்து திடீரென அழுகை மற்றும் கூக்குரல்கள் கேட்கத் தொடங்கின. அதைக் கேட்டு, கிட்டத்தட்ட முழு கிராமமும் அங்கு கூடி விட்டது.
வீட்டுக்குள் இருந்த அறையில் மாலாவின் 16 வயது மகள் மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
நடந்த நிகழ்வு குறித்து பின்னர் பிபிசியிடம் பேசிய மாலா, "நான் கிராமத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் சமையல் வேலை செய்கிறேன். அன்று நான் பணியில் இருந்து திரும்பியபோது, வீட்டின் பின்புற அறையில் உள்ள மின் விசிறியில் என் மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள்," என்றார்.
சம்பவ நாளில் மகளை அந்த நிலையில் பார்த்த மாலா மயங்கி விழுந்திருக்கிறார்.
இது குறித்து அவரது மூத்த மகன் கூறுகையில், "நான் ஒரு கூலித்தொழிலாளி. என் சகோதரி பற்றி கேள்விப்பட்டதும் உடனடியாக வீட்டுக்கு வந்தேன். கிராமத்தினர் வீட்டின் முன் திரண்டிருந்தனர். போலீஸ் வரவழைக்கப்பட்டது. அவர்கள் என் சகோதரியின் உடலை மேலே இருந்து கீழே கொண்டு வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்," என்கிறார்.
முழு விவரம் என்ன?
16 வயது பெண்ணின் சாவுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவரும் அவர்களது மூன்று மகன்களுமே காரணம் என்று பாதிக்கப்பட்ட மாலாவும் அவரது குடும்பத்தினரும் குற்றம்சுமத்துகிறார்கள்.
மாலா நம்மிடையே அது குறித்து விவரித்தார். "ஜூலை 12ஆம் தேதி எனது மகள் தனது தங்கையுடன் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தாள். வெயில் காரணமாக இளைய மகனுடன் குடிசை வீட்டின் வெளியே உள்ள நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தேன். மூத்த மகன்கள் இருவரும் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென்று என் இளைய மகள் எழுந்து வெளியே வந்து உள்ளே அக்கா இல்லை என்று கூறினாள். எல்லா இடங்களிலும் தேடியும் அவளைக் காணவில்லை, பின்னர் அவள் வீட்டு மாடியில் காணப்பட்டாள்."
"அந்த நேரத்தில் எனது மகள் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. பின்னர் பக்கத்து வீட்டுக்காரரான சத்பால் வீட்டில் வசிக்கும் சோவேந்திராவைத் தவிர, சத்பாலின் மூன்று மகன்களான விரேஷ், ஜினேஷ் மற்றும் விபின் ஆகியோர் தன்னைக் காட்டிற்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள்."
இது குறித்து மாலா கூறுகையில், "ஜூலை 14ஆம் தேதி போலீசில் புகார் செய்தோம். குற்றம்சாட்டப்பட்ட சோவேந்திரன் மீது மட்டுமே போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால் அந்த மூன்று சகோதரர்களும் கூட நடந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள். எனது மகளின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில் மூவரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை," என்கிறார்.
'அவர்களை கைது நடந்திருந்தால் என் சகோதரி உயிருடன் இருந்திருப்பாள்'
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தந்தை இறந்த பிறகு, அந்த வீட்டின் மூத்த மகன்தான் அனைத்து குடும்பப் பொறுப்புகளையும் கவனித்து வந்தார்.
அவர் பிபிசியிடம் பேசுகையில், "குற்றம்சாட்டப்பட்டவர்களை முன்கூட்டியே கைது செய்யக் கோரி எனது சகோதரியும் அம்மாவும் தினமும் அதிகாரிகளைச் சந்தித்து வந்தனர். ஆனால் யாரும் செவி சாய்க்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து எங்கள் குடும்பத்தை அச்சுறுத்தினர். ஆகஸ்ட் 24ஆம் தேதி கடைசியாக அவர்கள் என்னுடைய சகோதரியின் உயிரைப் பறித்தனர்," என்கிறார்.
காவல்துறை என்ன சொல்கிறது?
இந்த விவகாரத்தில், வெள்ளிக்கிழமை, மொராதாபாத் காவல்துறை சரக துணைத் தலைவர் ஷலப் மாத்தூர் கூறும்போது, "இந்த விவகாரத்தில் காவல் நிலைய ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்," என்றார்.
மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்பி) சக்ரேஷ் மிஸ்ராவிடம் பிபிசியிடம் பேசுகையில், "டிஐஜி ஏற்கெனவே இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த உடனேயே, ஜூலை 15ஆம் தேதி, பெண்ணின் தாயார் மாலா அளித்த புகாரின் பேரில் பலாத்காரம் மட்டுமின்றி, போக்சோ சட்டம் உட்பட பல பிரிவுகளிலும் ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. இறந்தவரின் கொலைக்கு முதலில் குடும்ப உறுப்பினர்கள் கூறியபடி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியது தொடர்பான சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக அவர்களின் வீட்டுக்கு அருகே போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்," என்று கூறினார்.
இந்த நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட காவல் நிலைய ஆய்வாளர் சி.வி. சிங் தெரிவித்தார்.
இரவு ஒன்றரை மணிக்கு இறுதிச் சடங்குகள் நடந்ததா?
இறந்தவரின் உடல் ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலை 4 மணியளவில் உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால், தனது மகளின் பிரேத பரிசோதனை இரவு வரை நடத்தப்பட்டு நள்ளிரவைக் கடந்த 1.30 மணியளவில் கட்டாயப்படுத்தப்பட்டு மகளின் உடல் தகனம் செய்யப்பட்டதாக மாலா கூறுகிறார்.
ஆனால், அவரது இந்த குற்றச்சாட்டை, சம்பல் போலீசார் செய்திக்குறிப்பு மூலம் மறுத்துள்ளனர்.
அதில், "உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே இறந்தவரின் இறுதிச் சடங்குகளை செய்தனர். இரவில் வலுக்கட்டாயமாக தகனம் செய்ததாகக் கூறப்படுவது ஆதாரமற்றது. இறுதிச் சடங்கில் போலீஸார் இல்லை," என்று குறிப்பிட்டுள்ளனர்.
கிராம மக்களின் கூற்று
இறந்து போன பெண் வாழ்ந்த கிராமத்தில் ஜாடவ், குர்ஜார், புர்ஜி உள்ளிட்ட பல சகோதர இனத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இறந்தவரின் வீட்டுக் கூரையும் குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டின் கூரையும் இணைந்தே எழுப்பப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டில் யாரும் காணப்படவில்லை. அவர்கள் விவசாயத் தொழில் செய்பவர்கள். அத்துடன் பொருளாதார ரீதியாகவும் நல்ல நிலையில் இருப்பவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக கிராம பெரியவர் முன்னே சிங்கிடம் பிபிசி பேசியது.
"எங்களுடைய கிராமத்தில் 1526 வாக்குகள் உள்ளன, இதுபோன்ற ஒரு சம்பவம் இதற்கு முன்பு இங்கு நடந்ததில்லை. ஆனால் ஒரு பெண் இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. எனது கவனத்துக்கும் இந்த விவகாரம் வந்தது. ஆனால் இவ்வளவு பெரிய வழக்கில் நான் என்ன செய்ய முடியும்? ."
பெண்ணின் மரணத்துக்கு யார் காரணம் என்ற கேள்விக்கு, "பாருங்கள், சத்பால் வீட்டில் சோவேந்திரன் தங்கியிருந்தான். அவன் பஹ்ஜோய் நகரில் வசிப்பவன், அவனது உறவினர்களின் பெயர்கள் சில காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. அதனால்தான் அவர் இங்கு வந்து தங்கியிருந்தார்." என்றார்.
முதலில் வறுமை - இப்போது நீதிக்கான போராட்டம்
கூட் ஃபதேஃபரிலிருந்து இறந்தவரின் கிராமத்திற்குச் செல்லும் சாலை மிகவும் பசுமையானது. சாலைகளும் விசாலமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கு பகலில் கூட, சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது. கிராமத்தை நெருங்க நெருங்க, சாலையும் சற்று குறுகலாக மாறுகிறது. பின்னர் மக்கள் வசிக்கும் இடம் தொடங்கிய பிறகு, ஒரு குறுகிய தெருவின் இடது பக்கத்தில் இறந்தவரின் வீடு இருக்கிறது.
வெளியில் ஒரு சிறிய மேடை உள்ளது, நீங்கள் கதவு வழியாக உள்ளே நுழைந்தால், ஒரு சிறிய முற்றம் தெரியும், அங்கு வலதுபுறம் ஒரு கை பம்ப் மற்றும் தேய்ப்பதற்கான சில பாத்திரங்கள் உள்ளன. அக்கம் பக்கத்தில் உள்ள சில பெண்களும் உறவினர்களும் தரையில் பாய் விரித்து அமர்ந்துள்ளனர்.
முன்பு ரொட்டிக்காக போராட்டம் இருந்தது, ஆனால் இப்போது நீதிக்காக போராட வேண்டியிருக்கும் என்று மாலா கூறுகிறார். இருப்பினும், வெள்ளிக்கிழமை தனது வீட்டிற்கு வந்த மாவட்ட ஆட்சியர், பல வழிகளில் தனக்கு உதவுவதாக உறுதியளித்ததாக கூறினார் என்கிறார் மாலா.
சகோதரர்களின் உறவினர் என்ன சொல்கிறார்?
இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று சகோதரர்களின் உறவினர் ஒருவர் தனது புகைப்படமோ பெயரோ வெளிவரக்கூடாது என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேச ஒப்புக்கொண்டார்.
பெண் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்த அவர், குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்று சகோதரர்களில் ஒருவரான விபின் சம்பவம் நடந்த அன்று கிராமத்திலேயே இல்லை என்று கூறினார்.
"அவர் வெளியூரில் இருந்தார். பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிலர் பொய்யான தகவலை சொல்லியுள்ளனர்.." என்கிறார் அவர்.
மாலாவின் மகள் இறந்த நாளில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு சகோதரர்களின் செல்பேசி லொகேஷன் அவரது கிராமத்தில் பதிவாகவில்லை. எனினும் விசாரணைக்குப் பிறகே நிலைமை தெளிவாகும் என்கிறது காவல்துறை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்